தொடர் 02
“ஷரீஆ” அறிவின்றியும் இறைஞானமின்றியும் “இபாதத்” வணக்கம் நிறைவேறவுமாட்டாது, பூரணமாகவுமாட்டாது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
முஸ்லிம்கள் செய்கின்ற எந்தவொரு வணக்கமாயினும் அது “ஷரீஆ”வின் அறிவின்றி நிறைவேறவும் மாட்டாது. “மஃரிபா” அல்லது “தஸவ்வுப்” அறிவின்றி அது பூரணத்துவம் பெறவும் மாட்டாது என்ற தலைப்பில் “ஷரீஆ”வின் அறிவின்றி தொழுகை நிறைவேறாது என்பதற்கு விளக்கம் எழுதினேன். அதே தொடரில் இக்கட்டுரையில் எந்த ஒரு வணக்கமாயினும் “மஃரிபா” அல்லது “தஸவ்வுப்” அறிவின்றி பூரணத்துவம் பெறாது என்பதற்கான விளக்கத்தை எழுதுகிறேன்.
قال الله تعالى ‘قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ،الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ‘
“தமது தொழுகையில் அச்சத்துடன் தொழுத விசுவாசிகள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டனர்”
(23 – 01, 02)
இத்திரு வசனம் தருகின்ற கருத்தின் படி தமது தொழுகையில் அச்சமில்லாத நிலையில் தொழுதவர்கள் வெற்றி பெற்றவர்கள் அல்ல என்ற கருத்து வெளிப்படையாக தெரிகிறது.
“கத்” – قَدْ – என்ற சொல் பற்றிய சிறு விளக்கம். அறபுக் கல்லூரி மாணவர்களினதும், சில உலமாஉகளினதும் நன்மை கருதி قَدْ என்ற சொல் பற்றி சிறு விளக்கம் எழுதிய பின் தலைப்புக்கு வருவேன்.
பின்வரும் விபரம் பொது மக்களுக்கு அவசியமற்றதாகும்.
قَدْ – تأتي اسما، بمعنى حَسْبُ، نحو قَدْ زَيْدٍ دِرْهَمٌ، وَرُبَّمَا اُعْرِبَتْ فَتَقُوْلُ قَدُ زَيْدٍ دِرْهَمٌ، أي حَسْبُهُ، ‘ قَدْ ‘ اسمُ فعل بمعنى كَفَى أو يَكْفِيْ، نحو قَدْ لِيْ دِرْهَمٌ، أي يَكْفِيْنِيْ، والياءُ مفعولٌ به،
‘ قَدْ ‘ تُفيد التَّوَقُّعَ مع المضارع، نحو قد يقومُ الغائبُ اليومَ، والتقليلَ نحو وقد يَصْدُقُ الكَذُوبُ، أي قَلَّمَا يصدق، والتَّحْقِيْقَ مع الماضي نحو قَدْ أَفْلَحَ مَنِ اتَّقَى اللهَ، وتَقْرِيْبَ الماضي نحو قَدْ قَامَ فلانٌ إذا كان قيامُه فى زمنٍ قريب، وقد تُفيد التكثيرَ مع المضارع،
قد
என்ற சொல் “போதும்” என்ற பொருளுக்கு “இஸ்ம்” பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும். قَدْ زَيْدٍ دِرْهَمٌ என்பது போன்று. இதற்கு, حَسْبُ زَيْدٍ دِرْهَمٌ செய்த் என்பவனுக்கு ஒரு “திர்ஹம்” போதுமென்று பொருள் வரும். قد என்ற இச் சொல் சில நேரம் قَدُ என்று “தால்” என்ற எழுத்துக்கு “ழம்மு” செய்யப்பட்டும் வரும்.
قَدْ
என்ற சொல் போதுமாகிவிட்டது அல்லது போதுமாகும் என்ற பொருளுக்கு “இஸ்மு பிஅல்” ஆகவும் பயன்படுத்தப்படும். உதாரணமாக قَدْ لِيْ دِرْهَمٌ என்பது போன்று. இதற்கு يَكْفِيْنِيْ எனக்குப் போதும் என்று பொருள் வரும்.
قَدْ
– என்ற சொல் “முழாரிஃ” ஆன – எதிர் காலத்தைக் குறிக்கும் வினைச் சொல்லுடன் எதிர் பார்த்தல் என்ற பொருளுக்கு பயன்படுத்தப்படும். உதாரணமாக قَدْ يَقُوْمُ الْغَائِبُ الْيَوْمَ என்பது போன்று. இதன் பொருள் சில வேளை மறைந்தவன் இன்று வரலாம் என்பது போன்று. இன்னும் குறைத்தல் என்ற பொருளுக்கும் இச் சொல் பயன்படுத்தப்படும். உதாரணமாக قَدْ يَصْدُقُ الْكَذُوْبُ கடும் பொய்யன் சில நேரம் உண்மை பேசலாம் என்பது போன்று. இதன் பொருள் قَلَّمَا يَصْدُقُ சில வேளை உண்மை பேசுவான் என்பது போன்று. இன்னும் சில நேரம் قَدْ என்ற சொல்லை திட்டமாக, நிச்சயமாக என்ற பொருளுக்கும் பயன்படுத்தலாம். உதாரணமாக قَدْ أَفْلَحَ مَنِ اتَّقَى اللهَ என்பது போன்று. இதன் பொருள் அல்லாஹ்வை பயந்தவன் நிச்சயம் வெற்றி பெற்று விட்டான் என்பது போன்று. மேலும் قَدْ என்ற சொல் “மாழீ”யான “பிஅல்” உடன் சேர்ந்து வந்தால் சென்ற காலத்தை சமீபமாக்கி வைக்கும் பொருளுக்குப் பயன்படுத்தப்படும். இன்னும் “முழாரிஃ” ஆன “பிஅல்” உடன் சேர்ந்து வரும் போது அதிகம் என்ற பொருளுக்கு பயன்படுத்தப்படும்.
(மொழி விளக்கம் முற்றிற்று)
இத்திரு வசனத்தில் வந்துள்ள خَاشِعُوْنَ என்ற சொல்லுக்கு உள்ளச்சம் உள்ளவர்கள் என்று பொருள் வரும். இதேபோன்றுதான் خَاضِعُوْنَ என்ற சொல்லுக்கும் பொருள் வரும். எனினும் சிறிய வித்தியாசம் உண்டு. பிந்தின இச் சொல்லுக்கு வெளியச்சம் என்று பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு.
خُشُوْعْ
உள்ளச்சம் என்றால் உள்ளம் இறையச்சத்தில் மூழ்கியிருப்பதைக் குறிக்கும். خُضُوْعْ என்றால் வெளியுறுப்புக்கள் ஆடாமலும், அசையாமலும் இருப்பதைக் குறிக்கும். தொழுபவனுக்கு இரு வகை அச்சமும் அவசியமே. வெளியச்சத்தை விட உள்ளச்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உள்ளச்சத்தோடு தொழுவதென்றால் தொழுபவனின் உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். உள்ளச்சம் உள்ளவனுக்கு வெளியச்சம் தானாக வந்து விடும். ஆனால் வெளியச்சம் இருந்தால் உள்ளச்சம் தானாக வந்து விடாது.
உள்ளச்சம் என்பது உள்ளத்தின் அச்சத்தைக் குறிக்கும். உள்ளத்தின் அச்சம் என்பது உள்ளம் இறை நினைவில் லயித்துப் போயிருப்பதைக் குறிக்கும்.
உள்ளம் இறை நினைவில் லயித்துப் போயிருத்தல் என்றால் அது எவ்வாறு என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒருவனின் “கல்பு” உள்ளம், தான் ஓதும் ஓதலின் பொருளை கவனித்துக் கொண்டிருத்தல் அல்லாஹ்வின் நினைவில் இருத்தலாகுமா? என்று நாம் ஆய்வு செய்தால் அது அவ்வாறு ஆகாதென்று முடிவு வரும். ஏனெனில் தொழுகையில் திருக்குர்ஆன் வசனங்களின் பொருளையோ அல்லது தொழுகையிலுள்ள ஏனைய ஓதல்களின் பொருளையோ கவனித்துக் கொண்டிருத்தல் அல்லாஹ்வின் நினைவில் இருந்ததாக ஆகாது. ஏனெனில் வசனங்களின் பொருள் என்பது அல்லாஹ் அல்ல. அவையும் படைப்புக்களேயாகும். ஆகையால் அது அல்லாஹ்வின் நினைவில் தொழுததாக ஆகாது.
ஒருவன் அல்லாஹ் என்ற சொல்லை அறபு மொயிலோ, தமிழ் மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ கடும் இருளான இடத்தில் ஒளியினால் கற்பனையில் எழுதி அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது அல்லாஹ்வின் நினைவில் இருந்ததாக ஆகுமா? என்று ஆய்வு செய்தால் அதுவும் ஆகாதென்றே முடிவு கிடைக்கும். ஏனெனில் கற்பனையில் எழுதிய “அல்லாஹ்” என்ற அந்த எழுத்து படைப்பேயன்றி அல்லாஹ் அல்ல என்று முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ஒருவன் தனது கற்பனையில் எழுதியது படைப்பேயன்றி அது படைத்தவன் அல்ல. எனவே, இவ்வாறு செய்வதும் இறை நினைவில் தொழுவதற்கு வழி செய்யாது.
“பிக்ஹ்” எனும் “ஷரீஆ”வின் சட்டக்கலை நூல்களில் அல்லாஹ்வின் நினைவில் தொழுவதற்கு தொழுகின்றவன் ஓதுகின்ற ஓதல்களின் பொருளைக் கவனித்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. اَلْمُصَلِّيْ يَتَدَبَّرُ مَعَانِيَ مَا يَقْرَأُ நாம் ஓதுகின்ற ஓதல்களின் பொருள் مخلوق – படைப்பேயன்றி படைத்தவனல்ல. ஆகையால் இது புத்திக்கும், எதார்த்தத்திற்கும் பொருத்தமற்ற ஒன்றேயாகும். இவ்வாறு சொன்ன சட்ட மேதைகளின் கருத்து என்னவோ நான் அறியேன்.
அல்லாஹ்வின் நினைவிலேயே தொழ வேண்டுமென்று “ஷரீஆ”வும், “தஸவ்வுப்” எனும் ஸூபிஸமும் கூறுவதாலும், மேலே நான் எழுதியுள்ள பின்வரும் திருமறை வசனம் قد أفلح المؤمنون الّذين هم فى صلاتهم خاشعون தமது தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுதவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று திருமறை கூறுவதாலும் நாம் தொழுகின்ற தொழுகைகளை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவதற்கான வழியென்னவென்று பட்டதாரிகள் பலரிடமும், மகான்கள் பலரிடமும் நான் கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் தாகம் தீருமளவு விளக்கம் தரவில்லை.
இனி யாரிடத்தில் கேட்பது? கேட்பதாயிருந்தால் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பு வழங்கி, எங்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமென்று எழுத்து மூலம் பகிரங்கமாகக் கூறிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மதிப்பிற்குரிய தம்பி ரிஸ்வி ஹஸ்றத் அவர்களிடமும், என்னை தம்முடன் விவாதிக்க அழைத்துக் கொண்டிருக்கின்ற, ஒருவனின் முகத்தைப் பார்த்து அவனின் உள்ளத்திலுள்ள ஈமானின் ஒளியை நேரில் பார்க்கும் ஆற்றலுள்ளவர்களிடமுமே கேட்க வேண்டும். கேட்டுப் பார்ப்போம்.
கௌரவத்திற்குரிய தலைவர் ரிஸ்வி அவர்களே! என்னை தம்முடன் விவாதிக்க அழைக்கும் விவாத வேங்கைகளே!
தொழுகின்ற ஒருவன் தொழுகைக்காக “நிய்யத்” வைத்து “அல்லாஹு அக்பர்” என்று சொன்னதிலிருந்து தொழுது முடித்து “ஸலாம்” சொல்லும் வரை அல்லாஹ்வின் நினைவிலேயே தொழ வேண்டுமென்றால் எவ்வாறு தொழுவது?
தொழுகையில் “பாதிஹா ஸூறா” கட்டாயம் ஓத வேண்டும். அதை ஓதும் போது غير المغضوب عليهم ولا الضالين என்று ஓத வேண்டும். இவ்வசனம் யஹூதிகளையும், நஸாறாக்களையும் நினைவு படுத்தக் கூடிய வசனமாகும்.
கோபத்திற்குள்ளானவர்கள் யஹூதீகள் என்றும், வழிகெட்டவர்கள் நஸாறாக்கள் என்றும் ஓதும் போது அவர்களை நினைக்காமல் இருக்க முடியுமா? இதற்கு முன் “பாதிஹா ஸூறா” ஓதும் போது أعوذ بالله من الشيطان الرجيم சபிக்கப்பட்ட ஷெய்தானின் தீமையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன் என்று சொல்லும் போது சாத்தானை நினைக்காமல் இருக்க முடியுமா? திருக்குர்ஆன் வசனங்களில் خِنْزِيْرْ பன்றி என்ற சொல் பல இடங்களிலும், كلب நாய் என்ற சொல் பல இடங்களிலும், “இப்லீஸ்” என்ற சொல் பல இடங்களிலும் “முஷ்ரிகீன், காபிரீன்” என்ற சொற்கள் பல இடங்களிலும், பருப்பு, வெங்காயம், பூடு என்ற சொற்களும், இன்னும் தவளை, பாம்பு என்ற சொற்களும் வருகின்றன. இவைபோல் பல படைப்புக்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
தொழுகையில் திருக்குர்ஆனை ஓதுபவர்கள் அனைவரும் நாய், பன்றி போன்ற சொற்களையும், இன்னும் பல படைப்புக்களின் பெயர்களையும் மொழியும் போது அவற்றை நினைக்காமல் இருக்க முடியுமா? நினைக்கத்தானே வேண்டும். இவ்வாறிருக்கும் சூழலில் அவற்றை நினப்பது அல்லாஹ்வை நினைப்பதாக ஆகுமா? எல்லாமே அல்லாஹ்வாயிருப்பதால் எதை நினைத்தாலும் அது அல்லாஹ்வை நினைத்ததாக ஆகுமென்று நீங்கள் பதில் கூறுவீர்களாயின் எனக்கும், உங்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. உங்களுக்கு நீங்களே “பத்வா” கொடுத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு முரணாக அவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்ல நீங்கள் முன் வந்தீர்களாயின் அல்லாஹ்வின் நினைவில் தொழ வேண்டுமென்பது எப்படி என்பதற்கு விளக்கம் தாருங்கள். நீங்கள் தரும் விளக்கம் இப்பூமியில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் கேள்விக்கும் விடையாகியும் விடும். “பத்வா”வை வாபஸ் பெறுவதற்கு இலகுவான வழியாகியும் விடும்.
இறைஞான மகான் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இன்ஸானுல் காமில்” என்ற நூலில் “தஷ்பீஹ்” என்ற பாடத்தில் அல்லாஹ்வுக்கு “தஷ்பீஹ்” என்று ஒரு நிலை உண்டு என்று அறபு மொழியில் எழுதிய வசனங்களை எழுதி இவ்வசனங்களை நான் தமிழாக்கம் செய்வதை விட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செய்வதே பொருத்தம் என்று கருதி முக நூலில் பதிவு செய்திருந்தேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். இதுவரை நீங்கள் அப்பணியை செய்யவில்லை. இதன் பிறகாவது செய்யுங்கள். செய்வீர்களா? அல்லது புதிதாக தோன்றியுள்ள “முஜத்தித்” ஆவது செய்வாரா?
உங்களின் அலுவலகத்திற்கு உங்கள் பெயருக்கு எனது கடிதம் வந்தால் அதை உங்களிடம் ஒப்படைக்குமாறு அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு சொல்லி வையுங்கள். ஏனெனில் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கும் கடிதங்களில் பல முகவரி பிழையென்று எனக்கு திருப்பியனுப்பி வைக்கப்படுகின்றன. இதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
கௌரவம், அந்தஸ்த்து, மானம், மரியாதை என்பவற்றை ஏழாம் பூமிக்கடியில் வைத்து விட்டு இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை கருத்திற் கொண்டு மட்டும் உங்களின் “பத்வா”வை வாபஸ் பெறுங்கள். நானும், என்னை ஏற்றுக் கொண்டவர்களும் “கலிமா”ச் சொல்லி விசுவாசிகளாக வேண்டும், பேசியது பிழையென்று ஏற்றுக் கொள்ள வேண்டும், இதன் பிறகு பேசுவதில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற உங்களின் நிபந்தனைகளை விடுங்கள். இறங்க வேண்டியவர்கள் நீங்களேயன்றி நாங்கள் அல்ல.
இது ஜனநாயக நாடு. எனக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமை, மத உரிமை எல்லாமே உண்டு. நான் இந்நாட்டு சட்டத்தை மதிக்கிறேன். நான் மதம் மாறவுமில்லை. ஆயினும் முஸ்லிம் மதக் குருக்களால் நான் மதம் மாற்றப்பட்டுள்ளேன். பலாத்காரமாக மாற்றப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல. இலங்கை வாழ் பல்லாயிரம் மக்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.
உலமா சபை செய்த, வெளியே சொன்னால் அறிவுலகம் குறிப்பாக ஸூபிஸ ஞான உலகம் தலையில் கை வைத்து வியப்படையும் விடயம் என்னவெனில் கருத்தைப் பேசிய எனக்கு மட்டும் அவ்வாறு “பத்வா” வழங்காமல் முழுவுலக முஸ்லிம்களில் இக்கருத்தை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் “பத்வா” கொடுத்ததேயாகும். இமாம் ஹல்லாஜ் அவர்களின் காலத்தில் “அனல் ஹக்” நானே அல்லாஹ் என்று சொன்னதற்காக அவர்களுக்கு மட்டுமே “பத்வா” வழங்கப்பட்டது. அவர்களின் ஆதரவாளர்களான பல்லாயிரம் மக்கள் முஸ்லிம்களாகவே கருதப்பட்டு வந்தார்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள். எதிர் கால இளைஞர், யுவதிகளின் படிப்பறிவைக் கவனத்திற் கொண்டும், மற்றும் உரிமைகளைக் கருத்திற் கொண்டும் செயலாற்றுவீர்.
முற்றும்.
Pages: 1 2