தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உலக மக்களின் பேச்சு வழக்கில் فَقِيْرْ “பகீர்” என்றால் ஏழை என்று சுருக்கமாகச் சொல்லப்படும். ஏழை என்றால் பண வசதி, பொருளாதார வசதி இல்லாதவனைக் குறிக்கும்.
இது اصطلاح العوام பொது மக்களின் பரிபாஷை, கலைச் சொல் எனப்படும்.
இச் சொல் ஸூபீ மகான்களிடம், அவர்களின் பரிபாஷையில், அவர்களின் கலைச் சொல்லாக வேறு பொருளுக்குப் பயன்படுத்தப்படும்.
அதாவது எவன் தானுமில்லை, தான் காண்பவையும், காணாதவையும், மற்றுமுள்ள அனைத்துப் படைப்புக்களும் எதார்த்தத்தில் مَعْدُوْمْ இல்லாதவை என்றும், அதாவது அவற்றுக்கு எதார்த்தத்தில் “வுஜூத்” உள்ளமை – இருப்பு இல்லை என்றும், தானுமில்லை, இறைவன் தவிர வேறொன்றுமில்லையென்றும் அறிந்தானோ அவன் “இல்ம்” அறிவு அடிப்படையில் அல்லாஹ்வை அறிந்தவன் தான். ஆயினும் இவன் அரை “பகீர்” தான்.
ஆயினும் ஒருவன் இறைஞானத்தின் பல படிகளைக் கடந்து, “பனா” நிலையை ذَوْقِيْ அனுப அடிப்படையில் அடைந்தானாயின் – அதாவது அல்லாஹ் அல்லாத வேறொன்றும் இல்லை என்பதை உணர்வு ரீதியாக அறிந்து கொண்டானாயின் இவனே ஸூபீ மகான்களிடம் முழு “பகீர்” ஆவான்.
இவனுக்கு இவ் உலகிலேயே சுவர்க்க இன்பம் கிடைத்துவிடும். இவன் பிறர் பார்வையில் இவ் உலகில் இருந்தாலும் எதார்த்தத்தில், தன்னுணர்வில் சுவர்க்கத்திலேயே இருப்பான். இந்த “பகீர்” ஏழைக்கு ஏது இன்பம்? என்று சொல்வது பிழையாகிவிடும். مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ எவன் மரணிக்கின்றானோ அவனுக்கு மறுமை உண்டாயிற்று என்று நபீ பெருமான் அவர்கள் சொன்னதாக ஸூபீ மகான்கள் தமது நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.
مَنْ مَاتَ
என்ற நபீ மொழி مَوْتٌ مَجَازِيٌّ பாவனை மரணம் என்பதைக் குறிக்கும். மவ்தில் இரு வகையுண்டு. ஒன்று மேலே நான் இப்போது சொன்ன موت مجازي பாவனை மவ்தாகும். மற்றது مَوْتٌ حَقِيْقِيٌّ – எதார்த்தமான மவ்தாகும். இந்த இரண்டாம் வகை மரணம் நல்லவன், கெட்டவன் அனைவருக்கும் உண்டு. முதலில் குறிப்பிட்ட موت مجازي பாவனை மரணம் என்பது நல்லவர்களுக்கு மட்டுமே கிட்டும். مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا நீங்கள் மரணிக்கும் முன் மரணித்து விடுங்கள் என்ற ஸூபீ மகான்களின் தத்துவத்தின் படி ஒருவன் அல்லாஹ்வால் தனக்கு இரவலாக வழங்கப்பட்ட “குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உன்” கேள்வி, “பஸறுன்” பார்வை, “இல்முன்” அறிவு, “கலாமுன்” பேச்சு, “ஹயாத்” உயிர் எனும் ஏழு தன்மைகளையும் – ஸிபாத்துகளையும் தியானம் மூலம் ஒவ்வொன்றாக அவனிடமே ஒப்படைத்து விட்டு அவன் தன்னை “மையித்” ஆக உணரும் நிலைக்கு ஆனானாயின் அவன் இவ்வுலகில் இருந்து கொண்டே மறுமையை காண்பான். இதனால்தான் مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ எவன் மரணிக்கின்றானோ அவனுக்கு மறுமை உண்டாகிவிட்டது என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியதாக ஸூபீ மகான்கள் கூறுகிறார்கள். இவன்தான் உண்மையில் “பகீர்” ஆவான். இது குறித்தே ஸூபீ மகான்கள் إِذَا تَمَّ الْفَقْرُ فَهُوَ اللهُ – “பக்ர்” எனும் “மகாம்” அந்தஸ்த்து பூரணமாகிவிட்டால் அவன் அல்லாஹ் என்று கூறுகிறார்கள்.
“பகீர்” எனும் இந்நிலை எவருக்கும் சொந்தமானதல்ல. ஆயினும் எவன் இந்நிலையை அடைவதற்காக ஒரு ஞான குருவிடம் “பைஅத்” செய்து அவரின் வழி காட்டலில் பயிற்சி செய்தானாயின் – முயற்சி செய்தானாயின் அவன் “பகீர்” ஆகிவிடுவான்.
இந்நிலை அடைந்தவன் இவ் உலகில் உயிருடன் இருந்த நிலையில் சுவர்க்க இன்பங்களை அனுபவிக்கும் சுவர்க்கவாதியாகிவிடுவான்.
இதன் மூலம் ஸூபீகள் கூறும் “பகீர்” பேரின்ப வெள்ளத்தில் மிதப்பான்.