மதத்தை மையப்படுத்தி முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சதி முயற்சி!
பின்னணியில் யஹூதிகளா?
துறை தெரியாமல் தோணி தொடுத்துவிட்டு தலையில் கை வைத்து கண்ணீர் வடிக்கும் உலமா சபை!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உலம சபையின் தலைவர் அவர்களே!
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ
விசுவாசிகளே! “பாஸிக்” எனும் தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் அதை உடனே அங்கீகரித்து அறியாமையால் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமல் இருப்பதற்காக – அதன் உண்மையை அறிவதற்காக அதனைத் தீர விசாரணை செய்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் பின்னர் நீங்கள் செய்தவைகள் பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள். (49-06)
மேற்கண்ட இத்திரு வசனம் உங்கள் விடயத்தில் அருளப்பட்டது போன்றே உள்ளது. இதை உங்கள் மனச் சாட்சியும் ஏற்றுக் கொள்ளும்.
ஸூபிஸக் கலை அந்தகர்களும், எனது விரோதிகளுமான வஹ்ஹாபீகளிற் சிலர், காத்தான்குடியிலுள்ள எனது பரம்பரை விரோதி ஒருவரால் தூண்டப்பட்டு எனது பேச்சுக்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாக்களுடன் உங்களிடம் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் என்னைப் பூண்டோடு ஒழிக்கும் திட்டமுள்ளவர்களேயாவர். இது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் உண்மை இதுவே.
இவர்கள் கொழும்பு வரும் வழியில் எனது மதிப்பிற்குரிய உஸ்தாத் மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் அவர்களை இடைவழியிலுள்ள அவர்களின் ஊரில் அவர்களைச் சந்தித்து அவர்களிடம் விடயத்தைக் கூறி றஊபுக்கு ஒரு “பத்வா” வழங்க வேண்டும். உங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்கள்.
அதற்கு ஹஸ்றத் அவர்கள், அப்துர் றஊப் என்னிடம் கல்வி கற்ற எனது மாணவர். திறமையுள்ளவர். ஆனால் துடிப்பு மிக்கவர். அவர் என்ன பேசியுள்ளார் என்பதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆய்வு செய்து, இரண்டு மாதங்கள் வரை பிற்போட்டு ஆராய்ந்து ஒரு முடிவு செய்வோம். அதற்கிடையில் அவசரப்பட்டு “பத்வா” கொடுத்து விடாதீர்கள் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள்.
ஆயினும் காத்தான்குடி குழு கொழும்பு சென்று உலமா சபையின் முக்கியத்தர்களைச் சந்தித்து “பத்வா” வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் அவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் செயல்படவில்லை.
“பத்வா” கொடுப்பது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் மருதானை ஸாஹிறா கல்லூரியில் நடை பெற்றது. இக் கூட்டம் நடந்த முறை பற்றி நான் எழுதுவதாயின் கையடக்க சிறிய நூலொன்றுதான் எழுத வேண்டும். இருந்தாலும் மாதிரிக்காக (sample) ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
ஒலிப்பதிவு நாடாக்களை இயக்குவதற்கு அதற்கான கருவி ஒழுங்கு செய்யப்படாததால் எனது நண்பர் ஒருவர்தான் தனது கருவியை தானே எடுத்துச் சென்று இயக்கியுள்ளார். அங்கு நடந்த நிகழ்வுகள் யாவும் அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரிந்தால் அது எனக்குத் தெரிந்தது போன்றதே.
முதற்குற்றம்: உலமா சபை செய்த முதற் குற்றமும், பாரிய குற்றமும் என்னை விசாரிக்காமல் “பத்வா” வழங்கியதேயாகும். இஸ்லாமிய சட்ட நூல்கள் தருகின்ற தகவல்களின் படி உலமா சபை என்னை விசாரிக்காமல் வழங்கிய தீர்ப்பு எக்காரணம் கொண்டும் செல்லுபடியாகாது.
இரண்டாம் குற்றம்: குறுகிய காலத்துள் அவசரப்பட்டு “பத்வா” வழங்கியது. நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞான தத்துவம் பல்கலைக் கழக மட்டத்தில் பல அறிஞர்கள் ஒன்று சேர்ந்து பல நாட்கள், பல மணி நேரங்கள் எடுத்து ஆராயப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இவ்விடயத்திலும் உலமா சபை தவறிவிட்டது.
கொழும்பு வந்த மௌலவீகள் குழு வழியில் உடுகொட பிரதேசத்தில் மர்ஹூம் அப்துஸ்ஸமத் அவர்களைச் சந்தித்த செய்தியும், அங்கு நடந்த பேச்சு வார்த்தையும், ஹஸ்றத் இவர்களுக்கு கூறிய ஆலோசனைகளும் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.
ஆயினும் அக்குழுவில் ஒருவர் இருந்தார். அவர் ஓர் ஒற்றர். ஆயினும் எனது நண்பன். அவர்களுக்கிடையில் நடக்கின்ற இரகசியங்களை தினமும் இரவு நேரத்தில் மர்ஹூம் இப்றாஹீம் நத்வீ அவர்களின் வீட்டுக்கு வந்து எங்கள் இருவரிடமும் இரகசியமாகச் சொல்வார். அப்துஸ்ஸமத் ஹஸ்றத் அவர்களுடன் நடந்த செய்தியை எங்களிருவருக்கும் சொன்னவர் இவர்தான்.
காத்தான்குடி மௌலவீகள் குழு உங்களிடம் வந்து இவ் விவகாரத்தை சொன்ன போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவசரப்படாமலும், ஆத்திரப்படாமலும் இப்பிரச்சினை கொள்கையுடன் தொடர்புள்ளதாயிருப்பதால் உங்கள் “பத்வா” குழுவுடன் வெளியிலுள்ள ஸபிஸ ஞானத்துடன் தொடர்புள்ளவர்களிற் சிலரையும் அழைத்து நீண்டகாலமெடுத்து ஆய்வு செய்திருக்க வேண்டும். என்னை அங்கு அழைத்து அல்லது நீங்கள் என்னிடம் வந்து என்னை விசாரித்திருக்க வேண்டும். விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்யாமல் விட்டது தவறென்று சொல்வதை விட உங்களின் மனமுரண்டு, அல்லது சதி என்று சொல்வதே பொருத்தமானதாகும்.
நீங்கள் எவ்வளவுதான் ஸூன்னீ போல் நடந்து கொண்டாலும் நீங்கள் எதார்த்தத்தில் வஹ்ஹாபீகள்தான். எப்படியாவது என்னை அவமானப்படுத்தினால், என் வாய்க்கு பூட்டுப் போட்டால் வஹ்ஹாபிஸத்தை வளர்ப்பது இலகுவாகிவிடும் என்பதற்காகவே இவ்வாறெல்லாம் செய்துள்ளீர்கள்.
அரச நீதி மன்றிலும், காழீ நீதி மன்றிலும், மற்றும் இணக்க சபை போன்றவற்றிலும் ஒரு வழக்கை ஒரு தவணையில் முடித்து விடாமல் பல வருடங்கள், பல மாதங்கள் வரை பல தவணைகள் போட்டு விசாரிக்கும் வழக்கம் இருக்கும் நிலையில் நீங்கள் இவ் விவகாரத்தை “சுடுகுது மடியைப்பிடி” என்ற பாணியில் அவசரமாக முடித்தது நீங்கள் செய்த தவறா? சதியா? என்னை விசாரிப்பதற்கு வாய்ப்புக்கள் பல இருந்தும் விசாரிக்காமல் விட்டது உங்களின் சதியா? இல்லையா? என்னை ஒரு தரம் மட்டும் அழைத்து விட்டு நான் அனுப்பிய பதிலையும் கவனத்திற் கொள்ளாமல் விட்டது உங்களின் சதியா? இல்லையா?
முப்தீகளே! முல்லாக்களே! நீங்கள் துறை தெரியாமல் தோணி தொடுத்துவிட்டு இப்போது உங்களின் தன் மானம் காப்பதற்காக பொய்க் காரணங்களும், பொய்ச் சாட்டுக்களும் கூறி சமாளிப்பதற்கு முன் வந்துள்ளீர்கள். சட்டத்தரணிகளினதும், அரசியல்வாதிகளினதும் வீட்டுக் கதவுகளைத் தட்டி நிற்கிறீர்கள். ஒரு சதியை மறைக்க ஒன்பது சதிகள் செய்யத் திட்டமிடுகிறீர்கள்.
எனக்கு “பத்வா” வழங்கிய கால கட்டத்தில் உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” பற்றிய ஆரம்ப அறிவு கூட இருக்கவில்லை. “ஹுலூல் – இத்திஹாத்” அறிவு மட்டுமே இருந்தது. இதனால் எனது “வஹ்ததுல் வுஜூத்” கருத்தை “ஹுலூல் – இத்திஹாத்” கருத்தென்று தவறாக விளங்கி “பத்வா” கொடுத்துவிட்டீர்கள். இது உங்களின் மடமை அல்லது சதியாக இருக்கலாம்.
நீங்கள் இப்போதுதான் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று பேசுகிறீர்கள். நானோ நீங்கள் பிறப்பதற்கு முன்னிருந்தே இக் கொள்கை பிழையென்று பேசி வந்துள்ளேன். இதை நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது வியப்பான விடயமே!
நான் இதுகால வரை சுமார் 43 ஆண்டுகளாகப் பேசியதும், இப்போது பேசிக் கொண்டிருப்பதும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைதான். நீங்களோ எனது கருத்தை உங்களின் அறியாமையினாலோ என்னவோ “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று விளங்கிக் கொண்டு அது பிழையென்பதற்கான ஆதாரங்களைக் கூறி “பத்வா” கொடுத்துவிட்டு அந்த “பத்வா”வில் எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவும் உங்களின் சதியேயன்றி தவறென்று சொல்ல முடியாது. நீங்கள் பொய்க் காரணங்களும், பொய் விளக்கங்களும் கூறி பொது மக்களைச் சமாளிக்க முற்படாமல் உங்களின் தவறையுணர்ந்து, அல்லது சதி வெளியாகிவிட்டதென்று புரிந்து எந்த ஒரு நிபந்தனையுமின்றி “பத்வா”வை வாபஸ் பெறுங்கள். இதுவே நீங்கள் அல்லாஹ்விடம் தப்புவதற்கும், ஆட்சியின் பிடியிலிருந்து தப்புவதற்கும் ஒரே வழியாகும்.
நீங்கள் இந்த முடிவுக்கு வராமல் உங்கள் பாணியிலேயே காய் நகர்த்திக் கொண்டிருந்தீர்களாயின் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளுங்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை முதலில் எதிர்த்து தென் மாகாணத்தில் மாநாடு நடத்தியவர் எங்கே? சிந்தியுங்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று மக்கா நகரிலிருந்து தனக்கு கடிதம் வந்துள்ளதாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி இறுதியில் கையுமெய்யுமாக மாட்டி அவமானப்பட்டு மறைந்தவர் எங்கே? சிந்தியுங்கள்.
“பத்வா” வாபஸ் பெறப்படுவதே எனது தாகம்.
தாகம் தீரும் வரை நான் குடித்துக் கொண்டே இருப்பேன்.
முல்லாக்களே! நான் தலைப்பில் எழுதியுள்ள திருக்குர்ஆன் வசனத்தில்
إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ….
கெட்டவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி கொண்டு வந்தால்… என்ற வசனத்தை நீங்கள் ஆராய்ந்து காத்தான்குடியிலிருந்து உங்களிடம் இந்த விவகாரத்தை கொண்டு வந்தவர்கள் எனது எதிரிகளாவர் என்பதை ஆரம்ப கால கட்டத்திலேயே நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தவறிவிட்டீர்கள்.
எனது அடுத்த ஆக்கத்தின் தலைப்பு ரிஸ்வி முப்தி அவர்களுக்கு பகிரங்க சவால்!