Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், அது தொடர்பாக பல...

குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், அது தொடர்பாக பல நூல்கள் எழுதியவர்களுமாவார்கள்.

தொடர் – 1
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
உலகமெல்லாம் பிரசித்தி பெற்ற குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைச் சரி கண்டவர்கள் மட்டுமல்ல. அதை மக்கள் மத்தியில் கூறி அவர்களை அவ்வழிக்கு அழைத்து வெற்றி கண்ட மகானுமாவார்கள்.

இவர்கள் ஒரு “குத்பு” என்று அறிவுலகம் கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும். இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திருக்குர்ஆனுக்கோ, அல்லது நபீ மொழிக்கோ முரணான கருத்துள்ளவர்களாக இருந்தவர்களுமல்ல. “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்த்தவர்களுமல்ல. இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தமது காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு முடிந்த அளவு சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவற்றிற் சில துளிகளை இங்கு எழுதுகிறேன்.
 
تَنْفَرِدُ مَعَ رَبِّكَ بِبَاطِنِكَ، وَتَكُوْنُ مَعَ الْخَلْقِ بِظَاهِرِكَ،
“மனிதா! நீ உனது இறைவனுடன் உள்ரங்கத்தில் தனித்திருந்து கொள். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளுடன் வெளிரங்கத்தில் இருந்து கொள்” என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்பத்ஹுர் றப்பானீ, பக்கம் 43,
ஆசிரியர்: ஜீலானீ
 
அவர்களின் இவ்வசனத்தின் சுருக்கம் என்னவெனில் “எதார்த்தத்தில் இருப்பவன் அல்லாஹ் மட்டும்தான். படைப்பு அல்ல. ஆனால் நீ மனிதா! உள்ரங்கத்தில் மட்டும் அவனுடன் இருப்பதாக உணர்ந்து கொள். வெளிரங்கத்தில் அவனின் வெளிப்பாடான படைப்புகளுடன் இருப்பதாக உணர்ந்து கொள்” என்பதாகும்.
 
ஒரு மனிதன் இவ்விரு உணர்வுகளோடு வாழ வேண்டுமென்று குத்பு நாயகம் வழி காட்டியுள்ளார்கள். மனிதன் இவ்விரு உணர்வுகளுடனும் வாழ்ந்தானாயின் அவன் காலமெல்லாம் அல்லாஹ்வுடன் இருந்தவனாகிவிடுவான். ஒருவன் அல்லாஹ்வுடன் இருப்பதாக உணர்வது மட்டும் தனியான ஒரு வணக்கமாகும். வணக்கத்திலிருப்பவனை அல்லாஹ் விரும்புவான். அவன் விரும்பினால் அது ஒன்றே மனிதனுக்கு கிடைத்தற்கரிய பக்கியமாகும். அல்லாஹ் ஒருவனைப் பொருந்திக் கொள்வதென்பது – விரும்புதல் என்பது அவனுக்கு இவ்வுலகின் ஆட்சியதிகாரம் கையிலிருப்பதை விடச் சிறந்ததாகும்.
 
இறைவன் அடியானுக்கு அருளிய இதைவிடச் சிறந்த பரிசு இருக்குமோ?
இவ்விடத்தில் ஒருவனுக்கு ஒரு கேள்வி வரலாம். அது ஒரு மனிதன் இறைவனுடன் மேற்கண்ட இரு நிலைகளில் “பாதின்” உள்ரங்கத்தில் இருப்பது போலவே வெளிரங்கத்திலும் இருந்தால் என்ன? என்ற கேள்வியாகும்.
 
அவ்வாறு இருப்பதால் “ஷரீஆ”வின் படி நூறு வீதம் வாழ முடியாமற் போய்விட வாய்ப்பு ஏற்படலாம். ஏனெனில் படைப்புக்கள் யாவையும் அல்லாஹ்வாக வெளிரங்கத்திலும் அவன் உணரும் போது உலக நடைமுறைச் சிக்கல்கள் நிறைய ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு மனிதன் உலகில் வாழும் போது படைப்பை ஒரு கண்ணால் படைப்பு என்றும், மறு கண்ணால் படைத்தவன் என்றும் பார்த்து வாழ வேண்டும். இது கடினமான ஒன்றுதான். ஆயினும் பயிற்சி மூலமும், அல்லாஹ்வின் அருளின் மூலமும் இது கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்! இப்பாக்கியம் பெற்ற ஒருவர் வெளிரங்கத்திலும் அவனுடன் இருப்பதாக உணர்வில் பயிற்சி செய்து வரும் போது கனவு நனவாவதுபோல் காரியம் நடக்கும்.
இன்னும் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறும் சொல்லியுள்ளார்கள்.
 
اَلْحَمْدُ للهِ الَّذِيْ وُجِدَ فِى كُلِّ شَيْءٍ، وَحَضَرَ عِنْدَ كُلِّ شَيْءٍ،
(الفيوضات الربانية فى المآثر والأوراد القادرية، جمع اسماعيل القادري، ص 38)
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு உரியனவாகும். அவனை ஒவ்வோர் வஸ்திலும் பெற்றுக் கொள்ளப்படும். அவன் ஒவ்வோர் இடத்திலும் சமூகமளித்தவனாக உள்ளான்.
ஆதாரம்: அல்புயூழாதுர் றப்பானிய்யஹ், பக்கம் 38
 
குத்பு நாயகம் அவர்களின் மேற்கண்ட பேச்சு “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை தொனிக்கும் பாணியில் அமைந்திருப்பது கண்டு எவரும் அவர்களில் சந்தேகம் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 
ஏனெனில் அவர்களின் மேற்கண்ட வசனத்தில் الحمد لله الذي وُجد فى كل شيء சகல வஸ்துக்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்டவன் என்று சொல்லப்பட்டுள்ளதால் அவன் வேறு, வஸ்துக்கள் வேறு என்றும், அதில் அவன் இறங்குகிறான், அல்லது அதோடு கலந்து விடுகிறான் என்றும் சிலர் விளங்க வாய்ப்பு உண்டு. மஆதல்லாஹ்! அவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை அடிப்படையில் அவ்வாறு சொல்லவில்லை. அவர்கள் வழிகெட்ட இக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை விளக்கமாக அறிந்தவர்களிற் சிலர் கூட அது தொடர்பான ஒரு கருத்தைக் கூறும் போது அக்கருத்துக்குப் பொருத்தமான சொல் கிடைக்காமற் போனதால், அல்லது எழுதிக் கொண்டிருந்த அவரை ஆட்கொண்ட இறை போதை தடுமாற்றத்தை ஏற்படுத்தியதால் அவ்வாறு சொற் பிரயோகம் ஏற்பட்டிருக்கலாம் என்று நாம் அவர்கள் மீது நல்லெண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஓர் இறைஞானி “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை பின்வருமாறு சொல்லியுள்ளார்.
எள்ளுக்குள் எண்ணையைப் போல்
எங்கும் நிறைந்தவனே!
உள்ளுக்குள்ளாயிருந்து – உன்
உற் கதவைப் பூட்டிக் கொண்டாய்.
 
இந்த இறைஞானி “எள்ளுக்குள் எண்ணையைப் போல்” என்று சொன்னதால், “எள்” என்றும், “எண்ணை” என்றும் இரு வஸ்துக்கள் வருகின்றன. இது “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று சிலர் கருதலாம். உண்மை அவ்வாறில்லை. அவ்வாறு அவர் சொன்னதற்கான காரணம் குத்பு நாயகத்தின் விடயத்தில் நான் கூறிய காரணங்களாக இருக்கலாம் என்று இவர் மீது நல்லெண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். குறித்த இறைஞானி “எள்ளிலே எண்ணையைப் போல்” என்று சொல்லியிருந்தாராயின் சிக்கலுக்கு இடமில்லாமற் போயிருக்கும்.
மேலும் குத்பு நாயகம் பின்வருமாறும் சொல்லியுள்ளார்கள்.
 
ومعنى الوصول إلى الله عزّ وجلّ خُرُوْجُكَ عَنِ الْخَلْقِ، فَإِذَا وَصَلْتَ إِلَى الْحَقِّ عزّ وجلّ فَكُنْ آمِنًا أَبَدًا مِنْ سِوَاهُ عزّ وجلّ، فَلَا تَرَى لِغَيْرِهِ وُجُوْدًا البتّة، (فتوح الغيب، 40-41، للجيلاني)
“அல்லாஹ் அளவில் “வுஸூல்” சேர்தல் என்றால் நீ படைப்பை விட்டும் வெளிப்படுவதாகும். நீ அல்லாஹ் அளவில் சேர்ந்தால் அவன் தவிரவுள்ளதை விட்டும் அச்சமற்றவனாக இருந்து கொள். நீ அல்லாஹ் தவிர வேறொன்றுக்கும் “வுஜூத்” உள்ளமை இருப்பதாக காணமாட்டாய்”
ஆதாரம்: புதூஹுல் ஙைப்,
பக்கம் 40-41, ஆசிரியர்: ஜீலானீ.
 
குத்பு நாயகம் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்போம்.
ஒரு மனிதன் அல்லாஹ் அளவில் போய் சேர வேண்டுமாயின் – அதாவது அல்லாஹ்வை அறிந்து அவனில் “பனா” லயித்துப் போக விரும்பினால் “கல்கு” படைப்பை விட்டும் அவன் வெளியாக – வெளியேற வேண்டுமென்று குத்பு நாயகம் சொல்கிறார்கள். படைப்பை விட்டும் வெளியாவதென்றால் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கருத்தல்ல. அவர்கள் خُرُوْجُكَ عَنِ الْإِنْسَانْ மனிதனை விட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்லியிருந்தால் மனிதனில்லாத காட்டுக்குப் போக வேண்டும் என்று கருத்துக் கொள்ளலாம். அவர்கள் அவ்வாறு சொல்லாமல் خروجك عن الخلق படைப்பை விட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்லியிருப்பதால் படைப்பு இல்லாத இடம் எங்கே இருக்கிறது?
 
எனவே, படைப்பை விட்டும் நீ வெளியேற வேண்டுமென்று அவர்கள் சொன்னது உனதுள்ளத்திலிருந்து படைப்பை நீ வெளியேற்ற வேண்டும் என்பதையே குறிக்கும். மனதிலிருந்து படைப்பை வெளியேற்றுவதென்றாலும், படைப்பை விட்டும் நீ வெளியேற வேண்டும் என்றாலும் படைப்பு என்பதே இல்லை என்ற முடிவுக்கு வருவதையே அது குறிக்கும். ஆகையால் படைப்பு என்பதே இல்லை என்ற முடிவுக்கு நீ வர வேண்டும். அவ்வாறாயின் படைப்பு என்ற “ஸூறத்” உருவத்தில் உள்ளவை யாவும் அல்லாஹ்தான் என்ற முடிவுக்கு நீ வர வேண்டும்.
 
குத்புல் அக்தாப் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தொடர்ந்து எழுதப்படும். இவர்களே இத்தத்துவத்தை சரி கண்டிருப்பது உலக அறிஞர்கள் சரி கண்டதற்கு சமமானதென்பது புத்தி ஜீவிகளுக்கு புரியாமலிருக்காது.
 
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க…)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments