தொடர் – 2
முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், அது தொடர்பில் பல நூல்கள் எழுதியவர்களுமாவார்கள்.
இவ் உண்மையை யார் அறியாது போனாலும் அவர்களின் “காதிரிய்யா தரீகா” வழி செல்வோர் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்.
يقول الجيلاني: معنى الوُصول إلى الله عزّ وجلّ خُرُوجك عن الخلق، فإذا وصلتَ إلى الحقّ عزّ وجلّ فكُن آمنا أبدا مِن سِواه عزّ وجلّ، فلا تَرى لغيرِه وجودا البتّة، (فتوح الغيب، 40-41، للجيلاني(
அல்லாஹ் அளவில் சேர்தல் என்பது நீ “கல்க்” படைப்பை விட்டும் வெளியாவதாகும். இது பற்றிக் கடந்த தொடரில் எழுதியுள்ளேன். அங்கே காண்க! அவர்களின் வசனத்தின் தொடரில், நீ அல்லாஹ் அளவில் சேர்ந்தால் அவனல்லாததை – அவனுக்கு வேறானதை விட்டும் எப்போதும் அச்சமற்றவனாக இரு. இவ்வாறிருந்தால் அவனுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை எனும் இருக்கை உண்டு என்பதைக் காண்பாய். படைப்புக்கு அது இருப்பதாக நீ அறவே காணமாட்டாய்.
புதூஹுல் ஙைப், பக்கம்: 40-41, ஆசிரியர்: ஜீலானீ
அல்லாஹ் அளவில் “வுஸூல்” சேர்தல் என்பது “கல்க்” படைப்பு உண்டு என்ற சிறையிலிருந்து நீ வெளியேறுவதாகும். இதன் சுருக்கம் என்னவெனில் “கல்க்” படைப்பு என்று ஒன்றுள்ளதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே அந்த நினைவை நீ விட வேண்டும். படைப்பு என்பது எதார்த்தத்தில் இல்லாததென்றும், படைப்பாகத் தோற்றுவது அல்லாஹ்தான் என்றும் நீ நம்ப வேண்டும். மக்களுடன் சேர்ந்து வாழாமல் காட்டிற்குச் செல்ல வேண்டுமென்பது கருத்தல்ல.
சிலர் இவ்வசனத்தை பார்த்துவிட்டு “கல்க்” என்ற படைப்பை விட்டும் வெளியேறுதல் அவசியம் என்று விளங்கி காட்டுக்குச் சென்று விடுகிறார்கள். இவ்வசனத்திற்கு காட்டுக்குப் போதல் என்று கருத்து வைப்பது பிழையாகும். ஏனெனில் அவ்வாறு கருத்து வைத்தால் காட்டிலுள்ள உயிரினங்களும், ஏனைய மரம், செடி, கொடி போன்றவையும் “கல்க்” படைப்புகளாயிருப்பதால் படைப்பை விட்டும் வெளியேறுகின்றவன் மீண்டும் படைப்போடுதான் சேர்கிறான். குத்பு நாயகம் அவர்கள் خروجك عن الخلق படைப்பை விட்டும் நீ வெளியேறுதல் என்று சொல்லாமல் خروجك عن الإنسان மனிதனை விட்டும் நீ வெளியேறுதல் என்று வசனம் சொல்லியிருந்தால் காட்டுக்குப் போகலாம்.
எனவே, குத்பு நாயகம் அவர்கள் خروجك عن الخلق படைப்பை விட்டும் நீ வெளியேற வேண்டும் என்று சொன்னது படைப்பு என்பதை அல்லாஹ்வுக்கு வேறான ஒரு பொருளாக நீ நினைத்து விடக் கூடாது என்ற கருத்திலேயாகும். இன்றேல் படைப்பில்லாத ஓர் இடத்துக்கு எவராலும் போக முடியாது. எங்கு போனாலும் காட்டுக்குச் சென்றாலும் பார்வைக்கு படைப்புதான் இருக்கும்.
எனவே, குத்பு நாயகம் அவர்கள் எவரையும் படைப்புகளை விட்டுவிட்டு காட்டுக்குப் போகுமாறு சொல்லவில்லை. ஒருவன் படைப்புகள் அல்லாஹ்வுக்கு வேறானவை என்று நம்பாமலிருந்தால் அவன் அல்லாஹ்வுடனேயே இருக்கிறான்.
குத்பு நாயகம் அதே வசனத்தில், நீ அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டால் – அதாவது படைப்புகள் அல்லாஹ்வுக்கு வேறாகாத அவன் தானானவைதான் என்று நம்பினால் அல்லாஹ்வுக்கு வேறான எதுவுமே இல்லை என்ற மன உறுதியோடு இருந்து கொள் என்று சொல்லியுள்ளார்கள்.
நீ அல்லாஹ் அளவில் சேர்ந்தால் அறவே படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை – இருக்கை கிடையாது என்பதை திட்டமாக அறிந்து கொள்வாய்.
மேலும் குத்பு நாயகம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை பின்வருமாறு கூறுகிறார்கள்.
يقول عبد القادر الجيلاني أنّه بإمكان الصوفيّ رؤية الله فى الدّنيا، وذلك بِرَفْعِ حُجُبِ الكائناتِ عن قلبِه، واعتقاده أنّ الموجود هو الله وحده،
“அல்லாஹ்வை இவ்வுலகில் காண முடியும். அது சாத்தியம் என்று சொல்லும் ஸபீகள் அது எதனால் சாத்தியமாகிறது என்பதற்கான வழியையும் சொல்லிக் காட்டுகிறார்கள். அதாவது படைப்புகள் – சிருட்டிகள் எனும் திரைகள் அவனின் உள்ளத்திலிருந்து நீங்க வேண்டும். அதோடு அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்று அவன் நம்பவும் வேண்டும்” என்று குத்பு நாயகம் சொல்லியுள்ளார்கள்.
இது தொடர்பாக குத்பு நாயகம் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
المؤمن العارف له عينان ظاهرتان، وعينان باطنتان، فَيَرَى بالعينين الظاهرتين ما خَلَقَ الله عزّ وجلّ فى الأرض، ويَرَى بالعينين الباطنتين ما خلق الله عزّ وجلّ فى السموات، ثمّ ترفع الحجُبُ عن قلبِه، فيراه فيصير مقرَّبًا، كن عاقلا، تدبَّرْ ما أقول، وتفهَّمْ، (الفتح الرباني، ص 16-17، للجيلاني)
“இறைஞானமுள்ள விசுவாசிக்கு வெளிரங்கமான இரு கண்களும், உள்ரங்கமான இரு கண்களும் உள்ளன. அவன் வெளிரங்கமான தனது இரு கண்கள் கொண்டும் வல்ல அல்லாஹ் பூமியில் படைத்தவற்றைப் பார்ப்பான். அவனின் உள்ரங்கமான இரு கண்கள் கொண்டும் அல்லாஹ் வானங்களில் படைத்தவற்றைப் பார்ப்பான். பின்னர் அவனின் உள்ளத்தை மூடிக் கொண்டிருந்த திரைகளை அல்லாஹ் நீக்குவான். அப்போது அவன் அல்லாஹ்வைக் காண்பான். அவனுக்கு மிக நெருக்கமானவனாகவும் மாறிவிடுவான். மனிதா! நீ புத்தியுள்ளவனாய் இருந்து கொள்! நான் சொல்வதை நன்றாக சிந்தித்து விளங்கிக் கொள்” என்று கூறியுள்ளார்கள்.
அல்பத்ஹுர் றப்பானீ, பக்கம் 16-17, ஆசிரியர் ஜீலானீ.
இப்பாக்கியம் இறைஞானமுள்ள “ஆரிப்” அல்லாஹ்வை அறிந்த விசுவாசிகளுக்கு உண்டு. மற்றவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டாது. வெளிரங்கமான இரு கண்கள் என்பன முகக் கண்களையும், உள்ரங்கமான இரு கண்கள் என்பன மனக் கண்களையும் குறிக்கும். இரு முகக் கண்கள் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இரு மனக் கண்கள் என்பன அல்லாஹ்வை அறிந்த விசுவாசிகளுக்கு மட்டுமே இருக்கும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தினமும் நள்ளிரவில் – நடு நிசியில் எழுந்து வீட்டிலிருந்து வெளியே வந்து வானத்தைப் பார்த்து பின்வருமாறு ஓதுவார்கள்.
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ، الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
நிச்சயமாக வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அறிவுடைய அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்கள் விலாப் புறங்களின் மீது சாய்ந்தும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள், மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காக – வீணாகப் படைக்கவில்லை, நீ மிகத் தூயவன். நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக! என்று சொல்வார்கள். (ஆல இம்றான் 190-191)
பெருமானார் அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள் நள்ளிரவில் எழுந்து வீட்டின் வெளியே வந்து வானத்தைப் பார்த்து மேற்கண்டவாறு ஓதுவார்கள்.
இவ்வாறு நபீ தோழர்களும், தாபியீன்களும், அவ்லியாஉகளும், ஸூபீ மகான்களும் செய்து வந்துள்ளார்கள்.
ஒவ்வோர் இரவும் இவ்வாறு செய்வதற்கு வசதியற்றவர்கள் ஒரு வாரத்தில் ஒரு தரமாவது செய்து வந்தால் இறைஞானம் தானாக பெருகும். பெருக்கெடுக்கும்.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தினமும் நள்ளிரவில் எழுந்து மேற்கண்ட ஓதலை ஓதுபவர்களாக இருந்தார்கள்.
“காதிரிய்யா தரீகா” வழி செல்வபவர்கள் குறிப்பாகவும், ஏனையோர் பொதுவாகவும் தினமும் இவ்வாறு செய்வதற்கு வசதியுள்ளவர்கள் செய்து வருதல் பயன் தரும். ஆன்மிக உணர்வை அதிகப்படுத்தும்.
இறை வழி நடப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு தரமாவது இவ்வாறு செய்தார்களாயின் நபீ பெருமானார் அவர்களை இவ்விடயத்தில் பின்பற்றியவர்களாகி விடுவார்கள்.
மேலே நான் எழுதியுள்ள நீண்ட திரு வசனத்தில் رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا இறைவா! இதை நீ “பாதில்” வீணாகப் படைக்கவில்லை என்ற வசனம் மிக ஆழமாக ஆராய வேண்டியதாகும். வாசகர்கள் இதைக் கவனத்திற் கொண்டு இறைஞானிகளையும், ஸூபீ மகான்களையும் சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தங்களின் வயோதிபம் வரை ஏதோ ஒரு கவலையோடு இருந்தார்களாம். நாயகமே! உங்களுக்கு ஏன் இப்படியொரு கவலை என்று முரீதுகள் – மாணவர்கள் அடிக்கடி கேட்பார்களாம். ஒரு சமயம் இவ்வாறு கேட்ட ஒருவருக்கு “பெருமானார் அவர்களை முழுமையாக பின்பற்ற முடியவில்லையே” என்று சொன்னார்களாம்.
ஒரு நாளிரவு அவர்களை ஒரு தேள் தீண்டிவிட்டது. அன்று முதல் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். ஒரு “முரீது” சிஷ்யன் அவர்களிடம் நாயகமே! உங்களில் மாற்றத்தை நான் காண்கிறேன். நீங்கள் எந்நேரமும் கவலையான முகத்துடன் இருப்பீர்கள். இன்று மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! என்று கேட்டார்.
அப்போது குத்பு நாயகம் கண்ணீர் வடித்தவர்களாக اَلْآنَ تَمَّتِ الْورَاثَةُ இப்போதுதான் நான் எனது பாட்டனார் பெருமானாரை முழுமையாகப் பின்பற்றினேன் என்று கூறி விளக்கமும் சொன்னார்கள்.
நபீ பெருமானார் அவர்களின் வாழ்க்கையில் ஒரேயொரு தரம் அவர்களை ஒரு தேள் கடித்திருக்கிறது. அப்படியொரு பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்றுதான் நான் கவலைப் பட்டவனாக இருந்தேன். இன்றிரவு என்னை ஒரு தேள் கடித்துவிட்டது. இன்றுதான் நான் பெருமானார் அவர்களை முழுமையாக பின்பற்றினேன் என்று கூறினார்களாம்.
குத்பு நாயகம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களும், எழுதியவர்களும் என்பதையறிந்து அவர்கள் வழி செல்வோம்.
நான் பேசுவது முறையற்ற “வஹ்ததுல் வுஜூத்” என்று குற்றம் சாட்டும் மகான்கள் முறையான “வஹ்ததுல் வுஜூத்” பற்றி ஒரு தெளிவை தருவார்களா?
தொடரும்… (3ம் பக்கம் பார்க்க…)