Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், அது தொடர்பாக பல...

குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களும், அது தொடர்பாக பல நூல்கள் எழுதியவர்களுமாவார்கள்.

தொடர் – 3

يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘شَجَاعَةُ الخَوَاصِّ فى الزُّهدِ فى الدّنيا والآخرة ‘ (الفتح الربّاني للجيلاني، ص 25)
 
يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘ من أراد اللهَ فعليه بالزُّهد فى الآخرة ‘ (فتوح الغيب للجيلاني، ص 123)
 
يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘ اِخْلَعْ نَعْلَيْكَ، دُنْيَاكَ وَآخِرَتَكَ، وَتَجَرَّدْ عَنِ الْأَكْوَانِ، وافن عن الْكُلِّ، وتَطَيَّبْ بالتَّوْحِيْدِ، (فتوح الغيب، للجيلاني، ص 125)
 
01. குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
 
“கவாஸ்” என்றால் விஷேடமானவர்கள் என்பது பொருள். ஆன்மிக வழி நடப்பவர்களில் உயர் பதவியுள்ளவர்கள் “கவாஸ்” என்று ஸூபீ மகான்களால் அழைக்கப்படுவார்கள். இவ் அடிப்படையிலேயே குத்பு நாயகம் அச் சொல்லை இங்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
 
“விஷேடமானவர்களான “கவாஸ்”களின் குறிக்கோள் – அவர்களின் இலட்சியம் “துன்யா”|விலும் – இம்மையிலும், “ஆகிறா”விலும் – மறுமையிலும் பற்றின்றி இருப்பதாகும்” என்று கூறியுள்ளார்கள்.
 
குத்பு நாயகமவர்கள் “துன்யா”வில் – இவ்வுலகில் பற்றில்லாமல் இருக்க வேண்டுமென்று சொன்னதை அதிகமானவர்கள் சரி காண்பார்கள். மறுமையிலும் பற்றின்றி இருக்க வேண்டுமென்பதை பலர் சரிகாணமாட்டார்கள். மறுமையில் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதையே சரி காண்பார்கள். இது பொது மக்களினதும், ஆன்மிகப் படியில் காற் பதிக்காதவர்களினதும் கருத்தாகும். ஒவ்வொருவரும் அவரவரின் படித்தரத்திற்கேற்றவாறுதான் சிந்திப்பார்கள். பொது மக்கள் – சாதாரண மனிதர்கள் அவர்களின் தரத்திற்கேற்றவாறுதான் சிந்திப்பார்கள்.
 
குத்பு நாயகம் மேற்கண்ட வசனத்தில் شَجَاعَةُ الْخَوَاصِّ விஷேடமானவர்களின் இலட்சியம் என்றுதான் கூறியுள்ளார்களேயன்றி شَجَاعَةُ الْعَوَامِّ பொது மக்களின் இலட்சியம் என்று கூறவில்லை.
 
எனவே, ஆன்மிகப் படியில் கால் பதித்தவர்கள் “துன்யா” இவ்வுலகின் இன்ப சுகங்களை விரும்பாதது போல் சுவர்க்கத்தின் இன்ப சுகங்களையும் விரும்பமாட்டார்கள்.
 
ஏனெனில் அடியான் செய்கின்ற எந்த வணக்கமாயினும் அது அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட வேண்டுமேயன்றி சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ, அங்குள்ள இன்ப சுகங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவோ, “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்து அழகிகளை மணமுடித்து மகிழ வேண்டுமென்பதற்காகவோ செய்யப்படக் கூடாதென்ற கொள்கை “கவாஸ்” என்று சொல்லப்படுகின்றவர்களின் கொள்கையாகும்.
 
அவர்களின் – அந்த மகான்களின் கொள்கையையே குத்பு நாயகம் கூறியுள்ளார்கள். அந்த மகான்கள் போல் நாமும் வணக்கம் செய்ய வேண்டுமென்பதற்கு வழிகாட்டியும் உள்ளார்கள்.
 
கூலியை எதிர்பார்த்து வணக்கம் செய்யும் ஒருவனுக்கும், கூலியை எதிர்பார்க்காமல் வணக்கம் செய்யும் ஒருவனுக்கும் வேறுபாடு உண்டு. கூலியை எதிர்பார்த்து வணக்கம் செய்பவன் ஆன்மிக அடிப்படையில் தரம் குறைந்தவன் என்றும், அதை எதிர்பாராமல் வணக்கம் செய்பவன் ஆன்மிக தரம் உயர்ந்தவன் என்றும் கணிக்கப்படுவார்கள்.
 
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு காணலாம். ஒரு கடைக்கார முதலாளி தனது தொழிலாளிகளிடம் நீங்கள் காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை கடையில் வேலை செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாகவும் சொன்னான். அவனின் வேலையாட்கள் 10 பேர்களும் அவனுக்கு உடன் பட்டு வேலை செய்தனர். ஆயினும் அவர்களில் இருவர் மட்டும் தமது முதலாளியின் கூலியை எதிர்பாராமல் அவருக்காக – அவரிலுள்ள அன்பிற்காக வேலை செய்வதென்று முடிவு செய்து வேலை செய்தனர்.
 
இறுதியில் அனைவருக்கும் கூலி வழங்கப்பட்டது. ஆயினும் மேலே குறிப்பிட்ட இருவரும் கூலி வாங்காமல் நாங்கள் இருவரும் உங்களுக்காகவே வேலை செய்தோம் என்று கூறினார்கள். அவ்விருவரின் புனிதமான எண்ணத்தைப் புரிந்து கொண்ட முதலாளி அவர்கள் இருவரையும் தனது வியாபாரத்தில் சம பங்களாராக ஆக்கிக் கொண்டான்.
 
இவ் உதாரணத்தைக் கவனத்திற் கொண்டு ஆய்வு செய்தால் அல்லாஹ்விடம் கூலியை – சுவர்க்க இன்ப சுகங்களை எதிர்பார்த்து அவனை வணங்குதல் கூலிக்கு மாரடிப்பது போன்றதாகும் என்பது தெளிவாகும்.
 
எனவே, துன்யாவில் பற்றின்றி இருப்பது போல் “ஆகிறா” மறுமையின் இன்ப சுகங்களிலும் பற்றின்றியே இருக்க வேண்டும். ஏனெனில் “கல்க்” படைப்பு என்ற எதார்த்தத்தில் இம்மையும், மறுமையும் ஒன்றுதான். இந்நிலையில் ஒன்றை ஏற்று மற்றதை எதிர்ப்பது (அதாவது துன்யாவில் பற்றின்றி இருப்பதை ஏற்று ஆகிறாவில் பற்றின்றி இருப்பதை மறுப்பது) எவ்வாறு நியாயமாகும்?
 
ஸூபீகளும், ஞானிகளும், மற்றும் எதார்த்தவாதிகளும், உலகில் தோன்றி மறைந்த அறிஞர்களும், ஆய்வாளர்களும் நான் கூறும் இவ் உண்மையை அதாவது சுவர்க்கத்தின் இன்ப சுகங்களுக்காக வணக்கம் செய்தல் ஆன்மிக உயர்வுக்கும், ஒளியான வாழ்வுக்கும் வழி செய்யாது என்பதை உணர்ந்தவர்களும், சரி கண்டவர்களுமேயாவர்.
 
கூலிக்கு மாரடிப்பதால் கூலி மட்டும்தான் கிடைக்கும். அதனால் வேலை தந்த எஜமானின் அன்பைப் பெற முடியாது. அவரை நெருங்கவும் இயலாது.
 
இது போன்றுதான் எல்லா வணக்க வழிபாடுகளுமாகும். அதாவது அல்லாஹ்விடமிருந்து கூலியை எதிர்பார்க்காமல் அவனுக்காக மட்டும் செய்கின்ற, மறுமையின் இன்ப சுகங்களை எதிர் பார்க்காமல் செய்யப்படுகின்ற வணக்கங்களாகும்.
 
இவ்வாறு புனிதமான வணக்கம் செய்வதையே மறுமையில் பற்றின்றி இருத்தல் என்று குத்பு நாயகம் கூறினார்கள்.
 
02. இரண்டாம் வசனத்திலும் இதே கருத்தையே குத்பு நாயகம் வலியுறுத்துகின்றார்கள். இவ்வுலகில் பற்றற்றிருத்தல் என்றால் இவ் உலக இன்ப சுகங்களை அனுபவிக்காமல் இருப்பதையே குறிக்கும். மறுமையில் பற்றின்றி இருத்தல் என்றால் மறுமையின் இன்ப சுகங்களை அனுபவிக்க விரும்பாமலிருப்பது என்பதைக் குறிக்கும். இதுவே அவர்களின் பேச்சுக்கான விளக்கமேயன்றி அவர்கள் மறுமையை விரும்ப வேண்டாமென்று சொல்லவில்லை.
 
03. மூன்றாம் வசனத்திலும் இதே கருத்தையே குத்பு நாயகம் சற்று விளக்கமாக கூறியுள்ளார்கள். اِخْلَعْ نَعْلَيْكَ، دُنْيَاكَ وَآخِرَتَكَ துன்யா, ஆகிறா எனும் இரு செருப்புக்களையும் கழற்று என்று இறை வழி நடக்கும் ஒருவனுக்கு புத்தமதி கூறுகின்றார்கள். இவ்விரண்டின் இன்ப சுகங்களையும் நீ விட்டு விடு என்று கூறுகிறார்கள். இதன் சுருக்கம் இவ் உலகின் இன்ப சுகங்கள் என்ற செருப்பையும், மறுமையின் இன்ப சுகங்கள் என்ற செருப்பையும் கழற்றிவிட்டு இறைவன்பால் செல்லத் தயாராகுங்கள் என்று சொல்கிறார்கள். وَتَجَرَّدْ عَنِ الْأَكْوَانِ அனைத்து சிருட்டிகளையும், படைப்புகளையும் விட்டு விடு என்று போதிக்கின்றார்கள். இதையடுத்து அனைத்தை விட்டும் நீ “பனா” ஆகு என்றும் சொல்கிறார்கள். “கவ்ன்” என்ற சொல்லின் பன்மைச் சொல்தான் “அக்வான்” என்பதாகும். சர்வ சிருட்டிகளையும் உன் மனதிலிருந்து எடுத்து விடு என்று கூறுகிறார்கள். இறுதியில் وَتَطَيَّبْ بِالتَّوْحِيْدِ ஏகத்துவம் – எல்லாம் அவனே என்ற மணம் பூசிக் கொள் என்றும் கூறுகிறார்கள்.
 
குத்பு நாயகம் அவர்கள் என்ன கருத்தை மனதில் எடுத்துக் கூறுகிறார்கள் என்பதைப் புரியாதவர்களே குத்பு நாயகத்துடன் விளையாட நினைக்காதீர்கள். அவர்கள் “ஷரீஆ”வுக்கு முரணாகப் பேசியவர்கள் என்று குற்றம் சாட்டாதீர்கள். அவர்கள் மீது தப்பான எண்ணம் வந்துவிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து, சுவர்க்கத்தின் இன்ப சுகங்களை நாடி வணக்கம் செய்தல் ஸூபீ மகான்களிடம் பெரும் குற்றமாக கருதப்படும்.
 
“றாபிஅதுல் அதவிய்யா” என்ற ஞானப் பெண்ணை இங்கு நினைவூட்டுகிறேன். அவர்கள் ஒரு துறவி. திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்த பெண். அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.
 
اِلْزَمِ الْبَابَ إِنْ عَشِقْتَ الْجَمَالَا – وَاهْجُرِ النَّوْمَ إِنْ أَرَدْتَ الْوِصَالَا
وَاجْعَلِ الرُّوْحَ مِنْكَ أَوَّلَ نَقْدٍ – لِحَبِيْبٍ أَنْوَارُهُ تَتَلَالَا
كُلُّهُمْ يَعْبُدُوْنَ مِنْ خَوْفِ نَارٍ – وَيَرَوْنَ النَّجَاةَ حَظًّا جَزِيْلًا
أَوْ بِأَنْ يَسْكُنُوا الْجِنَانَ فَيَحْظَوْا – بِرِيَاضٍ وَيَشْرَبُوْا سَلْسَبِيْلًا
 
அழகை நீ காதலித்தால் அதன் வீட்டு வசாலைப் பற்றிப் பிடித்துக் கொள். இன்னும் அந்த அழகுடன் சேர நீ விரும்பினால் உறக்கத்தையும் வெறுத்துக் கொள்.
 
அழகை நீ காதலித்தலென்றால் அல்லாஹ்வை நீ காதலித்தல் என்று பொருள். அவன் வீட்டு வாசற் படியில் இருந்து கொள். வேறெங்கும் போய் விடாதே! என்றால் அவன் நினைவிலேயே இருந்து கொள். அவனை மறந்து விடாதே! என்று பொருள்.
 
“அல்லாஹ்” எனும் அழகியை அடைந்து கொள்ள விரும்பினால் அவளைத் தொடுமுன் அவளுக்குரிய “மஹர்” ஐக் கொடுத்து விடு. நீ அவளுக்கு கொடுக்கும் “மஹர்” பணமல்ல. உன் உயிரைக் கொடு. அதுவே அவளுக்கு கொடுக்கும் “மஹர்” ஆகும்.
 
“மஹர்” கொடுக்காமல் பெண்ணைத் தொட முடியாது. இதேபோல் அல்லாஹ் எனும் பெண்ணை நீ தொடுவதாயின் முதலில் மஹர் கொடு. அதன் பிறகு தொடு. “மஹர்” என்பது உன்னை நீ கொடுப்பதேயாகும்.
 
இறைவா! அனைவரும் உனது நரகத்தைப் பயந்தே உன்னை வணங்குகிறார்கள். அது மட்டுமல்ல. அந்த நரகம் செல்லாமலிருப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இதேபோல் சுவர்க்கம் சென்று அங்குள்ள இன்ப சுகங்களை அனுபவித்து மகிழ வேண்டும் என்றும் விரும்பியே உன்னை வணங்குகிறார்கள் என்று பாடிய றாபிஆ அதவிய்யா அவர்கள் தனது பாடலை أَنَا لَا أَبْتَغِيْ بِحـِبِّيْ بَدِيْلًا என்று கூறி முடிக்கிறார்கள். இதன் பொருள், இறைவா! நான் நரகத்தைப் பயந்தும் உன்னை வணங்கவில்லை, சுவர்க்கத்தில் ஆசை கொண்டும் நான் உன்னை வணங்கவில்லை. இவ்விரண்டும் எனக்குத் தேவையில்லை. நான் உன்னை வணங்குவதால் உன்னிடமிருந்து எந்த ஒரு பிரதிபலனையும் நான் எதிர்பார்க்கவில்லை. எனக்குத் தேலை நீதான்.
 
நான் எழுதிய ஞானப் பெண் “றாபிஅதுல் அதவிய்யா” பாடிய பாடல் ஷாதுலிய்யா தரீகாவில் “ஹழ்றா” நடக்கும் போது பாடுகின்ற பாடலாகும். இப்பாடல் என் நினைவில் இல்லை. சில அடிகள் விடுபட்டிருக்கலாம். அறிந்தவர்கள் சரியாக வாசிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
 
அல்லாஹ்வுக்காக வணங்குதல் என்றால் அவனை அடைய வணங்குவதையே குறிக்கும்.
 
ذَكَرَ اسماعيلُ القادريّ أنَّ السالكَ على الطريقة القادريّة يقطع سبعَةَ مقاماتٍ، آخرُها مقامُ النفس الكاملة، التي كاملُها، (كثرةٌ فى وحدةٍ ووحدةٌ فى كثرةٍ)
 
“காதிரிய்யா தரீகா” வழி நடக்கும் ஒரு முரீது சிஷ்யன் ஏழு படிகளைத் தாண்டுவான். அவை அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா, முத்மயின்னா, றாழியா, மர்ழியா, காமிலா என்பனவாகும்.
 
ஏழாம் “நப்ஸ்” ஆன “காமிலா” எனும் இடத்தைக் கடந்தவன் “ஒன்றில் பலது, பலதில் ஒன்று” என்ற இடத்தில் இருப்பான் என்று கூறியுள்ளார்கள். (இதன் விபரத்தை என்னை விட அறிவுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்)
 
இவ்வாறு சொன்ன மகான் “இஸ்மாயீல் காதிரீ” என்பவர் ஹிஜ்ரீ 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த “இறாக்” நாட்டு ஸூபீகளில் ஒருவராவார்கள். இவர்கள் ஹிஜ்ரீ 1283ல் “வபாத்” ஆனார்கள். இவர்கள் எழுதிய நூல் الفيوضات الربانيّة فى المآثر القادريّة என்பதாகும்.
குத்பு நாயகம் அவர்களால் தாபிக்கப்பட்ட “காதிரிய்யா தரீகா”வை அடிப்படையாகக் கொண்டு அதற்குப் பிறகு தோன்றிய தரீகாக்கள் பல உள்ளன. அவை:
01. அல் அதவிய்யா இதன் தாபகர் عدويّ بن مسافر
02. அல்மத்யனிய்யா இதன் தாபகர் أبو مدين التّلمساني
03. அஸ்ஸஹ்றவர்திய்யா இதன் தாபகர்عبد القاهر السّهروردي
04. அல் அக்பரிய்யா இதன் தாபகர் ابن عربي
05. அல் மவ்லவிய்யா இதன் தாபகர்جلال الدين الرومي
06. அர்ரிபாஇய்யா இதன் தாபகர் أحمد الرفاعيّ
குறிப்பு: அடுத்த தலைப்பு அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” பேசினார்களா?

தொடரும்… (4ம் பக்கம் பார்க்க…)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments