Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஒருவன் தான் கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் மற்றவர்களிடம் சொல்வது பொய் சொல்வதற்குப் போதும்”

“ஒருவன் தான் கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் மற்றவர்களிடம் சொல்வது பொய் சொல்வதற்குப் போதும்”

ஒருவன் இன்னொருவனிடம் ஒரு செய்தி – ஒரு தகவல் சொன்னால் சொன்னவன் صَادِقْ “ஸாதிக்” உண்மை பேசுபவனா? அல்லது كَاذِبْ “காதிப்” பொய் பேசுபவனா? என்று முதலில் அறிய வேண்டும். அவன் உண்மை பேசுபவன் என்று அறிந்திருந்தால் அவன் சொல்வதை நம்ப முடியும். ஆயினும் அச்செய்தியை உடனே மற்றவர்களிடம் சொல்லி அதைப் பரப்பி விடாமல் சற்றுப் பொறுமை செய்து இன்னும் பலரிடம் விசாரித்து அது உண்மையான தகவல் என்று திட்டமான பின்புதான் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும்.
 
செய்தி சொன்னவன் உண்மையாளன் – பொய் சொல்லாதவன் என்று திட்டமாக அறிந்த பின் அச் செய்தியை பிறரிடம் சொல்லலாம்தானே! ஏன் அது பற்றி மற்றவர்களிடம் விசாரிக்க வேண்டுமென்றால் அந்த உண்மையாளனுக்கு அத்தகவலைச் சொன்னவன் ஒரு பொய்யனாக இருக்கலாமல்லவா? இதனால்தான் ஓர் உண்மையாளன் சொன்னாற் கூட அதை உடனே பரப்பி விடாமல் தீர விசாரித்த பின்புதான் சொல்ல வேண்டுமென்று எழுதினேன்.
 
இதற்கு மாறாக, தகவல் தந்தவன் ஊரறிந்த பொய்யனாக இருந்தால் அவன் ஆயிரம் சத்தியம் செய்து அத்தகவலைச் சொன்னாலும் கூட அதை நம்பி விடக் கூடாது. நம்பினாலும் கூட அதை வெளிப்படுத்தாமல் சில நாட்களல்ல பல நாட்கள் பொறுத்திருந்து பலரிடம் விசாரித்த பிறகு அச் செய்தி உண்மையென்று தெளிவான பின்தான் அதை பிறரிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்யாமல் அவன் சொன்ன மறுகணமே அதைப் பிறரிடம் சொல்வதால் சொன்னவன் கோடு கச்சேரி செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். சிலவேளை கம்பி எண்ணப் போக வேண்டியும் ஏற்படலாம்.
 
ஒருவன் சொன்ன தகவல் சரியா? பிழையா? பொய்யா? மெய்யா? என்று அறியுமுன் அதைப் பிறரிடம் சொல்லி பகிரங்கப்படுத்துவதில் இன்பம் காண்பவர்களில் அதிகமானவர்கள் படிப்பறிவில்லாத, பரவலான பொது அறிவில்லாத பெண்களேயாவர். குறிப்பாக கிரமாப் புறங்களில் வாழும் படிப்பறிவற்ற பெண்களேதான்.
 
இத்தகைய பெண்கள் கடந்த காலங்களில் சிந்திக்காமலும், அறிவில்லாமலும் நடந்திருந்தாலும் கூட இனியாவது சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 
யாராவதொருவன் மூலம் ஒரு செய்தி கேள்விப்பட்டால் அச் செய்தி உண்மையா? பொய்யா? என்று விசாரித்தறிந்த பின் வெளியிடுபவர்களில் படித்த, பக்குவம் பெற்ற ஆண்களும், பெண்களும் இருந்தாலும் இத்தகையோர் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
 
ஒருவன் இன்னொருவன் பற்றிக் குறையாக – மோஷமாக ஒருவனிடம் பேசத் தொடங்கினால் பிறர் குறைகள் பற்றி என்னிடம் சொல்லி என்ன பயன்? அவனிடமே நீ சொல்லிவிடு என்று ஒரு வார்த்தையில் அவனை வெட்டி விடுவதே சிறந்தது.
ஆயினும் ஒருவன் ஓர் ஊர் தலைவனிடம், அல்லது ஒரு நீதிவானிடம், அல்லது ஒரு சமாதான நீதிவானிடம் அல்லது ஊர் மக்கள் அனைவரும் நீதியானவர் என்று ஏற்றுக் கொண்ட ஒருவரிடம் இன்னொருவர் தனக்குச் செய்து கொண்டிருக்கும் அநீதி, அடக்குமுறை, மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் செய்தால் அவர்கள் அவனையும், அவனின் எதிரியையும் அழைத்து இருவரையும் விசாரித்து பக்க சார்பின்றியும், அல்லாஹ்வும், றஸூல் நாயகமும் பொருந்திக் கொள்ளும் வகையில் தீர்ப்புக் கூற வேண்டும். இன்னோர் தம்மிடம் முறையிட வருவோருடன் இன்முகத்தோடு பேசி சத்தியம் எதுவோ அதை நிலை நாட்ட வேண்டும். இவ்விடயத்தில் அரசியல், பந்த பாசம், லஞ்சம் முதலானவற்றுக்கு இடமளிக்கக் கூடாது.
 
பெண்களில் நகர் புறங்களில் வாழும் பெண்களுக்கும், கிராமப் புறங்களில் வாழும் பெண்களுக்கும் வித்தியாசமுண்டு. இதேபோல் படித்த பெண்களுக்கும், படிக்காத பெண்களுக்கும் வித்தியாசமுண்டு.
படித்த பெண்களிடமும், நகர் புறங்களில் வாழும் பெண்களிடமும் யாருக்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும், யாருடன் எவ்வாறு பேச வேண்டும் என்ற விபரங்கள் ஓரளவேனும் தெரியும். ஆயினும் கிராமப் புறங்களில் வாழும் பெண்களுக்கும், படிக்காத பெண்களுக்கும் மேற்கண்ட பண்புகள் தெரியாது.
 
இதேபோல் நகர் புறங்களில் வாழும் பெண்களும், படித்த பெண்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடினால் அங்கு நிசப்தம் – அமைதி நிலவும். அரசியல் அல்லது ஆத்மிகம், அல்லது மார்க்கம், அல்லது பயன் தரும் விடயங்கள் பேசப்படும்.
ஆனால் கிராமப்புற பெண்களும், படிப்பறிவில்லாத பெண்களும் ஒன்று கூடினால் அவர்கள் நான்கு பேர்களாயிருந்தாலும் அவ் இடம் சந்தை – மார்கட் போலாகிவிடும். ஒருவர் பேசும் போது மற்றவர்கள் அமைதியாகச் செவியேற்றிருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் பேசுவார்கள். சபை சந்தை போலாகிவிடும். அரசியலும் பேசமாட்டார்கள், ஆன்மிகமும் பேசமாட்டார்கள். நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பயன் தரக் கூடிய கருத்துக்களும் பரிமாறமாட்டார்கள். மாறாக ஊர் பலாய்களையும், பயனற்ற கதைகளையுமே பரிமாறிக் கொள்வார்கள். ஆக்கபூர்வமான, சிந்தனையைத் தூண்டக் கூடிய எந்த ஒரு பேச்சும் பேசமாட்டார்கள். இவர்களின் சந்திப்பு வெறும் காகிதப் பூதான். மணக்காது.
 
இவர்களில் ஒருத்தி மற்றவர்களிடம், கடந்த வெள்ளிக்கிழமை கல்யாண மண்டபத்தில் நடந்த வலீமா விருந்துக்கு நீங்கள் போனீர்களா? என்று கேட்டால் போதும். இந்த ஹம்து ஸலவாத்துடன் ஊர் பலாய் தொடங்கிவிடும். ஆயிஷா ஐந்து நிமிடங்கள் பேசுவார். ஆசியா ஐந்து நிமிடங்கள் பேசுவார். தலைவி தக்வா உம்மா பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். இறுதியில் ஊர் பலாய் மாநாடு ஸலவாத் எதுவுமின்றியே கலையும். உடனிருந்த ஷாத்தானும் வெற்றியுடன் பாய் படுக்கைகளை எடுத்துக் கொண்டு டாட்டா காட்டிச் சென்று விடுவான். கலந்து கொண்ட பெண்களில் ஒவ்வொருவரும் வரும் போது இருந்த பாவச் சுமையோடு மேலதிகமாக ஆயிரம் பாவங்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
 
புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரின் குறைகளை ஆராய்தல், பெருமை பேசுதல், பிடிவாதம் செய்தல், கோபப்படுதல், ஏழைகளைப் புறக்கணித்தல், அற்ப காரியத்திற்காக கணவன் மீது குரங்கு போல் பாய்ந்து விழுதல், அற்ப சொற்ப விடயங்களுக்காக கணவனை வெறுத்தல், சொல்லாலும், செயலாலும் அவனைத் துன்புறுத்தல் போன்ற தீக்குணங்கள் பல பெண்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. இத்தகைய பெண்கள் தமது தீக்குணங்களை முற்றாக விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
திருமணம் செய்த ஆண்களிற் பலர் தமது மனைவி தமக்கு அடிமை போல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் அவளைக் குந்து என்றால் அவள் குந்த வேண்டும் என்றும், எழும்பு என்றால் அவள் எழும்ப வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். இன்னும் சில அறிவாளிகள், உலக நடைமுறை தெரியாத கிணற்றுத் தவளைகள் போன்ற சில கணவன்மார் வெளியேயிருந்து தாம் வீட்டுக்கு வரும் போதெல்லாம் மனைவி எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும், பாய், அல்லது கதிரை எடுத்துக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்றும் மனைவியர்களை வற்புறுத்துகிறார்கள். இவ்வாறு மனைவி செய்யாத போது அவளை விவாகரத்துச் செய்வதற்காக காழீ நீதி மன்றம் செல்பவர்களும் உள்ளனர்.
 
எனக்கு அறிமுகமான, எனனைக் கண்ணியப்படுத்துகின்ற ஹோட்டல் முதலாளி ஒருவரின் மனைவி என்னிடம் வந்து தனது கணவன் தன்னுடன் கோபித்துக் கொண்டு இருப்பதாகவும், மூன்று நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்றும், அன்றாடச் செலவுக்குப் பணம் தருவதில்லை என்றும் என்னிடம் முறைப்பட்டு நீங்கள் வீட்டுக்குப் போகுமாறு சொன்னால் அவர் வருவார் என்றும் என்னிடம் கூறினார். நடந்தது என்ன என்று நான் அவளிடம் கேட்டேன். மேலே நான் எழுதிய காரணத்தையே கூறி கண்ணீர் வடித்தாள்.
 
இரண்டு நாட்களின் பின் அவரை அழைத்தேன். வீட்டுக்குப் போக வேண்டும், மனைவியுடன் பேச வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கவர், நான் அவளின் கணவர், கணவனே கண் கண்ட தெய்வம், தெய்வத்திற்கு மரியாதை செய்வது கடமையில்லையோ? என்று என்னிடம் கேட்டார். அவர் எப்போதும் சுடு நீராக இருப்பவர் என்பது எனக்குத் தெரியும். எனது றூம் கதவைப் பூட்டுமாறு அவரையே சொல்லி பூட்ட வைத்து அவரை என் பக்கம் அழைத்து அவரின் செவியினுள் ஒரு செய்தி சொன்னேன். அவ்வளவுதான். அவர் என் காலில் விழுந்து ஸுப்ஹானல்லாஹ்! என்று மட்டும் சலிப்போடு சொல்லிவிட்டு மனைவியிடம் அன்றே போய்விட்டார். தற்போது மூன்று குழந்தைகளுடன் சாமத்தியமாக வாழ்ந்து வருகிறார்.
 
அவர் என்னிடம் வந்து, நீங்கள் என் காதில் இரகசியமாகச் சொன்னதென்ன என்று மனைவி கேட்டுக் கொண்டிருக்கிறாள். நான் சொல்லவா? என்று கேட்டார். அவள் என்னிடம் “பைஅத்” செய்த எனது “முரீதா”வாக இருப்பதால் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று வாக்கு எடுத்துக் கொண்டு சொல் என்று அவருக்குச் சொன்னேன்.
 
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நீங்கள் உங்கள் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், உங்களின் தோழர், தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் “ஙீபத்” புறம் பேச வேண்டாம் என்றும், யாராவது உங்களுடன் பிறர் பற்றி குறையாகப் பேசத் தொடங்கினால் “ப்லீஸ்” என்ற சொல்லை அல்லது தயவு செய்து என்ற சொல்லை அல்லது عَفْوًا “அப்வன்” என்ற சொல்லை முதலில் சொல்லி பிறர் விஷயங்களை நாம் பேசாதிருப்பது நல்லம் என்று சொல்லிவிடுங்கள். எப்படியாவது பிறர் பற்றிய தவறான செய்தியேதும் உங்களுக்குக் கிடைத்து விட்டால் அதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டாம் என்றும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கோள் சொல்வதும் புறம் பேசுதல் போன்ற பெரும் பாவமேயாகும். இவ்விரு பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதாயின் எவர் பற்றிப் புறம் பேசப்பட்டதோஅவர் பேசியவனை மன்னிக்க வேண்டும். அதேபோல் எவர் பற்றி கோள் சொல்லப்பட்டதோ அவர் சொன்னவனை மன்னிக்க வேண்டும். இது புறம் பேசிய பாவமும், கோள் சொன்ன பாவமும் மன்னிக்கப்படுவதற்குப் பிரதான நிபந்தனையாகும். இவை போன்ற பாவம்தான் ஒருவரின் கடனை கொடுக்காமல் மன முரண்டாக நான் தரமாட்டேன் என்று ஏமாற்றிக் கொண்டிருப்பவரின் பாவமுமாகும்.
 
இவ்வாறுதான் நியாயமின்றி ஒருவரை அடித்த பாவமும், ஏசிய பாவமுமாகும். இவற்றுக்காகவும் உரியவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவையாவும் மனிதன் மனிதனுக்குச் செய்யும் பாவமாகும். இதற்கு உரியவரிடம் மன்னிப்புக் கேட்கவே வேண்டும். ஆனால் அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையிலுள்ள பாவமாயின் அதற்காக எவரிடமும் பாவ மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. அல்லாஹ்விடம் மட்டும் கேட்டால் போதும்.
 
அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கும் செல்வங்களில் பணச் செல்வம், பொருளாதாரச் செல்வம், பிள்ளைச் செல்வம், அறிவுச் செல்வம் என்பவற்றை விட மிக உயர்ந்த, விலை மதிக்க முடியாத செல்வம் அல்லாஹ் அவனின் குற்றங்களை மன்னித்து அவனை முழுமையாக பொருந்திக் கொள்வதேயாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் மிகப் பெரிய செல்வம் அல்லாஹ் நம்மைப் பொருந்திக் கொள்வதாகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments