அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நான் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை தமது அறியாமை காரணமாகவோ, அல்லது எனது வாய்க்கு பூட்டுப் போட வேண்டும் என்பதற்காகவோ என்னை விசாரிக்காமல் எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எம்மைக் கொலை செய்ய வேண்டும் என்றும் “பத்வா” தீர்ப்பு வழங்கி அத்தீர்ப்பை புத்தகமாக அச்சிட்டு இலங்கை முழுவதும் அதைப் பகிரங்கப்படுத்தி என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். பிரகடனம் செய்தார்கள்.
உலமா சபை “பத்வா” வழங்கிய ஆரம்ப கால கட்டத்தில் உலமாஉகளிற் சிலர் நான் பேசிய தத்துவம் இந்து மத ஞானமென்று உளறினார்கள். இன்னும் சிலர் கிரேக்க தத்துவம் என்றும் கத்தினார்கள். இன்னும் சிலர் பாரசீக தத்துவம் என்று பறை சாற்றினார்கள். வேறு சிலர் கஞ்சா மஸ்தான்களின் தத்துவம் என்று கரைந்தார்கள்.
இவ்வாறு ஆரம்ப காலத்தில் 1979 – 1985 வரை கத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல, நானும், எனது கருத்தை சரியென்று ஏற்றுக் கொண்ட மர்ஹூம் மௌலவீ பாறூக், மர்ஹூம் மௌலவீ முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர்களும் தொடர்ந்து விளக்கம் கொடுத்து வர வர மேற்கண்டவாறு ஒப்பாரி வைத்தவர்கள் மௌனியானார்கள். இறுதியில் இந்து மத ஞானக் கதையும், கிரேக்க தத்துவம், பாரசீக தத்துவம் என்ற கதைகளெல்லாம் திசை மாறிப் பறந்து போயிற்று.
நான் இது காலவரை பேசிய ஞானம் இஸ்லாம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம்தான் என்பதை உலமாஉகளிற் பலரும், பொது மக்களிற் பலரும் இப்போது ஏற்றுக் கொள்கிறார்கள். “வஹ்ததுல் வுஜூத்” என்று இஸ்லாமில் ஒரு தத்துவம் உண்டு என்று சொல்கிறார்கள். ஆயினும் அதற்கு நான் கூறும் விளக்கம் பிழை என்றும், அதற்கு வேறு விளக்கம் உண்டு என்றும் சொல்கிறார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு நான் கூறும் விளக்கம் பிழை என்றும், “முறையற்ற வஹ்ததுல் வுஜூத்” என்றும் சொல்லும் உலமாஉகளே!
நீங்கள் ஆரம்ப காலத்தில் நான் பேசியது இந்து மத ஞானம் என்றும், கிரேக்க தத்துவம் என்றும், பாரசீக தத்துவம் என்றும் சொல்லி வந்தீர்கள். பிறகு இவ்வாறு சொல்வதை நிறுத்திவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” என்று ஒரு கொள்கை இஸ்லாமில் உண்டு என்றும், அது பெரும் பெரும் ஞானிகள் பேசி வந்த தத்துவம் என்றும் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆயினும் அதற்கு நான் கூறும் விளக்கம் பிழையென்று சொல்கிறீர்கள். சுமார் இரண்டு மாத காலமாக உங்களில் இன்னும் சிலர் நான் பேசுவது முறையற்ற வஹ்ததுல் வுஜூத் என்று ஒரு புதிய கருத்தையும் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.
மேற்கண்டவாறு கூறும் உலமாஉகளே! “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு நான் கூறும் விளக்கம் பிழையென்றால் அல்லது முறையற்ற வஹ்ததுல் வுஜூத் என்றால் அதற்கு சரியான விளக்கம் எதுவென்றும், முறையான வஹ்ததுல் வுஜூத் என்றால் எதுவென்றும் நாடறிய, நாட்டு மக்களறிய ஆதாரங்களுடன் பகிரங்கமாக கூறுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். அதற்குரிய சரியான விளக்கத்தை எழுத்து மூலம் விளக்கி வைக்க உங்களால் முடியாது போனால், அல்லது முறையான “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை விளக்கி வைக்க முடியாது போனால் என்னை உங்களின் சகோதரனாக நினைத்து என்னிடமிருந்து கற்றுக் கொள்ள வாருங்கள். என்னிடம் வந்து கற்றுக் கொள்ள விரும்பினால் வருபவர்கள் குறைந்தது மூன்று நாட்களாவது தங்கும் ஒழுங்கோடு வாருங்கள். வருமுன் எனது செயலாளருடன் தொடர்பு கொண்டு கால நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மூன்று வேளை உணவும், தங்குமிட வசதியும் தரப்படும். தொடர்பை ஜூலை மாதம் 01ம் திகதிக்குப் பின் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
செயலாளரின் கைபேசி இல: 0773 186146
Pages: 1 2