தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“நஜ்முல் உலமாஇ” மார்க்க அறிஞர்களின் தாரகை என்றும், “உஸ்தாதுஸ் ஸமான்” أُسْتَاذُ الزَّمَانْ “காலத்தின் ஆசிரியர்” என்றும் பாராட்டப்படுகின்ற மௌலவீ முஹாஜிரீன் ஹழ்றத் அவர்கள் கொள்கையில் தடம் புரளமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்விடத்தில் அதி சங்கைக்குரிய “அற்புதக் கடல்” அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களை நான் நினைக்கிறேன்.
அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்து (மகன்! நான் காத்தான்குடிக்கு வருவது எனது பாட்டன்மார் வந்து போன ஊர் என்பதற்காகவேயன்றி பணத்திற்காக நான் வரவில்லை, ஆயினும் இவ்வூர் மக்கள் பணம் தருகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் இவ் ஊருக்கு வருவதால் எனக்கு ஒரு பைசா கூட கிடைக்காமற் போனாலும் மார்க்கத்திற்கு விரோதமாக நான் எதுவும் பேசவும் மாட்டேன். செய்யவும் மாட்டேன்) அவர்கள் சொன்னவாறே செய்தும் காட்டினார்கள்.
தற்போது முஹாஜிரீன் ஹழ்றத் அவர்களின் மாணவர்களிற் சிலர் – எல்லோருமல்ல – ஹழ்றத் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் “றஊப் மௌலவீ பேசுவது பிழை” என்று அவர்களிடமிருந்து ஒரு கடிதம் அல்லது “வொய்ஸ் கட்” எடுப்பதற்கு கடும் முயற்சி செய்வதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இது மெய்யா? பொய்யா? என்பது எனக்குத் திட்டமாகத் தெரியாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
எனினும் முஹாஜிரீன் ஹழ்றத் அவர்கள் பற்றி நான் அறிந்த உண்மைகளை இங்கு சொல்ல வேண்டியது எனது கடமை என்ற வகையில் சொல்கிறேன்.
காத்தான்குடியில் 2014ம் ஆண்டு எனது தலைமையில் இயங்கும் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற “ஸுன்னத் வல் ஜமாஅத்” மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட உலமாஉகள் கலந்து கொண்டனர். மதிப்பிற்குரிய ஹழ்றத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அவர்கள் 300க்கும் மேற்பட்ட உலமாஉகள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது, மேடையில் வீற்றிருந்த என்னை அவர்களின் வலக்கரத்தால் சுட்டிக்காட்டி “இந்தச் சீதேவிக்கல்லவா “முர்தத்” என்று “பத்வா” கொடுத்திருக்கிறார்கள்” என்று வேதனைப்பட்டுச் சொன்னார்கள்.
“சீதேவி” என்ற சொல்லுக்கு அறபு மொழியில் سَعِيْدْ என்ற சொல் பயன்படுத்தப்படும். சீதேவி என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் شَقِيٌّ – மூதேவி என்று வரும்.
இவ்வாறு ஹழ்றத் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னது அவர்கள் என்னை “முர்தத்” மதம் மாறியவன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இது ஓர் ஆதாரம்.
நான் அவர்களை எங்கு கண்டாலும் ஸலாம் சொல்வேன், அவர்களின் கையையும் முத்தமிடுவேன். அவர்கள் எனது ஸலாமுக்கு பதில் சொல்வார்கள். முத்தமிடுவதற்கு கையையும் தருவார்கள். அவர்களின் இந்த நடவடிக்கையும் அவர்கள் என்னை “முஃமின்” விசுவாசியென்று ஏற்றுக் கொண்டார்களேயன்றி “முர்தத்” என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. இது இரண்டாவது ஆதாரம்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நான் கொழும்பு சென்றேன். வீட்டில் இருந்த கால கட்டத்தில் ஹழ்றத் அவர்கள் சுமார் 10 நபர்களுடன் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் வந்தவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் அல்ல. வந்தவர்களை நான் வரவேற்று உபசரித்தேன்.
ஹழ்றத் அவர்கள் மட்டும் என்னை நெருங்கி வந்து, மற்றவர்களுக்கு கேட்காத வகையில், (என்னுடன் வந்திருப்பவர்கள் எனக்கு வேண்டியவர்கள். இவர்களை வெலிகாமம் கலீல் அவ்ன் மௌலானா அவர்களிடம் “பைஅத்” செய்வதற்காக அழைத்து வந்துள்ளேன். இவர்களுக்கு “பைஅத்” எடுப்பது அவசியம் என்ற தலைப்பில் அறிவுரை கூறுங்கள்) என்றார்கள். நான் என்னால் முடிந்ததைக் கூறினேன். ஹழ்றத் அவர்கள் என்னிடம் நானும் “பைஅத்” எடுக்கவே செல்கிறேன் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்கள். அதன் பிறகு “பைஅத்” எடுத்தார்களா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது.
ஆயினும் சில நாட்களுக்கு முன் ஹழ்றத் அவர்கள் பேசும்போது (எங்களின் ஷெய்குனா வாப்பா நாயகம்) என்று குறிப்பிட்ட பிறகுதான் ஹழ்றத் அவர்கள் அவர்களிடம் “பைஅத்” பெற்றுள்ளார்கள் என்பதை நான் திட்டமதாக அறிந்தேன்.
ஹழ்றத் முஹாஜிரீன் طَالَ عُمْرُهُ அவர்கள் சில நாட்களுக்கு முன் قُلْ هُوَ اللهُ أَحَدٌ என்ற திருவசனத்திற்கு விளக்கம் கூறிப் பேசுகையில் “எல்லாம் அவனே” என்ற சொல்லைப் பயன்படுத்தி பேசியதிலிருந்து அவர்கள் هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்ற தத்துவத்தை – அதாவது “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை விளங்க முடிகிறது.
இவ்வாறெல்லாம் பேசிய ஹழ்றத் அவர்கள் தங்களின் இறுதிக் கால கட்டத்தில் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று எவருக்கும் கடிதம் கொடுக்கவோ, “வாய்ஸ் கட்” கொடுக்கவோ மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் என்னை விட மிக அறிந்தவர்கள்.
நஜ்முல் உலமா முஹாஜிரீன் ஹழ்றத் அவர்களின் ஷெய்கு அல் ஆரிப் பில்லாஹ், அல் வலிய்யுல் காமில் யாஸீன் மௌலானா அவர்களின் திருப் புதல்வர் சங்கைக்குரிய கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் தொடர்பாக சில வரிகள் எழுத விரும்புகிறேன்.
பல்லாண்டுகளாக கலீல் அவ்ன் மௌலானா அவர்களைச் சந்திப்பதற்காக பல முறை நான் முயற்சி செய்துள்ளேன். வெலிகாமத்திலுள்ள அவர்களின் வீட்டிற்கும் சென்றுள்ளேன். சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பல வருட முயற்சியின் பின் ஒரு நாள் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கொழும்பிலுள்ள ஒருவர் முகவரி தந்து அங்கு சந்திக்கலாம் என்றார்.
நான் டொக்டர் நூர்தீன் அவர்களையும், எனது உறவினர் கொழும்பு மஹ்றூப் அவர்களையும் அழைத்துக் கொண்டு குறித்த முகவரிக்குச் சென்றோம்.
எங்களின் வாகனம் அவர்களின் வீட்டை நெருங்கிய போது அவர்களே வெளியே பாதைக்கு வந்து எங்களை இன்முகத்துடன் வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். சில நிமிடங்கள் மட்டும் சுக செய்திகளை பரிமாறிக் கொண்ட பின் மதிப்பிற்குரிய மௌலானா அவர்களிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து உங்கள் நேரத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆயினும் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும் என்று நான் கூறியவனாக “நீங்கள் துவிதம் பேசுகிறீர்களா? அத்வைதம் பேசுகிறீர்களா?” என்று மட்டுமே கேட்டேன். அதற்கவர்கள் தங்களின் வாய் நிறைந்த நிலையில் நான் அத்வைதமே பேசுகிறேன் என்று சொன்னார்கள்.
இதுவே எனக்குப் போதும். நானும் அத்வைதமே பேசுகிறேன் என்று கூறிய பின் பிஸ்கட், டீ தந்து உபசரித்தார்கள். இறுதியில் விடை பெற்று வந்துவிட்டோம்.
அத்வைதம் பேசுகின்றவர்கள் இரண்டில்லை என்ற கொள்கையுள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.
இதிலிருந்து பல வருடங்களின் பின் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதாவது சிலர் கலீல் அவ்ன் மௌலானா அவர்களிடம், றஊப் மௌலவீ சந்தைக்குச் சென்றால் மீன் வியாபாரியிடம் ஒரு மீனைக் காட்டி இந்த அல்லாஹ் என்ன விலை? என்று கேட்கிறார் என்றும், இந்த அல்லாஹ்வை வெட்டித் தா என்றும் கேட்கிறார் என்றும் சொல்லியதாக அறிந்தேன்.
இது குறித்து இது அப்பட்டமான பொய் என்றும், சிலர் வேண்டுமென்றே அவ்வாறு கதைகளை கட்டிவிட்டு குழப்பத்தையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துகிறார்கள் என்றும், நான் சந்தைக்குப் போய் சுமார் 40 வருடங்களாகின்றன என்றும் மௌலானா அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு எனக்கும், அவர்களுக்கும் தொடர்பில்லாமற் போய்விட்டது.
இது நடந்த உண்மையான வரலாறு என்பதை என் மீது தப்பான எண்ணம் உள்ள அனைவருக்கும் அறியத் தருகிறேன்.