தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“பத்வா” வழங்கிய முல்லாக்கள் துறை தெரியாமல் தோணி தொடுத்தவர்கள் மட்டுமன்றி தமது விரல்களால் தாமே தமது கண்களைக் கெடுத்த புத்திமான்களாவர்.
ஏன் இவ்வாறு சொல்கிறிர்கள் என்று என்னிடம் கேட்க விரும்புகிறீர்களா? நான் தயங்கமாட்டேன். இதோ விளக்கம் தருகிறேன். நீதி எனும் தராசைக் கையிலேந்தி முடிவு செய்யுங்கள்.
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்தினால் தெளிவாகுமென்று நம்புகிறேன்.
ஆட்டிறைச்சி சாப்பிடலாம், அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதென்று நான் பேசியிருக்கும் நிலையில் நான் பன்றி இறைச்சி சாப்பிடலாம் என்று பேசியதாக மக்கள் மத்தியில் கூறி, பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாதென்பதற்கான ஆதாரங்களையும் எழுதி, அதில் காத்தான்குடி றஊப் மௌலவீ பன்றி இறைச்சி சாப்பிடலாம் என்று பேசியதால் அவர் “முர்தத்” மதம் மாறிவிட்டார் என்றும், அவரின் கருத்தை சரி கண்டவர்களும் மதம் மாறிவிட்டார்கள் என்றும், இவர்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் “பத்வா” வழங்கியது போன்றதாகும்.
எனது கேள்வி என்னவெனில் ஆட்டிறைச்சி சாப்பிடலாம் என்று நான் பேசியிருக்க உலமாஉகள் – “பத்வா” வழங்கிய முல்லாக்கள் பன்றி இறைச்சி சாப்பிடலாம் என்று நான் பேசியதாக கூறுவதற்கான காரணம் ஒன்றோ அவர்கள் செவிப் புலனற்ற செவிடர்களாயிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு வகை மயக்கத்திலிருந்து எனது பேச்சை கேட்டிருக்க வேண்டும். அல்லது முல்லாக்களும், வஹ்ஹாபீகளும் சேர்ந்து எனது வாய்க்கு பூட்டுப் போட திட்டமிட்டிருக்க வேண்டும். மேற்கண்ட காரணங்களில் ஒரு காரணமே “பத்வா” வழங்கியதற்கான காரணமாயிருக்கும்.
இதனால்தான் முல்லாக்கள் துறை தெரியாமல் தோணி தொடுக்கிறார்கள் என்றும், தாமே தமது கை விரல்களால் தமது கண்களைக் குத்திக் கெடுக்கிறார்கள் என்றும் எழுதினேன்.
“அத்துஹ்பதுல் முர்ஸலா” என்று அறபியில் ஒரு நூல் உண்டு. இந் நூல் எந்த ஒரு கலப்புமின்றி “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மட்டும் தெளிவு படுத்தும் நூலாகும்.
இந்நூல் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டது.
இந் நூலில் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக கூறப்பட்ட அறபு வசனங்களை எழுதிய பின் அதன் மொழியாக்கம், மற்றும் சாராம்சத்தையும் எழுதுகிறேன். அறபு வசனங்களை எழுதாமல் சாராம்சத்தை மட்டும் எழுதினால் முல்லாக்களில் பொறாமை உள்ளவர்களும், புரட்டல் வாதிகளும் அறபு மொழியில் இல்லாததை நான் தமிழில் எழுதியுள்ளதாக பொது மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதற்காக அறபு வசனங்களை முழுமையாக எழுதுகிறேன்.
இந்நூல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கு எதிராக “பத்வா” வழங்குவதற்கு ஆதாரமாக எடுத்த நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
وإنّ جميعَ الموجُوداتِ من حيثُ الوجود عينُ الحقّ سبحانه وتعالى ولكنّها من حَيْثُ التَّعَيُّنِ غيرُ الحقّ سبحانه وتعالى، والغيريّةُ اعتباريّةٌ، وأمّا من حيث الحقيقة فالكلُّ هو الحقُّ سبحانه وتعالى ومثالُه الحبابُ والموجُ والثلجُ ، فإنّ كلّهنّ من حيث الحقيقة عينُ الماء، ومن حيث التَّعَيُّنِ غيرُ الماء،
والسـرابُ – (هذا اللّفظ معطوف على مثالُه الحباب) فإنّه من حيث الحقيقة عين الهواء، ومن حيث التعيّن غير الهواء، ولأنّ السراب فى الحقيقة هواء ظهر بصورة الماء،
படைப்புக்கள் அனைத்தும் “வுஜூத்” உள்ளமையின் அடிப்படையில் அல்லாஹ் தானானவையேயாகும். ஆயினும் அவை குறிப்பு அடிப்படையில் அல்லாஹ்வுக்கு வேறானவையாகும். “ஙெய்ரிய்யத்” வேறானவை என்பது கூட ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கொண்டேயாகும். ஆயினும் எதாரத்தத்தை கவனித்தால் எல்லாமே அல்லாஹ்தான்.
இத் தத்துவத்திற்கு நீர்க்குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பவற்றை உதாரணமாகக் கொள்ள முடியும். இம் மூன்றும் “ஹகீகத்” எதார்த்தத்தில் நீரேதான். நீருக்கு வேறானவையல்ல. இம் மூன்றும் குறிப்பு என்ற அடிப்படையில் மட்டும் நீருக்கு வேறானவையாகும்.
இன்னும் “ஸறாப்” கானல் நீர் போன்றுமாகும். மேலே சொல்லி வந்த தத்துவத்திற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.
இடைக்குறிப்பு: (நீர்க்குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பவற்றை உதாரணமாகக் கொண்ட மகான் கானல் நீர் என்பதை அவற்றுடன் சேர்க்காமல் அதை மட்டும் தனியே சொன்னதற்கான காரணம் அவை மூன்றுக்கும் மூலம் நீராயிருப்பதும், கானல் நீருக்கு மூலம் வெப்பமாயிருப்பதுமேயாகும்)
கானல் நீர் என்பது பொய்த் தோற்றமாகும். வெப்பம்தான் நீர் போல் தோற்றுகிறது. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் வெப்பம் தானானதேயாகும். ஆயினும் அது குறிப்பு என்ற வகையில் வெப்பத்திற்கு வேறானதாகும்.
இதுவரை அறபு வசனங்களின் சுருக்கத்தை எழுதியுள்ளேன். இப்போது குறித்த அறபு வசனங்கள் தருகின்ற மொத்த கருத்தை சிறுவர்களும் விளங்கும் பாணியில் எழுதுகிறேன்.
எந்த ஒரு வஸ்தாயினும் அதற்கு மூலம் – கரு வேண்டும். படைப்புகளில் உயிருள்ளவற்றை எடுத்துக் கொண்டாலும், உயிரில்லாதவற்றை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு மூலம், ஒரு கரு அவசியமாகும். படைத்தவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே மூலமும் இல்லை, கருவும் இல்லை. அவன் தனக்குத் தானானவன் என்று சொல்லப்படுவான். அதாவது அவனுக்கு மூலமும் இல்லை, கருவும் இல்லை என்பதாகும்.
தானாய்த் தனியவனாய்
தன் மயமாய் தற் சொருபாய்
தானாய் தனி நினைவாய்த்
தானானாய் – தானே நீ
ஸல்லல்லாஹுவான நபீ
ஸாதாத் தவரொளியால்
குல்லுன் படைத்தனையே கூர்ந்து
என்று ஒரு ஞான மகான் பாடியுள்ளார்கள்.
இப்பாடலில் அல்லாஹ்தான் அனைத்து வஸ்துக்களுக்கும் மூலமானவனும், கருவானவனுமேயன்றி அவனுக்கு மூலமும் இல்லை, கருவுமில்லை என்ற எதார்த்தம் விளங்கப்படுகின்றது.
அல்லாஹ்வுக்கும், அவனின் படைப்புகளுக்குமுள்ள தொடர்பு எப்படியானதென்றும், அனைத்துக்கும் மூலம் அவன்தான் என்றும் நீர்க்குமிழி, கடலலை, ஐஸ் கட்டி, கானல் நீர் முதலான உதாரணங்கள் மூலம் “துஹ்பதுல் முர்ஸலா” நூலாசிரியர் அறிஞர் இறைஞானி முஹம்மத் இப்னு பழ்லில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
நீரின் மேலே மிதந்து வட்டமிடும் நீர்க்குமிழியும், பொங்கி எழும் கடலலையும், மற்றும் ஐஸ் கட்டியும் படைப்புக்கு உதாரணங்களாக ஞான மகான் “துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் கூறியுள்ளார்கள். இவ் உதாரணங்களின் மூலம் அவர்கள் கூறும் கருத்து “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமேயாகும்.
மூன்று உதாரணங்களில் குமிழிக்கு நீரை மூலமாகவும், அலைக்கு கடலை மூலமாகவும், ஐஸ் கட்டிக்கு நீரை மூலமாகவும் கூறியிருப்பது குமிழியாகத் தோற்றுவது நீரேயன்றி அதற்கு வேறான, தனியான வஸ்துவல்ல என்றும், அலையாகத் தோற்றுவது கடலேயன்றி அதற்கு வேறான, தனியான வஸ்துவல்ல என்றும், ஐஸ் கட்டியாகத் தோற்றுவதும் நீரேயன்றி அதற்கு வேறான, தனியான வஸ்துவல்ல என்றும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை – எல்லாம் அவனே என்ற கருத்தை மக்களுக்கு இவ் உதாரணங்கள் மூலம் விளக்கி வைப்பதற்கேயாகும்.
ஏனெனில் ஸூபிஸ தத்துவம் கற்றுக் கொள்ளாத உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்பியுள்ளார்கள். இவ்வாறு நம்பியுள்ளவர்கள் நீர் வேறு, குமிழி வேறு என்றும், கடல் வேறு, அலை வேறு என்றும், நீர் வேறு, ஐஸ் கட்டி வேறு என்றும் நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதற்கு முன் எவரும் அவ்வாறு சிந்திப்பதேயில்லை. எல்லோரும் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்று வாயால் சொல்வார்களேயன்றி குமிழி என்பது நீர்தானா? அல்லது அதற்கு வேறானதா? என்று சிந்திப்பதில்லை.
நீரும், குமிழியும், கடலும், அலையும், நீரும், ஐஸ் கட்டியும் என்ற மூன்று உதாரணங்களில் குமிழிக்கு நீரை மூலமாகவும், அலைக்கு கடலை மூலமாகவும், ஐஸ் கட்டிக்கு நீரை மூலமாகவும் கூறியிருப்பது குமிழயாகத் தோற்றுவது நீரேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல என்றும், அலையாகத் தோற்றுவது கடலேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல என்றும், ஐஸ் கட்டியாகத் தோற்றுவது நீரேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல என்றும் எதார்த்த தத்துவத்தை மக்களுக்கு விளக்கி வைப்பதற்கேயாகும்.
நீர் குமிழியாகத் தோற்றுவது போலும், கடல் அலையாகத் தோற்றுவது போலும், நீர் ஐஸ் கட்டியாகத் தோற்றுவது போலும் அல்லாஹ்வின் “தாத்” – அவனின் உள்ளமைதான் – மெய்ப் பொருள்தான் பல கோடிப் படைப்புகளாகத் தோற்றுகிறது.
அல்லாஹ்வின் உள்ளமை என்பது அல்லது “தாத்” என்பது பல கோடிப் படைப்புகளாக வெளியாவதால் அந்த “தாத்” அழிவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை, மாறுபடுவதுமில்லை. அவன் படைப்பாக வெளியாகுமுன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே படைப்பாக வெளியான பின்னும் இருக்கிறான்.
அல்லாஹ் படைப்பாக வெளியாவதால் அவனின் “தாத்” அழிந்து விடும் என்று சிலர் நினைக்கலாம். இன்னும் சிலர் அது மாறுபட்டுவிடுமென்றும் நினைக்கலாம். இன்னும் சிலர் அது படைப்புக்களாக வெளியாகி வெளியாகி நாளடைவில் அது குறைந்து விடும் – சிறியதாகிவிடும் என்றும் நினைக்கலாம். அவ்வாறு ஒன்றுமே நடப்பதில்லை.
ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதாயின் அதற்கு மூன்று வழிகள் உள்ளன.
ஒரு பொருள் இன்னொரு பொருளாவதாயின் அந்தப் பொருள் முற்றாக அழிந்து – இல்லாமற் போனபின் இன்னொரு பொருளாக ஆக முடியும். இதற்கு ஓர் உதாரணம் கூறலாம்.
ஒரு மா விதையை – மாங் கொட்டையை – பூமியில் நட்டினால் மா மரம் முளைத்து விடுகின்றது. சில நாட்களின் பின் அந்த விதை முற்றாக அழிந்து விடுகிறது. முழுமையாக இல்லாமற் போய் விடுகிறது. இது ஒரு பொருள் முற்றாக அழிந்து இன்னொரு பொருள் உண்டாவதற்கான உதாரணமாகும்.
இதேபோன்றுதான் அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை முற்றாக அழிந்துதான் படைப்புகளாக அது வெளியானதென்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் இவ்வாறு சிருட்டியாக – படைப்பாக வெளியாகவில்லை என்று திட்டமாக – சந்தேகமின்றி விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்தான் படைப்பாக வெளியாகியுள்ளான் என்று ஸூபீகளான நாம் பேசும் போது அல்லாஹ்வின் “தாத்” கோடிக் கணக்கான படைப்புக்களாக வெளியாகும் போது அது அழியத்தானே செய்யும் என்று விபரம் தெரியாத பாமரர் சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு நினைக்காத போதும் பொறாமைக்காரர்கள் – வஹ்ததுல் வுஜூத் கொள்கைக்கு எதிரானவர்கள் அவர்களை அவ்வாறு நினைக்கத் தூண்டி எம்மைப் பொய்யாக்க நினைக்கிறார்கள். இத்தகையோரில் ஒன்றுமே தெரியாத போலி உலமாஉகள் முன் வரிசையில் உள்ளார்கள்.
அல்லாஹ் ஒரு போதும் அழிவதில்லை. எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரே வசனத்தில் இதற்கு பதில் கொடுத்துள்ளார்கள். هو الآن كما كان عليه அவன் படைப்புக்களைப் படைக்குமுன் எவ்வாறிருந்தானோ அவற்றைப் படைத்த பின்னும் அவ்வாறே உள்ளான் என்று தோழர்களுக்கு விளக்கம் கூறியுள்ளார்கள்.
ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்று மேலே எழுதியுள்ள நான் அந்த மூன்று வழிகளில் ஒன்றைக் கூறி அந்த வகையில் அல்லாஹ் படைப்பாக வெளியாகவில்லை என்று திட்டமாக கூறியுள்ளேன். ஏனைய இரண்டு வழிகளையும் அடுத்த தொடரில் கூறி இறுதியில் விளக்கம் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்து எனது கட்டுரைகளை நுகர்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும்.
தொடரும்…..
Pages: 1 2