Thursday, October 10, 2024
Homeஎழுத்தாக்கங்கள்துறை தெரியாமல் தோணி தொடுத்து அல்லல் படும் முல்லாக்கள்!

துறை தெரியாமல் தோணி தொடுத்து அல்லல் படும் முல்லாக்கள்!

தொடர் 02.
 
துறை தெரியாமல் தோணி தொடுத்து அல்லல் படும் முல்லாக்கள்!
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“துறை தெரியாமல் தோணி தொடுத்து அல்லல்படும் முல்லாக்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
ஏன் அவ்வாறு எழுதினேன் என்றால் நான் பேசிய தலைப்பு என்னவென்று தெரியாமலேயே முல்லாக்கள் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்ததினால்தான் அவ்வாறு எழுதினேன்.
நான் பேசியது “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவமாகும். முல்லாக்கள் “பத்வா” கொடுத்திருப்பது “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்காகும்.

“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” கொடுத்துவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை அதில் குறிப்பிட்டது உலமாஉகளின் சதியேயன்றி வேறொன்றுமில்லை. இதனால்தான் துறை தெரியாமல் தோணி தொடுத்த முல்லாக்கள் என்று குறிப்பிட்டேன். இவர்கள் தலைப்பையே விளங்க முடியாத தலையில்லாத முல்லாக்களாவர்.
 
பத்வா வழங்கிய முல்லாக்கள் தமது கை விரல்களாலேயே தமது கண்களைக் குத்திக் கெடுத்தவர்கள் என்று நான் ஏன் எழுதினேன் என்றால் இவர்கள் தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூல்களில் ஒன்று “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலாகும். இந்நூல் 100 வீதமும் வஹ்ததுல் வுஜூத் ஞானத்திற்கு ஆதரவான நூலாகும். இதனால்தான் முல்லாக்கள் தமது கை விரல்களாலேயே தமது கண்களைக் குத்திக் கெடுத்துக் கொண்டார்கள் என்று எழுதினேன்.
 
முல்லாக்கள் தமது பத்வாவுக்கு ஆதாரமாக எடுத்த குறித்த நூல் 100 வீதமும் வஹ்ததுல் வுஜூத் ஞானத்தைச் சரிகண்டு எழுதப்பட்ட நூல் என்பதை உலமாஉகள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே குறித்த நூலில் இடம் பெற்றுள்ள வஹ்ததுல் வுஜூத் வசனங்களை கடந்த முதலாம் தொடரில் எழுதி அவற்றுக்கு விளக்கமும் எழுதினேன்.
நான் எழுதிய விளக்கத்தில் ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதாயின் மூன்று வழிகளில் ஒரு வழியிலேயே ஆக முடியும் என்று எழுதி அவற்றில் முதலாவது வழியையும் கூறினேன்.
அதாவது ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாக ஆவதாயின் ஒரு வஸ்து முற்றாக அழிந்து இன்னொரு வஸ்தாதல் என்று குறிப்பிட்ட நான் அதற்கு உதாரணமாக மா விதையையும், மா மரத்தையும் கூறினேன். மா விதை முற்றாக அழிந்துதான் மா மரம் முளைக்கிறதென்று விளக்கம் எழுதினேன்.
 
இதேபோல் அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” முற்றாக அழிந்துதான் படைப்பாக வெளியாகிறதென்பது கருத்தல்ல என்று குறிப்பிட்டேன். ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்” எக்காரணம் கொண்டும் அழியாதென்பதே ஸூபீ மகான்களின் தீர்க்கமான முடிவாகும்.
ஆகையால் மா விதை முற்றாக அழிந்து மா மரமாவது போல் அல்லாஹ்வின் “தாத்” அல்லது அவனின் “வுஜூத்” உள்ளமை முற்றாக அழிந்துதான் படைப்பாகிறது என்று நம்புதல் விசுவாசத்திற்கு முரணான நம்பிக்கையாகும். இவ்விபரத்தை ஸூபிஸ ஞான வழி செல்பவர்கள் விளக்கமாக அறிந்து நம்ப வேண்டும்.
 
இரண்டாம் வழி:
ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதாயின் அந்த வஸ்து முற்றாக அழியாமல் அது மாறு பட்டும், விகாரப்பட்டும் இன்னொரு வஸ்தாதல். உதாரணமாக குயவன் செய்த சட்டி போன்று.
குயவன் கழியையும், நீரையும் கலந்து இரண்டையும் பிசைந்து சட்டியை உருவாக்குகிறான். சட்டி உருவாவதற்கு மண் மூலமாக இருக்கிறது. இவ் உதாரணத்தில் மண் அழியாமல் அது மண்ணாகவே இருக்க ஆயினும் அது மாற்றமடைந்தும், விகாரப்பட்டும் இன்னொரு வஸ்தாக அதாவது சட்டியாக வெளியாகிறது. இவ்வாறும் அல்லாஹ் படைப்பாக வெளியாகவில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்” அழியாதது போல் அது மாறுபடவுமாட்டாது. விகாரப்படவுமாட்டாது. ஆகையால் இப்போது கூறிய இரண்டாம் வழி அடிப்படையிலும் அல்லாஹ் படைப்பாக வெளியாகவில்லை என்பதை சந்தேகமின்றி அறிந்து கொள்ள வேண்டும்.
 
மூன்றாம் வழி:
ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதாயின் அவ் வஸ்து அழியாமலும், மாறு படாமலும், விகாரப்படாமலும் அது எவ்வாறிருந்ததோ அவ்வாறே இருக்கும் நிலையில் அது இன்னொரு வஸ்தாக வெளியாதலாகும்.
இதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். அவற்றில் ஒன்றை முதலில் எழுதுகிறேன்.
நான் எழுதப் போகின்ற ஆதாரம் ஒரு “ஸஹீஹ்” ஆன நபீ மொழியாகும். இது நீளமான நபீ மொழி. முடிந்தவரை சுருக்கி எழுதுகிறேன்.
 
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது இனம் தெரியாத ஒருவர் வந்து நபீ பெருமானாரின் முன்னால் அமர்ந்து, يا محمد أخبرني عن الإيمان “ஈமான்” விசுவாசம் என்றால் என்னவென்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டார். நபீ பெருமானார் அவர்கள் விசுவாசத்தின் ஆறு அம்சங்களையும் தொடராகச் சொல்லி முடித்தார்கள். வந்தவர் صدقت يا محمد முஹம்மதே நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். இது தோழர்களுக்கு வியப்பாக இருந்தது. தெரியாதவர் போல் கேள்வி கேட்டு தெரிந்தவர் போல் உண்மை சொன்னீர்கள் என்று சொல்கிறாரே என்று வியந்தார்கள்.
இதன் பிறகு يا محمد أخبرني عن الإسلام முஹம்மதே! எனக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று சொல்லித் தாருங்கள் என்று கேட்டார். நபீ பெருமானார் இஸ்லாத்தின் ஐந்து அம்சங்களையும் சொன்னார்கள். இதைக் கேட்ட வந்த மனிதர் முதலில் சொன்னது போல் சரியாகவே சொல்லிவிட்டீர்கள் என்றார்.
 
வந்தவர் மூன்றாவதாக أخبرني عن الإحسان “இக்லாஸ்” என்றால் என்னவென்று கேட்டார். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பவர் – காண்பவர் போல் அவனை வணங்க வேண்டும். நீங்கள் அவனைக் காணாது போனாலும் அவன் உங்களைக் காண்கிறான்” என்று கூறினார்கள்.
 
இவ்விடை மிகவும் ஆழமான கருத்துக்களை உள்வாங்கிய விடையாகும். இது தனியான தலைப்பில் விபரமாக எழுத வேண்டிய ஒன்று. அடுத்து வரும் தொடர்களில் எழுதுவேன்.
 
இதன் பின் இன்னும் சில கேள்விகளை வந்தவர் கேட்டு விடைபெற்றுச் சென்றார்.
வந்தவர் போனபின் பெருமானார் அவர்கள் அங்கு இருந்த தோழர்களிடம் வந்தவர் யாரென்று தெரியுமா? என்று வினவிய போது அல்லாஹ்வுக்கும், றஸூலுக்குமே தெரியும் என்று கூறினார்கள். நபீ பெருமானார் அவர்கள், அவர்தான் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்றும், உங்களுக்கு உங்களின் “தீன்” மார்க்கத்தை கற்றுத்தர வந்தார் என்றும் கூறினார்கள்.
 
பெருமானாரிடம் மனித உருவத்தில் வந்தவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்பது தெளிவாகிறது. நாம் இத்தலைப்பில் இது பற்றி மட்டுமே ஆராய வேண்டும்.
வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட, வலுப்பமான இரு இறக்கைகள் உடைய மிகப் பெரிய உருவமாவார்கள். பெருமானார் அவர்கள் கூட அவரை அவரின் இயற்கையான உருவத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் மட்டுமே கண்டுள்ளார்கள். ஏனைய நேரங்களிலெல்லாம் மனித உருவத்திலேயே அவரைக் கண்டுள்ளார்கள்.
 
இங்கு நாம் ஆய்வுக்கு எடுக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாவதாயின் கூறப்பட்ட மூன்று வழிகளில் ஒரு வழியிலேயே ஆக வேண்டும். இறுதியாக நான் கூறிய வழி இவ்வழிதான். அதாவது ஒரு வஸ்து இன்னொரு வஸ்தாக ஆவதாயின் அவ்வஸ்து அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவ்வஸ்து இருந்தவாறே இருக்கும் நிலையில் இன்னொரு வஸ்துவாதல் என்பது மூன்றாவது வழியேயாகும்.
 
வானவர் ஜிப்ரீல் தனது இயற்கையான, ஒளியினால் படைக்கப்பட்ட வலுப்பமிகு தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றியே மனித உருவம் பெற்றார்கள். அவர்களின் ஒளியினாலான படைப்பில் எந்த ஒரு மாற்றமுமின்றியே மனித உருவம் பெற்றார்கள். மனித உருவத்தில் தோற்றியதால் ஜிப்ரீல் அவர்களின் இயற்கையான உருவம் அழியவுமில்லை, மாறுபடவுமில்லை, விகாரப்படவுமில்லை.
இவ்வாறுதான் அல்லாஹ் தனது “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை அழியாமலும், அது விகாரப்படாமலும் இருக்கும் நிலையிலேயே கோடிக்கணக்கான படைப்புக்களாக வெளியாகின்றான்.
 
ஒன்றின் மூலம் அழியாமலும், அது மாறுபடாமலும், விகாரப்படாமலும் இன்னொன்றாக அது வெளியாவதற்கு மேற்கண்ட உதாரணம் போல் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. ஒரு சாதாரண மனிதன் விளங்கிக் கொள்வதற்கு மேற்கண்ட உதாரணம் ஒன்றே போதும்.
 
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனி ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். ஒளி என்பது தான் அழிந்து போகாமலும், மாறிவிடாமலும், விகாரப்பட்டு விடாமலும் பல தோற்றங்கள் பெறுவதற்கு தகுதியானதாகும். இவ்வாறுதான் அல்லாஹ்வுமாவான். அவன் தனி ஒளி மயமானவன்.
 
மேற்கண்ட விளக்கத்தை ஒரு தரம் மட்டும் வாசிக்காமல் பலமுறை வாசிப்பதுடன் வாசிப்பவர்கள் தன்னை விட அறிவில், இறைஞானத்தில் அனுபவமுள்ள ஒருவரையும் உதவிக்கு எடுத்துக் கொள்வது சிறந்தாகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments