தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اَللهُ إلهٌ مُطْلَقٌ، لَا مُقَيَّدٌ بِأَيِّ قَيْدٍ،
அல்லாஹ் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவன். அவனை எவராலும், எதிலும் கட்டுப்படுத்த முடியாது. இதுவே உண்மையும், எதார்த்தமுமாகும். “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தருகின்ற விளக்கம் இதுவேதான். இதில் மாற்றமில்லை.
ஆயினும் சில வேளை “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகின்றவர்கள் கூட தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான – பொருத்தமான சொல் அல்லது வசனம் தெரியாமற் போனால் வேறு சொற்களில் அல்லது வேறு வசனத்தில் தமது கருத்தைச் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் வசனம் அறிவாற்றல் குறைந்தவர்களுக்கு “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை போல் தோற்றும். அவ்வாறு தோற்றினால் அவர்கள் அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்காமல் – அதாவது அவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் தவறான கொள்கை கூறுகிறார்கள் என்று தவறான முடிவு எடுத்து விடலாகாது. இதை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையே பொய்யாக்க முற்படுவது உண்மையான ஞானத்தை அழிக்கும் செயலாகும்.
இங்கு ஒரு விடயத்தைச் சொல்கிறேன். நிதானமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காத்தான்குடியில் “ஸெய்யித் முஹம்மத்” என்று ஓர் இறைஞானி இருந்தார். இவர் “தோணா மௌலானா” என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
இவர் ஒரு பாடலில்,
எள்ளுக்குள் எண்ணையைப் போல்
எங்கும் நிறைந்தவளே
உள்ளுக்குள்ளாயிருந்து – நீ
உட்கதவைப் பூட்டிக் கொண்டாய்.
என்று பாடியுள்ளார்கள்.
இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தெரியும். ஆயினும் சற்று ஆழமாக நோக்கினால் “ஹுலூல் – இத்திஹாத்” கருத்துப் போன்று தோற்றும். உண்மை அவ்வாறில்லை. ஆயினும் பாடிய மகான் அவர்கள் எள்ளுக்குள் எண்ணையைப் போல் என்று சொல்லாமல் எள்ளிலே எண்ணையைப் போல் என்று கூறியிருந்தார்களாயின் சந்தேகத்திற்கு இடமில்லாமல் போயிருக்கும்.
இவ்வாறு ஞான மகான் கூறியதற்காக அவர் “ஹுலூல் – இத்திஹாத்” சொல்லிவிட்டார் என்று முடிவு செய்தல் பிழையாகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னுமிவை போல் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களிற் பலர் சொல்லியுள்ளார்கள். உதாரணமாக
أَوْصَانِيْ أُسْتَاذِيْ: أَنْ حَدِّدْ بَصَرَ الْإِيْمَانِ، تَجِدِ اللهَ فِى كُلِّ شَيْءٍ، وَعِنْدَ كُلِّ شَيْءٍ، وَمَعَ كُلِّ شَيْءٍ، وَتَحْتَ كُلِّ شَيْءٍ، وَامْحَقِ الْكُلَّ،
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் தங்களுக்கு பின்வருமாறு “வஸிய்யத்” செய்ததாக குறிப்பிடுகிறார்கள். (ஈமானின் பார்வையை நீ கூராக்கிக் கொள். இவ்வாறு நீ செய்தால் அல்லாஹ்வை சகல வஸ்துக்களிலும் பெற்றுக் கொள்வாய். இன்னும் சகல வஸ்து இடத்திலும், இன்னும் சகல வஸ்துவுடனும், இன்னும் சகல வஸ்துக்களின் கீழாலும் பெற்றுக் கொள்வாய். இன்னும் அனைத்தையும் நீ அழித்து விடு என்று சொன்னது போன்று.
ஆதாரம்: அல்மபாகிறுல் அலிய்யா, 132.
மேற்கண்ட இவ்வசனமும் வெளிப்பார்வையில் “ஹுலூல் – இத்திஹாத்” போன்று தோற்றுகிறது. ஆனால் உண்மை அவ்வாறில்லை. ஏனெனில் ஷாதுலீ நாயகம் அவர்களின் குரு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை துருவித் துருவி ஆய்வு செய்த ஒரு மகான் ஆவார்கள். இவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பேசியிருக்க வாய்ப்பில்லை.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் நன்றாக அறிந்தவர்களில் யாராவது ஒரு வசனத்தைக் கூறினால் அது “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு ஆதரவானது போல் தோற்றும் போது அந்த வழியில் செல்லாமல் அவர்களின் அத்தகைய வசனங்களுக்கு சரியான வலிந்துரை கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் “வஹ்ததுல் வுஜூத்” வழி செல்லும் மகான்களிற் சிலர் தமக்கு تَنْزِيْهْ – “தன்ஸீஹ்” உடைய நிலை மிகைத்தால் “தன்ஸீஹ்” என்பதில் மட்டும் நின்று கொண்டு “தஷ்பீஹ்” تَشْبِيْهْ என்பதற்கு மாறாகவும், “தஷ்பீஹ்” உடைய நிலை மிகைத்தால் அதில் மட்டும் நின்று கொண்டு “தன்ஸீஹ்” என்பதற்கு மாறாகவும் பேசுவார்கள். விபரம் தெரிந்தவர்கள் இதைக் கருத்திற் கொள்ளமாட்டார்கள். விபரம் தெரியாதவர்கள் தான் இப்படியான வசனங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு குழப்பத்தையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்துவார்கள்.
இது நான் சொல்லும் கருத்தல்ல. பின்னால் எழுதப்படுவதை சற்று கவனியுங்கள்.
قال الشّيخ محي الدين ابن عربي قُدِّس سرّه فى الباب الثاني والسّبعين والثلاثمأة بعد كلام طويل، وبالجملة فالقلوب به هائمةٌ والعُقول فيه حائرةٌ، يُريد العارفون أن يفصِلُوه تعالى بالكليّة عن العالم مِن شِدّة التّنزيه فلا يقدرون، ويُريدون أن يجعلوه عينَ العالم مِن شدّة القُرب فلا يتحقّق لهم، فهُمْ على الدّوام مُتحيّرون، فتارةً يقولون هُوَ، وتارة يقولون مَا هُوَ، وتارةً يقولون هُوَ مَا هُوَ، وبذلك ظهرتْ عظمتُه تعالى، (اليواقيت، ج 1، ص 58، للشعراني)
ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 372ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ்வின் விடயத்தில் உள்ளங்கள் எல்லாம் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன. இன்னும் அனைவரின் “அக்ல்” புத்திகளும் தடுமாறி நிற்கின்றன. இறைஞானிகள் அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” எனும் நிலையைக் கவனித்து படைப்புகளை விட்டும் அவனைப் பிரிப்பதற்கு – அவன் வேறு படைப்பு வேறு என்று சொல்வதற்கு நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் அதற்கு முடியாமற் போகிறது. இதேபோல் “தஷ்பீஹ்” எனும் நிலையைக் கவனித்து உலகமே அவன்தான் என்று சொல்ல நினைக்கிறார்கள். அதற்கும் அவர்களால் முடியாமற் போகிறது.
இந்நிலையில் – அதாவது எல்லாம் அவனல்ல என்று சொல்ல நினைக்கிறார்கள். அதற்கும் அவர்களால் முடியாமலிருக்கிறது. இதனால் இறைஞானிகள் அவன் விடயத்தில் தடுமாறுகிறார்கள். ஒரு சமயத்தில் எல்லாம் அவனே என்று சொல்கிறார்கள். இன்னொரு சமயம் எல்லாம் அவனல்ல என்று சொல்கிறார்கள். இன்னொரு சமயம் எல்லாம் அவன்தான் என்றும், எல்லாம் அவனில்லை என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் வலுப்பமே உணரப்படுகிறது)
ஆதாரம்: அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 58.
எல்லாம் அவனே என்ற “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை மறுத்தவரும், எதிர்த்தவருமான இப்னு தைமிய்யாவின் ஆதரவாளர் ஒருவரும், எல்லாம் அவனே என்ற கொள்கையைப் பிரகடனம் செய்த இப்னு அறபீ நாயகம் அவர்களின் ஆதரவாளர் ஒருவரும் பின்னொரு காலத்தில் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஆயினும் கொள்கையில் வேறுபட்டவர்களாவர்.
ஒரு நாள் இருவரும் ஒரு வழியால் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் செத்துப் போன, உடல் அழுகிப் போன, சீழ், சலம், இரத்தம் வழிந்து கொண்டிருந்த ஒரு நாயை பாதையோரம் கண்டார்கள்.
இப்னு தைமிய்யாவின் ஆதரவாளர் மற்றவரை நையாண்டி – கேலி – பண்ணும் பாணியில் எல்லாம் அவனே என்று சொல்பவனே! இவ் இழி நிலையில் கிடக்கும் இந்நாயும் அவன்தானா? என்று கேட்டார். அதற்கு மற்றவர் ஆம், “வுஜூத்” உள்ளமை ஒன்றுதான். அது இரண்டல்ல. இதுவும் அவனே என்று ஆணித்தரமாக உறைக்கச் சொன்னார். மறுகணமே அந்த நாய் உயிர் பெற்றெழுந்து இப்னு தைமிய்யாவின் ஆதரவாளனை கோபத்துடன் உறுக்கிப் பார்த்த நிலையில் எழுந்து சென்றது. இதன் பிறகு இப்னு தைமிய்யாவின் ஆதரவாளன் இப்னு அறபீயின் ஆதரவாளனாக மாறி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டு அதைப் பகிரங்கமாக பரப்பலானார்.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இறைஞானிகளில் இப்னு அறபீ அவர்கள் விஷேடமானவர்கள். இஸ்லாமிய வரலாற்றில் இது காலவரை தோன்றி மறைந்த ஞானிகளில் எவரும் இப்னு அறபீ அவர்கள் போல் அக்கால ஆரிபீன்களால் பின்வரும் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்கள் எவருமில்லை.
இவர்கள் அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அல்கிப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர் என்ற பட்டங்கள் பெற்றவர்களும், என்னால் “அல்மஇய்யுல் அஷ்ஹர்” எனும் பட்டம் வழங்கப்பட்டவர்களுமாவார்கள். உலகில் தோன்றி மறைந்த மெய்ஞ்ஞானிகளில் இவர்கள் போல் ஒருவர் இருந்ததற்கு வரலாறைக் காணவில்லை.
இவர்கள் 900 நூல்களுக்கும் அதிகமான நூல்கள் எழுதியவர்களாவர். “ஐனிய்யத்” “ஹக்கும், கல்கும்” ஒன்றுதான், படைத்தவன் வேறு, படைப்பு வேறென்பதில்லை என்ற தத்துவத்தை உலகிற்கு அள்ளி வழங்கிய மகான்களில் இவர்கள் போன்று எவருமில்லை.
இவர்கள் எழுதிய நூல்களில் அச்சிடப்படாமல் இவர்களின் கையெழுத்துப் பிரதியாகவுள்ள பல நுல்கள் அறபு நாடுகளிலுள்ள நூலகங்களில் உள்ளன.
இவர்களை எதிர்த்தவர்களில் ஒருவன் தினமும் ஐங்கால் தொழுகையின் பின் اللهم العن ابنَ عربيي இறைவா! இப்னு அறபீயை சபிப்பாயாக! என்று 10 தரம் சபிப்பதாக நேர்ச்சை செய்து அதன்படி செயல்பட்டு வந்தான். ஒரு நாள் அவன் மரணித்து விட்டான். அவனின் முகம் “கின்ஸீர்” பன்றியின் முகம் போல் மாற்றப்பட்டிருந்தது. இது கண்ட மனைவி, மக்கள், மற்றும் உற்றார் உறவினர் இப்னு அறபீ அவர்களிடம் வந்து அவனை மன்னிக்குமாறு கேட்டு நின்றார்கள்.
பெரும் கருணையுள்ள பெருந்தகை இப்னு அறபீ அவர்கள் அவனின் “ஜனாசா” பிரேதத்தைப் பார்ப்பதற்கு அவனின் வீட்டுக்குச் சென்றார்கள். அவனின் முகம் பார்த்து கண் கலங்கியவர்களாக அங்கேயே தொழ ஆரம்பித்தார்கள். பல மணி நேரங்கள் “ஸுஜூத்” நிலையிலேயே இருந்து பின்னர் தொழுகையை முடித்து விட்டு “கபன்” செய்யப்பட்ட துணியை அகற்றினார்கள். அவனின் முகம் சந்திரன் போல் பிரகாசித்தது. இது கண்டு அங்கு வந்த மக்கள் அனைவரும் அல்லாஹ்வைப் புகழ்ந்து இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றுக் கொண்டனர்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இரு பெரும் தலைகள் ஒரு விடயத்தில் என்னைக் குறை காண்பதாக நான் அறிகிறேன். இதற்கான காரணம் அவ்விருவரில் ஒருவருக்கு சில வருடங்களுக்கு முன் புதிய “டயறி” ஒன்று நான் அனுப்பியிருந்தேன். அதில், من الله الكريم، إلى الله العظيم சங்கைமிகு அல்லாஹ்விடமிருந்து வலுப்பமிகு அல்லாஹ்வுக்கு என்று எழுதியிருந்தேன்.
இவ்வசனம், நான் அல்லாஹ்வை என்னிலும், அவரிலும் கட்டுப்படுத்தியதாக விளங்கிக் கொண்டார்கள் போலும். இதனால் அவர்களுக்கு என் மீது 100 வீதம் நல்லபிப்பிராயம் இல்லாமற் போய் விட்டதென்று நான் நினைக்கிறேன். இதை தெளிவுபடுத்துவதற்கு அதிகம் எழுத வேண்டியுள்ளதால் தேவை ஏற்பட்டால் இது தொடர்பாக தெளிவைத் தருவதற்கு நான் எனது அடுத்த கட்டுரையைப் பயன்படுத்துவேன். இன்ஷா அல்லாஹ்!
சுருக்கமாக ஒன்றை மட்டும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறேன். எனது நோக்கம் என்னிலும், அவரிலும் மட்டும் அல்லாஹ்வை கட்டுப்படுத்துவதாக இருக்கவில்லை. நானும், அவரும் அல்லாஹ்வின் வெளிப்பாடுதான் என்று காட்டுவதற்காகவே அவ்வாறு எழுதினேன்.
தொடரும்….