Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் என்பதற்கு முன்னோர்களான ஸூபீ மகான்கள் கூறிய வரைவிலக்கணங்கள்.

“தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் என்பதற்கு முன்னோர்களான ஸூபீ மகான்கள் கூறிய வரைவிலக்கணங்கள்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
تعريفات الصُّوفيّة الأوائل للتصوّف،
 
கடந்த பதிவு ஒன்றில் ஸூபிஸ ஞானம் என்பதற்கு ஸூபீகளின் தலைவர் سيد الطائفة الصوفيّة இமாம் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய
هُوَ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ
“அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மவுத்தாக்கி – மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை “ஹயாத்” உயிர் பெறச் செய்வதாகும்” என்ற வரைவிலக்கணம் பற்றி இரண்டு கட்டுரைகள் மூலம் நான் விளக்கமாக எழுதியிருந்தேன். பார்த்தவர்கள் பாக்கியம் பெற்றிருப்பார்கள். பார்க்கத் தவறியவர்கள் அவ்விரு கட்டுரைகளையும் தேடி எடுத்து வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதே ஜுனைத் பக்தாதீ அவர்கள் இன்னும் பல வரைவிலக்கணங்கள் கூறியுள்ளார்கள். அவற்றிற் சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.

قال الجنيد: التصوّفُ تصفية القلب عن موافقة البريّة، ومفارقة الأخلاق الطبيعيّة، وإخماد الصفات البشـريّة، ومُجانبة الدّواعي النفسانيّة، ومنازلة الصفات الروحانيّة، والتعلق بالعلوم الحقيقية، (التعرف للكلاباذي، ص 9)
“ஸூபிஸம் என்பது சிருஷ்டிகளை விட்டும் உள்ளத்தை சுத்தப்படுத்துவதும், இயற்கைக் குணங்களை விட்டும் அதைப் பிரித்து விடுவதும், மனிதத் தன்மைகளை அணைப்பதும், மனவாசைகளைத் தவிர்ப்பதும், றூஹ் – ஆன்மாவின் தன்மைகளை அடைவதும், எதார்த்தமான – அதாவது இறைஞான அறிவோடு தொடர்பாயிருப்பதுமாகும்” என்று கூறியுள்ளார்கள்.
இவர்கள் கூறியுள்ள வைரவிலக்கணத்தைப் பேணி அவற்றின் படி ஒருவன் செயல்பட்டால் அவன் அல்லாஹ்வுக்கு விருப்பமான “அல் இன்ஸானுல் காமில்” முழு மனிதனாகிவிடுவான்.
 
சுருங்கச் சொன்னால் மனித இயல்புக்கு – சுவாபத்திற்கு அவன் இணங்கிச் செயல்படாமல் தனது உள்ளத்தை சுத்தப்படுத்த வேண்டும். இது ஆறு அம்சங்களில் ஓர் அம்சமாகும்.
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன். ஒருவன் “மார்கட்” சந்தைக்கு கறி வாங்கச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு பல்வேறு மீன் வகைகளும், இறால் வகைகளும், இறைச்சி வகைகளும் இருந்தன. அவற்றில் ஒவ்வொரு உணவையும் செக்கு மாடு சுத்துவது போல் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். அவ் வகைகளில் அவனுக்கு ஏதோ ஒரு வகை விருப்பமாகத் தெரிந்தது.
 
அந்த விருப்பத்தை அவனுக்கு ஏற்படுத்தியது அவனின் “பஷரிய்யத்” எனும் மனித சுவாபமேயாகும். அதற்கு அவன் உடன்பட்டு அதை வாங்கினால் அவன் அவ்வேளை தனது மனித இயல்புக்கு – சுவாபத்திற்கு இணங்கியவனாகிவிடுகிறான்.
இது “ஷரீஆ”வின் கண்ணோட்டத்தில் மார்க்கம் அனுமதித்த ஒன்றாயினும் ஸூபிஸக் கண்ணோட்டத்தில் இது மனித சுவாபத்திற்கு – இயல்புக்கு உடன் பட்டதாகவே ஆகும். இது ஸூபிஸ அடிப்படையில் பிழையானதே. ஸூபிஸ வழி நடப்பவன் இவ்வாறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
 
காத்தான்குடியில் ஸூபிஸ வழி வாழ்ந்த ஒருவரின் வரலாறை எழுதுகிறேன். எனது ஊரான காத்தான்குடியில் ஓர் ஆலிம் இருந்தார்கள். அவர் ஸூபிஸ வழி நடக்கும் இறைஞானியாவார்.
இவர் மார்கட் – சந்தைக்குச் சென்றால் சந்தையின் உள்ளே செல்லாமல் வெளியே தனக்கு விருப்பமான ஒருவரின் கடையில் இருப்பார். தனக்கு அறிமுகமான யாராவது அவ்வழியாற் சென்றால் அவரை அழைத்து, தம்பி! எனக்கு உடல் நிலை சரியாக இல்லை. நீ சந்தைக்குள் சென்று ஏதாவது கறி வாங்கித் தா என்று சொல்வார். அவன் அவரிடம் என்ன கறி வாங்க வேண்டும் என்று கேட்டால் உனக்கு விருப்பமானதை வாங்கித் தா என்று சொல்வார். அவன் வாங்கிக் கொடுப்பதை வீட்டுக்கு எடுத்து வருவார்.
இவர் இவ்வாறு செய்வது தனது “பஷரிய்யத்” மனித இயல்புக்கு தான் வழிப்படாமல் இருப்பதற்கேயாகும்.
 
பெருநாள் காலம் வந்தால் இவர் மீது “மஹப்பத்” உள்ளவர்கள் இவருக்கு சாறம் அன்பளிப்புக் கொடுப்பார்கள். இவரின் நிலைமையை அறிந்தவர்களாயின் ஒரு சாறனை மட்டும் கொண்டு வராமல் பல சாறன்களைக் கொண்டு வந்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வந்தவன் சொல்வான். அவர் அவனிடம் உனக்கு விருப்பமான ஒன்றைத் தாவென்று அவனிடம் சொல்வார். அவன் தனக்கு விருப்பமான ஒன்றைக் கொடுப்பான். அதை அவர் ஏற்றுக் கொள்வார்.
பெருநாளன்று காலை பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்லுமுன் தனது மகன்களில் ஒருவரை அழைத்து தனக்கு அன்பளிப்பாக வந்த சாறன்கள் பெட்டியில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்து வா என்று கூறி அவன் கொடுப்பதை உடுத்துக் கொள்வார். அவராகத் தெரிவு செய்து உடுக்கமாட்டார்.
இவர் தனது 72ம் வயதில் மரணித்தார். அதுவரை ஒரு குர்ஆன் மத்ரஸாவில் சிறுவர்களுக்கு திருக்குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இவர் மேற்கண்டவாறெல்லாம் நடந்து கொண்டதற்கான காரணம் அவர் தனது “பஷரிய்யத்” மனித இயல்புக்கும், சுவாபத்திற்கும் இணங்கி நடக்காமல் அதற்கு மாறு செய்வதற்கேயாகும்.
 
இவர் தனது வாழ்நாளில் தனது அன்பர்களின் உதவிகளைக் கொண்டு ஐங்காலம் தொழுவதற்கென்று ஒரு சிறு பள்ளிவாயல் கட்டினார். அப் பள்ளிவாயலில் ஒலி பெருக்கி, “மைக்” எதுவும் பாவிக்கக் கூடாதென்று தடை செய்திருந்தார். அவரும் தனது வாழ்வில் ஒரு தரம் கூட ஒலி வாங்கி மூலம் பேசியதுமில்லை. அதற்கு முன்னால் நின்றதுமில்லை. இவ்விடயத்தில் மிகவும் கடுமையாக இருப்பார்.
ஒரு நாளிரவு பள்ளிவாயலில் பெருமானார் அவர்களின் “மவ்லித்” நடைபெற்றது. அன்று பள்ளிவாயல் தலைவர் எவரிடமும் கேட்காமல் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்துவிட்டார். ஆலிம் அவர்களுக்கும் இவ்விடயம் தெரிந்திருக்கவில்லை.
பொது மக்களும், நிர்வாகிகளும் தலைவரிடம் ஆலிம் அவர்களுக்கு ஒலி பெருக்கி பாவிப்பது பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தும் நீங்கள் ஏற்பாடு செய்துவிட்டீர்கள். அதை நிறுத்திவிடுங்கள் என்று சொல்லியும் கூட அவர் செவிமடுக்காமல் தனது தலைமைத்துவம் “நபித்துவம்” என்று நினைத்துக் கொண்டார் போலும். அவர் சும்மா இருந்து விட்டார்.
 
மௌலித் நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது ஆலிம் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்காக வந்த வேளை பள்ளிவாயலில் ஒலிபெருக்கிச் சத்தம் ஆலிம் அவர்களின் காதில் விழுந்ததும் பள்ளிக்கு வந்த ஆலிம் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி போய்விட்டார்.
நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மக்களும், தலைவர் தவிரவுள்ள ஏனைய நிர்வாகிகளும் கொதித்தெழுந்து தலைவரை அணுகி நீங்கள் ஒலிபெருக்கியை நிறுத்த வேண்டும். இன்றேல் நாங்கள் கழட்டி எறிவோம் என்று சொன்னதும் தலைவர் தலை குனிந்து விட்டார். கட்டப்பட்ட ஒலி பெருக்கி இறக்கப்பட்டது. தலைவர் தனது வீட்டுக்குச் சென்றார். ஆலிம் அவர்கள் பள்ளிவாயலுக்கு வந்து நிகழ்வுகளை நடத்தி முடித்தார்கள்.
 
(ஆலிம் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது)
நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்த பின், ஆலிம் அவர்களும் “ஜலாலிய்யத்” நிலையிலிருந்து “ஜமாலிய்யத்” நிலைக்கு இறங்கிய பின் அவர்களிடம் ஒலிபெருக்கி பாவிப்பது தொடர்பாக வினவப்பட்டது.
“ஷரீஆ”வின் சட்டப்படி ஒலிபெருக்கி பாவிக்கலாம். ஒலி வாங்கியில் பேசலாம். இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. “ஷரீஆ”வோடு மட்டும் நின்று கொள்பவர்களுக்கு அது ஆகும். ஆயினும் “ஷரீஆ”வையும் பேணி அதற்கு மேற்படியான “தஸவ்வுப்” ஸூபிஸம் எனும் நிலையையும் பேணி நடப்பவர்களிடம் இதில் கருத்து வேறுபாடு உண்டு.
 
ஸூபிஸத்தில் அதன் உச்சக்கட்டம் வரை சென்றவர்களும் இருப்பார்கள். அதன் ஆரம்பப் படியில் உள்ளவர்களும் இருப்பார்கள். ஸூபிஸத்தின் உச்சியை அடைந்தவர்கள் ஒலிபெருக்கி பாவித்தல், ஒலி வாங்கியில் பேசுதல் போன்றவற்றை கூடாதென்றே சொல்வார்கள். இவர்கள் ஸூபிஸத்தின் உச்சியை அடைந்தவர்களாவர். இவர்கள் خَوَاصُّ الْخَوَاصِّ “கவாஸ்ஸுல் கவாஸ்” விஷேடமானவர்களில் விஷேடமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
காத்தான்குடியில் நடந்த மேற்கண்ட நிகழ்வில் ஒலிபெருக்கியை எதிர்த்த ஆலிம் அவர்கள் ஸூபிஸத்தின் உச்சியை அடைந்தவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.
ஒலிபெருக்கி, மைக் – ஒலி வாங்கி போன்றவை கூடாது என்பதற்கு ஆலிம் அவர்கள் கூறும் காரணங்களை இத்தலைப்பில் விரிவாக விளக்க முடியாது. ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்கான சரியான விளக்கத்தை அறிய விரும்பும் ஒருவன் என்னை நேரில் சந்தித்தால் அவனுக்கு நான் சொல்லிக் கொடுக்க முடியும்.
 
இடைக்குறிப்பு:
ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ள நுட்பங்களையும், திருக்கலிமா தருகின்ற “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தையும் சந்தேகமின்றித் தெளிவாக அறிந்து கொள்ள ஒருவன் விரும்புவானாயின் அவன் ஸூபிஸக் கலையில் ஆழமான அறிவுள்ள ஒருவரை நேரில் சந்தித்து அவரின் முகம் பார்த்து அவரின் விளக்கத்தை காதால் நேரில் கேட்பதுவே அதற்கான சிறந்த, உகந்த வழியாகும். எந்த தத்துவ ஞானி எவ்வாறு சொன்னாலும் கூட நான் அறிந்த வரை, நான் எனது எண்பது வருட வாழ்வில் கண்டவரை ஒரு ஞான குருவின் முகம் பார்த்து அவரின் உரையைக் கேட்பதில் அதிக பலனுண்டு. அதில்தான் ஆத்மிகத்தின் சக்தி தங்கி நிற்கிறது. இது ஸூபிஸக் கலைக்கு மட்டும் சொந்தமான விஷேடமேயன்றி எல்லாக் கலைக்கும் உள்ள சிறப்பல்ல.
இறைவனைப் பற்றிய ஸூபிஸ ஞானக் கலைக்கு இன்னுமொரு விஷேடம் உண்டு. இந்த விஷேடமும் ஸூபிஸக் கலைக்கு மட்டும் உரியதேயன்றி எல்லாக் கலைக்கும் உரியதல்ல. அதை இங்கு விபரமாக எழுதுவதாயின் எழுதிக் கொண்டிருக்கும் தலைப்பை நிறைவு செய்ய முடியாமற் போய்விடும்.
 
இமாம் ஜுனைத் அவர்கள் “ஸூபிஸம்” என்பதற்கு கூறிய மேற்கண்ட வரைவிலக்கணத்தில் ஆறு அம்சங்களை உள்ளடக்கிக் கூறியிருந்தாலும் அவ் ஆறினதும் மையக் கருத்து ஒன்றேதான்.
இதன் விபரம் என்னவெனில் ஸூபிஸம் என்றால் “கல்பு” எனும் உள்ளத்தை சுத்தமாக வைத்திருப்பதேயாகும். உள்ளத்தை தாக்கும் பாவங்களும், குணங்களும் ஒன்று இரண்டல்ல.
 
اَلْأَمْرَاضُ الْقَلْبِيَّةُ
உள நோய்கள் இரண்டாயிரத்தை தாண்டும் என்றும் ஞானிகளிற் சிலர் கூறியுள்ளார்கள். மேற்கண்ட ஜுனைத் பக்தாதீ அவர்களின் வரைவிலக்கணத்தின் படி பிரதானமான ஆறு நோய்கள் சொல்லப்பட்டுள்ளன.
 
1. تصفية القلب عن موافقة البريّة،
2. مُفارقةُ الأخلاقِ الطّبيعيّة،
3. إخماد الصّفات البشريّة
4. مُجانبةُ الدّواعي النّفسانيّة،
5. مُنازلةُ الصِّفات الرُّوحانيّة،
6. التعلُّقُ بالعُلوم الحقيقيّة،
01. படைப்பினங்களை விட்டும் உள்ளத்தை சுத்தம் செய்தல்.
02. இயற்கைக் குணங்களில் இகழப்பட்டவற்றை விட்டும் பிரிதல்.
03. மனித இயல்புகளையும், அதன் தன்மைகளையும் அணைத்தல்.
04. மனவெழுச்சிகளைத் தூண்டக் கூடியவற்றை தவிர்த்தல்.
05. ஆன்மிகத்தை பலப்படுத்தக் கூடிய உயர் குணங்களைக் கொண்டு குணம் கொள்ளுதல்.
06. “உலூமுல் ஹகீகிய்யா” என்று சொல்லப்படுகின்ற அறிவுகளுடன் தொடர்பாயிருத்தல்.
மேற்கண்ட இவ் ஆறு தன்மைகளும், அம்சங்களும் எவனில் உள்ளதோ அவன்தான் “ஸூபீ”யே தவிர இவ் அறிவில்லாதவன் என்னதான் வேஷம் போட்டாலும் அவன் கலப்படமே!
 
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments