Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மார்க்கத்தை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை “பத்வா” எனும் வாளால் இரண்டாகப் பிளந்து “முர்தத்” என்றும், முஸ்லிம்...

மார்க்கத்தை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை “பத்வா” எனும் வாளால் இரண்டாகப் பிளந்து “முர்தத்” என்றும், முஸ்லிம் என்றும் பிரிவினையை ஏற்படுத்திய “முப்தீ”கள் யஹூதிகளை விடக் கொடியவர்கள்!

இவர்களின் இக் கொடிய செயலால் அன்று நடுங்கத் தொடங்கிய “அர்ஷ்” இன்னும் ஓயவில்லை!
 
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் தலைவர்களும், பிரமுகர்களும் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்களாவர்.
 
இந்நிலை இன்னும் நீடிக்குமாயின் மேற்கண்ட தலைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கும்!

இலங்கைத் திரு நாட்டில் வாழும் முஸ்லிம் சகோதரர்களே!
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இலங்கைத் திரு நாடு தோன்றிய காலம் முதல் இற்றைவரை பௌத மத குருக்களால் பௌத மதத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாற்றப்பட்டு அவர் கொலை செய்யப்பட வேண்டும் என்றும், அவரின் ஆதரவாளர்களான ஏனைய பொது மக்களும் கொலை செய்யப்பட வேண்டும் என்றும், மதம் மாற்றப்பட்டவர்களில் எவரும் எந்தவொரு பன்ஸலைக்கும் வரக் கூடாதென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீங்கள் அறிந்ததுண்டா?
 
அல்லது இந்து மத குருக்களால் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு அவரும், அவரின் ஆதரவாளர்களும் கொலை செய்யப்பட வேண்டுமென்று எழுத்து மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீங்கள் அறிந்ததுண்டா? அல்லது கேள்விப்பட்டதுண்டா?
 
அல்லது கிறித்துவ மத குருமார்களால் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவர் அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு அவரும், அவரின் ஆதரவாளர்களும் கொலை செய்யப்பட வேண்டுமென்று எழுத்து மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீங்கள் அறிந்ததுண்டா? அல்லது கேள்விப்பட்டதுண்டா?
 
எனது எண்பது வருட வாழ்வில் எந்த ஒரு மத குருமாரும் தமது மதத்தைச் சேர்ந்த எவருக்கும் அவ்வாறு “தீர்ப்பு” வழங்கி உயிருக்கு அச்சுறுத்தல் செய்ததாக நான் அறியவில்லை.
 
இதனால் முஸ்லிம் மத குருக்களின் – தீர்ப்பு வழங்கிய முல்லாக்களின் மூளை பழுதடைந்து விட்டதென்று அல்லது அவர்களுக்கு என் மீதுள்ள பொறாமை அவர்களின் புத்திக்கும், அறிவுக்கும் திரையாகிவிட்டதோ என்று எண்ணத் தோணுகிறது.
 
முஸ்லிம் மத குருக்கள் வழங்கியுள்ள இத்தீர்ப்பு பிழையானதென்று அவர்களுக்கு எடுத்துக் கூறி, நான் கூறிய இஸ்லாமிய ஸூபிஸம் உங்களுக்குப் புரியவில்லையாதலால் நீங்கள் அனைவரும், அல்லது திறமையுள்ள ஒரு சிலராவது என்னிடம் வந்து ஒரு வாரம் தங்கியிருங்கள். உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று அவர்களை ஒரு முறையல்ல பல முறை நான் பகிரங்கமாக அழைத்தும் கூட அவர்களில் எவரும் என்னிடம் வரவுமில்லை. ஒரு பதில் கூட தரவுமில்லை. ஊமை ஷாத்தான்கள் போல் அடங்கியும், முடங்கியும் உள்ளார்கள்.
 
நானும் எனது கருத்தைச் சரிகண்ட பல்லாயிரம் முஸ்லிம்களும் எந்நேரமும் தீர்ப்பு வழங்கிய முல்லாக்களின் சஹ்றான் போன்ற ஆதரவாளன் ஒருவனால் எமது பள்ளிவாயல்கள், கல்வி தாபனங்கள், வீடுகள் குண்டு வைத்து தாக்கப்படலாம் என்ற அச்சத்தோடுதான் 42 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.
 
இது தொடர்பாக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவுமில்லை, முஸ்லிம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம் பிரமுகர்களோ எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவுமில்லை. இது தொடர்பாக எங்களால் எங்கெல்லாம் முறையிட வேண்டுமோ அங்கெல்லாம் முறையிட்டும் எமக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை.
 
“பத்வா” எனும் தீர்ப்பால் பாதிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸூபிஸ சமூகத்திற்கு நீதியான ஒரு முடிவு அதி மேதகு ஜனாதிபதி மூலம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அரசாங்கமோ, அரசியல் வாதிகளோ எமக்கு கைகொடுத்து நீதியை நிலைநாட்ட முன் வரவில்லையானால் எமது உரிமைக்காக நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றாவது எமது உரிமைகளைப் பெற முயற்சிப்போம் என்பதை அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ முஸ்லிம் அரசியல்வாதிகள், கௌரவ முஸ்லிம் பிரமுகர்கள் அனைவருக்கும் கௌரவமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நான் ஒரு ஸூபிஸ வாதி, எனது பாணி சஹ்றானின் பாணி அல்ல. நான் வஹ்ஹாபிஸக் கொள்கைக்கு நூறு வீதம் எதிரானவன். இலங்கை நாட்டில் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்து பெரிய நூல் ஒன்று எழுதியவன் நான் மட்டுமே! ஆகையால் நான் எனது உரிமைகளைப் பெறுவதற்காகவும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் நீதி வழியில்தான் போராடுவேனேயன்றி சஹ்றான் பாணியில் செல்லமாட்டேன் என்பதை திட்டமாகக் கூறிக் கொள்கிறேன்.
 
நான் இந்நாட்டின் பரம்பரை முஸ்லிம். எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இந்நாட்டின் பரம்பரை முஸ்லிம்களேயாவர். எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் மத உரிமை, பேச்சு உரிமை, எழுத்துரிமை, மற்றும் மனித உரிமைகள் எல்லாமே உண்டு. அரசாங்கத்திடம் எனது உரிமைகளைத்தான் நாம் கேட்கிறோமேயன்றி எந்த சலுகைகளையும் நாம் கேட்கவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இறுதயாக உங்களுக்குத் தெரியாத ஒரு பாடம் கற்றுத் தந்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில்,
إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சி நடப்பவர்கள் உலமாஉகள் எனப்படும் மார்க்க அறிஞர்கள்தான் என்று கூறியுள்ளான். (28-35)
 
இந்த வசனத்தை சட்டப்படி சில மாற்றங்களோடும் ஓதலாம். பிழையாகாது. தொழுகையில் கூட ஓதலாம். தொழுகை பழுதாகாது. அதாவது இவ்வசனத்தில் வந்துள்ள الله என்ற சொல்லுக்கு “பத்ஹ்” என்ற குறியீடு செய்தும் العلماءُ என்ற சொல்லுக்கு “ழம்மு” என்ற குறியீடு செய்தும் ஓதலாம். இவ்வாறு ஓதினால் அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சி நடப்பவர்கள் உலமாஉ – மார்க்க அறிஞர்கள்தான் என்று பொருள் வரும்.
 
இதற்கு மாறாக الله என்ற சொல்லுக்கு “ழம்மு” என்ற குறியீடும், العلماء என்ற சொல்லுக்கு “பத்ஹ்” என்ற குறியீடும் வைத்து ஓதினால் (உதாரணமாக إِنَّمَا يَخْشَى اللهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ என்பது போன்று) இதன் பொருள் “அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉ – மார்க்க அறிஞர்களையே பயப்படுகிறான்” என்று பொருள் வரும்.
 
முதலாம் பொருள் மார்க்க அறிஞர்களுக்கு பூ மாலை போன்றது. இரண்டாம் பொருள் அவர்களுக்கு பீ மாலை போன்றது. புரிகிறதல்லவா? அப்பமென்றால் ….?
 
أنّ عيسى عليه السلام لَقِيَ إبليسَ، وهو يَسُوق خمسةَ أحمُرٍ، عليها أحمالٌ، فسئله عن الأحمال، فقال تجارةٌ، أطلبُ لها مُشْتَرِين، قال وما هي التّجارةُ؟ قال أحدُها الجُوْرُ، قال ومَن يشْتَريْهِ؟ قال السَّلَاطِينُ، والثاني الْكِبْرُ، قال ومن يشتريه؟ قال الدَّهَاقِينُ، والثالث الحَسَدُ، قال ومن يشتريه؟ قال العُلماء، والرابعُ الخِيانةُ، قال ومن يشتريها؟ قال عُمَّالُ التُّجّارِ، والخامس الكَيْدُ ، قال ومَن يشتريه؟ قال النِّساءُ. (كتاب ابتلاء الأخيار(
 
இப்லீஸ் என்பவன் ஐந்து கழுதைகள் மீது ஐந்து வகையான சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்றதைக் கண்ட நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் இவை என்ன சாமான்கள் என்று கேட்டார்கள். அதற்கவன் இவை வியாபாரப் பொருட்கள். வாங்குவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வருகிறேன் என்றான்.
 
அவை என்ன சாமான்கள் என்று நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் கேட்டார்கள். அதற்கவன் ஒன்று “அநீதி” என்றான். அதை யார் வாங்குவார்? என்று அவர்கள் கேட்டார்கள். அரசர்கள் என்றான். இரண்டாவது பெருமை என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள். தலைவர்கள் – ஊர் பிரமுகர்கள் என்றான். மூன்றாவது பொறாமை என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் என்றான். நாலாவது துரோகம் என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். வியாபாரிகளின் வேலையாட்கள் என்றான். ஐந்தாவது சூட்சி என்றான். அதை யார் வாங்குவார்கள் என்று கேட்டார்கள். பெண்கள் என்றான்.
(ஆதாரம்: கிதாபு இப்திலாஇல் அக்யார், ஹயாதுல் ஹயவான்)
 
மௌலவீஅல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
11.07.2023
RELATED ARTICLES

Most Popular

Recent Comments