Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உன்னிலுள்ள “நான்” எனும் உணர்வு நீங்கினால் “நான்” யார் என்று உனக்குத் துலங்கும்.

உன்னிலுள்ள “நான்” எனும் உணர்வு நீங்கினால் “நான்” யார் என்று உனக்குத் துலங்கும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ أَنَا
லவ் zசால அன்க அன – லலாஹ லக மன் அன!
 
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.
 
“நான்” எனும் உணர்வும், “நான்” எனும் கர்வமும்.
 
எந்த ஒரு மனிதனாயினும் அவனிடம் “நான்” என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். “நான்” என்று சொல்வதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே! வேறு எவரும் “நான்” என்று சொல்லப் பொருத்தமற்றவரேயாவார்.

“நான்” என்ற உணர்வு உள்ளத்தை விட்டும் வெளியேற வேண்டும். இது அவசியம். ஒருவனிடம் “நான்” என்ற உணர்வு இருப்பது “ஷிர்க்” இணை வைத்தலாகும். ஏனெனில் எதார்த்தத்தில் இருப்பவன் அல்லாஹ் மட்டும் தான். அவன் மட்டுமே இருக்கும் நிலையில் நான் இருக்கிறேன் என்று ஒருவன் நினைப்பது எதார்த்தத்திற்கு முரணானதாகும். எதார்த்தத்திற்கு எது முரணானதோ அது பொய்தான்.
இந்த “நான்” குறித்து இறைஞானி அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
நான் என்றிருந்தேனே
நாளும் கழிந்தேனே
தானாயிருந்த
தன்மை அறியேனே!
 
இதுவரை எழுதப்பட்ட “நான்”, “நான்” என்ற உணர்வையே குறிக்கும். “நான்” என்ற கர்வத்தை குறிக்காது. “நான்” என்ற உணர்வு உன்னை விட்டும் நீங்கினால் நீ அவன்தான். இவ்வேளை உன் நாவு “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லாமல் لَا أَنَا إِلَّا هُوْ “நான் அவனேயன்றி இல்லை” என்று தான் சொல்லும். இவ்வாறு சொன்னதற்கும் உதாரணங்கள் உள்ளன.
 
நீ “அல்லாஹ்” என்று திக்ர் செய்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு சொல்தானேயன்றி ஒரு வசனம் அல்ல. வசனம் இல்லாத தனியான ஒரு சொல்லுக்கு மட்டும் பொருள் பூரணமாகாது. அது வசனமாக அமைந்தால் மட்டும் தான் அதன் பொருள் பூரணமாகும்.
 
உதாரணமாக “சாப்பாடு” என்ற சொல் போன்று. طَعَامٌ என்றால் சாப்பாடு. சாப்பாடு என்று மட்டும் சொன்னால் பொருள் பூரணமாகாது. பொருள் பூரணமாவதாயின் هَذَا طَعَامٌ இது சாப்பாடு என்று வசனமாக வரவேண்டும். அல்லது ذَاكَ طَعَامٌ அது சாப்பாடு என்று வரவேண்டும்.
 
இதேபோல் நீ, “அல்லாஹ்” என்று “திக்ர்” செய்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அல்லாஹ் என்பது ஒரு சொல் தானேயன்றி இது வசனமல்ல. இவ்வாறு சொல்வதால் மட்டும் பொருள் பூரணமாகாது. எனவே, இது வசனமாக அமைவதாயின் هُوَ اللهُ அவன் அல்லாஹ் என்று, அல்லது أَنْتَ اللهُ நீ அல்லாஹ் என்று, அல்லது أَنَا اللهُ நான் அல்லாஹ் என்று வசனம் அமைய வேண்டும். (படர்க்கை, முன்னிலை, தன்மை, நாலாவதொன்று இல்லை.
 
தமிழ் மொழியில் விளங்கும் பாணியில் சொல்வதாயின் எழுவாயும், பயனிலையும் வந்தால் மட்டும்தான் பொருள் பூரணமாகும். எழுவாய் மட்டும் வந்தாலும் பொருள் பூரணமாகாது. பயனிலை மட்டும் வந்தாலும் பொருள் பூரணமாகாது. எழுவாயும், பயனிலையும் சேர்ந்து வசனமாக வந்தால் மட்டும் தான் பொருள் பூரணமாகும். சில இடங்களில் தோன்றா எழுவாயிலும் வசனம் வரும். இதற்கு நிபந்தனை உண்டு.
 
எனவே, அல்லாஹ் என்று மட்டும் “திக்ர்” செய்யும்போது هُوْ என்ற சொல்லை தோன்றா எழுவாயாகவும், அல்லாஹ் என்ற சொல்லை பயனிலையாகவும் சொன்னால் هُوَ الله என்று வசனம் வரும். இவ்வாறு சொன்னால் “அவன் அல்லாஹ்” என்று பொருள் வரும். இதே போல் أَنْتَ நீ என்ற சொல்லை தோன்றா எழுவாயாகவும், அல்லாஹ் என்ற சொல்லை பயனிலையாகவும் சொன்னால் أَنْتَ اللهُ என்று வசனம் வரும். இவ்வாறு சொன்னால் நீ அல்லாஹ் என்று பொருள் வரும். இதே போல் أَنَا “நான்” என்ற சொல்லை தோன்றா எழுவாயாகவும், அல்லாஹ் என்ற சொல்லை பயனிலையாகவும் வைத்தால் أَنَا اللهُ நான் அல்லாஹ் என்று பொருள் வரும்.
 
هو الله, أنت الله, أنا الله என்று வசனங்கள் அமைந்து வரும். இம்மூன்று வகையிலும் முன்னால் வந்த ஹூ, அன்த, அன என்பவற்றை தோன்றா எழுவாயாக வைத்து அல்லாஹ் என்று மட்டும் “திக்ர்” செய்ய வேண்டும். “அல்லாஹ் – அல்லாஹ்” என்று சொல்ல வேண்டும்.
தோன்றா எழுவாயாக வைக்கலாம் என்று நான் மேலே எழுதிய மூன்று பிரதிப் பெயர்களான ஹூ, அன்த, அன என்பவற்றில் எதை தோன்றா எழுவாயாக வைப்பது சிறந்தது என்று ஆய்வு செய்து பார்ப்போம். சிறந்ததைச் செய்வதே சிறப்பு.
 
பிரதிப் பெயர்கள் அரபு மொழி இலக்கணத்தில் ضمائر என்று அழைக்கப்படும். இவற்றில் தரம் கூறியது, குறைந்தது என்று இரு வகையுண்டு.
உதாரணமாக “ஹூ” என்ற “ழமீர்” பிரதிப் பெயர்தான். ஆயினுமிது தரம் குறைந்தது. படர்க்கைக்குரியது. தரத்தில் இதையடுத்தது “அன்த” என்ற பிரதிப் பெயராகும். இது முன்னிலைக்குரியது. தரத்தில் இதையடுத்தது “அன” என்ற பிரதிப் பெயராகும். இது தன்மைக்குரியதாகும்.
 
தரம் கூடியது, குறைந்தது என்பதை பின்வருமாறு கணிக்கப்படும். அதாவது தெளிவை காட்டுவது கொண்டு கணிக்கப்படும். தெளிவைக் காட்டுவதில் முதலிடம் தன்னிலையைக் குறிக்கும் பிரதிப் பெயருக்கேயாகும்.
உதாரணமாக هُوَ “அவன்” என்பது படர்க்கையை குறிக்கும் பிரதிப் பெயர். இது கேள்விக்கு இடம்பாடானதேயன்றி கேள்விக்கு இடமில்லாததல்ல. இதனால் இது தரம் குறைந்தது என்று சொல்லப்படும். هُوَ அவன் என்றால் யார்? என்ற கேள்விக்கு சாத்தியம் உள்ளதாக இது உள்ளது.
 
தரத்தில் இதையடுத்தது أَنْتَ நீ என்ற பொருளுக்குரிய முன்னிலையை குறிக்கும் பிரதிப் பெயராகும். இதுவும் கேள்விக்கு சாத்தியமானதேதான்ز எனினும் “ஹூ” என்பதை விட தரம் கூடியதாகும்.
தரத்தில் இதை அடுத்தது أَنَا “நான்” என்ற பொருளுக்குரிய தன்னிலையை குறிக்கும் பிரதிப் பெயராகும். இதுவே மூன்று வகை பிரதி பெயர்களில் வலுமிக்கதாகும்.
எனவே, ஒருவன் அல்லாஹ் என்று மட்டும் “திக்ர்” செய்யும்போது இச்சொல்லை பயனிலையாகவும், “அன” என்பதை எழுவாயாகவும் ஆக்கிப் பார்த்தால் أنا الله “நான் அல்லாஹ்” என்று பொருள் வரும்.
 
“அல்லாஹ்” என்று மட்டும் ஒரு சொல்லில் “திக்ர்” செய்பவன் நான் இப்போது எழுதியது போல் “திக்ர்” ஐ அமைத்துக் கொள்வதே சிறந்தது. இவ்வாறு செய்யும் போது தான் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் தருகின்ற ருசியை அனுபவிக்க முடியும்.
“திக்ர்” செய்பவர் ஒரு ஞான குருவிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றவராயின் அவர் தனது குரு தனக்குச் சொல்லிக் கொடுத்தவாறே “திக்ர்” செய்ய வேண்டும். நான் எழுதியுள்ள இந்தப் பாணியில் திக்ர் செய்தல் கூடாது. தனது குருவின் செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “திக்ர்” செய்பவர் என்னிடம் “பைஅத்” பெற்றவராய் அல்லது எவரிடமும் “பைஅத்” பெறாதவராயின் நான் மேலே எழுதிய காட்டிய முறைப்படி செய்து கொள்வது நல்லது.
 
இதுவரை நான் எழுதியதின் சுருக்கம் “நான்” என்ற உணர்வை நமது மனதில் இருந்து நீக்கி “நான் இல்லை” அவனே என்னாக உள்ளான் என்ற உணர்வை எந்நேரமும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இரண்டாவது “நான்”, நான் என்ற உணர்வல்ல. மாறாக “நான்” என்ற மமதை, கர்வம் போன்ற தீக்குணங்களை மனதில் இருந்து முற்றாக வெளியேற்றி மனதை சுத்தமாக வைத்திருத்தலாகும்.
 
“நான்” என்ற உணர்வு அறபு மொழியில் أَنِّيَّةْ “அன்னிய்யத்” என்றும், “நான்” என்ற கர்வம் أَنَانِيَّةْ என்றும் சொல்லப்படும்.
அறபு மொழி அறவே தெரியாத “பைஅத்” வழங்கும் ஷெய்கு – குருமார் இக்காலத்தை பொறுத்தவரை பரவலாக உள்ளார்கள். பொதுமக்கள் “பைஅத்” பெறுவதற்கு இவர்களை குருவாக தெரிவு செய்யாமல் இருப்பது சிறந்தது. அறபு மொழி தெரியாது போனாலும் அது பெரிய குறை அல்ல. குத்புமார் கூட அறபு மொழி அறவே தெரியாதவர்களாக இருந்ததற்கு வரலாறு உண்டு. ஆனால் “ஷரீஆ”வின் சட்டங்களும், “தரீகா”வின் இரகசியங்களும் தெரியாத ஒருவர் “பைஅத்” கொடுப்பதும் கூடாது, அவரிடம் “பைஅத்” எடுப்பதும் கூடாது. இவ்விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்தல் வேண்டும்.
 
“ஷரீஆ”வும், “தரீகா”வும் தெரியாதவர்களிடம் “பைஅத்” செய்வதை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனது உறவினர்களில் ஒருவர் இருந்தார். அவரை “பாவா” வேஷம் போட்ட ஒருவர், ஒரு ஞானமும் தெரியாத ஒருவர், மாயாஜாலம் காட்டி வசப்படுத்திக் கொண்டார். பாவாவும் தொழுவதில்லை, அவரும் தொழுவதில்லை. ஒருநாள் அவர் “பாவா”விடம் தொழுவது அவசியமா? அல்லது அவசியம் இல்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த பாவா ஆம் தொழத்தான் வேண்டும். தொழுவதற்கு தண்ணீரால் “வுழூ” செய்தல் கூடாது. உனது உடலில் இருந்து வருகின்ற வியர்வையினால்தான் “வுழூ” செய்ய வேண்டும் என்று சொன்னார். “வுழூ” செய்யும் அளவு வியர்வை எவ்வாறு எடுப்பது? என்று அவர் கேட்டபோது, எவ்வாறேனும் கஷ்டப்பட்டு எடுக்கத்தான் வேண்டும் என்று சொன்னார். எடுக்க முடியாது போனால் என்ன செய்வது? என்று அவர் கேட்டபோது, தொழத் தேவையில்லை என்று பாவா சொல்லி உள்ளார்.
 
இந்த பாவா “ஷரீஅத்” ஒரு மண்ணளவும் தெரியாதவராக இருந்து கொண்டுதான் பலருக்கு “பைஅத்” வழங்கி அவர்களின் காலத்தை நாசமாக்கி உள்ளார்.
தொழுகையின் மிகப் பிரதான நிபந்தனை சுத்தமான நீரால் மட்டுமே “வுழூ” செய்தல் வேண்டும். நீருக்கும் நிபந்தனை உண்டு. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். குடிப்பதற்கு ஆகுமான நீராயினும் அந்த நீரால் “வுழூ” செய்ய முடியாத நீரும் உண்டு. உதாரணமாக இளநீர், தெம்பிலி, தேங்காய் நீர்கள் போன்று. இவற்றை குடிப்பது ஆகும். ஆனால் இவற்றால் “வுழூ” செய்தால் “வுழூ” நிறைவேறாது. இவ்வாறு தான் வியர்வையும் ஆகும். இதனால் “வுழூ” செய்தாலும் “வுழூ” நிறைவேறாது. இந்தச் சட்டம் கூட தெரியாத ஒருவர் எவ்வாறு ஞானகுருவாய் இருந்து “பைஅத” வழங்க முடியும்?
ஞான வழி நடப்பதற்கு “பைஅத்” அவசியம்தான். அதற்கு ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான நான்கு துறைகளிலும் திறமையுள்ள ஒரு ஞான குருவிடம் “பைஅத” பெற வேண்டும். அவர் முதலில் “அன்னிய்யத்” என்றும், “அனானிய்யத்” என்றும் நான் மேலே குறிப்பிட்ட இரண்டு சிறைகளில் இருந்தும் விடுதலை பெற்றவராக இருக்க வேண்டும்.
 
“அனானிய்யத்” என்பது நான் என்ற மமதை, நான் என்ற அகங்காரம் போன்ற தீக்குணங்களை குறிக்கும். ஞானகுரு பெருமை, கோபம், ஆணவம், அகங்காரம், எரிச்சல், பொறாமை, வஞ்சகம், பதவி மோகம், உலோவித்தனம் போன்ற தீக்குணங்கள் யாவையும் பாம்பு தனது சட்டையை கழட்டுவது போல் கழட்டி முழுமை பெற்ற “இன்சான் காமில்” ஆக இருக்க வேண்டும்.
 
ஒருவன் “அன்னிய்யத்” என்றும், “அனானிய்யத்” என்றும் நான் மேலே குறிப்பிட்ட இரு உடைகளையும் முற்றாக கழட்டினால் மட்டும் தான் அவன் சொர்க்கம் செல்ல முடியும். அல்லாஹ்வை காணவும் முடியும். இவ்விரு சட்டைகளையும் கழட்டுவதுடன் தீக்குணங்கள் அனைத்தையும் கழட்டவே வேண்டும். தீக்குணங்கள் எவை? அவற்றை கழட்டுவதற்கான இலகு வழி என்ன? என்ற விபரம் “ஷரீஆ”வின் சட்ட நூல்களில் எதிலும் காண முடியாது. “தஸவ்வுப்” எனும் சூபிச நூல்களில் மட்டுமே காண முடியும். சுமார் 75 வருடங்களுக்கு முன் சூபிச ஞான நூல்கள் அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன. அக்காலங்களில் ஓதி – கல்வி கற்று மௌலவியாக வெளியாகி வருகின்ற ஒருவர் சூபிச ஞானம் தெரிந்தவராக இருந்தார். ஆனால் இன்று சூபிச ஞான நூல்களின் அட்டையை கூட காணாத சிலர் தமக்குத் தாமே “சூபீ” என்று “லேபல்” ஒட்டிக்கொண்டு தடுமாறுவதை பார்க்கும் போது சிரிப்பும் வருகிறது, அழுகையும் வருகிறது. இவர்கள் சூபிசம் தொடர்பாக வாய் திறக்காமல் இருப்பது சிறந்ததாகும்.
 
1980 ஆம் ஆண்டுக்குப் பின் மௌலவி பட்டம் பெற்ற அன்பிற்குரிய மௌலவிமார்களே! உங்களில் அனேகமானவர்கள் சூபிசம் “தஸவ்வுப்” தெரியாதவர்களாகவே இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எனது நினைப்பு சரியானதாய் இருந்தால் நீங்கள் “தஸவ்வுப்” சூபிச ஞானம் ஓரளவேணும் கற்றுக் கொள்வது உங்களின் இவ்வாழ்வுக்கும், மறுவாழ்வுக்கும் பயன் தரும் என்று நான் நம்புகிறேன். உங்களிடம் இருந்து எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காகவும், தீனுக்காகவும் நான் அறிந்ததை உங்களுக்கு கற்றுத் தர விரும்புகிறேன். உங்களில் 10 பேர்கள் கொண்ட ஒரு குழு சுமார் ஏழு நாட்கள் இராப்பகலாக என்னிடம் தங்கி இருப்பதற்கு வாருங்கள். ஒவ்வொரு நாளும் கட்டம் கட்டமாகவும், தலைப்பு தலைப்பாகவும், “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாகவும், சூபிஸ ஞானம் தொடர்பாகவும் நான் கற்றுத் தருகிறேன். மௌலவிமாரின் பொருளாதார நிலை எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் இருக்கும் 7 நாட்களும் உங்களுக்கான உணவுகள் மற்றும் தேநீர், தங்குமிட வசதிகள் எல்லாமே நான் செய்து தருகிறேன். போக்குவரத்து செலவுகள் வேண்டுமானாலும் தருகிறேன். உங்களில் விருப்பமானவர்கள் ஒரு குழுவாக இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கு முன் எனது செயலாளர் மௌலவி எம். ஜே. எம். ஜஹானீ றப்பானீ அவர்களின் பின்வரும் கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்
(0773 186 146)
 
இறுதியாக,
الشيخ العارف بالله السيّد محمد المغربي الشاذلي شيخ الجلال السيوطي رضي الله عنه،
அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உபதேசம் செய்தது போல் நானும் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.
إن أراد أحدكم أن يعرف هذه المسئلة – وحدة الوجود وعلم التصوّف ذوقا فليسلّم قياده لي، اُخرجْهُ عن وظائفه وثيابه وماله وأولاده، واُدخلْهُ الخلوة وأمنعْهُ النوم وأكلَ الشهوات، وأنا أضمنُ له وصولَه إلى علم هذه المسئلة ذوقا وكشفا،
மகான் முஹம்மத் அல்மக்ரிபி கூறிய விதிகளில் சிலதை நான் குறைப்பேன். இன்ஷா அல்லாஹ்!
 
لأنّي خُصِّصْتُ بعلمٍ لم يُخصَّ بمثلِه سواي من الرحمن ذي العرش والكرسي، قاله الشّيخ الأكبر محي الدين ابن عربي قدّس سرّه،
RELATED ARTICLES

Most Popular

Recent Comments