தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
“நீ அவனைக் காணவில்லை என்றால் அவன் உன்னை காண்கிறான்” என்ற பொருள் பொருத்தமானதல்ல. ஏனெனில் “ஷர்த்” என்பதற்கும், “ஜவாப்” என்பதற்கும் பொருளில் தொடர்பு இருத்தல் அவசியம். இவ்வசனத்தில் அவ்வாறு ஒரு தொடர்பும் காணப்படவில்லை. எனவே மேற்கண்ட வசனத்திற்கு அவ்வாறு பொருள் கூறாமல் பின்வருமாறு கூற வேண்டும்.
அதாவது فَإِنْ لَمْ تَكُنْ நீ இல்லை என்றால் تَرَهُ நீ அவனை காண்பாய் என்று பொருள் கூற வேண்டும். இவ்வாறு பொருள் கூறும்போது تَكُنْ என்ற சொல்லை “நாகிஸ்” ஆன “பிஅல்” ஆக கருதாமல் “தாம்”மான பிஅலாக கருத வேண்டும். تَرَاهُ என்பதை إِنْ لَمْ تَكُنْ என்ற “ஷர்த்”துக்கு “ஜவாப்” ஆக கொடுக்க வேண்டும். “ஜவாப்” ஆக கொடுத்தால் அது “ஜஸ்ம்” செய்யப்பட வேண்டும். “ஜஸ்ம்” செய்யப்பட்டால் تَرَاهُ என்ற சொல்லில் உள்ள “அலிப்” இருக்காது. அது மறைந்துவிடும் அப்போது வசனம் تَرَهُ என்று “அலிப்” இல்லாமல் வரும். “அலிப்” இல்லாமலும் இந்த ஹதீது “ரிவாயத்” பேசிவரப்பட்டுள்ளது. ஹதீதுக் கலையை ஆய்வு செய்தால் என்மீதுள்ள சந்தேகம் போய்விடும்.
இவ்வாறு அமைந்தால் மட்டுமே இவ்வசனம் எல்லா வகையிலும் பொருந்தும். இன்றேல் இதில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
திரு நபியின் அருள் மொழியில் வந்துள்ள, أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ அல்லாஹ்வை நீ பார்ப்பவன் போல் வணங்க வேண்டும் என்ற வசனத்திற்கு தாகம் தீரும் வகையில் எவரும் விளக்கம் சொன்னதாகவோ, சொல்வதாகவோ நான் அறியவில்லை.
இதில் வந்துள்ள كَأَنَّكَ “நீ அல்லாஹ்வை பார்ப்பவன் போல் வணங்க வேண்டும்” என்ற வசனத்தில் வந்துள்ள “காப்” போல் என்ற பொருளைத் தருவதால் இவ்விடத்தில் تَخْيِيْلْ ஏதோ ஒன்றை கற்பனை செய்வதற்கு இடம் இருப்பது போல் விளங்கப்படுகிறது. அவ்வாறு கற்பனை செய்வதற்கு “ஷரீஆ”வில் இடம் உண்டா? செய்வதாயினும் எதை? எவ்வாறு? கற்பனை செய்ய வேண்டும்? அதற்கு “ஷரீஆ”வில் அனுமதி உண்டா? என்பது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் நான் கூற விரும்பவில்லை. விளக்கம் தேவையானோர் சூபிஸக் கலையிலும், “தவ்ஹீத்” கலையிலும் அபார திறமையும், அனுபவமும் உள்ளவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. வாய்ப்பிருந்தால் அவர்கள் என்னிடம் அனுமதி பெற்று என்னையும் சந்திக்கலாம்.
நபீ பெருமானார் அவர்களிடம் வந்தவர் “ஜிப்ரீல்” என்ற “மலக்” என்று நபீ ﷺ அவர்கள் அவர் போனபின் கூறினார்கள். هَذَا جِبْرِيْلْ، أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ أُمُوْرَ دِيْنِكُمْ இவர்தான் ஜிப்ரீல். உங்களுக்கு உங்களின் “தீன்” மார்க்கத்தைச் சொல்லித் தர வந்தார் என்றும் கூறினார்கள்.
“தீன்” என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று நாம் பொருள் சொல்லிக் கொண்டாலும் இச்சொல் மேற்கண்ட நபீ மொழியில் கூறப்பட்ட படி “ஈமான், இஸ்லாம், இக்லாஸ்” இம் மூன்றையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அதன்படி ஒரு முஸ்லிம் ஈமானின் ஆறு விடயங்களையும், இஸ்லாமின் ஐந்து விடயங்களையும் அறிந்திருப்பது போன்று “இஹ்சான்” எனும் மூன்றாம் விஷயத்தையும் அறிந்து நம்ப வேண்டும்.
இஸ்லாம் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில் இன்று உலக நாடுகள் அனைத்திலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மூன்றாவது அம்சம் தொடர்பாக தம்மால் முடிந்த அளவேனும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையாகும். ஆனால் மூன்றாவது அம்சமான “இக்லாஸ்” என்பது தொடர்பாக சூபிஸம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உலமாஉகள் பிழை என்று சொல்வதும், இக்கொள்கை “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் என்று “பத்வா” கொடுப்பதும் வேதனைக்கு மேல் வேதனையாகும்.
“இக்லாஸ்” என்றால் என்னவென்று வந்தவர் கேட்டதற்கு நபீ ﷺ அவர்கள்
أن تعبد الله كأنك تراه
நீ அல்லாஹ்வை பார்ப்பவன் போல் அவனை வணங்க வேண்டும் என்ற அம்சமும், فإن لم تكن تراه فإنه يراك நீ இல்லையெனில் அவனைக் காண்பாய் என்ற அம்சமும் ஒரு முஸ்லிம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான அம்சங்களாகும். இவ் அம்சங்களை பேணாதவன் “தீன்” மார்க்கத்தின் ஒரு அம்சத்தை விட்டவன் ஆவான். தீன் என்ற சொல் மேற்கண்ட மூன்று அம்சங்களையும் உள்வாங்கியிருப்பதால் மூன்றில் ஏதாவதொன்று இல்லாமற் போனால் “தீன்” மார்க்கமே அவனுக்கு இல்லை என்றாகிவிடும்.
எனவே முஸ்லிம்கள் யாவரும் “ஈமான்” பற்றி விளங்கியிருப்பது போன்றும், “இஸ்லாம்” பற்றி விளங்கி இருப்பது போன்றும், “இஹ்சான்” பற்றியும் விளங்கி இருக்க வேண்டும். இம்மூன்றும் சேர்ந்த ஒன்றுதான் “தீன்” மார்க்கம் என்பதையும் புரிந்து இருக்க வேண்டும். இன்றேல் அவன் பூரணமாக “தீன்” மார்க்கத்தில் உள்ளவனாக மாட்டான்.
மூன்றாவது அம்சமான “இஹ்சான்”தான் சூபி மகான்களின் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் “பவுண்டேஷன்” ஆகும் – அத்திவாரமாகும். சூபிசமே நாம் செய்கின்ற அனைத்து அமல்கள் – வணக்க வழிபாடுகளுக்கும் உயிராகும்.
இதனால் தான் “ஷாதுலிய்யா தரிகா”வின் ஆன்மீக குருக்களில் ஒருவரான “ஹிகம்” நூல் ஆசிரியர் இப்னு அதாயில்லாஹ் அவர்கள்,
اَلْأَعْمَالُ صُوَرٌ قَائِمَةٌ، وَأَرْوَاحُهَا وُجُوْدُ سِرِّ الْإِخْلَاصِ فِيْهَا،
மனிதர்கள் செய்கின்ற அமல்கள் – வணக்க வழிபாடுகள் எல்லாம் உயிரற்ற வெறும் பொம்மைகள் போன்றவை ஆகும். அவற்றின் உயிர் அவ் வணக்க வழிபாட்டில் “இக்லாஸ்” என்ற இரகசியம் இருப்பதாகும் என்று கூறியுள்ளார்கள்.
“ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு நாள் இரவு ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் கவர்ச்சி மிகு அழகிய பெண் ஒருத்தியை கண்டார்கள். அவளின் அழகை கண்டு அல்லாஹ்வின் சக்தியை நினைத்து வியப்படைந்தார்கள். அவளை நெருங்கி பார்த்தார்கள். அவளோ உயிர் இல்லாத வெறும் பொம்மையாக இருந்தாள். அவளுக்கு பார்வை புலனும் இருக்கவில்லை, செவிப்புலனும் இருக்கவில்லை. உயிருள்ள மனிதனுக்கு இருக்க வேண்டிய எத்தன்மையும் இருக்கவில்லை. எந்த உணர்வும் இருக்கவில்லை.
வியப்படைந்தவர்களாக அல்லாஹ்விடம் பின்வருமாறு கேட்டார்கள். யா அல்லாஹ்! இத்தனை அழகுள்ளவளாக இப் பெண்ணைப் படைத்த நீ இவளுக்கு உயிர் கொடுக்காமல் விட்டதேனோ? என்று கேட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பின்வருமாறு விடை கூறினான். ஙஸ்ஸாலீயே! இது நீ படைத்த பெண். நான் படைத்த பெண் அல்ல என்று கூறினான். ஒரு நிமிடம் ஙஸ்ஸாலீ மகான் அவர்களுக்கு விடயம் தெளிவாகவில்லை. இறைவனிடம் இறைவா! புரியவில்லையே என்று கூறினார்கள். ஙஸ்ஸாலீயே! இது நீ செய்த “அமல்” வணக்கத்தின் “சூரத்” உருவமே ஆகும். நீ படைத்த உருவம் தான். உயிரற்ற வெறும் பொம்மையை படைத்து விட்டாய். நீ தொழும்போது “ஷரீஆ”வின் சட்ட விதிகளை பேணித் தொழுதாய். இதனால் வெளி உறுப்புக்களில் எக்குறையும் ஏற்படவில்லை. ஆயினும் நீ செய்த அமலுக்கு நீ “இக்லாஸ்” என்ற உயிர் கொடுக்கத் தவறி விட்டாய். இது நீ செய்த பிழையேயன்றி நான் செய்த பிழையல்ல என்று கூறினான். அப்போதுதான் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் தொழுகையின் – பொதுவாக வணக்கத்தின் உயிர் “இக்லாஸ்” என்று புரிந்து கொண்டார்கள்.
இத் தத்துவத்தையே “ஹிகம்” நூலாசிரியர் அதாஉல்லாஹ் அவர்கள் الأعمال صور قائمة، وأرواحها وجود سر الإخلاص فيها என்று மேற்கண்டவாறு சொன்னார்கள்.
“ஹிகம்” நூலாசிரியரின் தத்துவத்தின் மூலமும், இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கண்ட கனவின் மூலமும் மனிதர்கள் செய்கின்ற தொழுகை என்ற வணக்கமாயினும் அல்லது வேறெந்த வணக்கமாயினும் அதில் “இக்லாஸ்” என்ற அம்சம் இல்லையானால் அவர்கள் செய்கின்ற எந்த அமலாயினும் அது எதார்த்தத்தில் உயிரற்றதாகவே ஆகிவிடும். உயிர் இல்லாத பொம்மை செய்வதில் என்ன பயன்?
இன்று வாழும் முஸ்லிம்களிற் பலர் – இல்லை ஒரு சிலர் தவிர மற்றவர்கள் அனைவரும் செய்கின்ற அமல்கள் வணக்கங்கள் யாவும் குப்பை தொட்டிக்குப் போக வேண்டிய உயிரற்ற வெறும் பொம்மைகளேயாகும்.
உலமாஉகள் செய்கின்ற வணக்கங்களுமா குப்பை தொட்டிக்கு போகும்? என்று ஒருவர் என்னிடம் கேட்பாராயின் “அவாம்முன்னாஸ்” பொதுமக்கள் செய்கின்ற வணக்கம் “இக்லாஸ்” எனும் உயிருள்ளதாயினும் உலமாஉகளில் அநேகர் செய்கின்ற வணக்கம் “இக்லாஸ்” என்ற உயிரற்ற வெறும் பொம்மையாகவே இருக்கும் என்பதற்கு ஆதாரம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுப்பதே யாகும்.
فإن لم تكن تراه நீ இல்லாமற் போனால்தான் – நான் என்ற உணர்வு உன்னை விட்டும் அகன்றால் மட்டும் தான் நீ அல்லாஹ்வை காணலாம் என்ற “பனா” நிலையையே நபீ மொழி சுட்டிக்காட்டுகிறது.
சூபிஸத்தையும், எல்லாம் அவனே என்ற தத்துவத்தையும், “பனா” நிலைகளையும் மறுப்போர் எவ்வாறு உயிர் உள்ள வணக்கம் செய்வார்கள்? இது சாத்தியமா?
எனவே, நாம் செய்கின்ற எந்த வணக்கமாயினும் அதில் “இக்லாஸ்” என்ற உயிர் நாடி ஓடினால் மட்டும்தான் அவை வணக்கமாகும். இதற்கு என்ன வழியெனில் ஒவ்வொரு முஸ்லிமும் “இக்லாஸ்” என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வை பார்ப்பவன் போல் அவனை வணங்க வேண்டும். நாம் வணக்கத்தின் போது “நாம் இல்லை, அவன்தான் உள்ளான்” என்ற நிலைக்கு வர வேண்டும். இந்நிலைக்கு வருவதாயின் சூபிசம் கற்க வேண்டும். அத்துடன் குருடன் கைப்பிடித்து அல்லாஹ்வை அடைய வழி தேடாமல் கூரிய பார்வையுள்ளவன் கைப் பிடித்து அவனை அடைய வழி செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு: அல்லாஹ்வை பார்ப்பவன் போல் வணங்குவதற்கு வழி யாது என்பதை கண் திறந்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முற்றும்.