தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவ்விரண்டின் விபரங்களையும் உலமாஉகள், மார்க்கம் கற்கும் மாணவர்கள், மற்றும் சிந்தனையாளர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
இவ்விரண்டின் விபரங்களும் தெரியாதவர்கள் திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் சரியாக விளங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் இன்னோர் மார்க்க விடயங்களிலும், இறை தத்துவத்திலும், இறை கொள்கையிலும் தவறு செய்துவிடுவார்கள். தவறு செய்துவிட்டு தமது அறியாமை காரணமாக தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருப்பதால் எல்லா முயல்களுக்கும் மூன்று கால்கள்தான் என்று அடம் பிடிப்பார்கள். உடும்புப் பிடி பிடித்து நிற்பார்கள். இதனால் குறிப்பாக உலமாஉகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும், வாக்கு வாதங்களும் எற்பட்டு அவர்கள் இரு கூறுகளாகப் பிரிந்து பொது மக்களில் தமக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக் கொள்கிறார்கள். இதைக் கவனத்திற் கொண்டேதான் என்னால் முடிந்த அளவு மேற்கண்ட இரண்டு விடயங்களுக்கும் விளக்கம் எழுத முடிவு செய்தேன்.
“ஹகீகத் அக்லீ”
இவ்வசனத்திற்கு புத்தி தொடர்பான எதார்த்தம் என்று பொருள் வரும். இதற்கு இது பற்றிப் பேசும் அறிஞர்கள் பின்வருமாறு ஒரு வரைவிலக்கணம் கூறுகிறார்கள்.
نِسْبَةُ الْفِعْلِ إِلَى مَنْ هُوَ لَهُ حَقِيْقَةٌ عَقْلِيَّةٌ،
ஒரு செயலை எதார்த்தத்தில் அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லுதல் “ஹகீகத் அக்லீ” எனப்படும் என்று கூறுகிறார்கள். இதைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறேன்.
நோயைக் கொடுத்தல் என்ற செயலும், நோயை சுகப்படுத்தல் என்ற செயலும் அல்லாஹ் – இறைவனுக்கு மட்டும் உரியவையாகும். வேறு யாருக்கும் உரியவையல்ல. வேறு எதற்கு உரியவையுமல்ல.
உதாரணமாக أَمْرَضَنِيَ اللهُ அல்லாஹ் எனக்கு நோயைத் தந்தான் என்பது போன்றும், شَفَى اللهُ مَرَضِيْ அல்லாஹ் எனது நோயை சுகமாக்கினான் என்பது போன்றுமாகும்.
இவ் உதாரணங்களில் நோயைக் கொடுத்தல் என்ற செயலும். நோயை சுகமாக்கி வைத்தல் என்ற செயலும் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியவையாகும். மேற்கண்ட உதாரணங்களில் இவ்விரு செயல்களும் எதார்த்தத்தில் அவற்றுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கமே சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. இதனால் இவ்வாறு சொல்லப்படுவது “ஹகீகத் அக்லீ” என்று சொல்லப்படும்.
இதேபோல் இன்னும் ஓர் உதாரணம் எழுதுகிறேன். أَنْبَتَ اللهُ الْبَقْلَ அல்லாஹ் கீரையை முளைக்கச் செய்தான் என்பது போன்றும், أَمَاتَ اللهُ رِضْوِيْ அல்லாஹ் ரிஸ்வீ என்பவனை மரணிக்கச் செய்தான் என்பது போன்றுமாகும். இவ் உதாரணங்களில் கீரையை முளைக்கச் செய்தல் என்ற செயலும், ரிஸ்வீ என்பவனை மரணிக்கச் செய்தல் என்ற செயலும் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் உரிய செயல்களாகும். மேற்கண்ட உதாரணங்களில் கூறப்பட்ட இவ்விரு செயல்களும் எதார்த்தத்தில் அவ்விரண்டுக்கும் உரியவனான அல்லாஹ்வின் பக்கமே சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு எந்த ஒரு செயலாயினும் அதை அச் செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்படுவதற்கு “ஹகீகத் அக்லீ” என்று சொல்லப்படும்.
“மஜாஸ் அக்லீ”
نِسْبَةُ الْفِعْلِ إِلَى غَيْرِ مَنْ هُوَ لَهُ مَجَازٌ عَقْلِيٌّ،
ஒரு செயலை அச் செயலுக்கு உரியவன் பக்கம் சேர்க்காமல் அச் செயலுக்கு காரணமாயிருந்தவன் பக்கம், அல்லது காரணமாயிருந்த ஒன்றின் பக்கம் சேர்த்துச் சொல்வது “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும்.
இதைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறேன். மேலே “ஹகீகத் அக்லீ” என்பதற்குச் சொன்ன இரண்டு உதாரணங்களையும் மாற்றிச் சொன்னால் விடயம் விளங்கிவிடும்.
உதாரணமாக أَمْرَضَنِيْ مَانْغَا மாங்காய் எனக்கு நோயை ஏற்படுத்தியது என்பது போன்றும், شَفَى الدَّوَاءُ مَرَضِيْ எனது நோயை மருந்து சுகப்படுத்திவிட்டது என்பது போன்றுமாகும்.
இவ் உதாரணங்களில் ஒரு செயலை எதார்த்தத்தில் அதைச் செய்தவன் பக்கம் சேர்க்காமல் – அதாவது நோயை ஏற்படுத்திய செயல் எதார்த்தத்தில் அல்லாஹ்வின் செயலாயிருக்கும் நிலையில் முறைப்படி அதை அவன் பக்கம் சேர்க்காமல் அந்த நோய்க்கு காரணமாயிருந்த மாங்காவின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டும், நோய் சுகமாவதற்குக் காரணமாயிருந்த மருந்தின் பக்கம் சுகம் கொடுத்தல் என்ற செயலைச் சேர்த்துச் சொல்லப்பட்டும் உள்ளது.
இவ்விரு வகையிலும் சொல்லலாமா? அல்லது எது சரி? எது பிழை? என்பதை கண்டறிய வேண்டும்.
வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளோர் “ஹகீகத் அக்லீ” என்பதை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். ஸுன்னீகள் இரண்டையும் ஏற்றுக் கொள்வார்கள். இதை எழுதும் நானும், எனது கொள்கையைச் சரி கண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற எனது ஆதரவாளர்களும், முரீதீன் – சிஷ்யர்களும் ஸுன்னீகளேயாவோம்.
மேலே நான் கூறிய “ஹகீகத் அக்லீ – மஜாஸ் அக்லீ” என்பவை திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்றுள்ளன.
يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ
உங்கள் மீது சாட்டப்பட்ட “மலகுல் மவ்த்” மரணத்திற்குரிய “மலக்” உங்களின் உயிரைக் கைப்பற்றுவார். (திருக்குர்ஆன் 11-32)
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا
ஆன்மாக்கள் மரணிக்கும் போது அல்லாஹ் அவற்றின் உயிர்களைக் கைப்பற்றுகிறான். (42-39)
முதலாம் வசனத்தில் ஆன்மாக்களைக் கைப்பற்றுபவர் “மலகுல் மவ்த்” என்று அல்லாஹ் கூறியுள்ளான். இரண்டாவது வசனத்தில் ஆன்மாக்களை தான் கைப்பற்றுவதாக கூறியுள்ளான்.
திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று மற்றதற்கு மாற்றமாயிருக்காது. இதுவே உண்மை. ஆயினும் மேற்கண்ட இரு வசனங்களில் ஒன்று மற்றதற்கு மாற்றமாக இருப்பதைக் காண முடிகிறது. إِذَا تَنَاقَضَا تَسَاقَطَا – இரண்டு விடயங்கள் ஒன்றுக்கு மற்றது முரணாயிருந்தால் இரண்டையும் விட வேண்டும். இது ஒரு பொது விதியில் சொல்லப்படுகிறது. இவ்விதி இங்கு சரி வராது. ஏனெனில் மேற்கண்ட இரு வசனங்களும் திருக்குர்ஆன் வசனங்களாகும். திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றைக் கூட தூக்கியெறிய முடியாது. ஒரு “நுக்தா” புள்ளியைக் கூட தூக்கியெறியவும் முடியாது. இந்நிலையில் மேற்கண்ட பொது விதியை இவ்விடத்தில் பயன்படுத்த முடியாது. ஒன்றை எடுத்து மற்றதை விடவும் முடியாது.
ஆகையால் இவ்விரு வசனங்களில் ஒன்றுக்கு மற்றது முரன்பட்டாற் கூட நாம் எதையும் தூக்கியெறியாமல் இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஏற்றுக் கொள்வதாயின் “ஹகீகத் அக்லீ – மஜாஸ் அக்லீ” என்ற வகையிலேயே விளக்கம் எடுக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு வசனங்களில் முந்தினது “மஜாஸ் அக்லீ” அடிப்படையில் சொல்லப்பட்டதென்றும், இரண்டாவது வசனம் “ஹகீகத் அக்லீ” அடிப்படையில் சொல்லப்பட்டதென்றும் விளக்கம் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படுவதற்கு வழியே இல்லாமற் போய்விடும்.
எதார்த்தத்தில் அல்லாஹ் மரணிக்கச் செய்பவனாயிருந்தாலும் கூட அவனின் மரணிக்கச் செய்தல் என்ற செயல் அதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள “மலகுல் மவ்த்” என்பவரான இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் வெளியாவதால் அவர் மரணிக்கச் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் செய்தேன், நீ செய்தாய், அவன் செய்தான், அவள் செய்தாள் என்பன எதார்த்தமல்ல. அது உலக நடைமுறையாகும். உலக வாழ்வுக்கு தேவையானதாகும்.
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
அவர்களிடம் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவ் வசனங்கள் அவர்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்தும். (திருமறை 02-08)
ஈமானை அதிகப்படுத்தும் சக்தி அல்லாஹ்வுக்குரியதேயன்றி வசனங்களுக்குரியதல்ல. ஒருவனின் விசுவாசத்தை கூட்டுவதோ, குறைப்பதோ அல்லாஹ்வின் செயலேயன்றி வசனங்களின் செயல் அல்ல. எனினும் மேற்கண்ட வசனத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் விசுவாசத்தை அதிகப்படுத்துமென்று அல்லாஹ் சொல்லியுள்ளான். விசுவாசம் அதிகமாவதற்கு திரு வசனங்கள் வழியாக இருப்பதால் அதிகமாதல் என்ற செயலை திரு வசனங்களின் பக்கம் சேர்த்து அவை அதிகப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது “மஜாஸ் அக்லீ” அடிப்படையில் கூறப்பட்டதாகும்.
எச் செயல் யார் மூலம் அல்லது எதன் மூலம் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் – அதன் சொந்தக் காரன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை, எதுவுமில்லை.
என்னால் அவனின் செயல் வெளியானால் நான் செய்தேன் என்பதும், அவனால் அவனின் செயல் வெளியானால் அவன் செய்தான் என்பதும், அவளால் அவன் செயல் வெளியானால் அவள் செய்தாள் என்பதும், யானையால் அச் செயல் வெளியானால் யானை செய்தது என்பதும், எதிரியால் அச் செயல் வெளியானால் எதிரி செய்தான் என்பதும் இவ்வுலக நடைமுறைச் சிக்கலைத் தவிர்ப்பதற்கேயாகும்.
தொடரும்…