தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“அப்துல் கபூர்” என்ற சொல் “அத்துலவுறு” என்று மாறியது போல் وُضُوْءٌ – “வுழூஉன்” என்ற அறபுச் சொல் “ஒழூ” என்று மாறிவிட்டது.
وُضُوْءٌ
என்ற சொல் “வுழூ” செய்தல் என்பதைக் குறிக்கும். وَضُوْءٌ என்ற சொல் “வுழூ” செய்வதற்கான நீரைக் குறிக்கும்.
“வுழூ” என்ற சொல்லுக்கு சுருக்கமாக “வெளிச்சுத்தம்” என்று சொல்லப்படும். “ஷரீஆ”வில் இதற்கு வேறு பொருள் உண்டு.
“வுழூ” செய்தல் ஒரு வணக்கம். இவ்வணக்கம் இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே உள்ளது. வேறெந்தச் சமயத்திலும் இவ்வாறு ஒரு நடைமுறை இருப்பதாக நான் அறியவில்லை.
“ஷரீஆ”வில் “வுழூ” என்றால் என்ன என்று முதலில் அறிவோம். இதற்கு முன் எதற்காக “வுழூ” செய்தல் கடமை என்பதையும் அறிவோம்.
தொழுவதற்காக “வுழூ” செய்தல், திருக்குர்ஆன் பிரதியை தொடுவதற்காக “வுழூ” செய்தல், திரு மக்கா நகரிலுள்ள “கஃபா”வை ஏழு தரம் சுற்றுவதற்காக “வுழூ” செய்தல். இம் மூன்று காரியங்களுக்காகவும் “வுழூ” செய்தல் கடமை. “வுழூ” இன்றி இவற்றில் எதைச் செய்தாலும் தண்டனை உண்டு. செய்த வணக்கமும் நிறைவேறாது.
ஒருவன் முறைப்படி செய்த “வுழூ” எனும் சுத்தம் சில காரியங்களால் வீணாகிவிடும். முறிந்து விடும். முன்துவாரம், பின் துவாரம் வழியாக மலம், சலம், காற்று – குசு வெளியாவதன் மூலமும், இவையல்லாத வேறு எந்த ஒரு வஸ்து வெளியானாலும் சுத்தம் வீணாகிவிடும். “வுழூ” முறிந்து விடும். திருமணம் செய்வதற்கு மார்க்கம் அனுமதிக்காத தாய், சகோதரி, சகோதரியின் மகள் போன்ற பெண்கள் தவிர மற்ற எந்தப் பெண்ணின் உடலும், ஆணின் உடலும் திரை எதுவுமின்றி படுமாயின் அவ்விருவரின் “வுழூ” வீணாகிவிடும். முறிந்து விடும். முஸ்லிமான பெண்களின் உடலும், முஸ்லிம் அல்லாத பெண்களின் உடலும் திரை எதுவுமின்றிப் பட்டாலும் கூட “வுழூ” வீணாகாது. முஸ்லிமான ஆண்களின் உடலும், முஸ்லிமல்லாத எந்தவொரு வயது வந்த அல்லது பார்த்தால் இச்சையைத் தூண்டக் கூடிய அமைப்பிலுள்ள வயது வராத பெண்ணின் உடலும் திரை எதுவுமின்றிப் பட்டால் “வுழூ” முறிந்து விடும். ஆயினும் முஸ்லிமான ஆண்களினது உடலும், முஸ்லிம் அல்லாத ஆண்களின் உடலும் எவ்வாறு பட்டாலும் “வுழூ” வீணாகாது.
திருமணம் செய்வதற்கு மார்க்கம் அனுமதித்த ஆணின் உடலும், பெண்ணின் உடலும் திரையின்றிப் படுவதன் மூலம் இருவரின் “வுழூ”வும் முறிவதாயின் அவ்விருவரும் வயது வந்தவர்களாக அல்லது வயது வராதவர்களாயினும் பார்த்தால் இச்சையைத் தூண்டக் கூடிய அமைப்பிலுள்ளவர்களாயிருப்பது அவசியம்.
“வுழூ” செய்து கொண்டு உறங்குதல் கடமையில்லாது போனாலும் அது வரவேற்கத்தக்க விடயம். ஆயினும் இவ்வாறு உறங்கியவரின் “வுழூ” உறங்கி விழிப்பதால்தான் முறியுமேயன்றி உறங்குவதால் முறியாது. இந்த விபரம் தெரியாத சிலர் உறங்குவதாலேயே “வுழூ” முறிந்துவிடுமென்று சொல்வார்கள். இது பிழை.
மனைவியாயினும், வேறு எந்தவொரு அந்நிய பெண்ணாயினும் ஆணின் உடல் பெண்ணின் முடி, நகம், பல் போன்றவற்றில் திரையின்றிப் படுவதாலும் “வுழூ” முறிந்துவிடாது. ஓர் ஆண் தனது அல்லது இன்னொருவரின் ஆண் குறியை தனது இரு கைகளின் உட் புறத்தால் தொட்டால் “வுழூ” முறிந்துவிடும். வெளிப்புறத்தால் தொட்டாலோ, அல்லது உடல் உறுப்புக்களில் வேறு உறுப்புக்களால் தொட்டாலோ “வுழூ” முறியாது. கையின் உட் பகுதி என்று குறிப்பிட்டதால் விரல்களின் ஓரங்கள் ஆண் குறியில் படுவதால் “வுழூ” முறிந்து விடாது.
சத்தமான குசுவும், சத்தமில்லாத குசுவும் “வுழூ”வை முறிக்கும். எங்கேயோ ஒரு நாட்டுப் பகுதியில் உள்ள ஓர் ஆலிம் பள்ளிவாயல் சுவரில் சாய்ந்து கொண்டிருக்கும் போது அவர் குசு விட்ட சத்தம் பக்கத்திலிருந்த ஒருவருக்கு கேட்டதாம். ஆலிம் தொழுகைக்கான நேரம் வந்ததும் “வுழூ” செய்யாமல் தொழுதாராம். அவரின் குசுச் சத்தம் கேட்டவர் அவரிடம் சென்று நீங்கள் குசு விட்டதை நான் காதால் கேட்டேன். ஏன் “வுழூ” செய்யாமல் தொழுதீர்கள்? என்று அவரிடம் வினவினாராம். அதற்கவர் – அந்த ஆலிம் ஒருவனின் குசு நாற்பது பேருக்கு கேட்டால் மட்டும்தான் “வுழூ” முறியும் என்று விளக்கம் கூறினாராம். தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஆலிம் பொய்யான சட்டம் சொல்லி சமாளித்துள்ளார். இவரின் பரம்பரையில் ஓர் ஆலிமாவது இப்போது இல்லாமற் போவாரா?
1979ம் ஆண்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வேலையாக பதுளைக்குச் சென்றிருந்தேன். “அஸ்ர்” தொழுகைக்காக நானும், எனது நண்பர் மர்ஹூம் MC இப்றாஹீம் அவர்களும் பதுளை ஜும்ஆப் பள்ளிவாயலுக்குச் சென்றிருந்தோம். இன்னும் பலரும் வந்திருந்தார்கள். காத்தான்குடி மௌலவீ ஒருவரும் எதிர்பாராமல் வந்திருந்தார். அவர் வயதில் முதியவர் என்பதற்காக அவரே தொழுகை நடத்தினார். “அஸ்ர்” தொழுகையை ஐந்து “றக்அத்”தாக தொழுது முடித்தார். தொழுகை முடிந்த பின் அவரிடம் நடந்ததைச் சொன்ன போது, எனக்குப் பின்னால் தொழுதவர்களில் யாரோ ஒருவன் “பிஸ்மி” ஓதாமல் “பாதிஹா” சூறா ஓதியுள்ளான். இதனால்தான் என் தொழுகையில் தவறு ஏற்பட்டுள்ளதென்று “வேலைக் கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டு” என்பது போல் சாடடுச் சொன்னார். தொழுகை நடத்தியவரின் தவறுக்கும், பின்னால் தொழுதவர் “பிஸ்மி” சொல்லாததற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். இந்த ஆலிம் வேறு யாருமில்லை. பாழடைந்த கிணற்றில் ஓர் நபீ எறியப்பட்டார் அல்லவா? அந்த நபீயின் பெயர்தான் இவரின் பெயராகும்.
தவறைத் தவறென்று ஏற்றுக் கொள்வதே மனிதனின் பெருந் தன்மையும், பண்புமாகும். ஆனால் இன்று உலமாஉகள், முப்திகள் உள்ளிட்ட பலர் தூர நோக்கின்றியும், எதிர்கால சந்ததிகளின் நலன் பற்றிச் சிந்திக்காமலும், தம்மை விட அறிவுள்ளோர் எவருமில்லை என்ற பாணியில், கர்வ உணர்விலும் தாம் சொன்னதும், தாம் செய்ததுமே சரியென்று மனச் சாட்சிக்கு விரோதமாக அடம் பிடிப்பது அறியாமையின் உச்சக் கட்டமேயாகும். இதுவே “தஅஸ்ஸுப்” பிடிவாதம் எனப்படும். பிடிவாதம் என்பது மருந்தில்லா நோய் என்று ஒரு கவிஞர் கூறியுள்ளார்.
إِنَّ التَّعَصُّبَ دَاءٌ لَا دَوَاءَ لَهُ – إِلَّا بِتَرْكِكَ إِيَّاهُ بِرُمَّتِهِ
இன்னோர் கற்றிருந்தும் இவ்வாறு நடப்பதற்கான காரணம் இவர்கள் இன்னும் “தஸவ்வுப்” ஸூபிஸத்தின் வாடையைக் கூட நுகராதிருப்பதேயாகும். கடலில் இறங்காமல் கரையில் நின்று கொண்டு கடலில் மீன் இல்லையென்பது மாங்காய் மடையர்களின் புத்தியாகும்.
“வுழூ” எவ்வாறு செய்ய வேண்டும்?
“வுழூ” எவ்வாறு செய்ய வேண்டுமென்று இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். விரிவான விளக்கம் தேவையானோர் எம்முடன் அல்லது முறையாக சட்டக்கலை கற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் சுத்தமான நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கேத்தல், குடம் போன்றவற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் இப்போது எழுதப் போகும் விளக்கம் “வுழூ” நிறைவேறுவதற்கு அவசியம் தேவையான விடயங்களாகும். இவற்றில் ஒன்று தவறினாலும் “வுழூ” நிறைவேறமாட்டாது.
“வுழூ”வின் கடமைகள் ஆறு. ஈமானின் கடமைகளும் ஆறுதான்.
ஒன்று – “வுழூ”வின் கடமையை “பர்ழ்” ஐ நிறைவேற்றுகிறேன் என்று மனதில் நினைத்துக் கொள்ளுதல். இது “நிய்யத்” எனப்படும்.
இரண்டு – முகம் கழுவ வேண்டும்.
மூன்று – இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவ வேண்டும்.
நான்கு – கையால் நீரைத் தொட்டு தலையை தடவிக் கொள்தல் வேண்டும்.
ஐந்து – இரண்டு கால்களையும் கரண்டைக் கால் உட்பட கழுவுதல் வேண்டும்.
ஆறு – மேற்கண்ட ஒழுங்கின் படி செய்தல்.
இவ்வாறு செய்தால் “வுழூ” உண்டாகிவிடும்.
முகம் என்பது எந்த எல்லை என்பதை அறிந்தவர்களிடம் கேட்டு அந்தப் பகுதி முழுமையாக நனையும் வகையில் கழுவ வேண்டும். முக எல்லையில் ஊசி குத்துமளவு ஒரு பகுதி விடு பட்டாலும் “வுழூ” நிறைவேறாது. முழங்கையுட்பட இரு கைகளையும் கழுவ வேண்டும். ஒரு சில பகுதியேனும் நனையாமல் இருந்தால் “வுழூ” நிறைவேறாது. நீரால் கை விரல்களில் ஒன்றையேனும் நனைத்து அது கொண்டு தலையை தடவிக் கொள்தல் அவசியம். ஐந்தாவது கடமை இரு கால்களையும் கரண்டை உட்படக் கழுவ வேண்டும். ஆறாவது கடமை மேற்கண்ட ஒழுங்கு முறைப்படி ஒன்றன் பின் ஒன்றாகச் செய்தல் வேண்டும்.
குறைந்த பட்சம் இவ்வாறு செய்தால் “வுழூ” நிறைவேறிவிடும். “வுழூ” செய்யும் போது கடமையல்லாத “ஸுன்னத்” ஆன சில நடைமுறைகளும் உண்டு. “ஸுன்னத்” என்றால் அதைச் செய்தால் நன்மையுண்டு. செய்யாவிட்டால் குற்றமில்லை. “வுழூ” நிறைவேறுவதற்கு “ஸுன்னத்” ஆன காரியங்கள் செய்ய வேண்டுமென்பது கடமையல்ல. “வுழூ” செய்யும் முறை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேதான்.
“வுழூ” செய்யும் போது ஓத வேண்டிய ஓதல்கள் நிறைய உள்ளன. அவையாவும் “ஸுன்னத்”தான ஓதல்களேயாகும். இயலாதவர்கள் செய்யாமல் விடலாம். இதனால் “வுழூ”வுக்கு எந்தப் பாதிப்புமில்லை. “வுழூ” செய்யும் போது ஓத வேண்டிய அவசியமான ஓதல் என்று ஒன்று கூட இல்லை. ஆரம்பிக்கும் போது மனதால் நினைப்பது மட்டுமே கடமை. வாயால் மொழிவது கூட கடமையல்ல. “ஸுன்னத்”தான ஓதல்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்புள்ளவர்கள் கற்று ஓதிவருவது சிறந்ததே. ஓதத் தெரியாதவர்கள் “வுழூ” செய்யும் போது, “அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்பதை ஓதிக் கொள்ளலாம்.
சுருக்கமாக சில ஓதல்களை எழுதுகிறேன்.
முகம் கழுவும் போது
اَللهم بَيِّضْ وَجْهِيْ يَوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَتَسْوَدُّ وُجُوْهٌ،
யா அல்லாஹ்! மறுமை நாளிலே சிலரின் முகங்கள் கறுத்துவிடும், இன்னும் சிலரின் முகங்கள் வெள்ளையாகிவிடும். அந்நாளில் எனது முகத்தை வெள்ளையாக்கி விடுவாயாக என்றும்,
வலது கையை கழுவும் போது,
اَللهم أَعْطِنِيْ كِتَابِيْ بِيَمِيْنِيْ،
யா அல்லாஹ்! எனது பட்டோலையை எனது வலது கையில் தருவாயாக என்றும்,
இடது கை கழுவும் போது
اَللهم لَا تُعْطِنِيْ كِتَابِيْ بِشِمَالِيْ،
யா அல்லாஹ்! எனது பட்டோலையை எனது இடது கரத்தில் தந்து விடாதே என்றும்,
கால்களைக் கழுவும் போது
اَللهم ثَبِّثْ قَدَمِيْ عَلَى الصِّرَاطِ، يَوْمَ تَزِلُّ أَقْدَامُ الْكَافِرِيْنَ وَالْمُنَافِقِيْنْ،
“யா அல்லாஹ்! “நேரான பாலத்தின் மீது – அஸ்ஸிறாதுல் முஸ்தகீம் – எனது காலைத் தரிபடுத்தி வைப்பாயாக! நயவஞ்சகர்களினதும், காபிர்களினதும் கால்கள் சறுகும் நாளில்” என்று ஓதிக் கொள்வது சிறந்தது.
“வுழூ” செய்து முடிந்த பின் பின்வரும் “துஆ”வை ஓத வேண்டும். ஓதும் போது ஓதுபவன் தனது பார்வையை மட்டும் மேலே உயர்த்திய நிலையில் ஓதுவது சிறந்தது.
துஆ:
اَللهم اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ، وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ، وَاجْعَلْنِيْ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ، سُبْحَانَكَ اللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إله إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ، وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنْ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنْ،
சுருக்கமான பொருள்:
“யா அல்லாஹ்! என்னை “தவ்பா” பாவ மன்னிப்புக் கேட்டவர்களில் ஆக்கிவிடுவாயாக! என்னை சுத்தமானவர்களில் ஆக்கிவிடுவாயாக! என்னை உனது நல்லடியார்களில் ஆக்கி வைப்பாயாக! யா அல்லாஹ் நீ துய்யவன். உனது புகழ் கொண்டு உன்னைப் புகழ்கிறேன். உன்னைத்தவிர எதுவுமில்லை என்று சாட்சி கூறுகிறேன். மேலும் உன்னிடம் பாவ மன்னிப்பும் கேட்கிறேன்”
“வுழூ” செய்து முடிந்த பின் முகம், கைகளில் உள்ள நீரை துடைக்காமல் விடுவது சிறந்ததாகும். அது தானாக காய்ந்து போக விட வேண்டும். இது நபீ வழி.
“வுழூ”வின் தத்துவம்.
“வுழூ” என்ற இச்சுத்தம் நான் அறிந்தவரை இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே உண்டு. இது பெரிய வணக்கமாகும். “வுழூ” உடன் இருப்பவனை அல்லாஹ் நேசிக்கிறான். இவன் மறுமையில் ஒளி முகத்துடன் இருப்பான். “வுழூ” எனும் சுத்தம் தொழுகைக்காக மட்டுமல்ல. எந்நேரமும் “வுழூ” உடன் இருப்பது ஒரு வணக்கம்தான். இதற்கு நன்மையுண்டு. “வுழூ” முறிந்தவுடன் மீண்டும் “வுழூ” செய்து கொள்வது “ஸுன்னத்”தாகும். تَجْدِيْدُ الْوُضُوْءِ “வுழூ”வை புதுப்பித்தல் என்றும் ஒரு முறை உண்டு. அதாவது “வுழூ” முறியாமலிருக்கும் போது மீண்டும் “வுழூ” செய்தல். இதுவும் நன்மை தரும் நற் செயலே!
“ஸாலிஹீன்” நல்லடியார்களிற் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தமது “வுழூ” முறிந்தால் மறுகணமே மீண்டும் “வுழூ” செய்து கொள்வார்கள்.
“வுழூ” செய்யும் போது முகம் கழுவும் வேளை முகத்திலுள்ள உறுப்புக்களான கண்கள், வாய் – நாவு, மற்றும் மூக்குத் துவாரங்களால் செய்த பாவங்கள் அனைத்தும் அவனின் முகத்திலிருந்து உதிர்ந்து விடுகின்றன. இதேபோல் கைகளைக் கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் யாவும் உதிர்ந்து விடுகின்றன. இதேபோல் தலையை நீரால் தடவும் போது தலையால் – மூளையால் செய்த பாவங்கள் அனைத்தும் உதிர்ந்து விடுகின்றன. இதேபோல் கால்களைக் கழுவும் போது கால்களால் செய்த பாவங்கள் கழன்று போகின்றன. ஒரு நாளில் பல தரம் “வுழூ” செய்வதன் மூலம் மனிதன் பாவமற்ற பிராணியாகிவிடுகிறான்.
தொடரும்…