தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் என்போர் தம்மை இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கொள்கை வழி செல்வோர் என்று பிதற்றினாலும் அவர்களில் அதிகமானோர் இமாம் அவர்களின் கொள்கை அறியாத மூடர்களும், நடைமுறையில் அவர்களைப் பின்பற்றாதவர்களுமேயாவர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களும், அதன் முப்தீகளும் சேற்றில் நட்டிய சிறு குச்சிகள் போன்றவர்களாவர். இவர்கள் தமது வாய்ப் பேச்சிலும், எழுத்திலும் மட்டுமே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளேயன்றி கொள்கையில் இமாம் அஷ்அரீ அவர்களைப் பின்பற்றியவர்களல்ல என்பதைப் புத்தி ஜீவிகள் அறிவர். அறிந்திருக்கவும் வேண்டும்.
தம்மை “அஷ்அரிய்யா” கொள்கைவாதிகள் என்று பறையடிக்கும் உலமா சபையின் தலைவர் அவர்களும், “பத்வா” குழுவினரும், இன்னும் கிழக்கிலங்கையிலுள்ள தம்மை அவ்வாறே சொல்லிக் கொண்டிருக்கும் வயது வராத சில மௌலவீ பொடியன்மார்களும், இன்னும் مَعْشَرْ என்ற சொல்லின் பன்மைச் சொல்லை “மௌலா இஸ்லாம்” போல் சொல்லிலக்கணச் சட்டத்திற்கு முரணாக مَعَاشَرْ என்று மொழியும் ஓர் (அ – எ)லியும் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் நடைமுறை தெரியாதவர்களாகவே உள்ளனர்.
எனது இக்கூற்றுக்கு ஆதாரமென்னவென்று யாராவது என்னிடம் கேட்க விரும்பினால் அவருக்குப் பின்வருமாறு நான் பதில் சொல்வேன்.
இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்கள் தங்களின் வாழ்வில் ஒரு முஸ்லிமைக் கூட “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்லவுமில்லை, “பத்வா” வழங்கவுமில்லை. இதற்கான ஆதாரம் பின்னால் வருகிறது.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21)
அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “சிறாஜுல் உகூல்” எனும் நூலில் அஹ்மத் இப்னு சாகிர் அஸ்ஸர்கஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக பின்வருமாறு சொல்கிறார்கள். இவர் – அஹ்மத் இப்னு சாஹிர் என்பவர் கொள்கையின் இமாம் ஆன அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்களின் சிறப்புமிகு தோழர் ஆவார்கள். இவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
(பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டுக்கு அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்கள் வந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அவ்வேளை என்னிடம் எனது தோழர்களை இவ்விடத்திற்கு அழைத்து தாருங்கள் என்று கூற நான் அழைத்துக் கொடுத்தேன்.
அவர்கள் வந்தவர்கள் அனைவரையும் விழித்து நீங்கள் அனைவரும் நான் இப்போது சொல்லப் போகும் விடயம் தொடர்பாக சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள் என்று முதலில் கூறிவிட்டு முஸ்லிம்களில் பொது மக்கள் எவரையும் நான் “காபிர்” என்று சொல்லமாட்டேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுபவன் ஒருவன் என்றே சொல்கிறார்கள். “இஸ்லாம்” என்ற சொல் இவர்களையும் உள்வாங்கிக் கொள்ளும் என்று சொன்னார்கள்) (அல்யவாகீத் வல் ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 21)
மேற்கண்ட இந்தச் செய்தியைச் சொன்னவர்கள் கொள்கையின் இமாம் ஆகிய அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்களேயாவர்.
இவ்வாறு சொன்ன கொள்கையின் இமாம் அவர்களையே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், அதன் தலைவரும், அதன் “முப்தீ”களும், மற்றும் அலிகளும், எலிகளும் பின்பற்றுவதாக வாயடிக்கிறார்கள். இமாம் அவர்களோ முஸ்லிம்களில் ஒருவரைக் கூட காபிர் என்றோ, முர்தத் என்றோ சொன்னதில்லை என்று சொல்லியுள்ளார்கள்.
இமாம் அவர்கள் அவ்வாறு சொல்லாதிருக்கும் நிலையில் அவர்களின் கொள்கை வழி செல்கின்ற முப்தீகளும், தலைவரும், மற்றும் எலிக்குஞ்சுகளும், அலிக் குஞ்சுகளும் சேர்ந்து பல இலட்சம் முஸ்லிம்களை காபிராக்கி “பத்வா” வழங்கியுள்ளார்களே இவர்கள்தானா கொள்கையில் இமாம் அவர்களைப் பின்பற்றும் “அஷ்அரிய்யா”க்கள்? அவர்களோ ஒரு முஸ்லிமைக் கூட “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ வாய் திறக்காமலிருக்கும் நிலையில் இவர்கள் பல இலட்சம் முஸ்லிம்களை காபிர்களாக்கியுள்ளார்களே இவர்கள்தானா இமாம் அவர்களைப் பின்பற்றிய “அஷ்அரிய்யா”க்கள்? இவர்களை நினைத்து சிரிப்பதா? சீறுவதா? இவர்கள் இடத்திற்கேற்றமாதிரி நிறம் மாறும் பச்சோந்திகளேயாவர்.
நாங்கள் “அஷ்அரிய்யா” கொள்கைவாதிகள் என்று வீரம் பேசும் வேங்கைகாள்! உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேணும் போல் தோணுகிறது. கேள்விக்கு மட்டும் சுருக்கமாக ஆனால் விளக்கமாக பதில் தாருங்கள். உங்களின் வழமை போல் அதையும், இதையும் உளறி மழுப்பி விடுவதன் மூலம் எங்களின் நேரத்தைப் பாழாக்கி விடாமலும் பதில் தாருங்கள். உங்களின் வழக்கம் போல் செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருந்து விடாதீர்கள். நாங்கள் நேரத்தின் பெறுமதி புரிந்தவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி 01:
இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ – அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை – அல்லது அல்லாஹ்வின் “தாத்” مَوْجُوْدْ – படைப்புத் தானானதென்று சொல்லியுள்ளார்களா? அல்லது اَلْوُجُوْدُ غَيْرُ الْمَوْجُوْدِ – அல்லாஹ்வின் உள்ளமை படைப்புக்கு வேறானதென்று சொல்லியுள்ளார்களா? அப்படியானால் என்ன நூலில், என்ன வசனத்தில், எத்தனையாம் பக்கத்தில் என்ற விபரத்துடன் பதில் தாருங்கள். முடியுமென்றால் பதில் தாருங்கள். முடியாதென்றால் அதையும் சொல்லிவிடுங்கள்.
கேள்வி 02:
سَيِّدُ الطَّائِفَةِ الصُّوْفِيَّةْ
– ஸூபீகள் கூட்டத்தின் தலைவர் என்று சொல்லப்படுகின்ற அஷ்ஷெய் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் உள்ளிட்ட, இதுவரை தோன்றிய ஸூபீகள் அனைவரும் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ அல்லாஹ் படைப்புத் தானானவன் என்றுதான் சொல்லியுள்ளார்களேயன்றி اَلْوُجُوْدَ غَيْرُ الْمَوْجُوْدِ படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்று அவர்கள் சொன்னதே கிடையாது. இது மட்டுமல்ல. வேறென்று சொல்வதும், நம்புவதும் “ஷிர்க்” இணை வைத்தல் என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு இது தொடர்பான விபரம் தேவையானால் கேளுங்கள். முழு விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றே தருகிறேன்.
மேற்கண்டவாறு ஸூபீகள் மட்டும் சொல்லவில்லை. உலகில் தோன்றிய நபீமார், குறிப்பாக நபீகட்கரசர் ஸெய்யிதுனா முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், இஸ்லாமிய வரலாற்றில் உதித்த தரீகாக்களின் ஷெய்குமார்களும், மற்றும் உலகில் தோன்றிய வலீமாரும் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ அல்லாஹ்வின் உள்ளமை படைப்பு தானானதென்றே சொல்லியுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் மாறாக இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்கள் சொல்லியுள்ளார்களா?
இதைவிடவும் விபரமாகச் சொல்வதாயின் உலக முஸ்லிம்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அப்துல் கரீம் அல் ஜீலீ, அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ, ஷெய்குல் அறப் ஸெய்யித் அஹ்மத் அல் பதவீ, அஷ்ஷெய்கு அபூ மத்யன் அல் மக்ரிபீ, அல்குத்பு இப்றாஹீம் அத்தஸூகீ, அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ், அப்துல் ஙனீ அந்நாபலஸீ, இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ, அஷ்ஷெய்கு இப்னு ஸப்ஈன், மற்றும் இவர்கள் போன்ற இன்னும் பலர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை மிகத் தெளிவாகப் பேசியுள்ளார்கள்.
இவர்களில் ஒவ்வொருவரும் பேசிய வஹ்ததுல் வுஜூத் தத்துவத்தை நான் பட்டியல் போட்டுக் காட்டினால் உலகிலுள்ள அறிஞர்கள் அனைவரும் தடுமாறி நிற்கவேண்டிய நிலை ஏற்படும். அல்லது இவர்களையும், இவர்கள் போல் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய இங்கு பெயர் குறிப்பிடாத பல்லாயிரமல்ல பல இலட்சம் வலீமார்களையும் காபிர்கள், முர்தததுகள், சிந்தீக்குகள் என்று “பத்வா” வழங்க வேண்டியேற்படும். “தரீகா”வின் உயிர்நாடியான “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுக்கின்ற “ஷரீஆ”வுடைய உலமாஉகள் “ஷரீஆ”வின் சட்டத்தை நிலை நாட்ட முன் வந்தார்களாயின் இன்னோரைக் காபிர்கள் என்று சொல்வது தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லாமற் போய்விடும்.
உதாரணமாக இன்று நமது இலங்கை நாட்டின் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்கள் அனைவரும் காபிர்கள் என்று சர்வதேச மட்ட்த்தில் ஒரு “பத்வா” வழங்கினால் நிலைமை என்னாகும்? உலமாஉகள் இவ்வாறு ஒரு “பத்வா” வழங்குவார்களா? வழங்குவார்கள் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்தால் உலகில் தோன்றிய “வஹ்ததுல் வுஜூத்” பேசிய, உலகப் பிரசித்தி பெற்ற, “கறாமாத்” எனும் அற்புதங்கள் உள்ள, பல நூல்கள் எழுதிய இறைஞானிகளான “ஆரிபீன்”களின் பட்டியல் ஒன்றை இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைக்கும், பார்வைக்கும் நான் தருகிறேன். அவர்கள் “பத்வா” கொடுக்கட்டும்.
இன்று இலங்கை நாட்டில் ஒருவர் தன்னை அல்லாஹ் என்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது மட்டுமல்ல. “ஷரீஆ”வுக்கு முற்றிலும் முரணான கருத்துக்கள் எழுதியுமுள்ளார். சொல்லியுமுள்ளார். ஆதாரங்கள் தேவையாயின் கேளுங்கள். “பைல்” தயாராக உள்ளது.
இவ்வாறு பேசுகின்ற, நூல்கள் எழுதுகின்ற ஒருவர் இலங்கையில் உள்ளார் என்பது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு தெரியாமலா உள்ளது. அல்லது அறிந்திருந்தும் மௌனிகளாக உள்ளார்களா? அல்லது அவர் எழுதிய, பேசிய கருத்துக்களை உலமாஉகள் சரி காண்கிறார்களா? எனக்கு மட்டுமல்ல. இந்நாட்டு மக்களுக்கும் தெளிவு வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழையென்று கூறும் உலமாஉகளே! اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ அல்லாஹ்வின் உள்ளமை படைப்புத் தானானதேயன்றி அதற்கு வேறானதில்லை என்ற ஸூபீ மகான்களின் கருத்துப் பிழை என்றும், “குப்ர்” என்றும் சொல்பவர்களே!
எம் பெருமானார் முதல் இன்று வரை தோன்றிய வலீமார், குத்புமார், மஷாயிகுமார்களில் “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களினதும், அல்லாஹ் படைப்பு தானானவனேயன்றி அதற்கு வேறானவனல்ல என்று சொன்னவர்களினதும் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று நான் தருகிறேன். விபரமாகத் தருகிறேன். தந்தால் இவர்கள் அனைவரும் “முர்தத்”துகள் என்று நீங்கள் “பத்வா” கொடுக்கத் தயாரா? சொல்லுங்கள் தருகிறேன்.
அவர்களில் ஒரு சிலரின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் இவர்களின் விபரங்கள் கேட்டால் அவற்றையும் பகிரங்கமாகத் தருகிறேன். உங்களின் “பத்வா”வை வெளிப்படுத்துங்கள்.
“பத்வா” என்பது கருத்துக்கேயன்றி ஆளுக்கல்ல என்ற தராசை கண் முன் வைத்து “பத்வா” கொடுங்கள்.
இறுதியாக ஒரு கேள்வி. இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்களுக்கு முன்னர் உலக முஸ்லிம்கள் கொள்கையில் யாரைப் பின்பற்றினார்கள்? ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இமாம் அஷ்அரீ பின்பற்றப்பட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியவர் யார்?
குறிப்பு: எமக்கு வழங்கப்பட்ட “பத்வா” வாபஸ் பெறப்பட வில்லையாயின் இவ்விவகாரம் ஐ.நா வரை செல்லும் என்பதில் ஐயமில்லை. எனது கட்டுரைகளை நுகர்வோர் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி “துஆ” செய்யுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்…