தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أيها الأخ المسلم! وأيّها المسافر إلى الله تعالى، أقدّم إلى فكرك حِكَمًا، أظهرها العارف بالله عطاءُ الله الإسكندريّ رحمه الله وقدّس أسراره، ونفع الله بعلومه وأسراره، فى كتابه ‘ الْحِكَمْ ‘، وهذا العارف خليفة أبى العبّاس المُرسيّ المشهورِ بخليفة قطب الوجود أبى الحسن علي الشّاذلي رضي الله عنهم أجمعين،
وأمّا مقصودي بكتابة هذه الحِكم فهو ترغيبُ بعض العلماء فى الخُمول، وتحذير بعضهم من حبّ الشّهرة، لوجود الخير والسلامة فى الخُمول، والشّرِّ والآفة فى الشّهرة،
முஸ்லிம் சகோதரா!
மிஸ்ர் நாட்டின் இஸ்கந்தரிய்யாவில் அடக்கம் பெற்று தினமும் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைஞான மேதை அஷ்ஷெய்கு அதாஉல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஹிகம்” எனும் நூலில் எழுதியுள்ள சில தத்துவங்களை இங்கு எழுதுகிறேன்.
இந்த மகான், குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் முதல் “கலீபா” அல்குத்பு அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கலீபா” ஆவார்கள்.
இவர்கள் இப்னு அதாயில்லாஹ் என்றும், அஹ்மத் என்றும், அபுல் பழ்ல் தாஜுத்தீன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஸூபீகளில் ஒருவர். ஷாதுலிய்யா தரீகாவைச் சேர்ந்தவர்கள். “இப்னு தைமிய்யஹ்” வின் கடும் எதிரியாயிருந்தவர்கள்.
تُوفِّيَ فى نِصفِ جُمادى الآخرة 709هـ بالمدرسة المنصوريّة،
ஹிஜ்ரீ 709, ஜுமாதல் ஆகிறா மாதம் அல்மத்றஸதுல் மன்ஸூரிய்யா எனுமிடத்தில் “வபாத்” ஆனார்கள்.
இவர்கள் அறபு மொழியில் பல நூற்கள் எழுதியுள்ளார்கள். அவற்றில் “அல்ஹிகம்” எனும் ஸூபிஸ நூல் பிரசித்தி பெற்றதாகும். அவை الحكم العطائيّة, تاج العروس, لطائف المنن என்பனவாகும். இவர்களின் “ஹிகம்” எனும் நூல் பற்றிக் கூறிய அறிஞர்களிற் பலர் كَادَ الْحِكَمُ أَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம்” எனும் நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கி விட்டது என்று கூறியுள்ளார்கள். அறிஞர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள் என்பதை ஆய்வு செய்தால் அதிலுள்ள புதையல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
“ஹிகம்” எனும் ஸூபிஸ நூல் இன்று இலங்கை நாட்டிலுள்ள எந்த ஓரு அறபுக் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. சுமார் 75 வருடங்களுக்கு முன் கற்றுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. குறித்த காலத்தின் பின் இலங்கையில் ஓதிக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமில்லை.
நான் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா – காலி கோட்டை அறபுக் கல்லூரியில் 1958ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை கற்றுள்ளேன். என்னுடைய அக்காலத்திலும் “ஹிகம்” நூல் பாடத்திட்டத்தில் பதியப்பட்டிருந்தாலும் கூட அது கற்றுக் கொடுக்கப்படவில்லை. இதற்குப் பிரதான காரணம் குறிப்பிட்ட காலப் பகுதியில் அதைக் கற்றுக் கொடுக்க தகுதி பெற்ற மகான்கள் இருக்கவில்லை என்றே சொல்லலாம். ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்கள் இலைமறை காய்போல் இருந்ததால் அவர்களைப் பயன்படுத்த முடியாது போயிற்று எனலாம்.
சுமார் 75 வருடங்களாக இலங்கை நாட்டிலுள்ள அறபுக் கல்லூரிகளில் “தஸவ்வுப்” ஸூபிஸ நூல்கள் கற்றுக் கொடுக்கப்படாமற் போனதினால் தான் இக்கால கட்டத்தில் ஓதி வெளியான மௌலவீகள் ஸூபிஸ ஞானம் தெரியாதவர்களானார்கள். இன்று நானும், என்னுடனுள்ள மௌலவீமாரும் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இளம் மௌலவீமாருக்குத் தெரியாமற் போனதற்கான காரணம் ஸூபிஸ ஞானம் இக்காலப் பாடத்திட்டத்தில் இல்லாமற் போனதேயாகும். இன்று இளம் மௌலவீகள் நான் பேசும் ஞானத்தை மறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும் பிரதான காரணம் அந்த அறிவு ஞானம் கற்றுக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமற் போனதேயாகும்.
ஆயினும் நமது இலங்கை நாட்டு உலமா சபை மன முரண்டாகவும், தமது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவும், என்னை இஸ்லாமின் விரோதி என்று அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் காட்டி “பத்வா”வை வாபஸ் பெறாமல் தொடர்ந்தும் அதை அமுல் செய்வதற்காக இளம் மௌலவீமார்களை அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்! எவராலும், எதுவும் செய்ய முடியாது. لا فاعل إلا الله செயலுக்குரியவன் அல்லாஹ் மாத்திரமே! அவன் நீதியாளன். நீதியே செய்வான் என்று நான் நம்பியுள்ளேன். எவன் எது செய்தாலும் அதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள நான் ஆயித்தமாகவே உள்ளேன்.
உலமாஉகள் என்னை எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும், நான் பேசி வரும் ஞானத்தைப் பொய்யாக்க முயன்றாலும் நான் அஞ்சேன். ஆயினும் இலங்கை அரசு எனக்கும், எனது ஸூபிஸ சமூகத்திற்கும் முழு உரிமைகளையும் தராத பட்சத்தில் இந்த அறிவை நிலை நாட்டுவதற்காக எங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்தேனும் ஜெனீவா வரை நாங்கள் செல்வோம் என்பதையும், இதில் நாங்கள் வெல்வோம் என்பதையும் உலமா சபைக்கு சொல்லி வைக்கிறோம்.
ஸூபீ மகான் அதாஉல்லாஹ் அவர்களின் தத்துவத்தைப் பாருங்கள்.
إِنَّ الشُّهْرَةَ آفَةٌ، كُلٌّ يَتَمَنَّاهَا،
وَالْخُمُوْلَ نِعْمَةٌ كُلٌّ يَأْبَاهَا،
பொருள்:
“பிரசித்தி பெறுதல் – அறிமுகமாதல் “ஆபத்” ஆகும். ஆயினுமதை அனைவரும் விரும்புகிறார்கள். பிரசித்தி பெறாமல் மறைந்திருப்பது “நிஃமத்” அருளாகும். ஆயினுமதை அனைவரும் வெறுக்கிறார்கள்”
இத் தத்துவத்தின் உண்மைத் தன்மையை நாம் அனைவரும் இன்று காணலாம். பிரசித்தி பெறுவதை – மக்கள் மத்தியில் அறிமுகமாவதை விரும்புகின்ற மக்களே அதிகம் உள்ளனர். பெண்களுமா? என்று கேட்காதீர்கள். ஆம், அவர்களும்தான். ஆயினுமவர்களில் ஸூபிஸ வழி செல்பவர்கள் இதை விரும்பமாட்டார்கள்.
قال العارفون: آخِرُ مَا يَخْرُجُ مِنْ قَلْبِ الصِّدِّيْقِيْنَ الصِّيْتُ،
என்று இறைஞானிகள் கூறியுள்ளார்கள்.
பொருள்:
“ஸித்தீகீன்”களின் உள்ளங்களிலிருந்து இறுதியாக வெளியாகும் வஸ்து “ஸீத்” ஆகும்”
“ஸித்தீகீன்”கள் என்றால் யார்? “ஸீத்” என்றால் என்ன? என்பதைச் சற்று விளக்கி வைக்கிறேன். “ஸித்தீக்” என்ற சொல்லின் பன்மைச் சொல்தான் “ஸித்தீகீன் – ஸித்தீகூன்” என்ற சொற்களாகும். “ஸித்தீக்” என்ற சொல்லுக்கு அதிகம் உண்மை சொல்பவர் என்று பொருள். இஸ்லாமிய முதலாவது கலீபா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “அபூ பக்ர் ஸித்தீக்” என்று அழைக்கப்பட்டார்கள். ஏனெனில் நபீ பெருமானார் அவர்களுக்கு நபீ பட்டம் கிடைத்த போது அவர்களை ஆண்களில் முதலில் நம்பினவர்கள் முதல் கலீபா ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் அவர்கள்தான். இதனால்தான் “ஸித்தீக்” என்று அழைக்கப்பட்டார்கள் என்றும், நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மிஃறாஜ் – இஸ்ரா” பயணங்களை முடித்து விட்டு வந்த பின் முதலில் அவர்களை நம்பி உண்மைப் படுத்தியவர்களும் அவர்கள்தான். இதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.
கலீபா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் வந்தவர்களும் “ஸித்தீக்” என்று அழைக்கப்படுகிறார்கள்.
“ஸூறதுல் பாதிஹா”வில் வருகின்ற أَنْعَمْتَ عَلَيْهِمْ என்ற வசனம் சுட்டிக் காட்டுகின்றவர்கள் أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِيْنَ என்ற வசனத்தில் கூறப்பட்ட “ஸித்தீகீன்” என்பது கலீபா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையை குறிக்காது. “ஸித்தீகிய்யத்” என்று ஆன்மிகத்தில் ஒரு “மர்தபா” அந்தஸ்து உண்டு. விலாயத், குத்பிய்யத் எனும் அந்தஸ்துகள் போல் இதுவும் ஆன்மிக அந்தஸ்தையே குறிக்கும். இவ் அந்தஸ்தைப் பெற்றவர்கள் “ஸித்தீகூன் – ஸித்தீகீன்” என்று அழைக்கப்படுவார்கள். “ஸித்தீகீய்யத்” என்பது ஆன்மிகப் படித்தரங்களில் ஒரு படித்தரத்தின் பெயராகும்.
நான் மேலே எழுதிக் காட்டிய آخِرُ مَا يَخْرُجُ مِنْ قَلْبِ الصِّدِّيْقِ الصِّيْتُ என்ற வசனத்தில் வந்துள்ள “ஸித்தீகீன்” என்ற பன்மைச் சொல் “ஸித்தீகிய்யத்” எனும் “மர்தபா” – அந்தஸ்தைப் பெற்றவர்களையே குறிக்கும்.
இத்தகைய அந்தஸ்தைப் பெற்றவர்களின் உள்ளங்களிலிருந்து இறுதியாக வெளியாகும் அசுத்தமே “ஸீத்” என்று சொல்லப்படுகிறது.
“ஸீத்” என்ற சொல்லுக்கு حُبُّ الْجَاهْ – பதவி மோகம் என்று பொருள். அதாவது “ஸித்தீக்” என்ற பட்டம் பெற்றவரிடமும் பதவி மோகம் இருக்கும். அவர் “ஸித்தீக்” ஆக இருந்தாலும் கூட அவரிடமும் இந்த அசுத்தம் இருக்கவே செய்யும். எனினும் அது அவரின் உள்ளத்திலிருந்து இறுதியாகவே வெளியாகும்.
“ஸித்தீக்” என்று பட்டம் பெற்ற ஒருவரிடமே பதவி மோகம் இருக்குமாயின் ஆன்மிகப் படித்தரங்களை அடையாதவர்களிடம் பதவி மோகம் இல்லாமற் போகுமா?
இதன் மூலம் நாங்கள் விளங்க வேண்டிய ஒரு விடயம் என்னவெனில் பொறாமை, வஞ்சகம், எரிச்சல், ஆனவம் , அகங்காரம், கோபம் போன்ற தீக்குணங்களை விட மிகக் கொடிய தீக்குணம் பதவி மோகம் என்று விளங்கப்படுகின்றது.
சில பண முதலைகள் உள்ளன. அந்த முதலைகளிடமிருந்து ஓர் ஏழையின் நல் வாழ்வுக்காக ஒரு சதம் கூட எடுக்க முடியாது. அத்தகைய முதலைகள் பதவி மோகம் உள்ளவர்களாக இருந்தார்களாயின் அவர்களிடம் ஏழைகளுக்காகவோ, பள்ளிவாயலுக்காகவோ, மத்ரசாக்களுக்காகவோ உதவி கேட்டுப் போனால் ஐந்து ரூபாய் தருவதற்குக் கூட ஆயிரம் பொய் சொல்வார்கள்.
இத்தகைய செல்வந்தர்களிடம் ஓர் உதவி பெறுவதற்காக பத்திரிகை நிருபர்கள், படப் பிடிப்பாளர்களை அழைத்துச் சென்று, நாளை நடை பெறவுள்ள கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வதால் ஜனாதிபதி அவர்களுக்கு மாலை சூடுவதற்கு உங்களையே எமது நிர்வாகம் தெரிவு செய்துள்ளது என்று சொன்னால் போதும். செல்வந்தன் எவ்வளவு தேவை என்று தான் கேட்பான். ஐந்து இலட்சம் தந்தால் போதும் என்று சொன்னால் ஐந்து இலட்சம் ஒரு காசா நான் பத்து இலட்சம் தருகிறேன் என்று சொல்வார். “செக்” எழுதாமல் ரொக்கமாகவே கொடுப்பார். பதவி மோகம் கொண்ட கோடீஸ்வரர்களிடம் பணம் கறப்பதாயின் அதற்கான சரியான வழி பதவி மோகம் என்ற பரிசில் வழங்குவதாகும்.
ஜனாதிபதிக்கு மாலை போடுவதில் மட்டும் பதவி மோகமில்லை. பாங்கு சொல்வதிலும் சபையில் “துஆ” ஓதுவதிலும் கூட பதவி மோகம் தலைவிரித்தாடுவதைக் காணலாம். ஒரு கூட்டத்திற்கு தலைமை வகிப்பதிலும் கூட பதவி மோகம் தலைவிரித்தாடுவதைக் காணலாம்.
சாதாரணமான காலத்தில் பள்ளிவாயலில் “முஅத்தின்” பாங்கு சொல்வதற்கு நியமிக்கப்பட்டவர் வரவில்லையானால் அவ்விடத்தில் ஐம்பது பேர் நின்றாலும் பாங்கு சொல்வதற்கு ஒருவர் கூட முன்வரமாட்டார். ஆயினும் பள்ளிவாயலில் கந்தூரி காலம் வந்து, பெருங் கூட்டம் கூடி நிற்கும் வேளையில், பல கோடீஸ்வரர்களும், அமைச்சர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வின் போது பாங்கு சொல்வதற்கு எவரையும் தேடத் தேவையில்லை. பாங்கு சொல்வதற்கு பலர் போட்டி போடுவார்கள். தமது குரல் வளத்தையும், இராகத்தையும் காட்டி வருகை தந்தோரின் மனங்களைக் கவர்வதற்காக என்றும் சொல்லாத வாறு ராகம் பாடிச் சொல்வார்கள். இவ்வாறு செய்வது பதவி மோகம் மட்டுமல்ல. புகழ் மோகமுமாகும்.
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஒரு நாள் “அஸ்ர்” தொழுகையின் போது பாங்கு சொல்வதற்கென்று நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்த “முஅத்தின்” வரவில்லை. அங்கு தொழுகைக்காக வந்திருந்தவர்களில் ஒருவர் பாங்கு சொல்லுமாறு பணிக்கப்பட்டார். அவர் புகழ் விரும்பியாகவும், பதவி மோகம் உள்ளவராகவும் இருந்தார் போலும். பிறர் பாராட்டை எதிர்பார்த்து என்றுமில்லாதவாறு அழகாகச் சொன்னார்.
சில நிமிடங்களின் பின் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, இன்று பள்ளிவாயலில் “அஸ்ர்” தொழுகைக்கான பாங்கு சொல்லப்படாதது ஏன் என்று கேட்டார்கள். நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லை. இன்று அஸ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது என்று கூறினார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நாங்கள் “அர்ஷ்” இல் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் இப் பள்ளிவாயலில் சொல்லப்படுகின்ற ஐந்து நேர பாங்கு சத்தத்தையும் கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் இன்று அஸ்ர் தொழுகைக்காக சொல்லப்பட்ட பாங்கு “அர்ஷ்” என்ற இடத்திற்கு வரவில்லை என்றார்கள். நடந்தது என்ன?
தொடரும்…