தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا
நபீயே! நீங்கள் கூறுவீர்களாக! என் இரட்சகனின் வாக்கியங்களுக்கு – அதை எழுதுவதற்கு கடல் நீர் யாவும் மையாக இருந்தாலும் என் இரட்சகனின் வாக்கியங்கள் எழுதி முடிவதற்கு முன்னதாகவே கடல் நீர் முடிந்து விடும். அதுபோன்ற இன்னொரு கடலையும் நாம் உதவிக்கு கொண்டு வந்த போதிலும் சரியே!
திருக்குர்ஆன் 18 – 109
மேற்கண்ட திரு வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி இரு கடல்களின் நீரையும் மையாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுதப்பட்டாலும் கூட அவ் இரு மைக்கடல்களும் வற்றி மை முடிந்து விடுமேயன்றி அல்லாஹ்வின் திரு வசனங்களுக்குரிய தத்துவங்களையும், அகமியங்களையும் எவராலும் வரையறுக்க – மட்டுப்படுத்த முடியாதென்பது தெளிவாகிறது.
திருக்குர்ஆன் வசனங்களுக்கு இது கால வரை – சுமார் 1400 ஆண்டுகள் வரை எண்ணற்ற அறிவு மேதைகள், ஆய்வாளர்கள், இறைஞானிகள் விளக்கம் எழுதியிருந்தாலும் கூட இதுகால வரை எழுதப்பட்ட விரிவுரை நூல்கள் எமது பார்வையில் காணாது. போதாது.
திருக்குர்ஆனுக்கு இது கால வரை பல மொழிகளிலும் எழுதப்பட்ட “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூல்கள் ஓர் இலட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட இத்தொகை போதாதென்பதே எனது கருத்து. உதாரணத்திற்காகவே ஓர் இலட்சம் என்று நான் எழுதியுள்ளேன். இதுவரை அறிஞர்களால் எழுதப்பட்ட “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்க நூலின் சரியான கணக்கு எனக்கும் தெரியாது. இதேபோல் வேறெவருக்கும் தெரியாதென்றே சொல்ல வேண்டும்.
இன்று உலகில் வாழும் சுமார் 300 கோடி முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுதினால் பரந்து, விரிந்த இப்பூமியில் திருக்குர்ஆன் விளக்க நூல்களை மட்டும்தான் வைக்க முடியுமேயன்றி காடுகளோ, வீடுகளோ, கடைகளோ, கட்டிடங்களோ, பெரும் பெரும் ஹோட்டல்களோ, மாட மாளிகைகளோ இருப்பதற்கு இடமில்லாமற் போய்விடும். இப்பூமி திருக்குர்ஆன் விளக்க நூல்களைக் கொண்டு மட்டுமே நிரம்பிவிடும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இஸ்லாமிய ஆட்சியின் நாலாம் “கலீபா” – ஆட்சியாளரான ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றான بسم الله الرحمن الرحيم “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்ற வசனத்தில் வந்துள்ள முதல் எழுத்தான “பே” என்ற எழுத்தின் கீழ் உள்ள “டொட்” – “நுக்தா” – புள்ளிக்கு மட்டும் நான் விளக்கம் எழுதினால் 70 ஒட்டகங்கள் சுமக்குமளவு நான் “கிதாப்” நூல்கள் எழுதுவேன் என்று “ஞானப் பட்டணத்தின் வாயில்” அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஓர் ஒட்டகம் குறைந்தபட்சம் 500 கிலோ பாரத்தை சுமக்கும் என்று வைத்துக் கொண்டால் 70 ஒட்டகங்களும் 35000 – முப்பத்தைந்தாயிரம் கிலோவைச் சுமக்குமளவு நூல்கள் எழுத வேண்டும். இவ்வாறு எழுதுவது “பே” என்ற எழுத்தின் கீழுள்ள புள்ளிக்கே என்றிருந்தால் திருக்குர்ஆன் வசனங்கள் முழுவதுக்கும் விளக்கம் எழுதுவதாயின் எத்தனை ஒட்டகங்கள் சுமக்குமளவு எழுத வேண்டுமென்று நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இன்னுமொரு திரு வசனத்தில் திருக்குர்ஆனின் மகிமை, அகமியம் பற்றிக் கூறுகையில்,
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
பொருள்: மேலும் நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் நீர் யாவும் மையாகவும் இருந்து அது தீர்ந்ததற்குப் பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் மையாகச் சேர்ந்து கொள்ள அவற்றால் எழுதிக் கொண்டிருந்தாலும் அல்லாஹ்வின் வாக்குகள் எழுதித் தீராது. நிச்சயமாக அல்லாஹ் யாவையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுள்ளவன். (தருக்குர்ஆன் 31-109)
மேற்கண்ட இரண்டடாவது திரு வசனமும் திருக்குர்ஆனின் தத்துவத்தையும், மகிமையையும், அகமியத்தையுமே எடுத்துக் காட்டுகிறது.
நாம் சாதாரணமாக சிந்தனை பண்ணிப் பார்ப்போம். உலகில் உள்ள மரங்களையெல்லாம் எழுதுகோல்களாகவும், ஏழு கடல்களையும் மையாகவும் ஆக்கி எழுதினால் எழுதப்பட்ட திருக்குர்ஆன் விளக்க நூல்களை வைப்பதற்கு இடம் எங்கே இருக்கப் போகிறது. இந்தப் பரந்த பூமியே தாங்காதல்லவா?
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலம் முதல் இற்றை வரை பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்ட திருக்குர்ஆன் விளக்க நூல் – தப்ஸீர் எத்தனை எழுதப்பட்டிருக்கும் என்று நாம் கணக்கெடுத்தால் எனது கணிப்பின் படி ஆயிரம் “தப்ஸீர்” விரிவுரை நூலைத் தாண்டாதென்றே சொல்லலாம். ஏனெனில் எனது 80 வருட வாழ்வில் இலங்கையில் நான் ஆசிரியரிடம் கற்ற “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூல் ஒன்று மட்டுமே. அதுவே “தப்ஸீர் ஜலாலைன்” என்று சொல்லப்படுகிறது. இதில் நான்கு பாகம் உண்டு. நான் அறிந்த காலம் முதல் இன்று வரை இலங்கை நாட்டிலுள்ள அறபுக் கல்லூரிகளில் “தப்ஸீர் ஜலாலைன்” தவிர வேறு எந்த “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்க நூலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. நாம் கற்றுக் கொள்ளாது போனாலும் நாம் கண்ணால் கண்ட தப்ஸீர்கள் – திருக்குர்ஆன் விளக்க நூல்கள் மட்டும் 25க்கும் உட்பட்டதாகவே இருக்கும். நமது நாட்டிலுள்ள எந்த ஒரு மௌலவீயிடமாவது 100 தப்ஸீர்களின் பெயர்கள் சொல்லுங்கள் என்று சொன்னால் கூட அவரால் சொல்ல முடியாதென்றே நான் நினைக்கிறேன்.
ஒருவர் மௌலவீப் பட்டம் பெற்றதோடு தான் கற்ற கிதாபுகளுடனான தொடர்போ, கற்காத ஏனைய கிதாபுகளுடனான தொடர்போ அறவே இல்லாமற் போன ஒருவரிடம் நீங்கள் எத்தனை “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூல்கள் வாசித்துள்ளீர்கள் என்று கேட்டால் அவர் “தப்ஸீர் ஜலாலைன்” என்று மட்டுமே சொல்வார்.
நான் இதுவரை இலங்கை, மற்றும் இந்தியாவில் ஆசிரியர்களிடம் கற்ற “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூல் என்றால் இரண்டுதான். ஒன்று எல்லோரும் கற்ற “தப்ஸீர் ஜலாலைன்”. மற்றது இந்தியாவில் கற்ற “தப்ஸீர் பைழாவீ” தான். இவை தவிர கற்றுக் கொள்ளாமல் வாசித்த தப்ஸீர்கள் பல உள்ளன. அவை கூட சுமார் 10 தப்ஸீர்களே இருக்கும்.
“தப்ஸீருல் குர்ஆன்” என்றும், “தர்ஜமதுல் குர்ஆன்” என்றும் இரு வகை உண்டு. “தப்ஸீருல் குர்ஆன்” என்றால் திருக்குர்ஆன் வசனத்திற்கான பொருள் எழுதப்படுவதுடன், அதற்கு விளக்கமும் எழுதப்பட்டிருக்கும். அது “தப்ஸீர்” என்ற பெயரால் அழைக்கப்படும். விளக்கம் எழுதப்படாமல் திரு வசனங்களுக்குரிய பொருள் மட்டும் எழுதப்பட்டிருந்தால் அது “தர்ஜமதுல் குர்ஆன்” திருக்குர்ஆன் மொழியாக்கம் என்று சொல்லப்படும். சஊதியில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது “தர்ஜமதுல் குர்ஆன்” மட்டும்தான். அது “தப்ஸீர்” அல்ல.
நான் அறிந்த தப்ஸீர்களில் முதலிடத்தில் உள்ளது ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களால் எழுதப்பட்ட “தப்ஸீருல் கபீர்” எனும் 95 வால்யூம்கள் கொண்ட தப்ஸீர் ஆகும். இவற்றில் சில வால்யூம்கள் என்னிடமும் உள்ளன. இந் நூலையும், இப்னு அறபீ நாயகம் அவர்களின் “புதூஹாதுல் மக்கிய்யா”, “புஸூஸுல் ஹிகம்” எனும் நூலையும் எமது ஜாமிஆ மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் திறமையுள்ள ஒரு ஆலிம் – மகான் இந் நாட்டில் இருப்பாராயின் அவருக்கு மாதச் சம்பளம் ஓர் இலட்சம் ரூபாயும், மூன்று வேளை தரமான உணவும், தேனீரும், தங்குமிட வசதியும் செய்து கொடுத்து அவரை கண்ணியமாக வைத்திருப்பதற்கு நான் ஆயித்தமாயுள்ளேன். தகுதியுள்ளவர்கள் எனது செயலாளரின் கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கான நிபந்தனை மேற்கண்ட இப்னு அறபீ நாயகம் அவர்களின் மூன்று நூல்களிலும் நேர்முகப் பரீட்சையில் அவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இக்காலத்தில் இலங்கை நாட்டில் வாழ்கின்ற உலமாஉகள் – மார்க்க அறிஞர்களிற் பலர் அறபுக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திலுள்ள “தப்ஸீர் ஜலாலைன்” ஐ மட்டும் கற்றுவிட்டு, அல்லது வாசித்து விட்டு உலகிலுள்ள தப்ஸீர்கள் அனைத்தையும் வாசித்தவர்கள் போல் நடிப்பதும், விதண்டாவாதம் பண்ணுவதும் வேடிக்கையாக உள்ளது. இவர்கள் தமது நடிப்பைக் கைவிட்டு கல்வி கற்கும் மாணவர்களானால் மட்டும்தான் இவர்களுக்கு ஞானம் பிறக்கும்.
இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். கல்வியறிவில்லாத ஒரு பொது மகன் ஒரு ஆலிமிடம் வந்து ஆன்மிகத்துடன், இறைஞானத்துடன் தொடர்புள்ள ஒரு தத்துவத்தைக் கூறி இது சரியா? பிழையா? என்று கேட்டால் அவர் அவனிடம், இது எந்தக் கிதாபில், எத்தனையாம் பக்கத்தில் உள்ளது என்று கேட்பது அறிவின்மையாகும். அதோடு தனது அறியாமையை மறைத்துக் காட்டுவதுமாகும். ஆகையால் அவர், அவன் கூறிய தத்துவத்தை இமாம்களால் எழுதப்பட்ட நூல்களில் தேடியலைந்து காலத்தை வீணாக்காமல் அவன் சொன்ன தத்துவம் சரியா? பிழையா? என்று கண்டறிவதற்கு அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் கூறிய வழியைக் கையாள வேண்டும். அந்த வழி பின்வருமாறு.
فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ
“மார்க்க விடயத்தில் உங்களுக்கிடையில் பிணக்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான முடிவுக்கு திருக்குர்ஆனையும், நபீ மொழியையும் பாருங்கள்” (அத்தியாயம்: நிஸா, வசனம் 59)
கேள்வி கேட்கப்பட்ட ஆலிம், அவன் கூறிய தத்துவம் சரியா? பிழையா? என்பதை அறிவதாயின் “ஷரீஆ”வின் நூல்களில் ஆதாரம் தேடியலையாமல் ஸூபிஸம் பற்றிக் கூறும் நூல்களிலும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பற்றிக் கூறும் நூல்களிலுமே ஆதாரம் தேட வேண்டும். அந்த ஆலிமுக்கு இது சாத்தியமில்லாது போனால் இறைஞான தத்துவம் விளங்கிய, குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரிந்த ஒருவரிடம் சென்று இதற்கு விளக்கம் கேட்டறிய வேண்டும். فَاسْئًلُوْا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ “நீங்கள் அறியாதவற்றை அறிந்தவர்களிடம் கேளுங்கள்” என்ற வழி காட்டலின் படி செயல்பட வேண்டும். இதுவே இறை வழிகாட்டலின் படி செயல்படுவதாகும்.
இவ்விரு வழிகளில் ஒன்றுமே செய்யாமல் அவன் சொன்ன தத்துவம் “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் சொல்வது வடிகட்டிய அறியாமையும், மன முரண்டுமாகும்.
இவ்வாறெல்லாம் செய்யாமல் அந்த ஆலிம் ஸாஹிப் தான் கற்ற “நஹ்வு” மொழியிலக்கண நூல்களில் அதற்கு ஆதாரம் தேடுவதும், “ஸர்பு” சொல்லிலக்கண நூல்களில் ஆதாரம் தேடுவதும், “இல்முல் பலக்” வானவியல் தொடர்பான நூல்களில் ஆதாரம் தேடுவதும் அறியாமையாகும்.
வைத்தியத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அத்துறை தொடர்பான நூல்களிலும், வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு அத்துறை தொடர்பான நூல்களிலும், “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான கேள்விக்கு அத்துறை தொடர்பான நூல்களிலும், “ஸூபிஸம்” தொடர்பான கேள்விக்கு அத்துறை தொடர்பான நூல்களிலுமே ஆதாரம் தேட வேண்டும். கடல் மீன் பிடிப்பதாயின் கடலில்தான் வலை போட வேண்டும். குளத்தில் வலை வீசி கடல் மீன் பிடிக்க முடியாது.
எனவே, திருக்குர்ஆன் வசனங்களின் தத்துவங்களையும், அகமியங்களையும் எவராலும் மட்டிடவே முடியாதென்பதையும், வரையறுக்க முடியாதென்பதையும் உலமாஉகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விடயம் தமக்குத் தெரியாதென்றால், அவ்விடயத்தில் தனக்கு அறிவு ஞானம் இல்லையெனில் அவர் ஒதுங்கியிருந்து அவ்விடயம் தொடர்பான அறிவைத் தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஒருவர் கற்றது தனது கை மண்ணளவுதான். அவர் கற்காதது உலகளவு என்பதை அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.