மாதா பிதாவு மென்னை
மயக்கி மயக்கி உன்னை
காதலிக்க விட்டாரோ
கண்ணே றஹ்மானே!
மாதா பிதாவும் வருந்தி
வருத்தி வைத்த
போதனையைப் பார்க்கில்
பிழை காண் நிராமயமே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
குணங்குடி மஸ்தான் அப்பா அவர்கள் ஒரு வலிய்யுல்லாஹ்வும், துறவியும் ஆவார்கள். இவர்கள் ஒரு புலவர். இறைஞான, ஸூபிஸ வழி வாழ்ந்து “மெய்ன் ஸ்விட்ச்” எங்கே உள்ளது? அதை எவ்வாறு இயக்க வேண்டும்? என்ற விபரங்கள் அறிந்த மகான்.
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“எங்களில் “ஜிஹாத்” போர் செய்தவர்களுக்கு எங்களின் வழிகளை நாங்கள் காட்டிக் கொடுப்போம்” (29-69)
இத்திரு வசனம் பொதுவாக அல்லாஹ்வின் விடயத்தில் போர் செய்தவர்களுக்கு அல்லாஹ் தனது வழிகளைக் காட்டிக் கொடுப்பான் என்ற கருத்தை உணர்த்தினாலும் இவ் வசன அமைப்பில் சில நுட்பங்கள் மறைந்திருப்பது ஆய்வு செய்யப்பட வேண்டியவையாகும்.
“ஜாஹதூ பீனா” என்ற வசனம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். இதன் பொருள் எங்களில் – எங்களிலே போர் செய்தவர்கள் என்பதாகும்.
இத்திரு வசனத்தை وَالَّذِيْنَ جَاهَدُوْا لَنَا எங்களுக்காகப் போர் செய்தவர்கள் என்றும், وَالَّذِيْنَ جَاهَدُوْا لِدِيْنِنَا எங்களின் “தீன்” மார்க்கத்திற்காகப் போர் செய்தவர்கள் என்றும், وًالَّذٍيْنَ جَاهَدُوْا فِى أَمْرِنَا எங்களின் விடயத்தில் போர் செய்தவர்கள் என்றும் அல்லாஹ் சொல்லியிருக்கலாம். இவ்வாறெல்லாம் சொல்லாமல் جَاهَدُوْا فِيْنَا எங்களில் போர் செய்தவர்கள் என்று சொல்லியது இவ்விடயத்தை நமது சிந்தனைக்கு எடுக்க வேண்டும் என்பதற்கேயாகும்.
எங்களுக்காக போர் செய்தல் என்பதற்கும், எங்களின் மார்க்கத்திற்காக போர் செய்தல் என்பதற்கும், எங்களின் விடயத்தில போர் செய்தல் என்பதற்கும், நாலாவதாக கூறப்பட்ட “எங்களிலே போர் செய்தல்” என்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னால் கூறப்பட்ட விடயங்கள் மூன்றும் வேறு, அல்லாஹ்வில் போர் செய்தல் என்று நாலாவது கூறுப்பட்ட விடயம் வேறு. நான்கும் ஒன்றல்ல.
முன்னால் கூறப்பட்ட மூன்று அம்சங்களும் நன்மை தரக் கூடிய நல்லமல்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதேபோல் எவருக்கும் இருக்காது.
ஆயினும் குறித்த மூன்று அம்சங்களும் அவன் ஏவிய நல்லமல்களாயினும் அவை மூன்றும் அவனை அறிவதற்கான வழியல்ல. அவை நன்மையைப் பெற்றுத் தரும் நல்ல செயல்களேயாகும். ஆனால் جَاهَدُوْا فِيْنَا எங்களிலே போர் செய்தவர்கள் என்போர் அல்லாஹ்வை அறிந்து அவனை அடைவதற்காக “திக்ர், பிக்ர், முறாகபா, முஷாஹதா” போன்ற வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவோரும், ஒரு ஷெய்கு – ஞான குருவிடம் “பைஅத்” பெற்று அவரின் வழிகாட்டலின் படி செயல்படுவோருமேயாவர். இவர்கள்தான் அல்லாஹ்விலே போர் செய்பவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தமது ஷெய்கின் வழிகாட்டலின் படி தம்மிலுள்ள ஏழு “நப்ஸ்” – ஆன்மாக்களையும் படிப்படியாக எவ்வாறு கடந்து செல்ல வேண்டுமென்று தமது ஞான குருவிடம் கற்றுக் கொண்டிருப்பவர்களாவர். இவர்களுக்கே لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا எங்களின் வழிகளை நாங்கள் காட்டுவோம் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
இத்திரு வசனத்தின் மூலம் அல்லாஹ்வில் போர் செய்பவர்களுக்கு எங்களின் வழிகளைக் காட்டுவோம் என்று சொல்லியுள்ளானேயன்றி மற்றவர்களுக்கு அவர்கள் செய்கின்ற நற் செயல்களுக்கு நன்மைகள் வழங்குவானேயன்றி அவர்களுக்கு தன்னை அடையும் வழிகளைக் காட்டிக் கொடுக்கமாட்டான்.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ،
எவனொருவன் ஓர் அணுவளவு நன்மை செய்கிறானோ அதை அவன் கண்டு கொள்வான். அதாவது அதற்கான நன்மையை பெற்றுக் கொள்வான். எவனொருவன் ஓர் அணுவளவு தீமை செய்கிறானோ அதை அவன் கண்டு கொள்வான். அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்வான். (99-7,8)
ஒருவன் செய்கின்ற நற்காரியங்களுக்கான நன்மையை அல்லாஹ் வீணாக்கமாட்டான். إِنَّا لَا نُضِيْعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا நாங்கள் நல்லமல்கள் செய்தவனின் கூலியை வீணாக்கமாட்டோம். என்று கூறியுள்ளான். (18-30)
இத்திரு வசனத்தின் மூலம் ஒரு நுட்பம் விளங்கப்படுகிறது. அதென்னவெனில் அல்லாஹ் இத்திரு வசனத்தில் أَحْسَنَ عَمَلًا அமலை – நற் காரியத்தை அழகாக்கியவனின் கூலியை வீணாக்கமாட்டோம் என்றுதான் கூறியுள்ளானேயன்றி أَجْرَ مَنْ عَمِلَ عَمَلًا அமல் செய்தவனின் கூலியை வீணாக்கமாட்டோம் என்று சொல்லவில்லை. குறித்த வசனத்தில் “அஹ்ஸன” என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.
இச்சொல் நீண்ட “ஹதீது” – நபீ மொழியொன்றை நினைவு படுத்துகிறது. அந்த நபீ மொழியை முழுமையாக இங்கு எழுதாமல் இத்தலைப்புக்குத் தேவையான அம்சத்தை மட்டும் அந்த ஹதீதிலிருந்து எடுத்து விளக்குகிறேன்.
ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவருக்கும் தெரியாத ஒரு மனிதனின் மாறு வேடத்தில் வந்து சில விடயங்களைக் கேட்டு அவற்றுக்கான பதில்களையும் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர் கேட்ட கேள்விகளில் “ஈமான்”, “இஸ்லாம்”, “இஹ்ஸான்” إِحْسَانْ இம் மூன்றும் அடங்கியிருந்தன. முந்தின இரண்டு அம்சங்களுக்கும் விடை சொன்ன எம் பெருமானார் அவர்கள் மூன்றாவது அம்சமான إحسان “இஹ்ஸான்” பற்றிக் கேட்ட போது,
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அல்லாஹ்வைக் காண்பவன் போல் வணங்க வேண்டும். நீங்கள் அவனைக் காணாது போனாலும் அவன் உங்களைக் காண்கிறான்” என்று நபீ பெருமானார் பதில் கூறினார்கள்.
இந்தக் கேள்வியும், பதிலும் “இஹ்ஸான்” பற்றியதாகும். “இஹ்ஸான்” என்றால் “இக்லாஸ்” கலப்பற்ற நிலை என்று பொருள் வரும். “இக்லாஸ்” இச் சொல்லுக்கு أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ என்று வரைவிலக்கணம் சொன்னவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். அவர்கள் சொன்ன வரைவிலக்கணம் ஒரு போதும் பிழையாகாது. அது அல்லாஹ் சொன்னது போன்றதாகும்.
இவ் வரைவிலக்கணம் தொடர்பாக கடந்த பதிவொன்றில் விளக்கம் எழுதியிருந்தேன். இந்த விளக்கத்தை அறிந்தவர்களுக்கு இவ்விளக்கம் தேவையில்லை. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன். இதன் சுருக்கம் நீ இல்லையாயின் அல்லாஹ்வைக் காண்பாய் என்பதாகும். நீ எப்போது உன்னை இழக்கின்றாயோ அப்போதுதான் அவனைக் காண்பாய். நீ இருக்கும் வரை அவனைக் காணமாட்டாய். இதனால்தான் இறைஞான மேதை ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் நான் மறைந்து விடுவேன். அதாவது அவன் என்னை மறைத்து விடுவான் எனக் கூறினார்கள்.
இது எதைக் குறிக்கிறதென்றால் ஒவ்வொரு மனிதனிடமும் “நான்” என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இவ் உணர்வை மாற்றி “நானில்லை” என்ற உணர்வை எப்போது மனிதன் எடுக்கின்றானோ அன்றுதான் அவன் சரியான இடத்திற்கு வருகிறான். “நான் ஒருவன் உள்ளேன்” என்ற உணர்வு உண்மைக்குப் புறம்பானதாகும். பொய்யானதாகும். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பதே பொய். ஏனெனில் திருக்குர்ஆன் ஆதாரம் மூலமும், நபீ மொழிகளின் ஆதாரம் மூலமும் அல்லாஹ் தவிர வேறெந்த ஒரு வஸ்தும் இல்லையென்பதே இஸ்லாமிய அடிப்படைத் தத்துவமாகும். இதுவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா தருகின்ற தத்துவமுமாகும்.
ஓர் இறைஞானி பின்வருமாறு வேதனையுடன் பாடுகிறார்.
நான் என்றிருந்தேனே!
நாளும் கழிந்தேனே!
தானாயிருந்த தன்மை அறியேனே!
“நான் ஒருவன் இருக்கிறேன்” என்று எண்ணிக் கொண்டு எனது காலத்தை வீணாக்கிவிட்டேனே! அவனேதான் என்னாக இருக்கிறான் என்பதை நான் உணரவில்லை” என்று மனம் நொந்து, மனம் வெந்து பாடுகிறார் ஒரு ஞானி.
அல்லாஹ் சொல்லும் பாணியில் இறைநேசர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ أَنَا،
உன்னைவிட்டும் “நான்” நீங்கினால் நான் யாரென்று உனக்குத் துலங்கும்.
இது ஸூபீ மகான்கள் சொல்கின்ற உயர் தத்துவமாகும்.
“நான்” என்பதில் இரண்டு வகையுண்டு. ஒன்று – நான் எனும் உணர்வு. இது அறபியில் أَنِّيَّةْ – “அன்னிய்யத்” எனப்படும். மற்றது “நான்” எனும் கர்வம். இது அறபு மொழியில் أَنَانِيَّةْ – “அனானிய்யத்” என்று சொல்லப்படும். இச் சொற்களை மேற்கண்ட பொருளுக்கு ஸூபீ மகான்கள் பாவிப்பார்கள்.
“அன்னிய்யத்”, “அனானிய்யத்” இரண்டும் ஒருவனின் ஆன்மிகத்திற்கு தடை கற்களாகும். “ஹிஜாப்” திரைகளாகும்.
بَيْنَ الْعَبْدِ وَرَبِّهِ سَبْعُوْنَ حِجَابًا وَفِى رِوَايَةٍ سَبْعُوْنَ أَلْفَ حِجَابٍ،
அடியானுக்கும், அவனின் இறைவனுக்குமிடையில் 70 திரைகள் இருப்பதாகவும், 70,000 திரைகள் இருப்பதாகவும் ஹதீதுகள் கூறுகின்றன. பார்ப்பவனின் கண்களுக்கு பார்க்கப்படும் பொருள் தெரியாமல் எது மறைக்கிறதோ அது حِجَابْ – “ஹிஜாப்” திரை எனப்படும்.
அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் திரைகள் இருப்பது உண்மைதான். ஆயினும் அவை பார்ப்பவனின் கண்களை மறைக்கும் திரைகளேயன்றி பார்க்கப்படுபவனை மூடி மறைக்கும் திரைகள் அல்ல. ஏனெனில் இறைவனை எவராலும், எந்த ஒரு சக்தியாலும் மறைக்க முடியாதென்பதே தத்துவம். ஏனெனில் கடவுள்தான் திரைகளால் மறைக்கப்படுகிறான் என்று வைத்துக் கொண்டால் கடவுள் மறைக்கப்பட்டவனாகிவிடுவான். எந்த வஸ்தை எது மறைக்கின்றதோ அது மறைக்கப்பட்டதன் மீது சக்தி பெற்றதாகிவிடும். “ஹாஜிப்” மறைக்கின்ற வஸ்து مَحْجُوْبْ மறைக்கப்பட்டதைவிட மிகைத்ததாகிவிடும். கடவுள்தான் அனைத்தையும் மிகைத்தவனேயன்றி எந்த ஒரு படைப்பாலும் அவனை மிகைக்க முடியாது. ஆகையால் திரை போடப்பட்டவன் மனிதனே தவிர இறைவன் அல்ல.
அவனின் திரு நாமங்களில் ஒன்று اَلظَّاهِرْ – அள்ளாஹிர் என்பதாகும். இதன் பொருள் வெளியானவன் என்று வரும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது அவன் மறைவானவன் இல்லையா? என்ற கேள்வி பிறக்கும். ஆம், அவன் மறைவானவனும்தான். அவனுக்கு வெளியானவன் என்று ஒரு பெயர் இருப்பது போல் உள்ளானவன் என்றும் ஒரு பெயர் உண்டு. அது اَلْبَاطِنْ – “அல்பாதின்” உள்ளானவன் என்ற திரு நாமமாகும். இரு திரு நாமங்களும் அவனுக்குரியவையாக இருப்பதால் அவன் வெளியானவனாகவும், உள்ளானவனாகவும் இருக்கவே வேண்டும். இருக்கிறான். அவனின் எத்திருநாமமாயினும் அது எந்த ஒரு நேர இடைவெளியுமின்றி நடந்து கொண்டே இருக்கும். செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
எந்த ஓர் உயிர்ப்பிராணியின் சுவாசமும் அவனின் சுவாசமேயன்றி உயிரினங்களில் ஒன்றும் சுயமாக சுவாசிப்பதில்லை. படைப்புகளில் எது ஆடினாலும், அசைந்தாலும் அது அவனின் செயலேயன்றி இன்னொருவரின் செயல் என்று எவராலும் சொல்ல முடியாது.
முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் – பொதுவாக எல்லா மக்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை என்னவெனில் “எல்லாம் அவனே” தான் என்றால் எல்லாச் செயல்களும் அவன் செயலென்றே ஏற்றுக் கொள்ள வேண்டும். சுவாசிப்பதும் ஒரு செயல்தான். அந்தச் செயல் அல்லாஹ்வுக்கு சுயமானதாகும். ஆனால் படைப்புக்கு சுயமானதல்ல. ஆனால் அது படைப்புக்கு அல்லாஹ்வால் இரவலாக வழங்கப்பட்டது. சொந்தப் பொருளுக்கும், இரவல் பொருளுக்கும் வித்தியாசம் உண்டு.
தலைப்பில் எழுதிய இரு பாடல்களினதும் சுருக்கமான விளக்கம் என்னவெனில், என் பெற்றோர்கள் எனக்கு “துன்யா” இவ் உலகின் ஆசையை ஊட்டி ஊட்டி உன்னை – அல்லாஹ்வை காதலிக்க – நேசிக்க விடவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.
இப்பாடல் மூலம் தங்களின் பெற்றோரை மட்டுமன்றி உலகிலுள்ள பெற்றோரில் அதிகமானோர் தமது சிறு பிள்ளைகளை “துன்யா” வை காதல் பண்ணச் செய்கிறார்களேயன்றி அல்லாஹ்வின் காதல் பக்கம் வழி காட்டுகிறார்களில்லை. தமது பிள்ளைகளை உலகக் கல்வியின் பக்கம் ஆசையூட்டி அவர்களை டொக்டர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கணக்காய்வாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் ஆக்கிப் பார்ப்பதற்கு விரும்புகிறார்களேயன்றி மார்க்கக் கல்வி, ஆன்மிகக் கல்வி கற்ற மார்க்க மேதைகளாகவும், இறைஞானிகளாகவும் ஆக்கிப் பார்த்து மகிழ விரும்புகிறார்களில்லை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் மஸ்தான் அவர்கள்.
அடுத்த பாடலுக்கான விளக்கம் தொடரும்… இன்ஷா அல்லாஹ்!