தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
الحمد لله الذي أسعد في الدارين من جمع بين علوم الشريعة وعلوم الحقيقة، والصلاة والسلام على أوّل قابل للتّجلّي من الحقيقة الكلية، وعلى آله وأصحابه وأتباعه وأوليائه الفائزين برؤية الوحدة في الكثرة.
لا تطيعوا المجانين والبهائم ولا تخافوهم في أمر الدين.
أرأيتَ لو أنكر المجانين على رجل عاقل مخالفتَه لأمرهم وجنونهم ، أينبغي له أن يوافقهم على جنونهم؟ فيتجنَّن مثلَهم؟ ويتركَ عقله حتّى يألفوه؟ وهو يمكنُه الفرارُ بعقله،
أو أرأيت الإنسانَ الكائنَ بين الذئاب الضَّواري إذا لم يرضَوه أن يقيم بينهم، إلا أن يمشي على يديه ورجليه مُكِبًّا على وجهه، أو حتى يَعْوِيَ كَعَيِّهم ، أينبغي له أن يفعل ذلك لِيُقيمَ بينهم ويألفوه ، مع أنّه يمكن الفرارُ منهم، والإقامة على طريقة الإنسانيّة، لا واللهِ ، لا ينبغي للقادر على الخير أن ينسَلِخَ منه، لِيُرضِيَ أهل الشرِّ؟ فالله ورسوله أحقُّ أن يُرضُوه إن كانوا مؤمنين، فنعوذ بالله أن نُردَّ على أعقابنا بعد إذ هدانا الله ، (الجزء الأول من اليواقيت والجواهر للشيخ عبد الوهّاب الشعراني رحمه الله ص 18 )
மார்க்க விடயத்தில் பைத்தியகாரர்களுக்கும், காட்டு மிருகங்களுக்கும் வழிப்படாதீர்கள். அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூல் முதலாம் பாகம் 18ம் பக்கத்தில் கூறியுள்ள மேற்கண்ட விடயத்தின் சாராம்சத்தை இங்கு விளக்கமாக எழுதுகின்றேன்.
முதலில் இமாம் ஷஃறானீ பற்றிச் சில வரிகள்:
இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 898 ம் வருடம் றமழான் மாதம் 27ம் நாள் மிஸ்ர் – எகிப்து – நாட்டின் “கல்யூபீ” என்ற மாகாணத்தில் பிறந்தார்கள். ஐம்பதுக்கும் அதிகமான ஆசிரியர்களிடம் கல்வி ஞானம் பெற்றார்கள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்கள். இமாம் ஷாபிஈ அவர்களின் “மத்ஹப்” வழியிலும் , அஷ்அரிய்யஹ் கொள்கை வழியிலும் வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 973ம் வருடம் ஜுமாதல் ஊலா மாதம் “வபாத்” ஆனார்கள். அந்நேரம் அவர்களின் வயது 75.
அலிய்யுல் கவாஸ், ஸகரிய்யல் அன்ஸாரீ, ஜலாலுத்தீன் ஸுயூதீ , இப்னு அறபீ ஆகியோரின் ஆன்மீக வழியில் வாழ்ந்தார்கள். சுமார் 75 ஆண்டுகள் வாழ்ந்த இமாம் அவர்கள் 300க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார்கள்.
ஹிஜ்ரீ 911ம் ஆண்டு இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்தித்த சமயம் அவர்களிடம் ஸூபிஸ ஞானத்திற்காக கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
இமாம் ஷஃறானீ கூறுகிறார்கள்:
புத்தி தெளிவான ஒருவன் பைத்தியக் காரர்கள் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டால் அவர்கள் அவனின் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அவனைப் பதம் பார்த்து விடுவார்கள். அடிப்பார்கள், உதைப்பார்கள், ஓடினாலும் விரட்டி வருவார்கள். இவை போல் இன்னும் பல தொல்லைகள் கொடுப்பார்கள்.
இவ்வுண்மை அங்கோடை மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் அனுபவித் திருப்பார்கள். அல்லது அறிந்திருப்பார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதற்குக் காரணம் அவன் -புத்தி தெளிவானவன் – அவர்கள் போல் செயல் படாமல் அவர்களுக்கு மாறாகச் செயல்படுவதேயாகும்.சுமார் 45 வருடங்களுக்கு முன் இப்படியொரு சம்பவம் எனக்கும் நடந்துள்ளது.
பைத்திய காரக் கும்பல்களிடம் மாட்டிக் கொண்ட ஒருவன் அவர்களின் தொல்லையிலிருந்து தப்ப வேண்டுமாயின் அவர்கள் போல் அவனும் செயல்படவேண்டும். அதாவது அவனும் பைத்தியக் காரன் போல் நடிக்க வெண்டும். இவ்வாறு செய்தால் மட்டும்தான் அவர்களின் தொல்லையிலிருந்து தப்ப முடியும். அல்லது அவன் தனது புத்தியைப் பயன்படுத்தி அவர்களை விட்டும் வெளியேறிவிட வேண்டும்.
இவ்விரு வழிகளில் ஒன்றையேனும் கையாளாமல் அவர்களின் தொல்லையிலிருந்து தப்ப முடியாது.
இவ்விரு வழிகளில் எவ்வழி சிறந்ததென்பதே இங்குள்ள கேள்வியாகும். இக் கேள்விக்கான பதிலை பின்வரும் விளக்கம் தெளிவாக்கும்.
புத்தி தெளிவான ஒருவன், யானை, கரடி, புலி, சிங்கம் முதலான மனிதனைக் கீறிக்கிழித்துக் கொல்லும் மிருகங்கள் வாழும் காட்டில் மாட்டிக் கொண்டால் அக்காட்டில் தான் ஒரு மனிதனென்று மிருகங்களுக்குக் காட்டிக் கொள்ளாமல் வாழ்வதாயின் அவன் மிருகங்களின் வேடம் போட வேண்டும். அவை சத்தமிடுவது போல் சத்தமிட வேண்டும். அவை நடப்பது போல் நடக்க வெண்டும். அவை ஓடுவது போல் ஓட வேண்டும். அவை பாய்வது போல் பாய வேண்டும். அவை உறங்குவது போல் உறங்க வேண்டும். அவை சாப்பிடுவது போல் சாப்பிட வேண்டும். பொதுவாக அனைத்து அம்சங்களிலும் வன விலங்குகள் போல் அவன் நடந்து கொள்ள வெண்டும். இவ்வாறு அவன் செயல் பட்டால் மட்டும் அவற்றின் தீமையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும்.
அல்லது அவன் தனது “அக்ல்” புத்தியைப் பயன்படுத்தி எந்த வழியிலேனும் காட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.
இரு வழிகளில் எதையும் கையாளாமல் தன்னை விலங்குகளுக்கு மனிதனாகக் காட்டிக் கொண்டு அவற்றின் தீமையினின்றும் பாதுகாப்புப் பெற்றவனாக காட்டில் வாழ்வதென்பது முடியாத ஒன்றாகும். முடிந்தாலும் கூட அவ்வாறு வாழ்வது வடிகட்டிய முட்டாள் தனம் என்றே நான் கூறுவேன். ஏனெனில் அவன் தனது “அக்ல்” புத்தியின் பலத்தைக் கொண்டு அல்லது ஆன்மீக பலம் கொண்டு காட்டிலிருந்து வெளியேற முடியும்.
மேலே சொன்ன பயங்கர விலங்குகள் என்பன நான்கு கால்கள் உள்ள விலங்குகள் அல்ல. இறையியலை, மெய்ஞ்ஞானத்தை, சத்திய வழியை, தத்துவத்தை, உள்ளமை ஒன்றென்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுத்துக் கொண்டும், குறித்த தத்துவங்களை பேசுவோருக்கு அட்டூழியம் செய்து கொண்டும், அவர்களின் இல்லங்களை உடைத்தும், அவற்றைத் தீக்கிரையாக்கிக் கொண்டும், அத்தகையோருக்கு சதி வலை விரித்துக் கொண்டும் மனித உருவில் வாழ்கின்ற இரண்டு கால் விலங்குகளையே குறிக்கும்.
காட்டில் மாட்டிக் கொண்ட தெளிவான புத்தியுள்ளவன் என்பது இறையியலை, மெய்ஞ்ஞானத்தை , ஸூபிஸ தத்துவங்களைக் கூறுகின்றவனையே குறிக்கும். இதேபோல் பைத்தியக்காரர்களிடம் மாட்டிக் கொண்ட தெளிவாள புத்தியுள்ளவன் என்பதும் மேற்கண்ட ஞானங்களைக் கூறுகின்ற இறை ஞானியையே குறிக்கும். இதேபோன்று பைத்தியக் காரர்கள் என்பதும் இறையியலைக் கூறுகின்றவர்களைத் துன்புறுத்துவோரையே குறிக்கும்.
எனவே, தெளிவான புத்திக்காரன், இறையியல் அறிவு ஞானம் பேசுகின்றவன் அதை நிறுத்திவிட்டு அந்தப் பைத்தியக் காரர்களுடன் சேர்ந்து அவனும் ஒரு பைத்தியக்காரன் போல் நடிக்க வேண்டும். அல்லது மிருகங்களுடன் சேர்ந்து மிருகமாக நடிக்க வேண்டும். அல்லது அவன் தனது மதி நுட்பம் கொண்டு காட்டிலிருந்து அல்லது பைத்தியக் காரர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.
புத்தி தெளிவானவன் – இறை ஞானி – பைத்தியக் காரர்கள், மிருகங்கள் போல் நடித்து வாழ்வதை விட அவர்கள் அறியாமைக் காட்டில் வாழ்ந்து அழிந்து போகட்டும், அல்லது பைத்தியக்கார மருத்துவ மனையில் கிடந்து சாகட்டும் என்று அவர்களை விட்டு விட்டு அவன் வெளியேறுவதே அவனுக்குப் பொருத்தமானதும், சிறந்ததுமாகும்.
இதனால்தான் வெளிநாட்டு வலீமார், இறையியல் மேதைகள், ஆய்வாளர்கள் பலர் தமது நாட்டைத் துறந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து அந்த நாடுகளிலேயே மரணித்து அங்கேயே நல்லடக்கம் பெற்றார்கள்.
அவர்கள் வரிசையில் பலர் இலங்கை நாட்டுக்கும் வந்துள்ளார்கள். இன்னும் அநேகமானவர்கள் இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் வந்து வாழ்ந்து தாம் வாழ்ந்த ஊர்களிலேயே நல்லடக்கம் பெற்றுள்ளார்கள்.
அவர்களில் பின்வருவோர் குறிப்பிடற் குரியவர்களாவர்.
- கொழும்பு தெவடகஹ பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள ஈரான் நாட்டின் “குறாஸான்” பகுதியைச் சேர்ந்த அஷ்ஷெய்கு உத்மான் வலீ றஹிமஹுல்லாஹ்
- சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராமத்தில் துயிலும் உடன் பிறந்த சகோதரர்களான சிக்கந்தர், கலந்தர் றஹிமஹுமல்லாஹ். இவர்களும் “குறாஸானிலிருந்து” வந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது.
- கழுத்துறை ஜும்அஹ் பள்ளிவாயலை அடுத்துள்ள தோட்டத்தில் கண்ணுறங்கும் அஸ் ஸெய்யித் – அஷ்ஷெய்கு நூறுத்தீன் பக்தாதீ றஹிமஹுல்லாஹ். இவர்கள் இறாக் தலை நகர் பக்தாதைச் சேர்ந்தவர்கள்.
- இந்தியாவின் வட நாட்டைச் சேர்ந்த புத்தளம் பள்ளிவாயல் துறையில் கொலுவீற்றுள்ள அஷ்ஷெய்கு அலாஉத்தீன் சிஷ்தீ றஹிமஹுல்லாஹ். இவர்கள் இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் 11 இடங்களில் சமாதி கொண்ட பெரும் அற்புத வரலாற்றுக்குரிய வலீ ஆவார்கள். இலங்கையில் மட்டும் மூன்று இடங்களில் அடக்கம் பெற்றுள்ளார்கள்.
- காலி மாத்தறை வீதியில் அடக்கம் பெற்று ஆட்சி புரியும் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் வலீ றஹிமஹுல்லாஹ்
- எமன் நாட்டைச் சேர்ந்த அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா றஹிமஹுல்லாஹ். இவர்கள் காத்தான்குடி பிரதான வீதி மௌலானா கப்றடி என்ற இடத்தில் படுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த இடம் சில வருடங்களுக்கு முன் “கர்னீ”களால் உடைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
- ஓட்டமாவடி உச்சவடக்கல் என்ற இடத்தில் ஒரு வலீ அடக்கம் பெற்றுள்ளார்கள். சரியான பெயர் கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் “கர்நாத்தா” என்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களை முதன் முதலாக நான் தரிசித்த இரவு இவர்களைக் கனவில் கண்ட போது தனது நாடு கர்நாத்தா என்று என்னிடம் சொன்னார்கள்.
இவ்வாறு இலங்கை நாட்டின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த இறை நேசர்கள், ஞானமகான்கள், துறவிகள், “மஜ்தூப்”கள், மஸ்தான்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிற் பலர் தமது நாடுகளில் வாழ்வது பைத்தியக்காரர்களுடனும், பயங்கர மிருகங்களுடனும் வாழ்தல் போன்றதெனக் கருதி தமது மனைவி மக்கள், உற்றார் உறவினர், பெற்றோர், மற்றோர் அனைவரையும் விட்டுப் பிரிந்து வந்தவர்களாவர். இலங்கையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான அவ்லியாஉகள் அடக்கம் பெற்றுள்ளார்கள் என்று நான் நம்புகின்றேன்.
சிறிய தீவான இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆயிரத்திற்கும் அதிகமான அவ்லியாஉகள் அடக்கம் பெற்றிருப்பது இலங்கை மண்ணும், மக்களும் பெற்ற நற்பாக்கியமேயாகும்.
சுமார் நானூறு வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் வாழ்ந்த அவ்லியாஉகளில் தமது நாட்டை விட்டும் வெளியேறி வேறு நாடுகளில் வாழ விரும்பியவர்களிற் பலர் தமது வாழ்வுக்கும், மறைவுக்கும் இலங்கை நாட்டைத் தெரிவு செய்ததற்குப் பல காரணங்கள் உண்டு.
அவற்றில் மன நிம்மதி ஒன்றென்றால் அது மிகையாகாது. எனது 79 வருட வாழ்வில் நான் பெற்ற அறிவும், அனுபவமும் இலங்கை நாடு போல் நிம்மதியைத் தரும் நாடு உலக நாடுகளில் இல்லை என்பதாகும். பொருளாதாரச் செல்வம் இல்லாதவர்களுக்கும் மன நிம்மதி வழங்கும் நாடு இலங்கை நாடு ஒன்றே.
சுருக்கம் என்னவெனில் தெளிவான புத்தியுள்ள ஒருவன் பைத்தியக்காரர்களுடன் வாழ்வதும், வன விலங்குகளுடன் வாழ்வதும் நிம்மதியற்ற வாழ்வேயாகும். பைத்தியக் காரன், புத்திக்காரனின் தலையை எந்நேரம் உடைப்பான், வன விலங்கு அவனை எந்நேரம் கொல்லும் என்ற பயத்துடன் வாழ்வது எவ்வாறு நிம்மதியான வாழ்வாகும்?
தெளிவான புத்திக்காரன் – இறையியல் பேசுகின்றவன் – எதார்த்தவாதி, தத்துவ ஞானி தான் கூறும் ஞானத்தை அறிவு ரீதியாக நிறுவக் கூடிய ஆற்றலை அல்லாஹ் வழங்கியிருந்தால், அதேபோல் எதிரிகளின் அடக்குமுறைகளை முறியடிக்கக் கூடிய ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியிருந்தால் பைத்திய காரர்களுக்கும், விலங்குகளுக்கும் பயந்து அவனும் பைத்தியக் காரனாகவும், விலங்காகவும் நடிக்க வேண்டிய எந்த ஒரு தேவையும், அவசியமும் அவனுக்கில்லை. ஆகையால் பைத்தியக் காரனாகவோ, விலங்காகவோ நடித்து வாழ்வதை விட்டு புத்திக்காரன் எங்கிருந்தாலும், எவனுடனிருந்தாலும் அவன் புத்திக்காரனாகவே வாழ வேண்டும். நடித்து வாழ்வதை முற்றாக விட வேண்டும்.
ஓர் இறைஞானி தான் அறிந்த ஞானத்தை, ஒரு ஆலிம் – மார்க்க ஞானி – தானறிந்த மார்க்கத்தைச் சொல்ல வேண்டும். எவர் எதிர்த்தாலும், எவரால் என்ன “பத்வா” வழங்கப்பட்டாலும் சரியே. இன்றேல் அவன் அறிவை மறைத்த பாவியாகிவிடுவான்.
قال النبي صلّى الله عليه وسلّم من علِم علما فكتمه أَلْجَمَهُ الله بِلِجَامٍ من نار.
பின்னொரு காலத்தில் இறையறிவு மறைக்கப்படும் என்பதையும், மறுக்கப்படும் என்பதையும் தீர்க்க தரிசனமாக அறிந்த, மறைவான செய்திகளை அறியும் வல்லமை வழங்கப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்ததினால்தான் மேற்கண்டவாறு கூறினார்கள் போலும். அறிவை மறைப்பவனுக்கே இத்தண்டனை என்றால் அதை மறுப்பவனுக்கும், மறுப்பவர்களைத் தூக்கி மடியில் வைத்து முத்தம் கொடுக்கும் “ஸுன்னீ”களுக்கும் எத்தண்டனை வழங்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.
மேற்கண்ட கருத்துக்கள் யாவும் இமாம் ஷஃறானீ அவர்களின் பேச்சிலிருந்து பெறப்பட்டவையாகும். நான் மொழி மாற்றம் செய்தவனேயன்றி கருத்துக்களுக்குரியவன் அல்லன். உலகில் வாழும் மார்க்க அறிஞர்களில் எவரும் இமாம் அவர்களை மறுத்ததற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. கொம்பர்கள் தவிர.
இமாம் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்றே என்ற ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களும், அந்த ஞானத்தின் கரையில்லாக் கடலான இமாம் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் எதிரிகளால் அந்த ஞானம் பேசியவர்களிற் பலர் துன்புறுத்தப்பட்ட வரலாறை விரிவாக எழுதியுள்ளார்கள் இமாம் ஷஃறானீ அவர்கள்.
எந்த ஒரு நாடாயினும் அங்கு எதார்த்தம், தத்துவம், மெய்யறிவு, இறையியல் பேசியவர்களை எதிர்த்தவர்களும், அவர்களைக் “காபிர்”கள், “ஸிந்தீக்”குகள் என்று சொன்னவர்களும், மற்றும் “பத்வா” வழங்கியவர்ளும் அதே நாட்டிலுள்ள “புகஹாஉ” என்ற சட்டக்கலை கற்றவர்கள்தான் என்பதற்கு வரலாறுகள் சான்றுகளாக உள்ளன. ஸூபிஸ ஞானம் பேசியவர்களின் வரலாறை ஆய்வு செய்வோருக்கு இது மறைவானதல்ல.
சட்டக்கலையும், ஸூபிஸ ஞானமும் கற்ற “புகஹாஉ”கள் மௌனிகளாயிருந்தாலும் கூட சட்டக்கலை மட்டும் கற்றுக் கொண்டு மேல் நீச்சடிக்கின்றவர்கள் மட்டுமே பொறாமையின் பின்னணித் தூண்டுதலால் ஸூபிகளை நசுக்கலாயினர்.
“ஹன்பலீ மத்ஹபின்” தாபகர் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிகளின் எதிரிகளால் நசுக்கப்பட்ட பொழுது தொடர்ந்து மூன்று நாட்கள் எவருக்கும் தெரியாத பதுங்கு குளியொன்றில் இருந்து வெளியே வந்த போது, ஏன் நாயகமே வெளியே வந்தீர்கள்? எதிரிகள் உங்களை இன்னமும் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்று ஆதரவாளர்கள் சொன்னபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்திருந்தது மூன்று நாட்கள் மட்டும்தான் என்று பதில் கூறினார்கள்.
மெய்ஞ்ஞானி அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எதிரிகளுக்குத் தெரியாமல் நோயாளி போல் நடித்து 21 ஆண்டுகள் மருத்துவ மனையில் வாழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
மத சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பன உள்ள இந்நாட்டில் இக்கால கட்டத்தில் ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ள இறையியற் பேசுவோர் இருந்தாலும் கூட சட்டம் கற்ற “முப்தீ”களால் “பத்வா” என்ற குண்டில்லாப் போலித்துப்பாக்கி அவர்கள் பக்கம் நீட்டப்படும் போதும், தந்திரிகளும், தமது இலாபத்தை இழந்த மந்தி (ரி) களும் அவர்களைப் பழி வாங்கும்போதும் அவர்கள் தமது முன்னோர்கள் போல் நாட்டை விட்டும் வெளியேறி வேறு நாடுகளில் அல்லது காடுகளில் வாழச் சாத்தியமுண்டு. அவ்வாறு நடக்கும் நிலையில் நிகரில்லாப் பேரிழப்பும், பேரழிவும் இலங்கை மண்ணுக்கும், இலங்கை வாழ் மக்களுக்குமேயாகும். இழப்பிற்குக் காரண கர்த்தாக்களாக “முப்தீ”களும், “முனாபிக்”குகளுமே இருப்பர்.
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقْ
கடலில் தோற்றும் அலையெலாம் அந்தக் கடலுக்கு வேறில்லை.
பாரில் தோற்றும் பொருளெலாம் அந்தப் பாருக்கு வேறில்லை.
பாலில் தோற்றும் வெண்மையெலாம் அந்தப் பாலுக்கு வேறில்லை.
கரியில் தோற்றும் கருமையெலாம் அந்தக் கரிக்கு வேறில்லை.
குருதியில் தோற்றும் சிவப்பெலாம் அந்தக் குருதிக்கு வேறில்லை.
வானில் தோற்றும் நீலமெலாம் அந்த வானுக்கு வேறில்லை.
மரகதத்தில் தோற்றும் பச்சையெலாம் அந்த மரகதத்திற்கு வேறில்லை.