தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
(இக்கட்டுரையை பக்க சார்பற்ற மன நிலையுடன் வாசித்து பயன் பெறுவீர்களாக!)
காத்தான்குடி உருவான காலத்தில் இருந்தே இங்குள்ள பள்ளிவாயல்களில் “அதான்” பாங்கு சொல்வதற்கு முன் “ஸுப்ஹானல்லாஹ்” கலிமாவும், (ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்) பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலவாத்தும் (அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா றஸூலிக ஸெய்யிதினா வமவ்லானா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யிதினா வமவ்லானா முஹம்மத்) சொல்லும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
அக்கால கட்டத்தில் காத்தான்குடியில் இமாம்கள் போல் தரமான உலமாஉகள் இருந்தும் கூட அவர்களில் எவரும் அவ்வழக்கம் பிழை என்றோ, “பித்அத்” என்றோ, “ஷிர்க்” என்றோ சொன்னதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை.
எனினும் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன் பல் கலை கற்ற, பகலிரவறியாத, இருட்டில் வாழும் பண்டிதர்களிற் சிலரால் அந்த வழக்கம் நிறுத்தப்பட்டு சில மாதங்கள் மட்டும் அமுலில் இருந்தது.
நானும், என்னுடனுள்ள “ஸுன்னீ” உலமாஉகளும் மேற்கொண்ட அயராத, இடையறாத முயற்சியால் அவ்வழக்கம் மீண்டும் அமுலுக்கு வந்தது. வஹ்ஹாபிகளின் பள்ளிவாயல்கள் தவிர ஏனைய பள்ளிவாயல்களில் அவ்வழக்கம் பேணப்பட்டு வந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
2018 நவம்பர் 30ம் திகதியுடன் மீண்டும் இவ்வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது காத்தான்குடியில் ஸுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாயல்களான பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல், மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயல், இப்ராஹீமிய்யா பள்ளிவாயல் மூன்றில் மட்டுமே குறித்த வழக்கம் தொடர்ந்து அமுலில் உள்ளது. யார் நிறுத்தினார்? ஏன் நிறுத்தப்பட்டது? என்பதற்கான எந்த ஓர் தகவலும் பொது மக்களுக்கோ, மஹல்லா வாசிகளுக்கோ அறிவிக்கப்படவில்லை.
நான் ஓர் ஆலிம் – மார்க்க அறிஞன் என்ற வகையில் நான் கற்றறிந்ததை பொது மக்களுக்கு அறிவிக்க கடமைப் பட்டிருப்பதால் நான் அறிந்ததைக் கூறி அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இப்பிரசுரத்தை வெளியிடுகிறேன். ஏற்பவர்கள் ஏற்கட்டும். எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும். فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ الله அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் போதுமானவன் என்று சொல்வீராக!
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் பாங்கு சொல்லு முன் நபீ தோழர் ஹழறத் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சில வசனங்கள் சொன்ன பிறகுதான் பாங்கு சொல்வார்கள். அவ்வசனங்கள் பிலால் அவர்களின் சிந்தனையில் தோன்றிய வசனங்களேயன்றி றஸூல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவருக்கு சொல்லிக் கொடுத்த வசனங்கள் அல்ல.
இது தொடர்பாக நபீ அவர்களின் காலத்தில் வாழ்ந்த “பனுன் நஜ்ஜார்” குடும்பத்தைச் சேர்ந்த “ஸஹாபிய்யா”வான பெண் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்.
(“மஸஜிதுன் நபவீ” மதீனாப் பள்ளிவாயலின் பக்கத்திலிருந்த வீடுகளில் எனது வீடு மட்டும்தான் உயரமான வீடாக இருந்தது. பாங்கு சொல்வதற்காக நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த “முஅத்தின்” – தொழுகை அறிவிப்பாளர் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வீட்டில் நின்று கொண்டே “ஸுப்ஹ்” தொழுகைக்கான “அதான்” – பாங்கு சொல்வார்கள். அதற்காக அவர் “ஸஹர்” நேரம் – “ஸுப்ஹ்” அதானுக்குரிய நேரத்திற்கு முன்னுள்ள நேரம் – குறித்த வீட்டுக்கு வந்து “ஸுப்ஹ்” நேரம் வரை அங்கேயே இருப்பார்கள். “ஸுப்ஹ்” நேரம் வந்துவிட்டால் கையை அசைத்த வண்ணம் விரைவாக நடந்து சென்று பாங்கு சொல்லு முன்
اَللهم إِنِّيْ أَحْمَدُكَ وَاَسْتَعِيْنُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيْمُوْا دِيْنَكَ என்ற வசனங்களைக் கூறுவார்கள். அதன் பிறகுதான் “பாங்கு” சொல்வார்கள். ஓர் இரவேனும் குறித்த வசனங்களை அவர் சொல்லாமல் பாங்கு சொன்னதே இல்லை.)
ஆதாரம் – அபூ தாஊத், பாகம் 01, பக்கம் 142, நபீ மொழி 519
மேற்கண்ட இந்த ஹதீது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு கிரந்தங்களில் ஒன்றான “அபூ தாஊத்” என்ற நூலில் பதிவாகியுள்ளது. பிலால் நபீ பெருமானின் விஷேட “முஅத்தின்” என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாங்கு சொல்லுமுன் மேற்கண்ட வசனங்களைச் சொன்ன பிறகுதான் பாங்கு சொல்வார். அவர் இவ்வாறு சொல்லி வந்ததை நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், நபீ தோழர்களும் நன்கறிவர். எனினும் அவர்களில் எவரும் அவரை அவ்வாறு சொல்வதை விட்டும் தடுக்கவில்லை.
பாங்கு சொல்லுமுன் மேற்கண்ட வசனங்கள் சொல்வது இஸ்லாம் தடை செய்த ஒன்றாயிருந்தால் ஹழ்றத் பிலால் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கவும் மாட்டார்கள். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், நபீ தோழர்களும் மௌனிகளாயிருந்திருக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் சொல்லி வருகிறார் என்பதை நபீகள் நாயகம் அறிந்திருந்தும் கூட அவர்களை அழைத்து ஒன்றும் சொல்லவும் இல்லை.
ஹழ்றத் பிலால் அவர்கள் இவ்வாறு சொன்னது தானாக எடுத்த முடிவேயன்றி அவருக்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கட்டளையிட்டு – சொல்லிக் கொடுத்து அவர் சொன்னதல்ல.
இந்த ஹதீதின் மூலம் நபீகள் நாயகம் அவர்கள் செய்யாத, அல்லது செய்யுமாறு மற்றவர்களுக்குச் சொல்லாத ஒரு விடயம் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணில்லாதிருந்தால் அதைச் செய்யலாமென்பது தெளிவாக விளங்குகின்றது.
“ஹதீது” என்பது பெருமானாரின் சொல், செயல், விண்ணப்பம் என்ற மூன்றையும் உள்வாங்கிய ஒன்றாகும்.
மேற்கண்ட இந்த ஹதீது அவர்களின் விண்ணப்பத்தில் – ஏற்றுக் கொண்டதில் அடங்கிவிடும். உடும்பு இறைச்சி “ஹலால்” என்ற சட்டமும் இந்த அடிப்படையில் உள்ளதேயாகும். அதாவது அவர்கள் சொல்லாமலும், செய்யாமலும் அவர்களின் விண்ணப்பம் கொண்டு “ஹலால்” என்று நிறுவப்பட்டதாகும்.
ஒரு விடயம் ஆகுமென்று முடிவு செய்வதற்கு அந்த விடயம் ஆகுமென்று நபீ பெருமான் சொல்லியிருக்க வேண்டுமென்பதோ, அதைச் செய்திருக்க வேண்டுமென்பதோ அவசியமில்லை. அதை அவர்கள் மறுக்காமல் இருந்தால் போதும். அது ஆகுமென்பதற்கு அவர்களின் மௌனமே ஆதாரமாகும். இதுவே இஸ்லாமின் தீர்ப்பு.
இவ்வாறு ஹழ்றத் பிலால் அவர்கள் செய்தது வழிகேடுமல்ல. நரக வாதிகளின் செயலுமல்ல. இது ஹதீது கூறும் நல் வழியேயாகும். இது நபீ அவர்கள் அங்கீகரித்த விடயமாகும்.
இந்த ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பாங்கு சொல்லுமுன் ஹழ்றத் பிலால் அவர்கள் பயன்படுத்திய குறித்த வசனங்களை, அல்லது அவற்றின் மொழியாக்கத்தை நாமும் சொல்லி பாங்கு சொல்ல முடியும். அது வழி கேடாகவும் மாட்டாது. “ஷிர்க்” ஆகவும் மாட்டாது.
பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பயன்படுத்திய அவ்வசனங்கள் அக்காலத்திற்கு பொருத்தமானவை என்றும், இக்காலத்திற்கு பொருத்தமற்றவை என்றும் ஒருவர் கருதினால் அந்த வசனத்திற்குப் பதிலாக இக்காலத்திற்குப் பொருத்தமான வசனங்கள் கூற வேண்டும்.
இக்காலத்திற்கு பொருத்தமான வசனங்கள் பின்வருமாறு. يَا عِبَادَ اللهِ اِعْتَصِمُوْا بِحَبْلِ اللهِ அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற கயிற்றை பற்றிப் பிடியுங்கள்.
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا حَافِظُوْا عَلَى الصَّلَوَاتِ விசுவாசிகளே! தொழுகைகளைப் பேணித் தொழுங்கள்.
يَا أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا விசுவாசிகளே! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேச வேண்டாம் என்பன போன்று. பாங்கு சொல்லுமுன் இவற்றில் ஒன்றை அறபு மொழியிலோ, வேறு மொழியிலோ சொன்னபின் பாங்கு சொல்ல வேண்டும். அல்லது பொருத்தமோ, பொருத்தமில்லையோ பிலால் அவர்கள் சொன்ன வசனங்களையே சொல்ல வேண்டும். அல்லது பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த ஸுப்ஹானல்லாஹ் கலிமா, ஸலவாத் முதலானவற்றைச் சொல்ல வேண்டும். இவற்றில் ஒன்றுமே சொல்லாமல் பாங்கு சொல்வது ஹதீதுக்கு – நபீ மொழிக்கு முரணானதாகும். “பத்வா” வழங்கிய “முப்தீ”யும், அவரின் “பத்வா”வின்படி செயற்பட்ட அனைவரும் ஹதீதுக்கு முரணாகச் செயற்பட்டவர்களேயாவர்.
மேற்கண்ட இவ்விபரங்களை கருத்திற் கொண்ட இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்ந்த முன்னோர்களான உலமாஉகள் பாங்கு சொல்லுமுன் ஸுப்ஹானல்லாஹ் கலிமா சொல்வதையும், நபீ பெருமான் மீது “ஸலவாத்” சொல்வதையும் அமுல் செய்து வந்துள்ளார்கள்.
இவ்விடயத்தில் எனது கருத்து என்னவெனில் பாங்கு சொல்லு முன் ஹழ்றத் பிலால் சொன்ன அதே வசனத்தைச் சொல்ல வேண்டும். அல்லது மக்களுக்குப் பலன் தரக் கூடிய வசனங்களைச் சொல்ல வேண்டும். அல்லது நமது முன்னோர் சென்ற வழியிற் செல்ல வேண்டும். அல்லது குறைந்த பட்சம் “பாங்கு சொல்லப் போகிறது அதற்கு பதில் கூற தயாராகுங்கள்” என்றாவது சொல்லி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
ஒன்றுமே சொல்லாமல் எடுத்த எடுப்பிலேயே “அல்லாஹு அக்பர்” என்று பாங்கு சொல்லத் தொடங்குதல் தவிர்க்கப்பட வேண்டும். அதோடு பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லுதல் “பித்அத்” அல்லது “ஷிர்க்” என்ற கருத்து நீக்கப்படவும் வேண்டும். பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லுதல் வழிகேடு, ஷிர்க் என்று நம்புதல் பெரும் பாவத்தைச் சேரும். ஏனெனில் மார்க்கம் “ஷிர்க்” என்று சொல்லாத ஒரு விடயத்தை பொது மக்கள் “ஷிர்க்” என்று நம்புதல் கொள்கை சார்ந்த பெரும் பாவமாகும்.
மேற்கண்ட “ஹதீது” பாங்கு சொல்லுமுன் மக்களுக்கு பயனுள்ள ஏதாவது வசனங்கள் சொல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரமாகும். அல்லது ஏதாவது ஒரு “துஆ” உடன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரமுமாகும்.
இதன் கீழ் எழுதப்படுகின்ற ஹதீது பாங்கு சொன்ன பின் “ஸலவாத்” சொல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரமாகும்.
(“முஅத்தின்” பாங்கு சொல்வதை நீங்கள் செவியேற்றால் அவர் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்” சொல்லுங்கள்) (நபீ மொழியை கடைசி வரை பார்க்கவும்)
ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம் – 384, அறிவிப்பு: அம்றுப்னுல் ஆஸ்
ஆதாரம்: அபூ தாஊத், பாகம் 01, பக்கம் 144, அறிவிப்பு: அம்றுப்னுல் ஆஸ்
“முஅத்தின்” பாங்கு சொல்வதைக் கேட்போர் அவர் சொல்வது போன்று சொல்ல வேண்டும். பின்னர் நபீ மீது “ஸலவாத்” சொல்ல வேண்டும்.
இந்த நபீ மொழியில் வந்துள்ள “ஸல்லூ” ஸலவாத் சொல்லுங்கள் என்ற ஏவல் வினைச் சொல் பாங்கு சொன்ன முஅத்தினையும், அதைக் கேட்பவர்களையும் எடுத்துக் கொள்ளும் சொல்லாகும். அதாவது பாங்கு சொன்ன முஅத்தினும் அதைக் கேட்டவனாதலால் அவனும் “ஸலவாத்” சொல்ல வேண்டும். அதை பிறருக்கு நினைவூட்டும் வகையில் சத்தமாக பாங்கு சொன்னது போல் ஸலவாத்தையும் சத்தமாகவே சொல்ல வேண்டும்.
பாங்கு சொல்லுமுன் எது சொல்வதற்கும் ஓர் ஆதாரம் கூட இல்லையென்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் ஒருவன் பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொன்னால், அல்லது மக்களை பாங்கிற்குப் பதில் கூற தயார் படுத்தும் பாணியில் வேறு வசனங்கள் சொன்னால் அவன் யார்? “முஷ்ரிக்” ஆவானா? அல்லது “பித்அத்” வழி கேடான “பித்அத்” செய்த நரகவாதியாவானா? என்று கசடற, ஐயமற மார்க்கம் கற்ற “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதியிடம் கேட்டால் அவர் அவனை “முஷ்ரிக்” என்றோ, வழி கெட்ட “பித்அத்” செய்தவன் என்றோ சொல்லமாட்டார். இதுவே நான் அறிந்த சட்டமுமாகும்.
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லாத, செய்யாத நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ள ஒரு நல்ல காரியத்தை ஒருவன் செய்தால் அது “பித்அத் ழலாலா” வழி கெட்ட “பித்அத்” ஆக மாட்டாது. இதற்குப் பின்வரும் ஹதீது ஆதாரமாக உள்ளது.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ، (رواه مسلم فى صحيحه)
இ நபீ மொழியை சரியாக விளங்கினால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணில்லாத “பித்அத் ஹஸனா” செய்யுமாறு தங்களின் சமூகத்தை தூண்டியுள்ளார்கள் என்ற உண்மை தெளிவாகும். “பித்அத் ஹஸனா” வுக்கு “ஸுன்னத்” என்ற பெயர் சொல்லாவிட்டாலும் அது “ஸுன்னத்” உடைய தரத்தில் உள்ளதாகும் என்பதை சட்டக்கலை மேதைகள் நன்கறிவர்.
ஹதீதின் சுருக்கம்:
ஒருவன் இஸ்லாம் மார்க்கத்தில் நல்ல நடைமுறை – நல்வழி முறை – ஒன்றை புதிதாக ஏற்படுத்துவானாயின் அதற்கான நற்கூலி அவனுக்கு உண்டு. அதோடு அவன் மரணித்த பின் அவன் ஏற்படுத்திய அந்த நல்ல வழிமுறையின் படி செயல்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற நற்கூலியும் இவனுக்கு உண்டு. (இதனால்) நல்ல வழி முறையின்படி செயல்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற நற் கூலியில் ஒன்றும் குறைந்து விடாது.
ஒருவன் இஸ்லாம் மார்க்கத்தில் கெட்ட நடைமுறை – வழி முறை – ஒன்றை புதிதாக ஏற்படுத்துவானாயின் அதற்கான பாவம் அவனுக்கு உண்டு. அதோடு அவன் மரணித்தபின் அவன் ஏற்படுத்திய அந்தக் கெட்ட வழிமுறையின்படி செயல்பட்டவனுக்கு கிடைக்கின்ற பாவமும் இவனுக்கு உண்டு. (இதனால்) தீய வழி முறையின்படி செயல்பட்டவனுக்கு கிடைக்கின்ற பாவத்தில் ஒன்றும் குறைந்து விடாது. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த ஹதீது “பித்அத் ஹஸனா” நல்ல “பித்அத்”தை ஏற்படுத்தியவனுக்கு நன்மையுண்டு என்றும், “பித்அத் ஸெய்யிஆ” கெட்ட “பித்அத்”தை ஏற்படுத்தியவனுக்கு பாவம் உண்டு என்றும் கூறுகிறது.
இந் ஹதீதை ஓர் உதாரணம் மூலம் ஆய்வு செய்தால் இன்னும் தெளிவு ஏற்படும்.
நண்பர்கள் சிலர் அரச விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மாலையில் கடற்கரையில் ஒன்று கூடி “கார்ட்ஸ்” விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு சென்ற ஒரு மௌலவீ அவர்களிடம் “இது நன்மை தராத வீண் செயல். இதை நீங்கள் விட்டு இதே நேரத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று ஆயிரம் தரம் சொல்வது நன்மை தரும் நற்செயலாகும்” என்று கூறினார்.
மௌலவீ கூறிய நல்ல வழி முறையை சரிகண்ட நண்பர்கள் விளையாட்டை விட்டு ஞாயிற்றுக் கிழமையில் வழமை போல் ஒன்று கூடி மௌலவீ சொன்னது போல் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்கரையில் நண்பர்கள் ஒன்று கூடி ஆயிரம் தரம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்ல வேண்டுமென்று திருக்குர்ஆன் கூறவுமில்லை, ஹதீது கூறவுமில்லை. எனவே மௌலவீ ஏற்படுத்திய அந்த வழி முறை “பித்அத்” ஆக இருந்தாலும் அது “பித்அத் ஹஸனா” என்றே கணிக்கப்படும்.
இவ்வாறுதான் “தரீகா”வை ஏற்படுத்திய “ஷெய்கு” குருமார் வெள்ளிக்கிழமை இரவில் தமது சிஷ்யர்கள் ஒன்று கூடி “றாதிப்” என்ற பெயரில் அல்லாஹ்வை “திக்ர்” செய்ய ஏற்படுத்திய நிகழ்வுமாகும். இதுவும் “பித்அத்” ஆக இருந்தாலும் “பித்அத் ஹஸனா” வகையைச் சேர்ந்ததாகும். இவ்வாறு செய்தல் பிழை இல்லை. செய்தவனுக்கு பாவமுமில்லை.
எனவே, றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும்., அவர்கள் செய்யாத ஒன்றை நாம் புதிதாக ஏற்பாடு செய்யக் கூடாதென்று கூறுதல் அறியாமையாகும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் வாழ்வில் அறபுக் கல்லூரி அமைத்து பல வருடங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி “ஷஹாதத்” – சான்றிதழ் வழங்கியதற்கு ஆதாரம் இல்லை. இதனால் நபீ செய்யாத ஒன்றை நாம் செய்யக் கூடாதென்றால் மார்க்கம் காக்கும் மௌலவீமார்களை உருவாக்குவது எவ்வாறு?
எனவே, “பித்அத்” எல்லாமே வழிகேடுதான் என்ற கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளாமல் அவற்றில் ஐந்து வகையுண்டு என்பதையும், குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணான “பித்அத்” மட்டுமே பாவமானதென்பதையும் அறிந்து செயல்பட வேண்டும்.
இத்தலைப்பின் சுருக்கம் என்னவெனில் பாங்கு சொல்வதற்கான நேரம் வந்தால் பாங்கு மட்டும்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன் எதுவும் சொல்லக் கூடாதென்பது அர்த்தமற்ற வாதமும், நபீ பெருமானும், தோழர்களும் சரிகண்ட ஹழ்றத் பிலால் அவர்களின் நல்வழி முறைக்கு முரணான செயலுமாகும்.
ஆகையால் பாங்கு சொல்லுமுன் ஹழ்றத் பிலால் அவர்கள் சொன்னது போல் சொல்ல வேண்டும். அல்லது மக்களுக்கு பயன் தரக் கூடிய வகையில் ஏதாவதோர் அறிவுரை கூற வேண்டும். அல்லது நமதூரில் வழக்கத்தில் இருந்து வந்தது போல் “ஸலவாத்” சொல்ல வேண்டும். மாறாக செயல்படுவது உகந்ததல்ல.
அதோடு பாங்கு சொன்னபின் முஅத்தின் – பாங்கு சொன்னவரும், அதைச் செவியேற்றவர்களும் முதலில் பெருமானார் மீது “ஸலவாத்” சொல்லி “பாங்கு துஆ” ஓத வேண்டும்.
தொன்று தொட்டு பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லி பாங்கு சொல்லி வந்த பள்ளிவாயலில் அதை நிறுத்துவது அதைப் புறக்கணித்ததாகும் என்பதும், பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லி பாங்கு சொல்லப்படும் பள்ளிவாயலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், அட்டூழியம் மூலம் அதை நிறுத்த முயற்சி எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதும் எனது கருத்தாகும்.
அல்லாஹ் வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவானாக!
குறிப்பு: இலங்கை நாட்டில் வஹ்ஹாபிஸ வழிகேடு தலைவிரித்தாடுவதற்கு ஸுன்னீ உலமாஉகளிற் சிலரின் இரட்டை வேடமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உறுதியற்ற, தீர்க்கமான முடிவின்மையுமே காரணங்களாகும்.