தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
நீங்கள் பொருளாதாரத்தில் غَنِيْ பணக்காரனாக விரும்புகிறீர்களா? அல்லது مِسْكِيْنْ அதில் நடுத்தர வசதியுள்ளவனாக வாழ விரும்புகிறீர்களா? அல்லது فَقِيْرْ ஏழையாக வாழ விரும்புகிறீர்களா? எவ்வாறு நீங்கள் விரும்பினாலும் அதற்கு வழியுண்டு. அந்த வழியைச் சொல்லித் தர மட்டுமே என்னால் முடியும். அந்த வழியில் “இக்லாஸ்” கலப்பின்றி நீங்கள் சென்றால் அல்லாஹ்வின் அருளாலும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “பறகத்”தாலும், வலீமாரின் பொருட்டாலும் நீங்கள் நாடுவதை அடையலாம். முயற்சித்தல் உங்கள் கடமை. முடித்து வைத்தல் அல்லாஹ்வின் விருப்பம்.
முதலில் “ஙனீ” என்றால் யார்? “மிஸ்கீன்” என்றால் யார்? “பகீர்” என்றால் யார்? என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
“ஙனீ” என்றால் செல்வந்தன் – பணக்காரன். ஒருவனுக்கு தினமும் தனக்கும், தனது பராமரிப்பில் – அதாவது செலவில் வாழ்கின்றவர்களுக்கும், ஒரு நாள் செலவிற்கு எவ்வளவு தேவையோ அதைவிட அதிக வருமானமுள்ளவன் “ஷரீஆ”வில் “ஙனீ” பணக்காரன் என்று கணிக்கப்படுவான்.
“மிஸ்கீன்” என்றால் நடுத்தரவாதி. அதாவது ஒருவனுக்கு தனக்கும், தனது பராமரிப்பில் – அதாவது தனது செலவில் வாழ்கின்றவர்களுக்கும் ஒரு நாள் செலவிற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு வருவாய் உள்ளவன் “மிஸ்கீன்” ஆவான்.
“பகீர்” என்றால் ஏழை. அதாவது ஒருவனுக்கு தனக்கும், தனது பராமரிப்பில் வாழ்கின்றவர்களுக்கும் ஒரு நாள் செலவிற்கு எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைவான வருமானம் உள்ளவன் “பகீர்” ஆவான்.
“ஙனீ” பணக்காரனை விடுவோம். இவன் பொருளாதாரத்தில் தன்னறைவு கண்டவன். அவனுக்கு ஒரு சிகிச்சையும் தேவையில்லை. அவன் ஆரோக்கியமானவன். மருந்து மாத்திரை அவனுக்குத் தேவையில்லை.
ஆயினுமவன் பள்ளிவாயல்கள் கட்ட வேண்டும், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும், கல்விக்காக உதவ வேண்டும் என்ற “இக்லாஸ்” கலப்பற்ற எண்ணம் உள்ளவனாயிருந்து அவ்வாறெல்லாம் செய்வதற்கு அவனின் வருமானம் பற்றாமல் இருந்தால் அவன் தனது வருமானத்தைக் கூட்டிக் கொள்வதற்கான வழிகளைத் தேடுவது பிழையாகாது. ஏனெனில்,
طَالِبُ الدُّنْيَا لِلدُّنْيَا مَذْمُوْمٌ، وَطَالِبُ الدُّنْيَا لِلْآخِرَةِ مَحْمُوْدٌ،
“துன்யாவுக்காக – இவ் உலக வாழ்வுக்காக அதைத் தேடுகின்றவவன் இகழப்பட்டவன், ஆயினும் மறுமைக்காக “துன்யா”வை தேடுகின்றவன் புகழப்பட்டவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் செல்வந்தனும் கூட மேலும் வருமானத்தை அதிகப்படுத்துவது பிழையல்ல.
ஒரு பணக்காரன் உள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவனின் அன்றாட வருமானம் அவனின் தலைக்கு மேலால் உள்ளதென்றும் வைத்துக் கொள்வோம். அவனின் பராமரிப்பில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும் வசதி உள்ளதென்றும் வைத்துக் கொள்வோம். ஆனால் இவனோ “தீன்” மார்க்கத்திற்காக அள்ளி இறைப்பவனும் இல்லை, கிள்ளிக் கொடுப்பவனுமில்லை என்றால் இவன் طَالِبُ الدُّنْيَا لِلدُّنْيَا مَذْمُوْمٌ துன்யாவை துன்யாவுக்காகத் தேடிய “துன்யாதாரி”தான். இவன் தனது “ஸகறாத்” மரண வருத்த நேரம் மிகவும் வேதனையை அனுபவிப்பவனாவான். இவன் போன்றவர்களின் “றூஹ்” உயிர் இலகுவில் பிரியாது. மாதக் கணக்கிலும், வருடக் கணக்கிலும் நோயுடன் போராடிக் கொண்டிருப்பான். இறுதியில் அவனுக்கு தங்கத்தைக் கரைத்து தொண்டையில் ஊற்றினால்தான் உயிர் பிரியும். இவன் அல்லாஹ்வின் தண்டனைக் குரியவனாவான்.
அன்புள்ள “மிஸ்கீன்”களே! “பகீர்”களே!
உங்களுக்கு வருமானம் தேவைதான். மற்றவர்கள் போல் நீங்களும் வாழவே வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் முன்னேறக் கூடிய வாய்ப்பு வசதியில்லாதிருந்தால் அல்லாஹ்விடமும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும், வலீமாரிடமும் முறையிடுங்கள். அதோடு நான் பின்னால் எழுதுவது போல் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஐவேளையும் தொழுங்கள். இது முதல் அம்சம். உங்களால் முடியுமான அளவு “ஸுன்னத்”தான வணக்க வழிபாடுகளைச் செய்யுங்கள். தினமும் “ஸுப்ஹ்” தொழுகையில் பேணுதலாக இருந்து கொள்ளுங்கள். குட்டி போடும் வட்டிக்கு கொடுக்காதீர்கள். எடுக்காதீர்கள். “ஸுப்ஹ்” தொழுகையின் பின் உங்களின் குருமார் சொல்லித் தந்தவற்றை ஓதி வாருங்கள். எவ்விடயத்திலும் நேர்மையை கையாளுங்கள். பொய் சொல்லாதீர்கள். புறம் பேசாதீர்கள். இருவருக்கிடையில் மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள். மதுபோதையில் இருக்காமல் இறை போதையில் இருந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மம் செய்யுங்கள். பிறருக்கு அநீதி செய்யாதீர்கள். புறம் பேசாதீர்கள். கோள் சொல்லாதீர்கள். வேவு பார்க்காதீர்கள். வேசியிடம் செல்லாதீர்கள். எதிலும் கோபப் படாதீர்கள். பொதுவாக மார்க்கத்திற்கு முரணான எதையும் செய்யாதீர்கள்.
“மிஸ்கீன்”களே! “பகீர்”களே! எதிர்வரும் “றபீஉனில் அவ்வல்” முதலாம் பிறையன்று உயிரினும் மேலான கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பெயரால் கொடியேற்றும் இடங்களுக்குச் செல்லுங்கள். கொடியேறும் போது உங்கள் தேவைகளை மனதில் இருத்தி அவர்களின் பொருட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டும் என்று கண்களை மூடிக் கொண்டு பக்திப் பரவச நிலையில் அல்லாஹ்விடம் கேளுங்கள். றபீஉனில் அவ்வல் 12 நாட்களும் நடைபெறும் அண்ணலெம் பெருமானின் புகழ் கூறும் சபைகளில் கலந்து கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய ஸூபிஸ சமூகத்தவர்களே! “மிஸ்கீன்”களே! “பகீர்”களே!
பின்வரும் ஓதல்களை முடிந்தவரை ஓதுங்கள். உங்கள் இல்லங்களில் தினமும் “மக்ரிப்” தொழுகையின் பின் அல்லது “ஸுப்ஹ்” தொழுகையின் பின் திருக்குர்ஆனின் “ஸூறதுல் முல்க்”, “ஸூறதுல் வாகிஆ”, “ஸூறா யாஸீன்” அத்தியாயங்களை ஓதுங்கள். முதியோர் இல்லம், “யதீம் கானா” அநாதை இல்லம், அங்கவீனர் இல்லம் ஆகியவற்றுக்கு உதவுங்கள்.
தினமும் காலையில், அல்லது மாலையில் يَا مُغْنِيْ “யா முங்னீ” என்று சரியான மொழித்தலுடன் 1100 தரம் ஓதுங்கள். பொருளாதாரம் பெருகுவதற்கும், அது நம்மைத் தேடி நமது காலடி வருவதற்கும் இது மிக விஷேடமானதாகும்.
ஒரு நிமிடத்தில் 60 தரம் ஓதலாம். 1100 தரம் ஓதுவதற்கு சுமார் 20 நிமிடங்கள் தேவை. இதைத் தவறாது செய்யுங்கள். ஆண்களுக்கு வசதியில்லாது போனால் பெண்கள் ஓதலாம். சில சமயம் வேலைப்பழு காரணமாக, அல்லது மறதி காரணமாக தவறினால் கவலைப்படாதீர்கள்.
தினமும் உயிரினும் மேலான நபீகளார் மீது “ஸலவாத்” சொல்வதை உங்கள் கடமையாகக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த “ஸலவாத்” சொல்லலாம். ஆயினும் பின்னால் நான் எழுதவுள்ள இரண்டு “ஸலவாத்”துகளும் மிக விஷேடமானவையாகும்.
“ஸலவாத்” ஓதும்போது நபீ பெருமானார் அவர்களின் “ஸூறத்” உருவத்தை – உடலமைப்பை கற்பனைக் கண் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் உடலமைப்பை உங்களால் கற்பனையாக செய்ய முடியாது போனால் நீங்கள் நேரில் கண்ட ஞான குருக்களான பின்வருவோரின் தோற்றத்தை நினைத்துக் கொள்ளலாம். அவர்களை அல்லாஹ்வின் றஸூல் என்று நினைத்துக் கொள்ளாமல் அவர்களின் “மள்ஹர்”களில் நபீகளார் தோற்றுவார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஸூபீ ஹழ்றத் நாயகம், அப்துர் றஷீத் தங்கள் வாப்பா நாயகம், புகாரீ தங்கள், மற்றும் நான் இங்கு பெயர் குறிப்பிடாத உங்களுக்கு விருப்பமான ஒரு நல்லடியாரின் தோற்றத்தைக் கற்பனை செய்து கொள்ளலாம். அவர்களின் தோற்றத்தில் எம் பெருமானார் தோற்றுவார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஸலவாத் ஒன்று:
اللهم صَلِّ عَلَى طَلْعَةِ الذَّاتِ الْمُطَلْسَمْ وَالْغَيْثِ الْمُطَمْطَمْ وَالْكَمَالِ الْمُكَتَّمْ لَاهُوْتِ الْجَمَالْ وَنَاسُوْتِ الْوِصَالْ وَطَلْعَةِ الْحَقِّ هُوِيَّةِ إِنْسَانِ الْأَزَلْ فِيْ نَشْـرِ مَنْ لَمْ يَزَلْ مَنْ أَقَمْتَ بِهِ نَوَاسِيْتَ الْفَرْقِ إِلَى طَرِيْقِ الْحَقِّ فَصَلِّ بِهِ وَمِنْهُ وَعَلَيْهِ وَسَلِّمْ تَسْلِيْمًا،
ஸலவாத் இரண்டு:
اَللَّهُمَّ صَلِّ عَلَى الذَّاتِ الْمُحَمَّدِيَّةْ، اَللَّطِيْفَةِ الْأَحَدِيَّةْ، شَمْسِ سَمَاءِ الْأَسْرَارْ، وَمَظْهَرِ الْأَنْوَارْ، وَمَرْكَزِ مَدَارِ الْجَلاَلْ، وَقُطْبِ فَلَكِ الْجَمَالْ، اَللَّهُمَّ بِسِـرِّهِ لَدَيْكْ، وَبِسَيْـرِهِ إِلَيْكْ، آمِنْ خَوْفِي وَأَقِلْ عَثْرَتِـيْ وأَذْهِبْ حُزْنِـيْ وَحِرْصِـيْ وَكُنْ لِـيْ وَخُذْنِـيْ إِلَيْكَ مِنِّـيْ، وَارْزُقْنِـيَ الْفَنَاءَ عَـنِّـيْ، وَلَا تَـجْعَلْـنِـيْ مَفْتُوْنًا بِنَفْسِـيْ، مَـحْجُوْبًا بِـحِسِّـيْ، وَاكْشِفْ لـِيْ عَنْ كُلِّ سِـرٍّ مَكْتُومْ، يَا حَـيُّ يَا قَيُّومْ، وصَلَّى اللهُ عَلَى سَيّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمْ،وَالْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَـمِ۪يْنْ،
இவற்றை ஓதுவதுடன்,
அன்பிற்குரியவர்களே!
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின் வர்க்கத்தையும், மனு வர்க்கத்தையும் என்னை (அறிந்து) வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51-56)
இத்திரு வசனத்தின் படி ஒரு மனிதன் ஒரு நொடி நேரமளவும் கூட “இபாதத்” வணக்கமின்றி இருத்தல் பிழை என்பது தெளிவாகிறது.
இக்கருத்தை வலியுறுத்துவது குறித்த திரு வசனத்தின் அமைப்பேயாகும். ஏனெனில் இத்திரு வசனத்தின் தொடக்கத்தில் مَا “மா” என்று ஒரு சொல் வந்துள்ளது. இறுதியில் إِلَّا “இல்லா” என்று ஒரு சொல் வந்துள்ளது. இவ்விரு சொற்களும் இல்லாமல் இவ் வசனம் அமைவதாயின் خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ لِيَعْبُدُوْنِ ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக படைத்தேன் என்று மட்டும்தான் பொருள் வரும். “என்னை வணங்குவதற்காகவேயன்றி” என்று பொருள் வராது. ஆகையால் (இல்லை – ஒழிய – தவிர) என்ற பொருள் வராது.
இதை ஒரு சாதாரண வசனம் மூலம் தெளிவுபடுத்துவதாயின் دَعَوْتُ صَدِيْقِيْ لِيُسَاعِدَنِيْ “எனது நண்பனை எனக்கு உதவி செய்வதற்காக அழைத்தேன்” என்ற வசனத்தையும், مَا دَعَوْتُ صَدِيْقِيْ إِلَّا لِيُسَاعِدَنِيْ “எனது நண்பனை எனக்கு உதவி செய்வதற்காகவேயன்றி – ஒழிய நான் அழைக்கவில்லை” என்ற வசனத்தையும் உதாரணமாகக் கூறி விளங்கப்படுத்தலாம்.
நான் இப்போது கூறிய சாதாரண இரு வசனங்களையும் ஊன்றிக் கவனித்தால் ஒரு கருத்தை உறுதிப் படுத்துவதற்கு “மா” என்ற சொல்லும், “இல்லா” என்ற சொல்லும் அவசியம் என்பது தெளிவாகும். ஆகையால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நொடியிலும் வணக்கம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதும், அவ்வாறு இருக்காது போனால் அவன் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறிய திரு வசனத்திற்கு மாறு செய்தவனாகிவிடுவான் என்பதும் தெளிவாகிவிடுகின்றன.
ஒரு மனிதன் 24 மணி நேரங்களில் ஒரு நொடி நேரம் கூடத் தவறாமல் வணக்கம் செய்தல் என்பது முடியாதிருக்கும் நிலையில் அல்லாஹ் சாத்தியமற்ற ஒன்றைச் செய்யுமாறு எவ்வாறு பணிப்பான்? என்ற கேள்விக்கு இடமுண்டு. இதற்கு விடையும் உண்டு. இது சாத்தியம் என்று நிறுவுவதற்கு ஆதாரமும் உண்டு.
தொடரும்….