தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இது ஒரு பழ மொழி. இப் பழமொழியில் கழுதை என்பது “கயிதை” என வர வேண்டும். “கயிதை” என்பது “ஊமத்தம்” காயைக் குறிக்கும்.
ஊமத்தம் பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய்ப் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய், முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்ப காலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்தப் பழ மொழி தோன்றியது. வர வர மாமியார் கழுதை – “கயிதை” போலானார்.
இங்கு “மாமியார்” என்ற சொல், அல்லது “மாமியா” என்ற சொல் ஒருவனின் மனைவியின் தாயைக் குறிக்கும். இலங்கையில் நான் வதியும் காத்தான்குடியிலும், இன்னும் பல ஊர்களிலும் “மாமியார்” என்று சொல்லாமல் “மாமியா” என்றே சொல்வார்கள்.
மனைவியின் தாயை – மகளின் கணவன் “மாமியா” என்றும், அவளின் தந்தையை “மாமனார்” என்றும் இலங்கையின் பல ஊர்களிலும் அழைப்பார்கள்.
ஒருவன் தனது தந்தையின் சகோதரியை “மாமி” என்றும், அவளின் கணவனை “மாமா” என்றும் அழைப்பான். “புறோக்கர்” தொழில் செய்பவரை “டாப்பர் மாமா” என்று செல்லமாக அழைப்பார்கள்.
அக்கால “மாமியா”வும், இக்கால “மாமியா”வும்.
ஒருவனின் மனைவியின் தாய் – மாமியா அவனுக்கு “மஹ்றம்” ஆவாள். அதாவது அவளை அவன் தனது மனைவியாக்க “ஷரீஆ”வில் அனுமதியில்லை. அவன் அவளை நேரில் பார்ப்பதும், பேசுவதும் ஆகும். அவள் அவனுக்கு தாய் போன்றாவாள். அவன் அவளை திருமணம் செய்தல் “ஷரீஆ”வின் சட்டப்படி “ஹறாம்” விலக்கப்பட்டதாகும். மகளின் கணவன் அவளுக்கு – மாமியாவுக்கு மருமகன் முறையாவான்.
அக்காலத்தில் வாழ்ந்த மாமியாக்களுக்கும், இக்காலத்தில் வாழும் மாமியாக்களுக்கும் வித்தியாசம் உண்டு. எனது ஊரான காத்தான்குடியில் அக்காலத்தில் மாமியாவும், மருமகனும் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசமாட்டார்கள். மருமகன் வீட்டுக்கு வருகிறார் என்றால் “மாமியா” அவரின் கண்களில் தெரியாமல் ஓடி ஒழிந்து விடுவாள். இருவரும் ஒரே சபையில் பேசிக் கொண்டு இருக்கவும் மாட்டார்கள். சாப்பிடவும் மாட்டார்கள். இவ்வழக்கம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கமாகும். ஆனால் இவ்வழக்கம் இன்று தலை கீழாய்ப் புரண்டுள்ளது. ஒருவன் மாமியாவுக்காக அவளின் மகளைத் திருமணம் செய்யும் காலமாக மாறிவிட்டது. மகளை வெளியே அனுப்பிவிட்டு மாமியாவும், மருமகனும் டீவி பார்க்கும் காலமாகவும் இக்காலம் மாறிவிட்டது.
ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் அப் பெண்ணின் தாயும், தந்தையும் மகளின் கணவனை – மருமகனை அவரின் அந்தஸ்தை விட மேலாக மதிப்பார்கள். கௌரவிப்பார்கள். கண்ணியம் செய்வார்கள். தினமும் காலையில் முட்டைக் கோப்பியும் கொடுப்பார்கள். மாலையில் வட்டிலப்பமும் கொடுப்பார்கள். மருமகன் என்று வாய் நிறையச் சொல்வார்கள். கவனிப்புகளும், ஆதரிப்புகளும், உபசரிப்புகளும் அளவைக் கடந்து நடக்கும்.
ஆயினும் நாள் நகர நகர மருமகனின் வண்டவாளங்களும் வெளியாக வெளியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும். மாமியாவும், மருமகனும் மக்கள் முன்னிலையில் மல் யுத்தம் செய்யும் நிலையும் ஏற்பட்டு விடும். இறுதியில் “காழீ” நீதி மன்று செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும்.
ஆயினும் சில குடும்பங்கள் கௌரவமான குடும்பங்களாகும். இக்குடும்பத்தவர்கள் மிகவும் கண்ணியமாகவும், கௌரவமாகவும், அறிவைப் பயன்படுத்தியும் நடந்து கொள்வார்கள்.
தாரமும், குருவும் தலைவிதிப் பயன்!
ஊமத்தை: முட்கள் நிறைந்த உருண்டையான காய்களையும், குழல் வடிவப் பூக்களையும் உடைய ஒரு வகைச் செடி. இச் செடி இலங்கையின் பல பாகங்களிலும் உண்டு.