தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உலக வரலாற்றில் ஒரு மனிதனுடன் கல் கதைத்ததென்றால் அது எங்கள் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் மட்டுமேயாகும். வேறெவருடனும் “கல்” கதைத்ததற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை.
حَصَاةٌ
என்றால் கல். இது ஒருமை. இதன் பன்மைச் சொல் حَصَيَاتٌ என்று வரும். حَجَرٌ என்றாலும் “கல்”தான். இது ஒருமை. இதன் பன்மை أَحْجَارٌ என்று வரும். حَصَاةٌ என்றால் صِغَارُ الْأَحْجَارِ சிறிய கற்கள். பெரிய கற்கள் அல்ல.
நபீ தோழர் அபூதர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
كُنْتُ رَجُلًا أَتَتَبَّعُ خَلَوَاتِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم، فَرَأَيْتُهُ وَحْدَهُ، فَجَلَسْتُ، فَجَاءَ أَبُوْ بَكْرٍ فَسَلَّمَ وَجَلَسَ، ثُمَّ جَاءَ عُمَرُ، ثُمَّ عُثْمَانُ، وَبَيْنَ يَدَيِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعُ حَصَيَاتٍ، فَأَخَذَهُنَّ فَوَضَعَهُنَّ فِيْ كَفِّهِ، فَسَبَّحْنَ حَتَّى سَمِعْتُ لَهُنَّ حَنِيْنًا كَحَنِيْنِ النَّحْلِ، ثُمَّ وَضَعَهُنَّ فَخَرَسْنَ، ثُمَّ أَخَذَهُنَّ فَوَضَعَهُنَّ فِيْ يَدِ أَبِيْ بَكْرٍ فَسَبَّحْنَ، ثُمَّ وَضَعَهُنَّ فَخَرَسْنَ، ثُمَّ وَضَعَهُنَّ فِيْ يَدِ عُمَرَ فَخَرَسْنَ، ثُمَّ وَضَعَهُنَّ فِيْ يَدِ عُثْمَانَ فَسَبَّحْنَ، ثُمَّ وَضَعَهُنَّ فَخَرَسْنَ، فَقَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم: ‘هَذِهِ خِلَافَةُ النُّبُوَّةِ’
(நான் பெருமானார் அவர்கள் தனித்திருக்கும் சமயத்தை அறிய ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒருவன். ஒரு நாள் அவ்வாறு அவர்கள் இருப்பதைக் கண்ட நான் அவர்களுடன் இருந்தேன். அவ்வேளை அபூ பக்ர் நாயகம் வந்து ஸலாம் சொல்லி அமர்ந்தார்கள். அதன் பின் உமர் நாயகம் வந்து அமர்ந்தார்கள். அதன் பிறகு உத்மான் நாயகம் வந்தார்கள். அவ்வேளை பெருமானார் அவர்களிடம் ஏழு சிறிய கற்கள் இருந்தன. பெருமானார் அவர்கள் அவற்றை எடுத்து தங்களின் உள்ளங்கையில் வைத்தார்கள். அப்போது அக் கற்கள் “தஸ்பீஹ்” செய்தன. அதாவது அல்லாஹ்வைப் புகழ்ந்தன. அவ்வேளை அக்கற்கள் புகழ்ந்த சத்தம் எனக்கு கேட்டது. அச்சத்தம் தேனீக்களின் சத்தம் போல் எனக்கு கேட்டது. பின்னர் அவற்றை எடுத்தார்கள். அதன் பின் அவற்றில் “தஸ்பீஹ்” சத்தம் நின்று விட்டது. பின்னர் அக்கற்களை எடுத்து அபூ பக்ர் நாயகம் அவர்களின் கையில் வைத்தார்கள். அப்போது அவை “தஸ்பீஹ்” செய்தன. பின்னர் அவற்றை எடுத்தார்கள். அவை “தஸ்பீஹ்” செய்வதை நிறுத்திக் கொண்டன. அதன் பிறகு அவற்றை எடுத்து உமர் நாயகம் அவர்களின் கையில் வைத்தார்கள். அப்போது அவை “தஸ்பீஹ்” செய்தன. பிறகு அவற்றை எடுத்தார்கள். அவை “தஸ்பீஹ்” செய்வதை நிறுத்திக் கொண்டன.
பின்னர் அக்கற்களை எடுத்து உத்மான் நாயகம் அவர்களின் கையில் வைத்தார்கள். அவை “தஸ்பீஹ்” செய்தன. பிறகு அவற்றை எடுத்தார்கள். அவை “தஸ்பீஹ்” செய்வதை நிறுத்திக் கொண்டன. அப்போது பெருமானார் அவர்கள் هَذِهِ خِلَافَةُ النُّبُوَّةِ இது நபித்துவத்தின் பிரதிநிதித்துவம் என்று கூறினார்கள்.
ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா, 04-617, 05-149, 437
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் பல பாடங்கள் நாம் கற்றுக் கொள்ள முடியும். ஒன்று – “கல்” “தஸ்பீஹ்” செய்தது. அதன் சத்தம் தேனீயின் – தேன் பூச்சின் சத்தம் போல் கேட்டது. அவை “தஸ்பீஹ்” செய்தன என்று நபீ மொழியில் கூறப்பட்டுள்ளதால் – سَبَّحْنَ என்று வந்துள்ளதால் எழுத்துக்களுக்குரிய மொழித்தல் சத்தம் கேட்டிருக்க வேண்டும். எழுத்துக்கள் புரியாத சத்தம் மட்டும் கேட்டிருந்தால் அதை இரைச்சல் என்றுதான் சொல்ல முடியுமேயன்றி “தஸ்பீஹ்” என்று சொல்ல முடியாது. ஏனெனில் “தஸ்பீஹ்” என்ற சொல் “ஸப்பஹ” என்ற சொல்லடியில் உள்ளதாகும். “ஸப்பஹ” என்றால் “ஸுப்ஹானல்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்று பொருள் வரும். இதேபோல் “ஸபஹ” سَبَحَ என்ற சொல்லுக்கும் இதே பொருள் உண்டு. அல்லது سَبَّحَ என்ற சொல்லுக்குப் பொதுவாக புகழ்ந்தான், துதித்தான் என்ற பொருளும் உண்டு.
இவ்விபரத்தின் மூலம் அக் கற்கள் “ஸுப்ஹானல்லாஹ்” என்று, அல்லது வேறு சொல் மூலம் அல்லாஹ்வை துதித்தன என்றும், இரைச்சல் சத்தத்தை விடத் தெளிவாக அவை மொழிந்தன என்றும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெருமானார் அவர்கள் முதலில் கற்களை எடுத்து தங்களின் கையில் வைத்தார்கள். அவை அவர்களின் கையிலிருந்து கொண்டே அல்லாஹ்வைத் துதித்தன. பின்னர் அவற்றை எடுத்து கீழே வைத்த போது அவை “தஸ்பீஹ்” செய்வதை நிறுத்திக் கொண்டன. இதன் மூலம் பெருமானாரின் திருக்கரத்தின் அருளையும், சக்தியையும் புரிய முடிகிறது. அவர்களின் கையின் அருளால்தான் கற்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தனவேயன்றி அக்கற்கள் சுயமாகப் புகழவில்லை என்பதும், இதேபோல் அக்கற்களை மேலே குறித்த மூன்று “கலீபா”க்களினதும் கைகளில் வைத்த போதும் அவை “தஸ்பீஹ்” செய்தன என்பதும், அவற்றை எடுத்துக் கீழே வைத்த போது அவை “தஸ்பீஹ்” செய்வதை நிறுத்திக் கொண்டன என்பதும் விளங்கப்படுகின்றன.
உலக வரலாற்றில் உலகில் தோன்றிய எந்த ஒரு மனிதனின் கையில் கற்கள் பேசியதற்கு வரலாறுண்டா? “கலீபா”க்கள் மூவரின் கைகளில் கற்கள் பேசியதும் பெருமானாரின் கையிலுள்ள அல்லாஹ்வின் “மின்” சக்தி கொண்டேயாகும் என்பதும் தெளிவாகின்றன.
இவ்வாறு செய்து முடித்த பெருமானார் அவர்கள் இறுதியில் هذه خلافة النبوّة – இது நபித்துவத்தின் “கிலாபத்” பிரதிநிதித்துவம் என்று அருளினார்கள். ஸுப்ஹானல்லாஹ்! அருள் நபீயின் மகிமையை என்னென்று சொல்வது?
இன்றுள்ள ஷெய்குமார்களோ, உலமாஉகளோ, முப்தீகளோ, இதை எழுதும் அப்துர் றஊபோ கற்களை கையால் எடுத்து “தஸ்பீஹ்” செய்ய வைப்பார்களா? இன்னும் இவர்களில் எவரும் கல்லைக் கதைக்க வைக்கும் கட்டத்திற்குச் செல்லவில்லை. இதற்கான காரணம் இன்னும் மேற்கண்ட இவர்கள் உரிய இடத்தை அடையவில்லை என்பதேயாகும்.
பெருமானார் அவர்கள் மேற்கண்ட மூவரின் கைகளிலும் கற்களை வைத்து ஒரு “முஃஜிஸத்” அற்புதத்தை வெளிப்படுத்தி விட்டு “இது நபித்துவத்தின் பிரதிநிதித்துவம்” என்று சொன்னதன் மூலம் அவர்கள் மூவரும் பெருமானாரின் “கலீபா”க்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.
இத்தகைய சக்தி பெற்ற பெருமானார் அவர்களையும், அவர்களின் “கலீபா”க்களையுமே நற் பாக்கியமற்ற வஹ்ஹாபீகள் தூக்கியெறிந்து பேசுகிறார்கள். அவர்களை “பித்அத்” காரர்கள் என்று ஏசுகிறார்கள். நபீ பெருமானார் அவர்களின் நான்கு “கலீபா”க்களும் பல “பித்அத்” செய்ததற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இதனால்தான் என்னவோ தொன்று தொட்டு வெள்ளிக்கிழமை “குத்பா” ஓதும்போது நான்கு “கலீபா”க்களின் பெயர்கள் சொல்வதைக் கூட நிறுத்திவிட்டார்கள். வஹ்ஹாபீகள் இந்த அளவு வரம்பை மீறிச் செல்வதற்கான காரணம் தம்மை “ஸுன்னீ”கள் என்று சொல்லும் போலி உலமாஉகளின் மௌனமும், அவர்களுக்கு இவர்கள் வழங்கும் ஒத்துழைப்புமேயாகும்.
ஒரு வஹ்ஹாபீ ஜும்ஆப் பிரசங்கத்தில் குத்பு நாயகம் அவர்களையும், பெருமானார் அவர்களையும் தரக் குறைவாகப் பேசுகிறான். ஸுன்னீ உலமாஉகளோ தலையசைத்துக் கொண்டு மௌனிகளாக உள்ளனர். பின்னர் தொழுகையில் அவனைப் பின்பற்றித் தொழுதுவிட்டும் செல்கிறார்கள். இவர்களிடம் யாராவதொருவன் பிரசங்கம் செய்தவர் பெருமானார் அவர்களையும், அவர்களின் தோழர்களையும் தரக் குறைவாகப் பேசினாரே! என்று கேட்டால் அவன் கெட்டான் வஹ்ஹாபீ என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் விடுகிறார்கள். இவர்கள்தானா பெருமானாரின் வாரிசுகள்? இவர்கள்தானா இஸ்லாம் மார்க்கத்தைக் கட்டியெழுப்பும் மகான்கள்?
كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
“பித்அத்” அனைத்தும் வழிகேடு என்ற நபீ பெருமானார் அவர்களின் அருள் வாக்கைப் பிழையாக விளங்கிக் கொண்டு முஸ்லிம்களை வழி கெடுக்கும் இவர்களை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவேயாகும். உலமா சபை முன் வந்தால் வஹ்ஹாபிஸத்தை ஒழித்துக் கட்ட முடியும். ஆனால் அவர்கள் முன் வரமாட்டார்கள். வஹ்ஹாபிகளைத் திருத்து முன் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஸுன்னீ உலமாஉகளையே திருத்த வேண்டும்.
சொற்கள் தெளிவு:
மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள சில சொற்களுக்கான தெளிவு.
خَلَوَاتْ
என்ற சொல் خَلْوَةٌ என்ற சொல்லின் பன்மையாகும். இதற்கு தனித்திருத்தல், தனித்திருக்கும் இடம் என்று பொருள்.
حَصَاةٌ
என்ற சொல்லின் பன்மை حَصَيَاتٌ என்று வரும். இதற்கு கற்கள் என்று பொருள்.
سَبَّحَ
என்றால் “ஸுன்ஹானல்லாஹ்” என்று சொன்னான் என்றும் பொருள் வரும். பொதுவாக அல்லாஹ்வை துதித்தான் என்றும் பொருள் வரும். இதேபோல் سَبْحَنَ என்றாலும் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னான் என்று பொருள் வரும்.
حَنِيْنْ
என்றால் முனக்கம். அனுக்கம் என்று பொருள் வரும். இரைச்சல் என்ற பொருளும் இதற்கு உண்டு.
خَرَسَ
என்றால் பேச முடியாமற் போனான் என்று பொருள்.
மேற்கண்ட எனது விளக்கத்தில், சொற்பிரயோகத்தில் பிழையிருந்தால் எனக்கு அறிவிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனைக்கும் அடி சறுக்கும்.