தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اَلْأَفَاعِي الْمَسْمُوْمَةُ
மனிதனை ஆன்மிக வழி செல்ல விடாமல் தடுக்கும் நச்சுப் பாம்புகள் அதிகம் உள்ளன. ஆயினும் அவற்றை ஞான மகான்கள் சுருக்கி எழுபதென்று கூறியுள்ளார்கள். அவற்றிற் சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
முதலாவது விஷப் பாம்பு:
“ஙெய்ரிய்யத்” “ஹக்” வேறு, “கல்க்” வேறு என்ற உணர்வு அல்லது நம்பிக்கையானது நச்சுப் பாம்புகளில் மிகக் கொடியது. அது சென்ற வழியால் சென்றவனும் செத்துவிடுவான். மிக ஆழமாக ஆய்வு செய்தால் இதுவே மிகக் கொடிய “ஷிர்க்” என்று தெளிவாகும். இந்த வகை “ஷிர்க்” சிலை வைத்து வழிபடுவதை விடக் கொடியது. இத் தத்துவம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்கு தெரியாமலிருப்பது வேதனைக்குரியதாகும். ஒரு விடயம் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் திருக்குர்ஆன் கூறும் சரியான வழியேயன்றி தூர நின்று கொண்டும், சட்டக் கலையை மட்டும் கற்றுக் கொண்டும் தான் மட்டும்தான் சகல கலா வல்லவன் என்று எண்ணிக் கொண்டிருப்பது அழிவுக்கு வழி செய்யுமேயன்றி அறிவைத் தராது.
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
“நீங்கள் அறியாதவர்களாயின் அறிந்தவர்களிடம் கேளுங்கள்” என்பதுதான் இறை வழிகாட்டலேயன்றி சந்திகளிலும், சந்தைகளிலும், மற்றும் “மின்பர்” மேடைகளிலும், “மீலாத்” மேடைகளிலும் நின்று கொண்டு கூச்சலிடுவதும், “பத்வா” வழங்கி கொலைக் கும்பல்களான இரத்த வெறிபிடித்த “மினி மறுவா”க்களை கொலைக்குத் தூண்டுவதும் இஸ்லாமிய வழி காட்டல் அல்ல. இது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முகம் கொடுக்க முடியாது போன “நும்றூத்” என்பவனினதும், நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முகம் கொடுக்க முடியாது போன “பிர்அவன்” என்பவனினதும் செயலாகும். உலமாஉகளின் இச் செயல் பின்னொரு காலத்தில் உலமாஉகள் أباليس – “அபாலீஸ்”களாயும், فَرَاعِنَةْ – “பறாஇனா”க்களாயும் மாறிவிடுவார்களோ என்று எண்ணத் தோணுகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். حفظني الله والعلماء
உலமாஉகள் சுட்ட வடை உறைப்பு, உப்பு இல்லாத பச்சத் தண்ணி வடை. இவர்களுக்கு வடை சுடத் தெரியாவிட்டால் தெரிந்தவர்கள் மூலம் அதன் விபரத்தை அறிந்த பின் சுட வேண்டும். اَلْعِلْمُ بِالتَّعَلُّمِ “கல்வி என்பது அதைக் கற்பது கொண்டே கிடைக்கும்” என்ற நபீ மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும். கற்க வேண்டிய அறிவை கற்றுக் கொள்ளாமல் அதைக் கிண்டல் செய்வது பெருங்குற்றம். தன் பெயரே கேள்விக் குறியான “ஆலிம் ஷா” ஒருவர் “என்ன இவன் றஊபு எந்த நேரமும் தஜல்லீ, தஜல்லீ என்று கத்திக் கொண்டிருக்கிறான்” என்று சீறினாராம். நான் அவ்வாறு பேசிக் கொண்டுதான் இருக்கின்றேனேயன்றி கத்திக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அவர் கத்துதலுக்கும், பேசுதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாமல் சீறுகிறார். இவர் உளத் தூய்மையை வளர்க்கவுமில்லை, இறைஞானத்தை வளர்க்கவுமில்லை.
பரிதாபம் அந்தோ!
இவர் வேறு வேறென்ற வேற்றுமைத் தீயில் எரிந்தது போதும். இனியாவது “வேறல்ல” எனும் “கூழ் பார்” வந்தாராயின் இவர் சுவர்க்கம் செல்வது “சுவர்”தான்.
இந்த விஷப் பாம்பால் தீண்டப்பட்டவர்கள்தான் முஸ்லிம் அல்லாதவர்களும், முஸ்லிம்களில் “ஸூபிஸ ஞானம்” கற்றுக் கொள்ளாதவர்களுமாவர். ஸூபீ மகான்களின் பார்வையில் இவ்விரு பிரிவினரும் நரகமே செல்வர். இவர்களில் முஸ்லிம்கள் தொழுபவர்களாயினும், நோன்பு வைப்பவர்களாயினும், மற்றும் மார்க்க அனுஷ்டானங்கள் பேணுபவர்களாயினும், கற்றறிந்த முல்லாக்களாயினும், “தப்லீக்” அமைப்பினராயினும் சரியே! ஸூபீ மகான்களின் தீர்க்கமான முடிவு இதுதான்.
இன்று படித்தவர்கள் உள்ளிட்ட பலர் சொல்வது என்னவெனில், (ஐங்காலமும் தொழுது கொண்டும், “ஹலால் – ஹறாம்” பேணியும் நடந்து கொண்டால் போதும். வேறொன்றும் தேவையில்லை. ஞானமும் தேவையில்லை, ஆணமும் தேவையில்லை) என்பதாகும். இவ்வசனத்தைக் கடலில் எறிந்தால் கூட கடலே நாற்றமெடுத்துவிடும். இவ்வாறு சொல்வோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு படித்த பட்டதாரிகள் பலரும், முல்லாக்களில் பலரும் கூட என்னிடம் கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவது ஒன்றோ தமது அறியாமையாகும். அல்லது மன முரண்டாகும். அறியாமையை அறிவைக் கொண்டு அகற்றலாம். ஆயினும் மன முரண்டிற்கு மருந்தே கிடையாது.
இவ்வாறு சொல்வோர் பலமாக அத்திவாரமிடாமல் பல மாடிக் கட்டிடங்கள் கட்டுபவர்களாவர். எந்த ஒரு கட்டிடமாயினும் அதற்கு அத்திவாரம் அவசியமே! ஆயினும் அத்திவாரம் மாடிக் கேற்றவாறு அமைய வேண்டும்.
தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் போன்ற கடமையான மாடிகளும் குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல், திக்ர் செய்தல், மற்றும் நற் கிரியைகள் செய்தல் போன்ற கடமையில்லாத மாடிகளும் “ஈமான்” என்ற அத்திவாரத்திலேயே எழுப்ப வேண்டியவையாகும்.
எனவே, “ஈமான்” நம்பிக்கை – விசுவாசம் என்ற அத்திவாரம் அவசியமாகும். அது அதன் மீது எழுப்பவுள்ள மாடிகளைப் பொறுத்து பலமாக இருப்பதும் அவசியமாகும்.
“ஈமான்” விசுவாசம் என்ற அத்திவாரத்தின் ஓர் அம்சம்தான் ஒரு முஸ்லிம் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” என்றால் என்னவென்று அறிந்திருப்பதாகும். இதை அறியாதோர் என்னதான் வணக்கம் செய்தாலும் அது எடுபடாது. இன்னோரின் வணக்கங்கள் கூட யானை சாப்பிட்ட விழாங் கனிகள் போலவே இருக்கும். வெளித் தோற்றத்தில் விழாம் பழம் போன்று தெரிந்தாலும் உள்ளே கனி இருக்காது. இதேபோல் பார்வையில் மட்டும் வணக்கமாயிருந்தாலும் கூட எதார்த்தத்தில் வெறுங்கோதாகவே இருக்கும். வீணான செயலாகவே இருக்கும். இது தொடர்பாக இறைஞானி ஒருவர் பின்வருமாறு பாடியுள்ளார்.
இருக்கு முதலெல்லாம் கொடுத்திட்டாலும்
இரவு பகலெல்லாம் வணங்கிட்டாலும்
வருட முழு நோன்பு பிடித்திட்டாலும்
வரிசை ஹஜ்ஜதை செய்திட்டாலும்
ஹறதத்தில் கிதாபெல்லாம் ஓதிட்டாலும்
அநேக நன்மைகள் செய்திட்டாலும்
கருத்தில் இது ரெண்டை அறியாதவர்
கொடிய நரகத்திற்கிரையாவரே!
என்று.
இவர் குறிப்பிடும் இரு அம்சங்களும் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞான நூல்களில் மட்டும் தான் கூறப்படுமேயன்றி “பிக்ஹ்” சட்ட நூல்களிலோ, “ஹதீது” நபீ மொழி நூல்களிலோ கூறப்படமாட்டாது.
இன்று வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் “தன்ஸீஹ்” பற்றி மட்டுமே அறிந்துள்ளார்கள். “தஷ்பீஹ்” பற்றி ஒரு மண்ணளவும் அவர்களுக்குத் தெரியாது. ஸூபிஸம் அறிந்தவர்கள் தவிர ஏனையோர் மேற்கண்ட இரண்டு அம்சங்களும் தெரியாதவர்களாகவே உள்ளனர். இது பொது மக்களின் நிலையாகும். ஆனால் உலமாஉகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானோர் மேற்கண்ட இரண்டு அம்சங்கள் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களை அறியாதவர்களாகவே உள்ளனர். இவ்வாறு நான் எழுதுவதால் நான் கர்வமுள்ளவன், பெருமையுள்ளவன் என்று எவரும் கணித்து விடாதீர்கள். ஸூபிஸ உலமாஉகளை என் தலை மீது சுமப்பதற்கும் நான் முழு மனதுடன் உள்ளேன். ஆனால் ஸூபிஸ ஞானத்தை – “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை எதிர்ப்பவர்களை மனிதர்களாகக் கணக்கெடுப்பதற்கும் நான் தயாராக இல்லை. இவ்வாறு எதார்த்தம் பேசுகிறதேயன்றி நான் பேசவில்லை. யார் எதிர்த்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் இதுவே எதார்த்தமும், தத்துவமுமாகும். எனக்கு இந்நாட்டில் பேச்சுரிமை உண்டு. பேசுகிறேன். எழுத்துரிமை உண்டு. எழுதுகிறேன். என் உரிமையைத் தடுக்க எவராலும் முடியாது. தடுப்பவர்கள் தமது தவறையுணர்ந்து திருந்த வேண்டும். இன்றேல் அவர்கள் அல்லாஹ்வின் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
ஸூபிஸம் – “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் தெரியாதவர்களில் உலமாஉகள் மட்டும் என்னிடம் வந்து சில நாட்கள் தங்கியிருந்து கற்றுக் கொள்ளுமாறு அழைத்தேன். தங்கியிருக்கும் காலத்தில் மூன்று வேளை உணவும், தங்குமிட வசதியும் தருவதாகச் சொன்னேன். என் அழைப்பு அவர்களின் செவிகளைத் துளைக்கவில்லை போலும். அல்லது அவர்கள் செவிடர்களாகிவிட்டார்கள் போலும். எவரிடமிருந்தும் எந்த ஒரு பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னது போல் நானும் சொல்ல வேணும் போல் எனக்குத் தோணுகிறது.
إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا، فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا،
அவர் – நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தும் அவரைப் புறக்கணித்து விடவே, என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை இரவிலும், பகலிலும் அழைத்தேன்.
அப்போது என்னுடைய அழைப்பு அவர்களுக்கு வெருண்டோடுவதையே தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை. (நூஹ் அத்தியாயம், வசனம்: 5, 6)
நான் இவர்களை அழைப்பது இவர்களை மனிதர்களாக்குவதற்காகவும், இவர்கள் சுவர்க்கவாதிகளாவதற்காகவும், இவ் அழைப்பு மறுமையில் எனக்கு சாதகமான ஒரு சான்றாக இருப்பதற்காகவுமேயாகும். “தஸவ்வுப்” – ஸூபிஸம் “குப்ர்” என்றும், வழிகேடு என்றும் சொல்கின்ற உலமாஉகளே! நான் பேசி வருகின்ற இறைஞான தத்துவத்தை என் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் 31.12.2023ம் திகதிக்கு முன் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது வேறு ஞான மகான்களை அணுகி அற்புதமான இவ்வறிவை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்களும் இவ் அறிவை அறிந்து கொள்ள வேண்டுமென்பதுதான் எனது குறிக்கோளேயன்றி என்னிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ، أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا இறைஞானம் ஒரு விசுவாசியின் காணாமற் போன ஒன்று. அவன் அதை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் மேலே குறிப்பிட்ட திகதிக்குப் பின் “பத்வா” தொடர்பாக வெளிநாடுகள் செல்ல இருக்கிறேன் என்பதை உங்களின் கவனத்திற்கு தருகிறேன்.
மனிதனின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள மறு விஷப் பாம்பு اَنِّيَّةْ “அன்னிய்யத்” எனும் நான் என்ற உணர்வாகும்.
தொடரும்…