தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கப்றுகளை முத்தமிடுவது ஆகுமா? ஆகாதா?
மார்க்கம், “பத்வா” என்ற பெயர்களால் முஸ்லிம்களிடையே பிளவையும், பிரச்சினைகளையும், கருத்து முரண்பாடுகளையும் உருவாக்கி முஸ்லிம் சமூகத்தின் சக்தியை – பலத்தை குறைப்பதற்கும், நாட்டையும், நாட்டு மக்களையும் சீர் குலைப்பதற்கும் திட்டமிட்டு வருகின்ற தீவிரப் போக்குள்ள வஹ்ஹாபிகளின் மாய வலையில் முஸ்லிம்கள் மாட்டித் தவிக்காமல் இருப்பதற்காக வஹ்ஹாபிகள் கூறிவரும் மார்க்க முரணான கருத்துக்களுக்கு நான் எழுத்து மூலமும், பேச்சு மூலமும் மறுப்புக் கூறி வருகின்றேன். இது என் கடமை.
அந்த வகையில் வஹ்ஹாபிஸக் கொள்கையை ஆதாரங்களுடன் எதிர்த்து “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் சுமார் 1600 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குறித்த நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.
நபீமார், றஸூல்மார், வலீமார், ஸூபீமார் ஆகியோரின் கப்றுகள் – சமாதிகளை அவர்களின் “பறகத்” அருளை நாடி முத்தமிடும் வழக்கம் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இலங்கை நாட்டில் இமாம்கள் போல் பரந்த அறிவும், திறமையுமுள்ள உலமாஉகள் இருந்தும் கூட அவர்களில் எவரும் இதை “ஷிர்க்” என்றோ, “ஹறாம்” என்றோ சொல்லவில்லை. அதோடு இதை சர்ச்சைக்குரிய விடயமாகக் கூட எவரும் கருதவுமில்லை. நினைக்கவுமில்லை. அது பணத்திற்கு அடிமையாகாத உலமாஉகள் வாழ்ந்த காலம்.
எனினும் குல்லாப் போடாத நவாபுகள் – குழப்பவாதிகள் தலை நீட்டிய பிறகுதான் இது “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. மலரின் அழகு கண்டு அதை முத்தமிடுதல் “ஷிர்க்” ஆகுமா? பாலருந்தும் பச்சிளங்குழவியில் தெய்வீகத் தன்மைகள் கண்டு அதை முத்தமிடுதல் “ஷிர்க்” ஆகுமா?
எனவே, இது தொடர்பாக நான் அறிந்த கருத்துக்களை முஸ்லிம் மக்கள் மத்தியில் முன்வைக்கிறேன். ‘வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தலைப்புக்களில் “கப்றுகளை முத்தமிடுவது ஆகுமா? ஆகாதா?” என்ற தலைப்பில் இருந்து சில ஆதாரங்கள் எடுத்து எழுதுகின்றேன்.
عَنْ دَاوُدَ بْنِ أَبِي صَالِحٍ، قَالَ: أَقْبَلَ مَرْوَانُ يَوْمًا فَوَجَدَ رَجُلًا وَاضِعًا وَجْهَهُ عَلَى الْقَبْرِ، فَأَخَذَ بِرَقَبَتِهِ وَقَالَ: أَتَدْرِي مَا تَصْنَعُ؟ قَالَ: نَعَمْ، فَأَقْبَلَ عَلَيْهِ فَإِذَا هُوَ أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ آتِ الْحَجَرَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تَبْكُوا عَلَى الدِّينِ إِذَا وَلِيَهُ أَهْلُهُ، وَلَكِنِ ابْكُوا عَلَيْهِ إِذَا وَلِيَهُ غَيْرُ أَهْلِهِ» (أخرجه الحاكم فى المستدرك 8571 وقال صحيحُ الإسناد، ووافقه الذّهبيُّ)
தாஊத் இப்னு அபீ ஸாலிஹ் பின்வருமாறு கூறினார்கள். ( “மர்வான்” என்பவர் திரு மதீனா பள்ளிவாயலுக்கு வந்தார். அவ்வேளை யாரோ ஒருவர் தனது முகத்தை பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “கப்ர்” – சமாதி மீது வைத்திருந்தது கண்டு அவரின் பிடரியைப் பிடித்து உயர்த்தி நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா? என்று அவரிடம் கேட்டார்.
அவ்வேளை அவர் தனது பிடரியை பிடித்த மர்வானை திரும்பிப் பார்த்தார். அப்போதுதான் அவர் நபீ தோழர் அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு என்று மர்வானுக்கு தெரிய வந்தது. மர்வானை கோபத்துடன் பார்த்த அபூ ஐயூப் அவர்கள் (ஆம், நான் வெறும் கல்லிடம் வரவில்லை., மாறாக கருணை நபீயிடமே வந்துள்ளேன் என்று கூறிவிட்டு ஒரு சமயம் நபீயவர்கள், “மார்க்கத்தின் அதிகாரியாக அதற்குத் தகுதியானவர் இருந்தால் அதற்காக நீங்கள் அழாதீர்கள். ஆயினும் அதற்குத் தகுதியில்லாதவர் அதிகாரியானால் அதற்காக நீங்கள் அழுங்கள்” என்று சொன்னதை நான் நேரில் செவியேற்றிருக்கின்றேன் என்று வீரம் தொனித்த குரலில் கூறினார் நபீ தோழர் அபூ ஐயூப் அவர்கள்.
(ஆதாரம்: அல்முஸ்தத்றக், ஆசிரியர்: அல் ஹாகிம், ஹதீது இல: 8571, இது “பலமான ஹதீது” என்று ஹாகிம், தஹபீ அறிவிப்பு)
இந்த நிகழ்வு திரு மதீனா நகரின் அதிகாரியாக மர்வான் இருந்த சமயம் நிகழ்ந்ததாகும்.
இந்த ஹதீதின் வசன அமைப்பின் மூலம், கப்றின் மீது முகத்தை வைத்துக் கொண்டிருந்தவர் நபீ தோழர் அபூ ஐயூப் என்பதை மர்வான் அறியாமலேயே அவரின் பிடரியைப் பிடித்தார் என்பது விளங்குகிறது. மர்வான் அறிந்திருந்தால் அவர் அதிகாரியாக இருந்தாலும் கூட அவ்வாறு நடந்திருக்கமாட்டார் என்பதும் விளங்குகிறது. ஏனெனில் நபீ தோழர் அபூ ஐயூப் யாரென்று மர்வானுக்கு நன்றாகவே தெரியும். தெரியாமலிருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அபூ ஐயூப் அவர்கள் அன்ஸாரீன்களில் ஒருவர் என்பதும், பிரசித்தி பெற்ற நபீ தோழர் என்பதும், நபீ பெருமானை நெருங்கி வாழ்ந்த கண்ணியத்திற்குரிய ஸஹாபீ என்பதும், இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற “பத்ர்” யுத்தம் தொடக்கம் அநேக போர்களில் கலந்து கொண்ட தோழர் என்பதும் அதிகாரி மர்வானுக்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆழமறியாமற் காலை வைத்துவிட்டார். அவ்வளவுதான்.
அவர் யாரென்று மர்வான் அறிந்து கொண்ட பிறகாவது அவருக்கு உரிய இடம் கொடுக்காமல் விட்டது அவரின் அறிவின்மையையும், பதவித் திமிரையும், அவரின் கர்வப் போக்கையுமே எடுத்துக் காட்டுகிறது. அதோடு பெருமானார் யாரென்று மண்ணளவேனும் அவர் அறியாமலிருந்தது அவரின் “உஜுப்” என்ற தற் பெருமையையும், தலைக்கனத்தையுமே காட்டுகிறது.
அதே போல் இந்த நிகழ்வு நபீ தோழர் அபூ ஐயூப் அவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது வைத்திருந்த உச்சக்கட்ட “மஹப்பத்” அன்பையும், எந்த ஓர் அதிகாரியாயினும், அரசனாயினும் அவனுக்கு அஞ்சாமல் சத்தியத்தை சத்தியமாகச் சொன்ன அவர்களின் துணிவையும் எடுத்துக் காட்டுகிறது.
அதேபோல் ஒரு நபீயின் “கப்ர்” சமாதியை அதில் முகம் பதித்தும், முகம் புதைத்தும் முத்தமிடலாம், அதை கையால் தொட்டு கையை முத்தமிடலாம், அவ்வாறு முத்தமிடுவதைப் பிழை கண்டு முத்தமிட்டவனைத் தண்டித்தவன் எவனாயினும் அவனை உறுக்கிப் பார்க்கலாம், எதிர்த்தும் பேசலாம் என்ற உண்மைகளையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ பெருமான் அவர்களுடன் பல இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு திருக்கலிமாவுக்காக போர் செய்த பெரு மகன். பல்லாண்டுகள் நபீயிறஸூல் நாயகமவர்களுடன் நெருங்கி வாழ்ந்த “ஸஹாபீ” நபீ தோழர், அவரின் பெயர் கேட்டால் றழியல்லாஹு அன்ஹு என்ற “துஆ” பிரார்த்தனைக்குப் பாத்திரமானவர். தனது வீட்டில் விஷேட உணவு தயாரித்தால் முதலில் பெருமானார் அவர்களுக்கு அனுப்பி அவர்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவை எடுத்து அதில் எந்த இடத்தில் பெருமானாரின் கை விரல்கள் பட்டிருந்தனவோ அந்த இடங்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களின் அருளை – “பறகத்”தை நாடி அதே இடத்தில் தனது கை விரல்கள் வைத்து சாப்பிட்ட பெருமானாரின் காதலரும் ஆவார்.
ஒரு நாள் அண்ணலெம் பெருமானுக்கு தனதில்லத்தில் தயாரித்த விஷேட உணவை அனுப்பி வைத்துவிட்டு எஞ்சிய உணவு வரும் வரை காத்திருந்து வந்தபின் அவர்களின் திரு விரல்கள் பட்ட இடத்தை தேடினார் அபூ ஐயூப். ஓர் அடயாளம் கூட இருக்கவில்லை., நபீயவர்கள் சாப்பிடாமல் திருப்பியனுப்பிவிட்டார்களோ! ஏனோ அவ்வாறு செய்தார்கள் என்றெண்ணி கண்ணில் நீர் சொட்டிய நிலையில் நபீகளாரிடம் வந்து,
يَا رَسُوْلَ اللهِ! كُنْتَ تُرْسِلُ إِلَيَّ بِالطَّعَامِ،فَأَنْظُرُ فَأَضَعُ أَصَابِعِيْ حَيْثَ أَرَى أَثَرَ أَصَابِعِكَ حَتَّى كَانَ هَذَا الطَّعَامُ، قَالَ (اَجَلْ إِنَّ فِيْهِ بَصَلًا فَكَرِهْتُ أَنْ آكُلَ مِنْ اَجْلِ الْمَلَكِ، وَأَمَّا أَنْتُمْ فَكُلُوْا،
அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவை எனக்கு அனுப்புவீர்கள். அதில் உங்களின் திருவிரல் பட்ட இடத்தை தேடி அந்த இடத்தில் எனது விரலை வைத்து சாப்பிடுவேன். இந்த உணவில் சாப்பிட்டதற்கான அடயாளம் இருக்கவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். அதில் வெங்காயம் கலந்திருந்ததால் மலக்குகளுக்காக அதை நான் சாப்பிட விரும்பவில்லை., நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம்: அல் இஸாபா, ஆசிரியர்:இப்னு ஹஜர் அஸ்கலானீ, பக்கம்: 320, 321.)
குறிப்பு: மலக்குகளுடன் தொடர்போடிருப்பவர்கள் வெங்காயம், வெந்தயம், உள்ளி போன்ற வெறுக்கத் தக்க நாற்றமுள்ள வற்றை சாப்பிடமாட்டார்கள். இவற்றை பச்சையாக சாப்பிடுவதை முற்றாக தவிரக்க வேண்டும்.
பெருமானாரின் கை விரல் பட்ட இடத்தில் தங்களின் விரல்பட வேண்டும் என்ற அளவு பெருமான் மீது காதல் கொண்டிருந்தவர்தான் அபூ ஐயூப் அவர்கள்.
إِنَّ أَبَا أَيُّوْبَ أَخَذَ مِنْ لِحْيَةِ رَسُوْلِ اللهِ شَيْئًا، فَقَالَ لَهُ لَا يُصِيْبُكَ السُّوْءُ أَبَا أَيُّوْبَ! (الإصابة لابن حجر العسقلاني، ص – 321 )
ஒரு சமயம் நபீகளாரின் தாடி முடியில் சில முடிகளை அபூ ஐயூப் எடுத்து தங்களுடன் வைத்துக் கொண்ட போது அபூ ஐயூபே! உங்களுக்கு ஒரு துன்பமும் வராதென்று பெருமான் அவர்களால் வாழ்த்தப்பட்டவர்தான் அபூ ஐயூப்.
ஆதாரம்: அல் இஸாபா, ஆசிரியர்: இப்னு ஹஜர் அஸ்கலானீ, பக்கம்: 321
عَنْ أَبِيْ أَيُّوْبَ قَالَ : لَمَّا قَدِمَ النَّبِـيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِيْنَةَ اِقْتْرَعَتِ الْأَنْصَارُ أَيُّهُمْ يُؤْوِيْهِ؟ فَقَرَعَهُمْ أَبُوْ أَيُّوْبَ،
அபூ ஐயூப் கூறுகிறார்கள். நபீகட்கரசர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மதீனா நகருக்கு “ஹிஜ்றத்” வந்த போது அவர்கள் எங்கு தங்கியிருப்பது என்பதை முடிவு செய்வதற்காக சீட்டுக் குலுக்கினார்கள். அபூ ஐயூப் அவர்களுக்கே அது கிடைத்தது.
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர் அபூ ஐயூப் அவர்களின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் மதீனா பள்ளிவாயல் கட்டுவதற்கு ஏற்பாடு நடந்தது.
மேற்கண்ட சிறப்புகளுக்குரிய “ஸஹாபீ” நபீ தோழர் “கப்ர்” சமாதியை முத்தமிடுவது “ஷிர்க்” ஆன, பாவமான விடயமாக இருந்தால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். வஹ்ஹாபிஸத்தின் இரு இப்னுகள் எந்த வகையிலும் நபீ தோழரை விட சிறந்தவர்களாக இருக்க முடியாது.
வஹ்ஹாபிகளே!
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆளைக் கடித்தல் என்பதுபோல் நீங்கள் பெரும் பெரும் ஸஹாபாக்கள் – நபீ தோழர்களை “முஷ்ரிகீன்” இணை வைத்தவர்கள் என்று மறைமுகமாகச் சொல்கின்றீர்கள். “கப்ர்” சமாதியை முத்தமிடுபவர்களை “கப்று முட்டி” என்று நையாண்டி பண்ணும் நீங்கள் ஸஹாபீ அபூ ஐயூப் அவர்களையும் “கப்ர் முட்டி” என்று சொல்லமாட்டீர்களா? “ஈமான்” பறந்து விடும் சொல்லாதீர்கள். இல்லை தாராளமாகச் சொல்லுங்கள். ஈமான் பறப்பதற்கு அது இருந்தால்தானே!
رُوِيَ عَنْ عَلِـيّ بْنِ أَبِيْ طَالِبٍ قَالَ: ‘قَدِمَ عَلَيْنَا أَعْرَابِـيٌّ بَعْدَمَا دَفَنَّا رَسُوْلَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةِ أَيَّامٍ، فَرَمَى بِنَفْسِهِ عَلَى قَبْرِ النَّبِـيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ، وَحَثَا مِنْ تُرَابِهِ عَلَى رَأْسِهِ، وَقَالَ: يَا رَسُوْلَ اللهِ قُلْتَ فَسَمِعْنَا قَوْلَكَ، وَوَعَيْتَ عَنِ اللهِ، فَوَعَيْنَا عَنْكَ، وَكَانَ فِيْمَا أَنْزَلَ الله عَلَيْكَ: {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّاباً رَحِيماً} ، وَقَدْ ظَلَمْتُ نَفْسِيْ وَجِئْتُكَ تَسْتَغْفِرُ لِيْ فَنُوْدِيَ مِنَ الْقَبْرِ: أَنَّهُ قَدْ غُفِرَ لَكَ، (كنز العُمّال، ج – 2، ص – 248، وفاء الوفاء، ج – 2، ص – 1361 )
அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “வபாத்” மரணித்து அடக்கம் செய்து மூன்று நாட்களின் பின் கிராமவாசியான ஓர் அறபீ அவர்களின் “கப்ர்” சமாதிக்கு வந்து அதில் விழுந்து அந்த மண்ணை எடுத்து தலையில் போட்டுக் கொண்டவராக அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் செவியேற்றோம். அல்லாஹ்வைப் பற்றி அறிவித்தீர்கள். உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.
அல்லாஹ் உங்களுக்கு அருளிய திருக்குர்ஆனில் “அவர்கள் – மனிதர்கள் தமக்கு அநீதி செய்து – பாவம் செய்து உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டு, றஸூல் ஆகிய நீங்களும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்தவனாகவும், கிருபை உள்ளவனாகவும் அவனைக் கண்டு கொள்வார்கள்” என்று கூறியுள்ளான்.
நான் எனக்கு அநீதி செய்து நீங்கள் எனக்கு பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் வந்துள்ளேன்) என்று கூறினார். அவ்வேளை உனது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று சமாதியில் இருந்து ஒரு சத்தம் கேட்டது.
(ஆதாரம்: கன்ஸுல் உம்மால், பாகம்: 02, பக்கம்: 248, ஆதாரம்: வபாஉல் வபா, பாகம்: 02, பக்கம்: 1361)
இத்தகவலை நாலாவது கலீபா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
“கப்ர்” சமாதியில் விழுந்து தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டு மேற்கண்டவாறு சொன்னவர் கிராம வாசியான ஓர் அறபீ ஆவார். இவர் நிச்சயமாக ஒரு “ஸஹாபீ” நபீ தோழராகவே இருப்பார். திரு மதீனா நகரிலிருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார். இதனால் பெருமானாரின் “வபாத்” மரணச் செய்தி மூன்று நாட்களின் பிறகுதான் அவருக்கு கிடைத்தது போலும்.
இவர் செய்த வேலை “ஷிர்க்” இணை வைத்தலை ஏற்படுத்தக் கூடிய செயலாயிருந்தால் கலீபா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அச் செயலைப் பார்த்துக் கொண்டு மௌனியாக இருந்திருக்க மாட்டார்கள். எவ்வாறாயினும் அதை தடுத்தே இருப்பார்கள். இதன் மூலம் அவர் செய்தது “ஷிர்க்” இணை வைத்தலை ஏற்படுத்தும் காரியமல்ல என்பது தெளிவாகின்றது.
அது மட்டுமல்ல. இந்த ஹதீதை “கன்ஸுல் உம்மால்” என்ற நூலிலும், “வபாஉல் வபா” என்ற நூலிலும் பதிவு செய்த ஆசிரியர் இருவரும் ஐயூபையும், அஸ்பறையும் போல் முட்டாள்களும் அல்லர், வஹ்ஹாபிகளுமல்லர். அவர்கள் இருவரும் படித்தவர்கள். வரலாற்றாசிரியர்கள். இவர்கள் இருவருக்கும் “ஷரீஅத்” தெரியாது போனாலும் அவர்கள் இருவருக்கும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் எல்லாமே தெரியும்.
வஹ்ஹாபிகளான காக்காமார், அல்லது தம்பிமார் அல்லது சாச்சாமார் போல் அவர்கள் இருவரும் கிணற்றுத் தவளைகளும் அல்லர். அல்லது குண்டாஞ் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களும் அல்லர்.
“கப்ர்” சமாதி மேல் விழுந்து மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொண்டவர் கிராமவாசியாயிருப்பதால் அவருக்கு “ஷிர்க்” தொடர்பான அறிவு இல்லாமற் போனதால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று மகான்கள் இதற்கு நொண்டிச் சாட்டொன்று கூறலாம். ஆனால் இரவு பகலாக நபீ பெருமானாருடன் வாழ்ந்த அபூ ஐயூப் அல் அன்ஸாரீ அவர்கள் கிராம வாசியோ, மார்க்கம் தெரியாதவரோ அல்லவே! இதற்கு என்ன சொல்வார்கள் மகான்கள்?
وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّاباً رَحِيماً
அத்தியாயம்: அந்நிஸா, வசனம்: 64
பெருமானாரின் சமாதியில் விழுந்த நிலையில் கிராம வாசி ஓதிய திருக்குர்ஆன் வசனம் இதுவே. இந்த வசனம் நபீகளாரின் அகமியத்தையும், அவர்களின் உயரிய அந்தஸ்த்தையும் படம் பிடித்துக் காட்டுவது சிந்தனையாளர்களுக்கு சிங்கப்பூர் புரியானியாகும்.
இத் திருவசனத்தின்படி பாவம் செய்த ஒருவன் பெருமானாரிடம் வராமல் அல்லாஹ்விடம் அவன் மன்னிப்புக் கேட்பது கொண்டு அவனின் பாவம் மன்னிக்கப்படாது என்பதும், அவனுக்காக நபீகளார் பாவ மன்னிப்புக் கேட்காமல் அவனின் பாவம் மன்னிக்கப்படாது என்பதும் தெளிவாகிவிட்டன.
பாவம் செய்த ஒருவனின் பாவம் மன்னிக்கப்படுவதாயின் மூன்று நிபந்தனை அவசியமென்று இத்திரு வசனம் கூறுகிறது. ஒன்று. பாவம் செய்தவன் நபீகளாரிடம் வர வேண்டும். இரண்டு. நபீகளார் அவனுக்காக பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். மூன்று. பாவம் செய்த அவனும் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். இம் மூன்று நிபந்தனைகளும் இல்லையென்றால் அவனின் பாவம் மன்னிக்கப்பட மாட்டாது.
இதற்கான தெளிவான விளக்கமும், வஹ்ஹாபிகளின் கண் மூடித்தனமான கூற்றுகளுக்குமான மறுப்பும் ‘வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்’ என்ற 1648 பக்கங்கள் கொண்ட நூலில் உள்ளது.
اَمُرُّ عَلَى جِدَارِ دِيَارِ لَيْلَى – اُقَبِّلُ ذَا الْجِدَارَ وَذَا الْجِدَارَا ، وَمَا حُبُّ الدِّيَارِ شَغَفْنَ قَلْبِيْ – وَلَكِنْ حُبُّ مَنْ سَكَنَ الدِّيَارَا
سَيَأْتِيْ عَلَى الْوَهَّابِيِّيْنَ زَمَانٌ تَمْشِيْ فِيْرَانُ بُيُوْتِهِمْ عَلَى الْعَصَا بِسَبَبِ الْفَقْرِ وَالْفَاقَةِ،