தொடர் 02
தும்மலும், கொட்டாவியும்.
العطاس والتثائب،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عن أبي هريرة عن النبيّ صلى الله عليه وسلم قال: ‘ حَقُّ المُسْلِمِ على المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلامِ، وَعِيادَةُ المَرِيض، وَاتِّباعُ الجَنائِز، وإجابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ العاطِس ‘ (رواه البخاري ومسلم(
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.
(ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஒரு முஸ்லிம் “ஸலாம்” சொன்னால் அதற்குப் பதில் சொல்லுதல், நோயாளியை நோய் வினவச் செல்லுதல், “ஜனாசா”க்களை தொடர்ந்து செல்லுதல், விருந்தழைப்புக்கு பதில் கூறுதல், தும்மினவனுக்கு பதில் சொல்லுதல்)
ஆதாரம்: புகாரீ 1240, முஸ்லிம் 2162-4.
மேற்கண்ட இந்த நபீ மொழியில் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில நபீ மொழிகளில் ஆறு என்றும் வந்துள்ளன. அது பின்னர் எழுதப்படும்.
01. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கண்டால் அவருக்கு “ஸலாம்” சொல்லுதல்.
அதாவது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நேரில் கண்டால் அவருக்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” اَلسَّلَامُ عَلَيْكُمْ என்று சொல்லுதல் வேண்டும். எவர் முதலில் “ஸலாம்” சொல்கிறாரோ அவருக்கு அதிக நன்மை உண்டு. ஒருவருக்கு “ஸலாம்” சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். ஆயினும் ஒருவர் முதலில் “ஸலாம்” சொன்னால் அவருக்கு “பதில்” சொல்வது கடமையாகும். “ஸுன்னத்” அல்ல.
“ஸலாம்” சொல்லும் விடயத்திலும், அதற்குப் பதில் கூறும் விடயத்திலும் உறவினர் மற்றவர், ஊரவர், வெளியூரவர், அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர், சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடு இல்லை. அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், செல்வந்தன், ஏழை, ஆலிம், ஆலிம் அல்லாதவர் என்ற பாகுபாடும் கிடையாது.
ஒருவரை முஸ்லிம் என்று அறிந்தால் அவருக்கு “ஸலாம்” சொல்ல முடியும். அவர் உறவினராக, அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
யாருக்கு “ஸலாம்” சொல்வதாயினும் اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ “அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு” என்று சொல்வது மிகவும் சிறந்தது. ஆயினும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்னால் போதும். “ஸலாம்” சொன்ன நன்மை கிடைத்து விடும்.
நபீ பெருமானாரிடம் ஒரு மனிதர் வந்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்னார். நபீகளார் பதில் சொன்ன பின் அமர்ந்தார். அப்போது நபீகளார் பத்து என்றார்கள். இன்னொருவர் வந்தார். அவர் “அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்” என்றார். நபீ பெருமானார் அவருக்கு பதில் சொன்னபின் அவரும் அமர்ந்தார். நபீகளார் இருபது என்றார்கள். இன்னுமொருவர் வந்து “அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு” என்று முழுமையாகச் சொன்னார். அவருக்கும் நபீ பெருமானார் பதிலளித்தார்கள். அவரும் அமர்ந்து கொண்டார். நபீகளார் முப்பது என்று கூறினார்கள்.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒன்றுக்குப் பத்து வீதம் நன்மை கிடைக்கும் என்பதாகும்.
“ஸலாம்” சொல்லும் போது “அலிப் லாமுடன்” அஸ்ஸலாமு என்று தொடங்க வேண்டும். வெறுமனே “ஸலாம் அலைக்கும்” என்று சொல்வது கூடாது.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கண்டால் முதலில் “ஸலாம்” சொன்ன பிறகுதான் உரையாட வேண்டும். “அஸ்ஸலாமு அலைக்கும் என்ன மச்சான்” என்று சொல்லலாம். “என்ன மச்சான் அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வது கூடாது. இதேபோல் “ஸலாமலைக்கும்” என்று சொல்வது கூடாது. பொது மக்கள் உலமாஉகளைக் கண்டால் பொது மக்கள்தான் முதலில் ஸலாம் சொல்ல வேண்டும். வயதில் குறைந்தவர்கள் வயதில் கூடியவர்களுக்கு முதலில் “ஸலாம்” சொல்ல வேண்டும். பெற்றோருக்குப் பிள்ளைகளும், பிள்ளைகளுக்குப் பெற்றோர்களும் “ஸலாம்” சொல்ல வேண்டும். மாணவர்கள் முதலில் ஆசிரியருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். இதேபோல் கணவனுக்கு முதலில் மனைவி ஸலாம் சொல்ல வேண்டும்.
“ஸலாம்” சொல்லும் போது பகடி பண்ணும் பாணியில் “ஸலாமலைக்கும்” என்று சொல்லாமல் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பக்தியுடன் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஸலாம் சொல்லும் விடயத்தில் ஏழை, பணக்காரன், உயர் குலத்தான், படித்தவன், படிக்காதவன், ஹாஜி, ஹாஜி அல்லாதவன், மற்றும் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எந்த ஒரு பாகுபாடுமின்றி “முஸ்லிம்” என்பதை மட்டும் கருத்திற் கொண்டு “ஸலாம்” சொல்ல வேண்டும். “பித்அத்” காரனுக்கு “ஸலாம்” சொல்வதை தவிர்ப்பது நல்லது. அவர்களாக “ஸலாம்” சொன்னால் பதில் கூற வேண்டும். உதாரணமாக வழிகேடான கொள்கை சார்ந்தவர்கள் போன்று.
முஸ்லிம்களில் சிலர் என்னைக் கண்டால் முதலில் “ஸலாம்” சொல்வதில்லை. நானாக முந்திக் கொண்டு “ஸலாம்” சொன்னால் சிலர் பதில் சொல்வார்கள். சிலர் “வணக்கம்” என்று சொல்வார்கள். இக்கலாச்சாரத்திற்கு வித்திட்டவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைதான். செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட மகான்கள் முற்றும் கற்றும் முழு மடையர்களான, முப்தீகளான முல்லாக்களேயாவர். நாங்கள் “முர்தத்”துகளாம். அவர்கள் முஸ்லிம்களாம். ஸுப்ஹானல்லாஹ்!
وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ، أَنْ تَقُولَ نَفْسٌ يَا حَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ وَإِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِينَ،
(மனிதர்களே! (உலமாஉகளே!) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்களிரட்சகனிடமிருந்து உங்களின் பக்கம் இறக்கி வைக்கப்பட்ட மிக்க அழகானவற்றையும் பின்பற்றுங்கள்.
அல்லாஹ்வுக்கு நான் செலுத்த வேண்டியவற்றில் குறை செய்து விட்டதன் மீது என்னுடைய கை சேதமே! இன்னும் நான் உலகில் பரிகாசம் செய்தவர்களில் இருந்தேனே! என்று எந்த ஓர் ஆத்மாவும் கூறாமலிருப்பதற்காகவும்) (39-55,56)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என்ற நபீ மொழியில் “ஸலாம்” சொல்லுதல், அதற்குப் பதில் சொல்லுதல் என்ற முதலாவது அம்சம் பற்றி மட்டும் எழுதியுள்ளேன். வாசக நேயர்களுக்கு இது தொடர்பான கேள்விகள் இருந்தால் எம்மோடு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
“ஸலாம்” சொல்வதை ஒவ்வொரு முஸ்லிமும் பேணி வந்தால் அதன் மூலம் “ஸலாம்” சொல்பவனும், பதில் சொல்பவனும் ஒரே நாளில் பல நூறு நன்மைகள் இதனால் மட்டும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.
ஒரு நாளில் ஒரு முஸ்லிம் நூறு முஸ்லிம்களைச் சந்தித்து “ஸலாம்” சொன்னாராயின் – அதாவது 30 நன்மைகள் கிடைக்கும் வகையில் 100 பேருக்கு “ஸலாம்” சொன்னாராயின் இந்த வகையில் மட்டும் அவருக்கு 3000 நன்மைகள் கிடைக்கின்றன. இது தவிர அவன் வேலை எதுவுமின்றி ஓய்வாக இருக்கும் நேரம் اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ اللهِ என்று “ஸலாம்” சொன்னால் அதன் மூலமும் ஒரே நாளில் பல்லாயிரம் அல்லது பல இலட்சம் நன்மைகள் கிடைத்து விடுகின்றன.
இது ஒரு வணக்கமாயினும் இதற்கு “வுழூ” செய்வது அவசியமில்லாத இலகுவான “இபாதத்” வணக்கமாகும்.
இன்று வாழும் முஸ்லிம்களில் அநேகர் – குறிப்பாக “அஜமீ”கள் அறபீயல்லாதவர்கள் “ஸலாம்” சொல்லும் விடயத்தில் நூறு வீதம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளார்கள். இதை வாசிக்கின்ற சகோதர, சகோதரிகள் இதன் பிறகாவது இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். பெண்கள் பெண்களுக்கு “ஸலாம்” சொல்வதும் “ஸுன்னத்”தான வணக்கமேயாகும். பெண்கள் தமக்கு “மஹ்றம்” ஆன திருமணம் முடிப்பதற்கு விலக்கப்பட்ட ஆண்களுக்கு தாராளமாக “ஸலாம்” சொல்லலாம். அவர்களும் பதில் சொல்லலாம்.
“ஸலாம்” சொல்வதில் இன்னுமொரு தத்துவம் தங்கியுள்ளது. இதை உலமாஉகள் உள்ளிட்ட அதிகமானவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நபீ பெருமானார் அவர்கள் ஒரு சமயம் أَفْشُوا السَّلَامَ – “ஸலாம்” என்பதை பரவலாக்குங்கள் என்று கூறினார்கள். அதாவது அதிகம் சொல்லுங்கள் என்றார்கள். இதில் ஒரு தத்துவம் உண்டு. அதை இங்கு எழுதுகிறேன்.
அதை விளங்குவதாயின் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வசனத்தின் சரியான, எதார்த்தமான பொருளை விளங்க வேண்டும்.
“அஸ்ஸலாம்” என்பது அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று. இதைக் கருத்திற் கொண்டு நோக்கினால் اَلسَّلَامُ عَلَيْكُمْ என்றால் “அல்லாஹ் உங்கள் மீது” என்று மட்டும் பொருள் வரும். இது பூரணமான பொருளைத் தராது. விளக்கமும் வராது. “அஸ்ஸலாம்” என்ற சொல்லுக்கு சாந்தி, ஈடேற்றம் என்று பொருள் கொள்ளலாம். இது அல்லாஹ்வின் பெயர் என்று மட்டும் பொருள் கொண்டால் اللهُ رَقِيْبٌ عَلَيْكُمْ அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று பொருள் வரும். இவ்வாறு பொருள் கொண்டு நாம் ஒருவனுக்கு “ஸலாம்” சொன்னால், அவனும் இப் பொருளை அறிந்தவனாயிருந்தால், அதாவது அல்லாஹ் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கினவனாயிருந்தால் அவனின் உள்ளத்தில் ஓர் அச்சம் நிச்சயமாக ஏற்படும். அவன் உண்மையிலேயே ஒரு பாவச் செயலை நாடிச் செல்பனாயிருந்தால் அவனுக்கு ஒருவர் பின் ஒருவராகப் பலர் அவ்வாறு சொல்லும் போது அவனின் உள்ளத்தில் இறையச்சம் ஏற்பட்டு அவன் இந்தப் பாவத்தை செய்யாமல் விடுவதற்கு சாத்தியம் – வாய்ப்பு ஏற்படலாம். இத் தத்துவத்தைக் கருத்திற் கொண்டு நாம் “ஸலாம்” சொன்னால் அவன் பாவச் செயலை விடும் போது எங்களுக்கும் அதில் நன்மையுண்டு.
எனவே, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வசனத்திற்கு சாந்தி, சமாதானம், ஈடேற்றம் என்ற பல பொருள் இருந்தாலும் நான் மேலே எழுதிக் காட்டிய பொருள் ஏனைய பொருள்களை விட சக்தி மிக்கதாகும்.
02. ஐந்தில் இரண்டாவது அம்சம் நோயாளியை நோய் வினவச் செல்வதாகும். عِيَادَةُ الْمَرِيْضِ என்று அறபியில் சொல்லப்படும். நான் மேலே சொன்ன “ஸலாம்” விடயமும், இவ்விடயமும் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையையும், “மஹப்பத்” அன்பையும் ஏற்படுத்துகின்ற அம்சங்களாகும். தவறாமல் கட்டாயம் செய்ய வேண்டியவையே!
ஒரு முஸ்லிம் நோயாளியாயிருக்கின்றார் என்று அறிந்தால் ஒரு தரமேனும் அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். இது நபீ வழி. தாடி வளர்ப்பதும், தலைப்பாகை கட்டுவதும் மட்டும் நபீ வழியல்ல என்பதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்.
நபீ மொழியில் عِيَادَةُ الْمَرِيْضِ நோயாளியை நோய் வினவச் செல்லுதல் என்றுதான் வந்துள்ளதேயன்றி அந்த நோய் எவ்வாறானதாயிருக்க வேண்டும் என்ற விபரம் வரவில்லை. ஆகையால் ஊர் வழமையில் எவர் நோயாளியென்று மக்கள் கருதுவார்களோ அதை நாமும் பின்பற்ற வேண்டும்.
சாதாரணமான தலைவலி, பல் வலி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் மட்டுமாவது பார்க்க வேண்டும். ஆயினும் பெரிய வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயம் அனைவரும் நோய் பார்க்கச் செல்ல வேண்டும். இதுவே நபீ வழி. தொழுவது மட்டும், சகாத் கொடுப்பது மட்டும், தாடி வைப்பது மட்டும் நபீ வழியல்ல என்பதை அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக எனது வழிகாட்டலில் வாழ்கின்ற எனது “முரீது” சிஷ்யர்கள் மேற்கண்ட விடயங்களில் மிகவும் பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது நோயாளியாயிருந்தால் அவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டும். அவர்கள் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களாயிருந்தால், போகின்றவர்களும் பொருளாதார வசதியுள்ளவர்களாயிருந்தால் அவர்களுக்கு தம்மாலான உதவிகள் செய்ய வேண்டும். அவர்களின் “ஜனாசா” நல்லடக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஸூபீயும் ஏனைய ஸூபிஸ வாதிகளை தனது குடும்ப அங்கத்தவர்களாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை விளங்கி முழு மனதுடன் அதை ஏற்றுக் கொண்ட ஒரு ஸூபீ ஒரு சமூகத்திற்குச் சமமானவன் என்றும், அவன் அல்லாஹ்வால் நேசிக்கப்படுபவன் என்றும், ஸூபிஸம் நிலை குலையாமல் நிமிர்ந்து நிற்பதற்கு அதன் தூண்களில் அவனும் ஒருவன் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நான் எழுதுவதால் ஸூபீகள் அல்லாதவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்பது கருத்தல்ல. ஸூபிஸத்திற்கு ஆதரவில்லாத அஹ்மத் அயல் வீட்டவனாயிருந்தால் அவன் அயல் வீட்டவன் என்ற வகையில் அவனுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். அவனின் இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறுதான் அயலவன் பௌதனாயிருப்பதும், இந்துவாக, அல்லது கிறித்தவனாக இருப்பதுமாகும். சமாதானம், நல்லிணக்கமே முக்கியம்.
தொடரும்….