தொடர் 03
தும்மலும், கொட்டாவியும்.
العطاس والتثائب،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட இத்தலைப்பில் தும்மல், கொட்டாவி தொடர்பான விடயங்கள் எழுதியிருந்தேன்.
இத் தொடரிலும் அவை தொடர்பாகவும், ஒரே நபீ மொழியில் இடம் பெற்ற வேறு விடயங்கள் தொடர்பாகவும் எழுதுகிறேன்.
عن أبي هريرة عن النبيّ صلى الله عليه وسلم قال: ‘ حَقُّ المُسْلِمِ على المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلامِ، وَعِيادَةُ المَرِيض، وَاتِّباعُ الجَنائِز، وإجابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ العاطِس ‘
“ஒரு முஸ்லிமின் கடமை ஐந்தாகும். “ஸலாம்” சொல்லப்பட்டால் அதற்கு பதில் கூறுதல், நோயாளியை நோய் வினவச் செல்லுதல், “ஜனாசா” மையித்தை தொடர்ந்து செல்லுதல், அழைப்புக்கு பதிலளித்தல், தும்மினவனுக்கு பதில் கூறுதல்”
புகாரீ 1240, முஸ்லிம் 2162-4, அல் அத்கார் – 440.
இன்னோர் அறிவிப்பில் حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறு என்றும் வசனம் வந்துள்ளது.
இவ் ஐந்து விடயங்களில் ஸலாம் சொன்னவனுக்கு பதில் கூறுதல் தொடர்பில் கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன். இதேபோல் நோயாளியை நோய் வினவச் செல்லுதல் தொடர்பாகவும் எழுதியுள்ளேன்.
இவ்விரு விடயங்கள் தொடர்பாக மேலும் விளக்கம் தேவையானோர் “வட்ஸ்அப்” மூலம் எம்முடன் தொடர்பு கொண்டால் விளக்கம் தருவோம்.
மூன்றாவது விடயம் “ஜனாசா” மையித்தை அடக்கும் இடத்திற்கு கொண்டு செல்கையில் அதைப் பின்பற்றிச் செல்லுதல்.
இவ்விடயம் தொடர்பான சட்டங்கள் பொதுவாக அனைவரும் அறிந்தவையே. இருந்தாலும் சில குறிப்புக்களை எழுதுகிறேன்.
ஜனாசாவை மையவாடிக்கு – அடக்கத்தலத்துக்கு எடுத்துச் செல்லும் போது அதோடு அங்கு சென்று அடக்கப் பணிகளில் பங்கேற்றல்.
ஜனாசாவை எடுத்துச் செல்லும் போது அங்கு கூட்டமாகச் செல்வோர் “ஷஹாதத் கலிமா” சொன்னவர்களாக எடுத்துச் செல்வார்கள். உதாரணமாக
أَشْهَدُ أَنْ لَا إلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ، هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ، قُوْلُوْا إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ،
என்பது போன்று.
மையித் வீட்டிலிருந்து “மக்பறா” அடக்கவிடம் வரை இவ்வாறே சொல்லிக் கொண்டு செல்வார்கள்.
இவ்வழக்கம் இலங்கை திரு நாட்டின் சில ஊர்களில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
இலங்கையில் இன்னும் சில ஊர்களில் “கஸீதா” அறபுப் பாடல்கள் பாடிச் செல்லும் வழக்கமும் உண்டு. “காதிரிய்யா தரீகா”வைச் சேர்ந்தவர்கள் அத் “தரீகா” தொடர்பான பாடல்களையும், “ஷாதுலிய்யா தரீகா” வைச் சேர்ந்தவர்கள் அத் “தரீகா” தொடர்பான பாடல்களையும் பாடிச் செல்வார்கள். இவ்வறான வழக்கம் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆயினும் இலங்கை நாட்டில் தரமான உலமாஉகளில் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் இது பிழையென்றோ, “பித்அத்” என்றோ சொன்னதற்கு வரலாறு கிடையாது.
ஆயினும் “தவ்ஹீத்” அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் – வஹ்ஹாபீகள் – அவ்வாறு செய்வது “பித்அத்” என்று பிரச்சாரம் செய்து வருவதால் அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களை நம்பி தொன்று தொட்டு தரமான ஆலிம்களாலும், பொது மக்களாலும் செய்து வந்த இவ்வழக்கத்தை கைவிட்டு விட்டார்கள். இருந்தாலும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் இன்று வரை செய்தே வருகிறார்கள்.
சட்டக் கலையோடு தொடர்பான இமாம்களிற் பலர் ஜனாசாவைத் தொடர்ந்து செல்வோர் “கலிமா” சொல்லாமலும், “கஸீதா” பாடாமலும் அதில் கலந்து கொள்கின்ற அனைவரும் தலை குனிந்தவர்களாக மறுமையின் சிந்தனையில் மௌனிகளாகச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதுவே தலை சிறந்த சட்ட மேதைகளின் முடிவுமாகும்.’
ஆயினும் இவ்வாறு செல்லும் போது ஒருவர் மற்றவருடன் பேசிக் கொண்டு செல்வதால் அதைத் தவிர்ப்பதற்காக “கலிமா” சொல்லிக் கொண்டு செல்லும் வழக்கம் உண்டாயிற்று. இது “பித்அத் ஹஸனா” நல்ல “பித்அத்”தாகும்.
எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் எதுவும் ஓதாமலும், எதுவும் பாடாமலும் மறுமையை நினைத்தவர்களாக மௌனிகளாகச் செல்வதே சிறந்தது என்பதாகும். ஆயினும் “கலிமா”ச் சொல்லிக் கொண்டு செல்வதோ, “கஸீதா”க்கள் பாடிக் கொண்டு செல்வதோ கெட்ட “பித்அத்” ஆகவுமாட்டாது, “ஷிர்க்” ஆகவுமாட்டாது என்பதேயாகும். எந்த ஊரில் எந்த வழக்கம் இருந்ததோ அந்த வழக்கத்தைப் பேணுவது சிறந்ததே!
“ஜனாசா” அதன் வீட்டிலிருந்து மையவாடிக்கு எடுத்துச் செல்லும் போது சத்தத்தை உயர்த்தி “கலிமா”ச் சொல்லிக் கொண்டு செல்வதால் பல பயன்கள் உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.
உதாரணமாக ஜனாசாவை “கலிமா” முழக்கத்துடன் எடுத்துச் செல்லும் போது இந்தச் செய்தி பரவலாகி அதில் பலர் கலந்து கொள்வதற்கும், மரணித்தவனுக்காக “துஆ” செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுவதால் இதுவே இக்காலத்திற்குப் பொருத்தமானதாகும். மரண அறிவித்தல் செய்வதும் இது போன்றதே!
ஒரு “ஜனாசா”வைத் தொடர்ந்து செல்வது பொதுவாக “ஸுன்னத்” நபீ வழியாக இருந்தாலும் அந்த “ஜனாசா”வின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்வது முக்கிய ஓர் அம்சமாகும். அவர்களிற் சிலர் கலந்து கொள்ளாமற் போவது நிரந்தர பகைக்கு அது வழியாகிவிடும். ஆகையால் உறவினர்கள் மரணம் என்பது இறுதிப் பயணம் என்பதை கருத்திற் கொண்டு மார்க்கத்திற்கும், மனச் சாட்சிக்கும் விரோதமின்றி செயல்பட வேண்டும். “ஜனாசா”வைத் தொடர்ந்து செல்வோரும், சுமந்து செல்வோரும் அடக்கப் பணிகளில் பங்கேற்க வேண்டும். கடமையல்லாது போனாலும் “தவாப்” நன்மை கருதியும், மரணித்தவனின் உறவுகளை திருப்திப் படுத்தும் நோக்கிலும் செய்ய வேண்டும். மரணித்தவரின் உறவினர் மையவாடியில் கை கட்டிக் கொண்டு நிற்காமல் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும். மண்ணறைக்குள் “மையித்”தை வைத்தது முதல் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெறும் வரை அங்கேயே நின்று பணி செய்ய வேண்டும். சிலர் விரும்பியோ, விரும்பாமலோ உறவினர்களுக்கு முகத்தைக் காட்டி விட்டுத் தமது பெயர்களை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்து விட்டு மாயமாய் மறைந்து விடுகிறார்கள். இது அழகிய பண்பல்ல. “இக்லாஸ்” உம் அல்ல.
மரணித்த ஒருவன் வறுமையானவனாயும், அவனின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் அவன் போல் வறுமையானவர்களாயுமிருந்தால் அவனின் “ஜனாசா” நிகழ்வுகளில் முஸ்லிம்களில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்வார்கள். அவனின் அடக்கப் பணிகள் செய்வதற்கு கூட எவரும் முன் வரமாட்டார்கள். மரணித்தவன் “ஸாலிஹ்” நல்லவனாயிருந்தாலும் சரியே!
ஆயினும் மரணித்தவன் செல்வந்தனாயும், செல்வாக்குள்ளவனாயும், ஊர்ப் பிரமுகர்களில் ஒருவனாயும், அல்லது அரசியல் பதவி உள்ளவனாயும் இருந்தால் அவனின் “ஜனாசா” நிகழ்வுகளுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் அலை திரண்டு வருவார்கள். அடக்கப் பணி செய்வதற்கு ஒருவரையொருவர் அடித்து மோதிக் கொண்டு முன்வருவார்கள். மரணித்தவன் “தாலிஹ்” கெட்டவனாயிருந்தாலும் சரியே! இவ்வாறுதான் இன்று வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் உள்ளனர். இது தொடர்பில் ஒரு கவிஞன் பின்வருமாறு பாடியுள்ளார்.
رَأَيْتُ النَّاسَ قَدْ مَالُوْا – إِلَى مَنْ عِنْدَهُ مَالٌ
وَمَنْ لَا عِنْدَهُ مَالٌ – وَعَنْهُ النَّاسُ قَدْ مَالُوْا
இவன் போல் இன்னுமொரு செல்வந்தன் இருப்பான். கோடி கோடியாக ஓடியோடு சம்பாதிப்பான், உழைப்பான், ஆடம்பர வீடுகள் கட்டுவான். கார், லொறி போன்ற வாகனங்கள் வைத்திருப்பான். காணி, தோட்டங்கள் உள்ள ஜமீன்தாராயுமிருப்பான். மனைவியை வகை வகையான வடிவங்களில் நகை போட்டு அழகு பார்ப்பான்.
ஆயினுமவன் அல்லாஹ் தனக்கு வழங்கிய செல்வங்களை அவன் கூறிய வழிகளில் செலவிடமாட்டான். உணவுண்ணும் கையால் காக்கையைக் கூட விரட்டமாட்டான். தனது உறவினர்கள் வறுமையால் வாடி வதங்கிக் கிடப்பார்கள். ஆனால் அவனோ வயிறு முட்ட புரியானி சாப்பிட்டு விட்டு தான் வாழும் பிரதேச மக்களுக்கு கேட்குமளவு ஏப்பமிட்டுக் கிடப்பான். இத்தன்மைகள் உள்ள ஒரு கோடீஸ்வரன் மரணித்தால் அவனின் “ஜனாசா” நல்லடக்கத்திற்கு முஸ்லிம்களில் ஒரு சிலர் மட்டுமே செல்வார்கள்.
இத்தகைய பண்பாடும், பழக்க வழக்கமும் உள்ள ஒரு உலோபியான கோடீஸ்வரனின் “ஜனாசா” நல்லடக்கத்தில் நான் கலந்து கொண்டேன். கப்றுக்குள் மையித்தை தூக்கி வைப்பதற்கோ, அதை மூடுவதற்கோ எவரும் முன்வரவில்லை. அதேநேரம் அவனின் படித்த மக்களும், அவனின் உறவினரில் சில செல்வந்தர்களும் வந்திருந்தார்களாயினும் அவர்களில் எவரும் முன்வரவில்லை. இதைக் கண்டு ஆத்திரமடைந்த நான், அங்கு வந்திருந்த எனது சிஷ்யர்களிற் சிலரை அழைத்து, அங்கு நின்றிருந்த மரணித்தவனின் மக்களைச் சுட்டிக் காட்டி, “இவர்கள் பணத்தையே சம்பாதித்துள்ளார்கள். மனிதர்களைச் சம்பாதிக்கவில்லை” என்று கூறியவனாக எனது சிஷ்யர்களைப் பணித்து அடக்கப் பணிகளைச் செய்யுமாறு கூறினேன்.
இவ்வாறும் சில மனிதர்கள் உள்ளார்கள். இவர்கள் திருந்த வேண்டும்.
செல்வந்தர்களே! ஜமீன்தார்களே! நீங்கள் எத்தனை கோடி சம்பாதித்தாலும் அவற்றில் ஒரு சதத்தைக் கூட நீங்கள் கப்றுக்குள் கொண்டு செல்வதில்லை. “கபன்” துணியை மட்டுமே கொண்டு செல்வீர்கள். அது கூட சில நாட்களில் மண்ணுடன் மண்ணாகிவிடும். உங்களின் உடலும் ஒரு சில நாட்களில் மண்ணுக்கும், புழுக்களுக்கும் உணவாகிவிடும்.
எனவே, உங்களின் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நீங்கள் எடுத்துக் கொண்டு ஒரு பங்கை மட்டுமாவது உங்களைச் செல்வந்தனாக்கிய அல்லாஹ்வுக்கு கொடுங்கள். மார்க்க கல்விக்காகவும், உலக கல்விக்காகவும் இறையுங்கள். ஏழைக்குமர்களை வாழ வையுங்கள்!
اَللهم أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَمُمْسِكًا تَلَفًا،
தொடரும்…