தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஜஸீறா” என்ற அறபுச் சொல்லுக்கு அகராதியில் أَرْضٌ يُحِيْطُ بِهَا الْمَاءُ مِنْ كُلِّ جِهَةٍ என்று எழுதப்பட்டுள்ளது. இதன்படி நீரால் சூழப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இன்றுள்ளவர்கள் “அறபு தீபகற்பம்” என்று சுருக்கமாக இதற்கு பொருள் கூறுகிறார்கள்.
“ஜஸீறதுல் அறப்” என்ற சொல் அறபு நாடுகளில் எந்தெந்த நாடுகளை உள் வாங்கும் என்பது தொடர்பாக ஆய்வாளர்களில் பலர் பல்வேறு கருத்துகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்வோம்.
முதலில் “ஜஸீறதுல் அறப்” இல் இருந்து “முஷ்ரிகீன்” இறைவனுக்கு இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள் என்ற நபீ மொழிகள் – ஹதீதுகளைப் பார்ப்போம்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள், “மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார்” எனும் நூலில் 18584வது நபீ மொழியாக இதைப் பதிவு செய்துள்ளார்கள்.
(நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நோயாளியாக இருந்த பொழுது, இறைவனுக்கு இணை வைத்து வணங்கும் “முஷ்ரிகீன்”களை “ஜஸீறதுல் அறப்” ஐ விட்டும் வெளியேற்றுங்கள்) என்று அருளினார்கள்.
ஆதாரம்: அஸ்ஸுனன் வல் ஆதார்.
ஆசிரியர்: அஹ்மத் இப்னு ஹன்பல், அறிவிப்பு இப்னு அப்பாஸ்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يَوْمُ الخَمِيسِ، وَمَا يَوْمُ الخَمِيسِ؟ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا شَأْنُهُ، أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ، فَقَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ» وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَ فَنَسِيتُهَا ‘ (رواه البخاري 4431)
(ஸயீத் பின் ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.
ஆகவே, நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.
“அறபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் (நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்’ அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்” ஆதாரம்: புகாரீ 4431, அறிவிப்பு: ஸயீத் இப்னு ஜுபைர்.
நான் முதலில் எழுதிய நபீ மொழி “ஜஸீறதுல் அறப்” அறபு தீப கற்பத்திலிருந்து “முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள்” என்ற கருத்தை மட்டும் தருகிறது.
இரண்டாவதாக நான் எழுதிய நபீ மொழியும் இதே கருத்தைத் தருவதுடன் இன்னும் பல கருத்துக்களையும் தருகின்றது.
இரண்டாவது நபீ மொழி தருகின்ற ஏனைய கருத்துக்களைப் பின்னால் எழுதுகிறேன். முதலில் இரண்டு ஹதீதுகளும் தருகின்ற أَخْرِجُوا الْمُشْرِكِيْنَ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ “இறைவனுக்கு இணை வைப்பவர்களை அறப் தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்ற கருத்துப் பற்றி மட்டும் முதலில் ஆய்வு செய்வோம்.
“முஷ்ரிகீன்” என்ற அறபுச் சொல் “முஷ்ரிக்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். “முஷ்ரிகீன் – முஷ்ரிகூன்” இரண்டு விதமாகவும் சொல்ல முடியும்.
“முஷ்ரிக்” இணை கற்பித்தவன் – வைத்தவன் என்று பொருள். இவ்விடயத்தை மேலெழுந்தவாரியாகவும், அதாவது “ஷரீஅத்” அடிப்படையிலும் “தரீகா” ஆன்மீக அடிப்படையிலும் ஆய்வு செய்யலாம்.
முதலில் “ஷரீஅத்” அடிப்படையில் “முஷ்ரிக்” இணை வைத்தவன் யார்? அவன் எத்தகைய இறை கொள்கையுள்ளவன் என்பதை ஆய்வு செய்வோம்.
“முல்ஹித்” கடவுளே இல்லையென்று சொல்பவன் – நாத்திகன் பற்றி நாம் பேசத் தேவையில்லை. அவன் கடவுளே இல்லையென்பவன். “முஷ்ரிக்” என்பவன் நாத்திகன் அல்ல. அவன் கடவுளை நம்பினவன்தான். ஆயினும் அவனுக்கு இணை வைத்து வணங்குபவன். அவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் உண்டு. அவன் கொடிய நரகம் செல்வான். இவனோ நரகம் செல்வான். இருவரும் புகுமிடம் நரகம்தான்.
“முஷ்ரிக்” இணை வைத்து வணங்குபவன் என்றால் “ஷரீஆ”வின் அடிப்படையில் கல்லையோ, மண்ணையோ, சிலையையோ, நெருப்பையோ பொதுவாக ஏதோ ஒரு படைப்பை முன்வைத்து வணங்குபவன் “முஷ்ரிக்” இணை வைத்தவன் ஆவான். இஸ்லாம் சிலை வணக்கம், பொதுவாக சிருட்டி வணக்கத்தை ஏற்றுக் கொள்ளாது.
“ஷரீஅத்” கூறுகின்ற இவ் அடிப்படையில் “யஹூத்” யூதர்கள் மட்டும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களாக மாட்டார்கள். யூத இனம் அல்லாத, இணை வைத்து வணங்குபவர்கள் அனைவரும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களில் அடங்குவர்.
இந்த நபீ மொழி விளக்கத்தின் படி “ஜஸீறதுல் அறப்” என்ற எல்லையில் யூதர்கள் மட்டுமன்றி சிருட்டியை முன்வைத்து வணக்கம் செய்யும் எவரும் இருக்க கூடாது என்பதாகும்.
எம் பெருமானார் அவர்களின் أَخْرِجُوْا வெளியேற்றுங்கள் என்ற வசனம் அவர்கள் குடிபதியாக இருத்தலை மட்டும் குறிக்குமா? அல்லது அவர்கள் அந்த எல்லைக்குள் கால் வைக்கவே கூடாது என்பதையும் சேர்த்துக் குறிக்குமா? என்பது நபீ மொழியில் தெளிவாக விளங்கப்படவில்லை. ஆயினும் விளக்கம் சொல்பவர்கள் தமது அறிவு, ஆய்வுக்கேற்றமாதிரி விளக்கம் சொல்கிறார்கள். இது அறிஞர்கள் ஆய்வு செய்து எடுக்க வேண்டிய முடிவாகும். ஆயினும் எனது தனிப்பட்ட கருத்து குறித்த அந்த வசனம் குடியிருப்பதை மட்டும் குறிக்குமேயன்றி அவ் எல்லைக்குள் அவர்களின் தேவைக்காக வந்து போவதைக் குறிக்காது என்பதாகும். இதையும் அந்த நபீ மொழி குறிக்குமென்றால் அதை நடைமுறைப்படுத்துவது கடினமாகும். குடியிருத்தலை மட்டும் குறிக்குமென்று வைத்துக் கொண்டாலும் கூட அதை நடைமுறைப்படுத்துவதும் கடினமானதே!
“ஜஸீறதுல் அறப்” என்ற நபீ பெருமானாரின் திரு நாவால் வெளியான இவ்வசனம் அவர்களின் காலத்தில் எந்த நாடுகளை உள் வாங்கியதாக இருந்ததென்ற விடயத்திலும், இப்போதுள்ள நாடுகளில் எவற்றைக் குறிக்கும் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
“ஸஜீறதுல் அறப்” என்ற வசனம் இப்போதுள்ள நாடுகளில் எவற்றை உள்வாங்கிய வசனம் என்பதை சற்று ஆராய்வோம்.
دُوَلُ جَزِيْرَةِ الْعَرَبِ،
يوجد في جزيرة العرب أو شبه الجزيرة العربية تسعةُ دولٍ بالإجمال هي الأردن والعراق والكويت والبحرين وقطر والإمارات العربية المتحدة وعُمان واليمن والمملكة العربية السعودية.
அறபு தீபகற்ப நாடுகள்:
“ஜஸீறதுல் அறப்” தீபகற்பங்களில் ஒன்பது நாடுகள் அடங்கும். அவை ஜோர்தான், இறாக், குவைத், பஹ்றைன், கத்ர், ஐக்கிய அறபு இராச்சியம், ஓமான், யமன், சஊதி அரேபியா.
தீப கற்பம்:
தீப கற்பம் என்பது மூன்று பக்கங்களும் கடலால் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதி. Peninsula, இந்திய தீப கற்பம், யாழ்ப்பாண தீப கற்பம் போன்று. இலங்கை என்பது தீவுதான். தீப கற்பமல்ல. “தீவு” என்றால் நான்கு பக்கங்களும் நீர் சூழ்ந்த நிலப்பகுதி. இலங்கைத் தீவு போன்று.
மேலே எழுதிய أَخْرِجُوا الْمُشْرِكِيْنَ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ அறபு தீப கற்பத்திலிருந்து இணை வைத்தோரை வெளியேற்றுங்கள் என்ற நபீ மொழியில் أَخْرِجُوْا – நீங்கள் வெளியேற்றுங்கள் என்ற பன்மைக்குரிய ஏவல் வினைச் சொல் முஸ்லிம்களில் எந்த நாட்டவர்களைக் குறிக்குமென்றால் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்டவர்களை மட்டுமே விஷேடமாகக் குறிக்கும். ஆயினும் கருத்து ரீதியாக உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் குறிக்கும்.
இவ் அடிப்படையில் “ஜஸீறதுல் அறப்” ஆகிய ஒன்பது நாட்டவர்களை விஷேடமாகவும், உலக முஸ்லிம்களை பொதுவாகவும் குறிக்கும்.
தற்போது பலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் யுத்தம் நடைபெறுகிறது. இஸ்றேல் நாட்டவர்கள் யஹூதீகள் – யூதர்கள், பலஸ்தீன மக்களும், ஹமாஸ் அமைப்பும் முஸ்லிம்கள்.
இலங்கைத் திரு நாட்டைப் பொறுத்த வரை இலங்கை அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக உள்ளது என்ற விபரம் எனக்கு தெளிவாகத் தெரியாது. ஆயினும் இலங்கைத் திரு நாட்டிலுள்ள பௌதர்களிற் சிலர் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். ஆர்ப்பாட்டமும் நடத்துகிறார்கள். முஸ்லிம்கள் பலஸ்தீனை ஆதரிக்கிறார்கள். ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். பௌத மக்களிற் பலர் முஸ்லிம்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதாகவும் அறிய முடிகிறது.
ஆயினும் முஸ்லிம்களின் வழிகாட்டிகளாகிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எவருக்கும் ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக என்னால் அறிய முடியவில்லை. ஆயினும் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் “பலஸ்தீன்” என்ற சொல்லைக் கூட முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் சொல்லக் கூடாது என்று சொன்னதாக ஒருவர் பேசியதை நான் செவியேற்றேன். அவர் யாரென்று நான் அறியேன்.
இலங்கைத் திரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை அறியாமல் ஒன்றுமே செய்வதில்லையென்று இருப்பதாக அறிய முடிகிறது.
இந்நிலையில் இலங்கைத் திரு நாட்டில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்களான நாங்கள் இன்று வரை ஆர்ப்பாட்டங்களில் இறங்காது போனாலும் எம் பெருமானார் அவர்களின் கட்டளைப்படி “ஜஸீறதுல் அறப்” அறபு தீபகற்பத்திலிருந்து முஷ்ரிகீன் – இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள் என்ற சொல்லுக்கு மதிப்பளித்து – கட்டுப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்யாமல் பள்ளிவாயலில் பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக “துஆ” பிரார்த்தனை செய்யும் பணியில் மட்டும் இறங்கியுள்ளோம். ஏனைய முஸ்லிம்களும் இந்த அளவிலாவது ஆதரவு வழங்க வேண்டுமென்பது எமது விருப்பமாகும்.