தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ذكر الإمام النووي رحمه الله: أنّ المُستَحَبَّ منه أن يَبْدَأَ باليدين قبل الرجلين، فيَبْتَدِأُ بِمُسَبِّحَةِ يدِه اليُمنَى ثم الوُسطَى ثم الْبِنْصَرِ ثم الْخِنْصَرِ ثم الإبهامِ،
ثم يَعودُ إلى الْيُسرَى، فيَبْدَأُ بِخِنْصَرِها ثم بِبِنْصَرِها إلى آخرها،
ثم يعود إلى الرجل اليُمنَى، فَيَبْدَأُ بِخِنْصَرِها ويَخْتِمُ بِخِنْصَرِ الرجل اليُسْرَى، (روح البيان. ص٢٢٣(
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். நகம் வெட்டும் ஒருவன் முதலில் இரு கைகளிலும் வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கால்களில் வெட்ட வேண்டும்.
முதலில் வலக்கரத்தின் சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்.
இரண்டாவது பேடி விரல் அல்லது நடுவிரல்.
மூன்றாவது அணி விரல் அல்லது மோதிர விரல்.
நான்காவது சிறு விரல் அல்லது கட்டை விரல்.
ஐந்தாவது பொரு விரல்.
இவ்வாறு வலது கரத்தில் வெட்டிய பின் இடது கரத்தில் வெட்ட வேண்டும். இதில் சிறு விரலிலிருந்து தொடங்கி தொடராக அணி விரல், பேடி விரல், ஆள் காட்டி விரல், கட்டை விரல். பெரு விரல் இந்த முறைப்படி வெட்ட வேண்டும்.
இதையடுத்து வலது காலில் வெட்ட வேண்டும். இதில் சிறு விரலில் தொடங்கி இடது கால் சிறு விரலில் முடிக்க வேண்டும்.
இதுவே நகம் வெட்டுவதற்கு “ஸுன்னத்”தான முறையாகும். வெட்டிய நகங்களை ஒரு தாளில் சுற்றி மண்ணில் மறைத்து விட வேண்டும். பின்னர் விரல்களை கழுவிக் கொள்ள வேண்டும். நகங்களை பல்லால் கடித்து எடுப்பது மார்க்கத்திற்கு முரணாயிருப்பதுடன் அதனால் குஷ்ட நோய் வருவதற்கும் சாத்தியமுண்டு.
நகம் வெட்டுவதற்குப் பொருத்தமான நாளும், நேரமும் வியாழக் கிழமை “அஸ்ர்” தொழுகையின் பின் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்கு செல்வதற்கு இடைப்பட்ட நேரமாகும். இது “ஸுன்னத்”தான முறையாகும். குறித்த நாளில் வெட்டுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தமக்கு வசதியான நேரத்தில் வெட்டிக் கொள்ள முடியும்.
நகத்தை எக்காரணம் கொண்டும் அறவே வெட்டாமல் வளர்ப்பது குற்றமாகும். வாரத்தில் ஒரு தரம் அல்லது மாதத்தில் ஒரு தரம் வெட்டிக் கொள்ள வேண்டும். சில பெண்கள் நாகரீகத்தை கருத்திற் கொண்டு நகங்களை நீளமாக விட்டுவிடுவது குற்றமாகும்.
தொழுகின்றவர்கள் நகங்களை வளர விடாமல் வெட்டிக் கொள்வது மிகப் பேணுதலாகும். ஏனெனில் தொழுகைக்காக “வுழூ” செய்யும் போது நகத்திற்கும், சதைக்கும் இடையில் அழுக்குகள் படிந்து நீர் உள்ளே செல்லாமல் தடுத்துவிடுமாயின் “வுழூ” நிறைவேறாது.
கை நகங்களையோ, கால் நகங்களையோ பல்லால் கடித்து எடுப்பது பிழை. இதனால் வெண்குஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
இரு கமுக்கட்டு முடிகளை வாரத்தில் ஒரு முறை – வியாழக் கிழமை மாலை அல்லது வெள்ளிக் கிழமை காலை களைந்து கொள்வது விரும்பத்தக்கதாகும். கமுக்கட்டு முடி, மூக்கு முடி இரண்டையும் பிடுங்குவது “ஸுன்னத்” ஆகும். இதற்கு இயலாதவர்கள் களைந்து கொள்ளலாம்.
இவ்வாறுதான் “ஆனத்” அப முடியுமாகும். ஒரு வாரத்தில் ஒரு முறை அல்லது ஒரு மாதத்தில் இரு முறையாவது அப முடி அகற்ற வேண்டும். இதை அகற்றும் விடயத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வித்தியாசம் உண்டு. ஆண்கள் கத்தியால் முற்றாகக் களைந்து கொள்ள வேண்டும். வயோதிபர்கள் தலை முடிகளை களைவது போல் – இறக்குவது போல் – அகற்ற வேண்டும். பெண்கள் அவ்வாறு செய்யாமல் கத்தரி கொண்டு கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் கத்தியால் அகற்றுவது போல் அகற்றுவது கூடாது.
இதில் ஒரு தத்துவம் உண்டு. அதை அறிந்து கொள்வது – வயது வந்த ஆண்களும், பெண்களும் அறிந்திருப்பதும், அவர்களில் குறிப்பாக ஆண்கள் அறிந்திருப்பதும் அவர்களின் இல்லற வாழ்வுக்கு பெரிதும் உதவும்.
இத் தத்துவத்தை எனக்குச் சொல்லித் தந்தவர் – இந்தியாவில் “பரேலி ஷரீப்” என்று உர்து மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற ஓர் ஊர் உண்டு. உலகில் ஒரு வஹ்ஹாபீ கூட இல்லாத ஊர் என்றால் இவ் ஊரையே குறிப்பிடலாம்.
இங்கு திறமையுள்ள உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் வாழ்கிறார்கள். இக்காலத்தைப் பொறுத்த வரை ஸூபிஸமும், ஸுன்னிஸமும் அங்கிருந்துதான் பிறக்கின்றன என்று கூறலாம்.
அங்குள்ள அறிஞர்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் அறிஞர் 1964 அல்லது 1965ம் ஆண்டில் கொழும்பு புறக் கோட்டையிலுள்ள ஹனபீ பள்ளிவாயலுக்கு – பாய் பள்ளிவாயலுக்கு வந்திருந்தார்கள். நான் அவ்வேளை பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியில் மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஆலிம் பலகீ அவர்களிடம் கற்றுக் கொண்டிருந்தேன்.
“பரேலி ஷரீப்” ல் இருந்து ஒரு பெரியார் வந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டு அவர்கைளச் சந்திப்பதற்காக பாணந்துறையிலிருந்து கொழும்பு வந்து அவர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு அறபு, உர்து மொழிகள் மட்டுமே தெரியும். பாய் பாஷையும் தெரியும்.
பாய் பள்ளிவாயலில் அவர்களுடன் நீண்ட நேரம் அறபு மொழியில் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வேளை காத்தான்குடி – ஒல்லிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த “உமர் ஆலிம்” என்பவர் அந்தப் பெரியாரைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது ஆண்கள் அப முடியை கத்தியால் அகற்ற வேண்டும். பெண்கள் அவ்வாறு செய்யாமல் கத்தரியால் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஏன் சொன்னது தெரியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விளக்கம் சொன்னார்கள்.
அதை இங்கு நான் விபரமாக எழுதினால் இந்நாட்டில் வாழும் எனது எதிரிகள் என்னைப் பற்றி வித்தியாசமாக எழுதவும், விமர்சிக்கவும் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் அத் தத்துவத்தை எழுத்து மூலம் நான் கூறுவதற்கு விரும்பவில்லை.
“பரேலி ஷரீப்” ஐச் சேர்ந்த அந்தப் பெரியார் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியத் துறையில் வட இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் பெயர் “மஹ்பூப் அலீ ரிழா கான்” ஆகும்.
இஸ்லாம் சுத்தம், சுகாதாரம் நிறைந்த மார்க்கமாகும்”
اَلطَّهَارَةُ مِنَ الْإِيْمَانِ
“சுத்தம் என்பது “ஈமான்” விசுவாசத்தில் உள்ளதாகும்” என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
உதாரணத்திற்காக சில விடயங்கள். மலம், சலம் இரண்டும் அசுத்தமென்று இஸ்லாம் சட்டமாக்கியுள்ளது. ஒருவரின் உடலிலோ, உடையிலோ மல, சலம் ஒரு துளி பட்டாலும் கூட அவன் அதை கழுவிச் சுத்தம் செய்யாமல் தொழுகை என்ற வணக்கம் நிறைவேற்ற முடியாது. தொழுதாலும் கூட அது நிறைவேறாது. அவன் தொழாவிட்டாலும் அந்த அசுத்தமான உடையோடும், உடலோடும் இருப்பது கூட மார்க்கத்திற்கு முரணானதாகும்.
மல சலத்தை துப்பரவு செய்யும் நீருக்கும் நிபந்தனை கூறுகிறது இஸ்லாம். நீரில் இரு வகையுண்டு. ஒன்று அது தன்னில் சுத்தமானது. ஆயினும் அது எதையும் சுத்தமாக்காது. இன்னொரு வகை தன்னிலும் சுத்தமானது, அதோடு அது வேறு அசுத்தங்களையும் சுத்தமாக்கக் கூடியது. முந்தினதற்கு உதாரணம் இளநீர், தேங்காய் நீர், பன்னீர், உப்பு நீர், மற்றும் குடிபானங்கள் போன்று. இவை சுத்தமானவைதான். பருகலாம், உடலிலோ, உடையிலோ படலாம். அவை அசுத்தமாகாது. இவ்வகை நீர் “தாஹிர்” என்று “ஷரீஆ”வில் சொல்லப்படும். அதாவது இது தன்னில் சுத்தமானதேயன்றி அசுத்தமான ஒன்றை சுத்தமாக்காது. இவற்றைக் கொண்டு “வுழூ” செய்தால் அது உண்டாகாது.
இரண்டாம் வகை நீருக்கு உதாரணம் கிணற்று நீர், ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் போன்று. இவை தன்னிலும் சுத்தமானவை. அசுத்தங்களையும் சுத்தம் செய்யக் கூடியவையாகும். இந்த வகை நீருக்கு “ஷரீஆ”வில் “தஹூர்” என்று சொல்லப்படும். இவ் வகை நீரால் “வுழூ”வும் செய்யலாம். “ஜனாபத்” முழுக்கும் இறுக்கலாம். “நஜீஸ்” அசுத்தங்களையும் நீக்கலாம்.
“உப்பு நீர்” என்று நான் மேலே குறிப்பிட்டது உப்புக் கரைத்த நீரையே குறிக்கும். கடல் நீரில் உப்பு இருந்தாலும் கூட அதைக் குறிக்காது. கடலில் உள்ள உப்புச் சுவை இயற்கையானது. உப்புக் கரைத்த நீர் இயற்கையானதல்ல.
இஸ்லாம் மார்க்கம் கூறும் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அக்காரணம் ஒன்றோ சுகாதாரத்தை உள் வாங்கியதாக இருக்கும். அல்லது ஆன்மிக தத்துவத்தை உள்வாங்கியதாக இருக்கும். அல்லது வேறோரு காரணத்தை உள்வாங்கியதாக இருக்கும். காரணமின்றிக் காரியமில்லை.
இதற்கு நிறைய உதாரணங்கள் கூறலாம். எனினும் சில சட்டங்களுக்கான உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
சலம் اَلْبَوْلْ – மூத்திரம் என்பது “நஜீஸ்” அசுத்தமானது. نُطْفَةْ – இந்திரியம் என்பது சுத்தமானது. அசுத்தமான ஒன்று வெளியாவதால் அது வெளியான இடத்தை மட்டும் கழுவ வேண்டும் என்றும், சுத்தமான ஒன்று வெளியானதால் உடல் முழுவதையும் அதற்கான “நிய்யத்” எண்ணத்துடன் கழுவ வேண்டும் – குளிக்க வேண்டும் என்றும் சட்டம் வந்ததற்கான காரணம் என்ன?
தொடரும்…