1944ம் ஆண்டு பிறந்த நான் சிறுவனாயிருந்த பருவத்தில் காத்தான்குடியில் நடந்த சிந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வு பற்றி எழுதுகிறேன்.
أنا أصمّ عن كلّ مقالة تظهر من أفواه الشياطين، وأعمى عن كلّ كتابة تكتبها الأباليس،
لُحُوْمُ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ
இறை நேசர்களின் உடல்கள் நஞ்சூட்டப்பட்டவையாகும்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
எனதூர் காத்தான்குடியில் ஓர் இறைஞானி இருந்தார். அவர் இந்தியா – கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். பாடசாலை சென்று படிக்காத, பட்டம் பதவிகளற்ற ஓர் இறைஞானி. அவர் ஆன்மிகப் பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அவரின் ஞான அறிவால் கவரப்பட்ட அக்காலத்தில் வாழ்ந்த, ஞானத்தாகமுள்ள வயோதிபர்கள் அவரை அணுகி அவரிடம் இறைஞான அறிவும், ஆன்மிகப் பயிற்சியும் பெற்று வந்தார்கள். பல வயோதிபர்கள் அவரிடம் “பைஅத்” ஞான தீட்சையும் பெற்று அவரின் சிஷ்யர்களாகவும் இருந்தார்கள்.
இந்த மகானை நான் காணாது போனாலும் சிஷ்யர்கள் மூலம் இவரின் சில விடயங்களை அறிந்துள்ளேன்.
இந்த மகானில் காணப்பட்ட விஷேடம் என்னவெனில் தனது சிஷ்யர்களிற் சிலரை அழைத்து அந்த சிஷ்யர்களில் ஒவ்வொருவரும் மரணிக்கும் நாள், மாதம், நேரம் என்பவற்றை முன் கூட்டியே சொல்லி வைத்து விடுவார். அவர் சொன்னது போன்றே நடக்கும்.
நான் 25 வயது இளைஞனாயிருந்த போது எனக்கு அறிமுகமான ஒருவர் இருந்தார். அவருக்கு அந்த நேரம் சுமார் 80 வயது இருக்கலாம். அவரின் பெயர் இப்றாஹீம். அவர் தனது மரணித்த தந்தை பற்றி என்னிடம் சொன்ன போது,
“எனது தந்தை “குறித்த மகானிடம் “பைஅத்” பெற்று அவரின் சிஷ்யராக இருந்தார். அவர் என் தந்தையிடம் தந்தை மரணிக்கும் நாள், மாதம், வருடம், நேரம் என்பவற்றை பல வருடங்களுக்கு முன்னேயே சொன்னதாக என் தந்தை என்னிடம் கூறினார்.
இதனால் நாங்கள் குடும்பத்துடன் நாட்களை எண்ணிக் கொண்டு குறித்த நாளை எதிர்பார்த்திருந்தோம். தந்தை குறிப்பிட்ட நாள் நெருங்க தந்தையின் நிலைகளும் மாற்றமடைந்து வந்தன.
மரணிப்பதற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் என் தந்தை குடும்பத்தினர் அனைவரையும் அவர் ஒன்று கூட்டி தனது மரணம் பற்றி ஏற்கனவே சொன்னது போல் சொல்லி அனைவருக்கும் “வஸிய்யத்” செய்தார். நாலாம் நாள் சொன்ன விடயங்களில் எந்த ஒரு மாற்றமுமின்றி அவரின் மரணம் நிகழ்ந்தது” என்று கூறினார் இப்றாஹீம்.
இவ்வாறு அவரின் பல “முரீதீன்” சிஷ்யர்களுக்கு நடந்துள்ளது. இதன் மூலம் அந்த ஞானி “விலாயத்” ஒலித்தன்மை உள்ளவராக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோணுகிறது.
இது இவ்வாறிருக்கும் நிலையில் இன்னுமொரு இறைஞானி இவ் ஊரில் இருந்துள்ளார். இவர் பொது மக்களால் “மஸ்தான்” என்று மட்டுமே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவர் யாருடனும் ஒரு சொல் கூட பேசமாட்டார். இவர் யாரென்று ஊர் மக்களுக்கே தெரியாது. தலைவிரிக் கோலத்தில் அழுக்கான உடையோடு பாதைகளிலும், கடைத் தெருக்களிலும் நடமாடி வருவார். இவர் அதிகமாக தங்கியிருந்த இடம் அஸ்ஸெய்யித் செய்ன் மௌலானா பள்ளிவாயல் முன்னால் அக்காலத்திலிருந்த சதுரக் கிணறின் படிதான். இவரை யாரும் பார்ப்பதாயின் இவ்விடத்துக்கே வர வேண்டும். இவரும் அந்த ஞானி போல் மக்களால் மதிக்கப்பட்டே வந்தார்.
ஒரு நாள் குறித்த மஸ்தான் அவர்கள் குறித்த கிணற்றின் படியில் இருந்த வேளை திடீரென்று அங்கு வந்த மற்ற ஞானி மஸ்தானை காலால் உதைத்து கீழே வீழ்த்தி விட்டுச் சென்றார். விழுந்தெழுந்த மஸ்தான் அவரை நோக்கி நீ 40 ஆண்டுகள் செய்த அனைத்து “அமல்”களும் இன்றுடன் எரிந்து சாம்பலாயிற்று என்றும், அழிந்து போயிற்று என்றும் கண் கலங்கிய நிலையில் கோபம் கொப்பளித்தவராய் கூறினார்.
நடந்தது என்ன? மஸ்தான் அவர்களுக்கு சொந்த இருப்பிடம் இல்லாதிருந்ததால் அவர் மலம் கழிப்பதற்காக தினமும் இப்போதுள்ள “பீச் ரோட்” கடற்கரை வீதியாக நீண்ட தூரம் நடந்து சென்று மறைவான காட்டுப் பகுதியில் மலம் கழித்து அங்குள்ள நீரோடையில் கழுவிச் சுத்தம் செய்து விட்டு வருவது வழக்கம். அவ்வழியில்தான் இறைஞானியின் வீடும் இருந்தது. அதில் அவரும், அவரின் மனைவியும் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் ஞானியின் மனைவி தனது கணவன் ஞானியிடம், “வழமையாக இவ்வழியால் செல்லும் மஸ்தான் இன்று நான் வீட்டின் பின் புறம் சலம் கழித்துக் கொண்டிருந்த போது வேலிக்கு மேலால் என்னை எட்டிப் பார்த்தார்” என்று சொன்னாள்.
மனைவியின் அச் செய்தி கேட்ட ஞானி அவளின் பேச்சை நம்பி மஸ்தானிடம் எந்தவொரு விளக்கமும் கேட்காமல் (உலமாஉகள் என்னிடம் கேட்காமல் எனக்கு “பத்வா” வழங்கியது போல்) அவசரப்பட்டு மஸ்தான் வழமையாக இருக்கும் கிணற்றடி வந்து அவரைக் காலால் உதைத்து விட்டுச் சென்றார். இதுவே நடந்தது.
ஞானி தனது மனைவி சொன்னது உண்மையா? பொய்யா? என்று அவளை விசாரித்து உண்மையை அறியாமலும், மஸ்தானிடம் விசாரித்து விளக்கத்தை அறியாமலும் மஸ்தானை காலால் அடித்து வேதனை செய்தது நூறு வீதமும் தவறாகும். அந்த ஞானி மனைவியையும், மஸ்தானையும் விசாரித்து குற்றவாளி யாரோ அவரைத் தண்டித்திருக்கலாம். “ஷரீஆ” வழியைப் பின்பற்றாமல் தனது மனைவியின் கதையை மட்டும் கேட்டு நடவடிக்கை எடுத்தது “ஷரீஆ”வின் பார்வையில் முற்றிலும் பிழையாகும்.
இதன் மூலம் குற்றவாளி என்று சொல்லப்படுபவரை விசாரிக்காமல் அவரைத் தண்டிப்பது பெருங் குற்றம் என்பது தெளிவாகிறது. இதனால் மஸ்தானின் சாபம் ஞானியை சுட்டுத்தான் இருக்கும் என்பது அக்கால கட்டத்தில் வாழ்ந்த பக்க சார்பற்ற, நீதியான உலமாஉகளின் முடிவாக இருந்தது. எனது முடிவும் நீதியான அக்கால உலமாஉகளின் முடிவேயாகும். மஸ்தானின் சாபம் ஞானியைச் சுட்டது போல் குற்றவாளி என்று கருதப்பட்ட என்னை உலமா சபை விசாரிக்காமல் “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது ஞானி தனது மனைவியின் கதையைக் கேட்டு மஸ்தானை காலால் உதைத்த கதை போன்றதேயாகும்.
பெருங் கொண்ட ஒரு முஸ்லிம் சமூகத்தையே காபிராக்கியவர்கள் செய்த “அமல்”கள் அழிந்து எரிந்து சாம்பலாகாமல் இருக்குமா? அல்லாஹ் மிக அறிந்தவன்.
பல இலட்சம் முஸ்லிம்களை உள்வாங்கிய ஒரு சமூகத்தையே காபிராக்கி வைத்தவர்கள் செய்த அமல்கள் யாவும் அழிந்து, சாம்பலாகவே போயிருக்கும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஞானியால் உதைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட மஸ்தான் அவர்கள் ஒரு “மஜ்தூப்” இறைஞானத்தில் லயித்து தனது சுய உணர்வுகளை இழந்த ஒரு மகான் என்று அக்காலத்தில் வாழ்ந்த ஸூபிஸ உலமாஉகள் கூறியதாக முன்னோர்கள் என்னிடம் கூறியுள்ளார்கள்.
குறித்த ஞானி எவ்வளவுதான் ஞானம் பேசியிருந்தாலும், பாடலில் பல ஞான நூல்கள் எழுதியிருந்தாலும் ஒரு “மஜ்தூப்” என்பவரை காலால் அடித்து அவரைத் துன்புறுத்தியது இறைவனின் கடும் சாபத்தை அள்ளிக் கொட்டும் பாவச் செயலேயாகும். இதன் விளைவோ என்னவோ அவரின் கப்றுக்கு மேல் இன்று கட்டிடமே உள்ளது.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சமயம் தங்களுக்கு ஏற்பட்ட “ஜத்பு” நிலையின் போது
قَدَمِيْ هَذِهِ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ
“எனது கால் பாதம் உலகில் வாழ்கின்ற அனைத்து வலீமார்களினது பிடரிகளுக்கு மேல் உள்ளது” என்று முழங்கியது உலகத்தில் வாழ்ந்த அனைத்து வலீமாருக்கும் கேட்டது. அவர்கள் அனைவரும் சரணடைந்தார்கள். ஆனால் அபூ பக்ர் என்ற ஒருவர் மட்டும் சரணடையவில்லை. அவர் இறுமாப்புடன் இருந்து விட்டார். மறுகனமே அவரின் “விலாயத்” ஒலித்தன்மை பிடுங்கி எறியப்பட்டது. பின்னர் அவர் பாவ மன்னிப்புக் கேட்டு பெற்றுக் கொண்டார்.
இச்சம்பவமும், மேலே நான் எழுதிக் காட்டிய ஞானி மஸ்தான் சம்பவமும் “விலாயத்”, “குத்பிய்யத்” எனும் உயர் பதவி பெற்றவர்களை வேதனைப் படுத்துபவர்களுக்கு அல்லாஹ் வழங்குகின்ற தண்டனை மிகவும் கடுமையாகவே இருக்கும் என்பதை அவர்கள் – வலீமாரை வேதனை செய்வோர் உணர்ந்து நல்வழி பெற வேண்டும். இன்றேல் அவர்கள் سُوْءُ الْخَاتِمَةْ கெட்ட முடிவைப் பயந்து கொள்ள வேண்டும்.
காத்தான்குடியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் இலை மறை காய் போன்ற ஒரு நல்லடியார் இருந்தார். இவர் அட்டாளைச்சேனையில் சமாதி கொண்டுள்ள அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்களிடம் “பைஅத்” பெற்ற ஓர் திறமையுள்ள மகான் ஆவார். இவர் யாரென்று அறியாமலேயே இவரின் மனைவி மக்கள் வாழ்ந்து வந்தனர். ஊரிலுள்ள ஆலிம்கள் போல் இவரும் ஓர் ஆலிம் என்றே அவர்கள் அவரை மதிப்பிட்டிருந்தார்கள். ஆயினும் படித்த ஒருவர் மட்டுமே இவருடன் மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் யாரென்று புரிந்தவராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த ஆலிம் அவர்களுடன் இன்னுமொருவர் துன்யாவுடைய விடயத்தில் மட்டும் தொடர்புள்ளவராக இருந்தார். ஆயினும் அவர் ஆலிம் அவர்களின் தராதரம் அறியாத ஒருவராக இருந்தார்.
ஒரு நாள் அவர் ஆலிம் அவர்களிடம் உங்களுக்கு நாளை இரவு எனது வீட்டில் சாப்பாடு தருவதற்கு விரும்புகிறேன். ஒழுங்கு செய்யவா? என்று கேட்டார். ஆலிம் அவர்களும் சம்மதித்தார்கள். ஆயினும் குறிப்பிட்ட இரவு ஆலிம் அவர்களை வெளியூர் வாசி சந்திக்க வந்ததால் ஆலிம் அவர்களுக்கு குறித்த நேரம் சாப்பாட்டிற்கு போக முடியாமல் 30 நிமிடங்கள் தாமதமாகி ஆலிம் அவர்கள் சாப்பாட்டிற்கு போயுள்ளார்கள். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் வெளிச்சமின்றி வீடு இருளாகவும் இருந்தது. ஆயினும் ஆலிம் அவர்கள் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த வீட்டுக்காரன் ஆலிம் அவர்களுடன் பல வருடங்கள் உறவாயிருந்தவராயிருந்தும் கூட, “உனக்கு தந்த நேரம் 09.00 மணி. நீ 09.30 மணிக்கு வந்துள்ளாய்” என்று கோபத்தோடு கூறியவராக கதவைப் பூட்டிவிட்டார். ஆலிம் அவர்கள் தனது வீடு வந்து சாப்பிட்டவர்கள் போல் பாவனை செய்து கொண்டு சாப்பிடாமல் உறங்கினார்கள்.
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களின் பின் அந்த மனிதனுக்கு ஒரு நோய் ஏற்பட்டது. அவரின் உடலில் மனிதன் நுகர்ந்து சகித்துக் கொள்ள முடியாத துர் நாற்றம் ஏற்பட்டது. அவரின் மனைவி மக்களால் கூட அந்த துர் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை மனிதர்கள் வாழாத, காத்தான்குடியை அடுத்த ஒரு மர முந்திரிகை காட்டில் குடிசை அமைத்து அதில் அவரை வைத்து பராமரித்து வந்தார்கள். நீண்ட காலம் கஷ்டங்களை அனுபவித்தவராயிருந்து அவர் இறுதியில் மரணித்தார்.
இன்னுமொருவர் காத்தான்குடியில் அடிக்கடி மேடை அமைத்து ஸூபீ மகான்களையும், ஸூபிஸ கருத்துக்களையும் ஏசுபவராக இருந்தார். ஒரு நாளிரவு மேடை அமைத்துப் பேசியவர், “இப்னு அறபீ என்பவனை சிலர் ஷெய்குல் அக்பர் என்று சொல்கிறார்கள். அவன் ஷெய்குல் அக்பரல்ல, ஷெய்தான் கபீர்” என்று கூறினான். இதைப் பலர் கேட்டிருப்பார்கள். நானும் ஒரு வீட்டு மாடியிலிருந்து கேட்டேன். மனமுருகியவனாக “ஷெய்குல் அக்பர் நாயகமே! உங்களை “ஷெய்தான் கபீர்” பெரிய ஷெய்தான் என்று பகிரங்கமாக பேசியவனைத் தண்டிக்கமாட்டீர்களா?” என்று கேட்டேன். சில நாட்களின் பின் அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான்.
இன்று ஸூபீ மகான்களை இழிவு படுத்துவதற்கும், ஸூபிஸத்தை மறுப்பதற்கும், தரீகாக்கள், மத்ஹபுகள் கிடையாது என்று சொல்வதற்கும் ஒருவர் தலை நீட்டுகிறார். இவரும் மேற்கண்ட வரலாறுகளை வாசித்து நேர்வழி பெற வேண்டும். இன்றேல் இவரையும் அல்லாஹ் பிடிப்பான்.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ،