தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
எதார்த்தத்தில் படைப்பு என்பதே இல்லை. எதார்த்தத்தில் உள்ளது அல்லாஹ்வின் “தாத்” – “வுஜூத்” உள்ளமை மட்டுமே! அதுவே உனது ஊனக் கண்ணுக்கு அல்லாஹ் அல்லாத ஒன்றாக உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நீ ஏமாந்து போகின்றாய்!
அன்புள்ள வாசகனே! என் மனதிலுள்ள கருத்தை எழுத்துருவில் தந்துள்ளேன். (மேற்கண்ட கருத்து உன் கருத்தா? அல்லது வேறு யாரும் சொன்னதா? உன் கருத்தாயின் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வேறு யாராவது சொல்லியிருந்தால் அவர் யாரென்று சொல். அவர் நம்பத்தகுந்தவராயின் அவரின் கூற்றை நம்புகிறேன்) என்று நீ என்னிடம் சொன்னால் உன் சொல் படி தகுந்த ஒருவரையன்றி இருவரையே நான் சொல்கிறேன். நீ வாக்களித்ததை நிறைவேற்று.
அவ்வாறு சொன்னது வேறு யாருமல்ல. நீ எவர்களை நம்பினால் சுவர்க்கம் செல்வாயோ, அதேபோல் எவர்களை மறுத்தால் நீ நரகம் செல்வாயோ அவர்கள் சொன்னதேயாகும். அவ்விருவரும் உன்னைப் படைத்த அல்லாஹ்வும், அவனின் திருத்தூதராகிய முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுமேயாவர். இப்போது உன் வாக்கை நிறைவேற்று. இவ்வாறு சொன்னால் நான் எவ்வாறு நிறைவேற்றுவது? அவ்விருவரும் எங்கே? எவ்வாறு? சொல்லியுள்ளார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா? ஆம், நீ சொல்வது நியாயமே. இதோ சொல்கிறேன்.
திருக்குர்ஆன் பிரதியை எடுத்து 02ம் அத்தியாயத்தில் 115ம் வசனத்தைப் படித்துப் பார்.
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
கிழக்கும், மேற்கும், (ஒளிர்ந்துள்ள பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும்) அல்லாஹ்வுக்குரியனவாகும். ஆகையால் நீங்கள் எங்கு திரும்பினாலும் – பார்த்தாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு.
இத் திருவசனம் சிறிய வசனமாயினும் இறை கொள்கையுடன் தொடர்புள்ள இரு பெரும் தத்துவங்களை உள்வாங்கியதாக உள்ளது. அவற்றில் ஒன்று. “கிழக்கும், மேற்கும் – ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் – அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பது. மற்றது “நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு” என்பது.
இவ்விரு அம்சங்களுக்கும் விளக்கம் எழுதுவதாயின் அதிகம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் அதை மிகக் குறைவானவர்களே நுகர்கின்றார்கள் பயன் பெறுகிறார்கள். சுருக்கமாக எழுதினால் அதிகமானவர்கள் வாசிக்கிறார்கள் – பயன் பெறுகிறார்கள். إِنَّ اللهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوْا
எனவே, வாசக நோயர்களின் அதிகமானவர்களின் விருப்பத்தின் படி நான் சுருக்கி எழுதுகிறேன்.
وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ
“மஷ்ரிக் – மக்ரிப்” என்ற சொற்களுக்கு கிழக்கும், மேற்கும் என்று அதிகமான அறிஞர்கள் பொருள் சொல்கிறார்கள். அன்றும் சொன்னார்கள். இன்றும் சொல்கிறார்கள். நானும் ஒரு காலத்தில் – என் கண் திறக்குமுன் இவ்வாறுதான் சொல்லி வந்தேன். ஆயினும் ஷெய்குல் அக்பர் அவர்கள் குறித்த வசனத்திற்கு எழுதியுள்ள ஒரு விளக்கம் என் கண்ணைத் திறந்தது. அவ்விளக்கம் எவரும் அவ்வசனத்திற்கு கூறாத விளக்கமாகவும் இருந்தது. அன்று முதல் அவர்கள் சொன்ன கருத்தையே நான் கூறி வருகிறேன். ஏனெனில் அவ்வசனத்திற்கு அதிகமானோர் சொல்லி வருகின்ற “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்ற கருத்தின் படி வடக்கும், தெற்கும் யாருக்குச் சொந்தம்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். நானும் இது தொடர்பாக பல அறிஞர்களிடம் வினவிய வகையிலும், பல “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்க நூல்களைப் பார்த்த வகையிலும் என் தாகம் தீருமளவு விளக்கம் கிடைக்கவில்லை. ஷெய்குல் அக்பர் அவர்கள் எழுதியுள்ள பொருள் மட்டுமே கேள்விக்கு இடமில்லாத பொருளாகவும் இருந்தது. என் தாகத்தையும் தீர்த்தது.
உலகிலுள்ள பிரதேசங்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். சில பிரதேசங்கள் ஒளிர்ந்த பிரதேசங்கள். இன்னும் சில இருண்ட பிரதேசங்களாகும். இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அதாவது உலகமே அல்லாஹ்வுக்குச் சொந்தம்.
சொந்தம் இரண்டு வகை:
சொந்தம் என்பதில் இரண்டு வகையுண்டு. ஒன்று தற்கிழமை என்றும், மற்றது பிறிதின் கிழமை என்றும் சொல்லப்படும்.
தற்கிழமை என்றால் சொந்தக் காரனை விட்டும் பிரியாத சொந்தமாகும். பிறிதின் கிழமை என்றால் சொந்தக் காரனை விட்டும் பிரிந்த சொந்தமாகும்.
தற்கிழமைக்கு உதாரணம் அப்துல்லாஹ்வுக்கு அவனின் கை, கால், மற்றும் ஏனைய உறுப்புக்கள் சொந்தமானவையாக இருப்பது போன்று. இவை அவனை விட்டும் பிரிந்தவையல்ல. இது தற்கிழமை அடிப்படையிலான சொந்தமாகும்.
பிறிதின் கிழமை என்றால் அப்துல்லாஹ்வுக்கு கார், கடை, தோட்டம் என்பன சொந்தமானவையாக இருப்பது போன்று. இவை அவனை விட்டும் பிரிந்தவைகளாகும்.
இவ்விரு வகைச் சொந்தங்களிலும் படைப்புக்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவையாக இருப்பதும், ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அவனுக்குச் சொந்தமானவையாக இருப்பதும் அவனை விட்டும் பிரியாத தற்கிழமை அடிப்படையிலான சொந்தமாகும்.
ولله المشـرق والمغرب
ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பதும், ولله ما فى السموات والأرض வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்பதும் தற்கிழமை அடிப்படையிலான சொந்தமென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ் அடிப்படையில் விளங்கினால் இவை யாவும் அவனை விட்டும் பிரியாத, அவன் தானானவையான சொந்தம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு விளங்கினவன் படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்று சொல்வானா? படைப்பு படைத்தவன் தானானதென்று சொல்வானா? எவ்வாறு சொல்வான்? சிந்திக்க வேண்டும்.
அப்துல்லாஹ்வுக்கு அவனின் மூக்கு, தலை, கை, கால் போன்ற உறுப்புக்கள் அவனுக்கு வேறானவை என்று நாம் சொல்வோமா? சொல்வதில்லை. மாறாக அப்துல்லாஹ்வின் மூக்கு அவன் தானானதென்றும், அவனின் தலை அவன் தானாதென்றும், அவனின் கை அவன் தானானதென்றும், அவனின் கால் அவன் தானானதென்றுமே சொல்வோம். இவ்வாறுதான் சொல்லவும் வேண்டும்.
ஏனெனில் خَلْقٌ என்ற சொல் படைத்தல் என்ற பொருளுக்கும், படைப்பு என்ற சொல்லுக்கும் பாவிக்கப்படுகின்ற சொல்லாகும். படைத்தல் என்பது அல்லாஹ்வின் “ஸிபத்” தன்மையாகும்.
“ஸிபத்” தன்மை என்பது عَرَضٌ “அறழ்” ஆதேயம் எனப்படும். ஆதேயம் எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒரு போதும் பிரியாதென்பதே தத்துவம். இதை அறபியில் ஸூபீ மகான்கள் اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ “தன்மை” என்பது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒரு போதும் பிரிந்திருக்காமல் அது எதை அண்டி நிற்கிறதோ அதிலேதான் நிற்கும். உதாரணமாக சீனியின் “ஸிபத்” தன்மையான இனிப்பு சீனி என்ற “தாத்”தில்தான் நிற்குமேயன்றி அதை விட்டும் பிரிந்து நிற்காது. இதேபோல் மிளகாயின் “ஸிபத்” தன்மையான உறைப்பு மிளகாய் என்ற “தாத்”தில்தான் நிற்குமேயன்றி அதை விட்டும் பிரிந்து நிற்காது.
இவ்வாறுதான் அல்லாஹ்வின் எத் தன்மையுமாகும். அது ஒரு போதும் அவனின் “தாத்” எனும் உள்ளமையை விட்டும் பிரிந்து நிற்காது.
இதே தத்துவத்தை இன்னொரு பாணியிலும் தெளிவு படுத்தலாம். இதை ஸூபீ மகான்கள் اَلظَّاهِرُ لَا يُفَارِقُ الْمَظْهَرَ என்று சொல்வார்கள்.
உதாரணமாக தங்கம், மோதிரம் என்பதை எடுத்துக் கொள்வோம். “தங்க மோதிரம்” என்று சொன்னால் தங்கம் என்பது “ளாஹிர்” வெளியானது என்றும், மோதிரம் என்பது “மள்ஹர்” தங்கம் வெளியான தளம் என்றும் சொல்லப்படும். இவ்விரண்டும் ஒருபோதும் பிரிந்து நிற்காது. அதாவது தங்கம் வேறாகவும், மோதிரம் வேறாகவும் பிரிந்து நிற்காது. தங்கம்தான் மோதிரம், மோதிரம்தான் தங்கம் ஆகும்.
மேற்கண்ட திரு வசனத்தின் தொடக்கத்தில் للهِ “லில்லாஹி” என்று ஒரு சொல் வந்துள்ளது. அதாவது “அல்லாஹ்” என்ற திரு நாமத்திற்கு முன்னால் ஓர் எழுத்து வந்துள்ளது. அது “கஸ்ர்” என்ற குறியீடு செய்யப்பட்ட “லாம்” ஆகும். இதனால்தான் “லி” என்று சொல்கிறோம். இந்த “லி” என்ற எழுத்துக்கு – அதாவது “லாம்” என்ற எழுத்துக்கு مِلْكْ – “மில்க்” சொந்தம் என்ற பொருள் உண்டு. இதன்படி لله “அல்லாஹ்வுக்குச் சொந்தம்” என்று பொருள் வரும். ولله المشـرق والمغرب என்ற வசனத்திற்கு “ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று பொருள் வரும். அறபு மொழியின் நாகரீக நடையில் இவ்வாறு வசனம் வந்தால் அவனுக்கு என்று பொருள் வராமல் அவனுக்கே என்று மட்டுப்படுத்தியே பொருள் வரும். இவ்வசனத்தின் தொடக்கத்தில் வந்துள்ள “அல்லாஹ்” என்ற சொல் பின்னால் வந்தால் “அவனுக்கே” என்று மட்டுப்படுத்தப்பட்ட பொருள் வராது. உதாரணமாக وَالْمَشْرِقُ وَالْمَغْرِبُ للهِ என்பது போன்று. இவ்வாறு வசனம் வந்தால் “அல்லாஹ்வுக்கே” என்ற மட்டுப்படுத்தப்பட்ட பொருள் வராது. ஆயினும் “லில்லாஹி” என்ற சொல்லை முற்படுத்துவதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளதால் அனைத்துப் படைப்புகளும் அவனுக்குச் சொந்தமானவையேயன்றி வேறெவருக்கும் சொந்தமானதல்ல என்ற தத்துவம் விளங்கப்படுகிறது.
“அல்லாஹ்வுக்கே எல்லாம் சொந்தம்” என்ற வசனத்தின் மூலம் விளங்கப்படுகின்ற கருத்தின் படி படைப்புகள் எதுவாயினும் அது அல்லாஹ்வின் “தாத்” – உள்ளமையை விட்டும் பிரியாத சொந்தம் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கிக் கொண்டவன் “எல்லாம் அவனே” என்று சொல்வதற்கு அஞ்சமாட்டான்.
“எல்லாம் அவனே” என்று சொன்னவன் அவன்தான் – அல்லாஹ்தான் என்பதற்கு அவனின் வாக்கே ஆதாரமாயிருக்கும் நிலையில் “எல்லாம் அவனே” என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரமுண்டா? என்று கேட்பவன் அல்லாஹ்வின் பேச்சை சரியாகப் புரிந்து கொள்ளவுமில்லை, அவன் திருக்குர்ஆனை ஓதவுமில்லை என்றே சொல்ல வேண்டும்.
நான் கூறிய விட்டுப் பிரியாத சொந்தம் என்ற அடிப்படையில் எல்லாம் அவனே என்பதற்கு ஓர் ஆதாரம் எழுதிவிட்டேன். இவ் ஆதாரம் முடியவில்லை. இன்னும் பாக்கியுண்டு. அதையும் எழுதிவிடுகிறேன்.
فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ،
இவ்வசம் நான் மேலே எழுதியுள்ள ولله المشـرق والمغرب என்ற வசனத்தின் தொடரேயன்றி இது தனியான வசனமல்ல. முந்தின தொடர் விட்டுப் பிரியாத சொந்தம் என்ற அடிப்படையில் “எல்லாம் அவனே” எனும் தத்துவத்தை “விட்டுப் பிரியாத சொந்தம்” என்ற இவ் விளக்கம் உறுதிப்படுத்தினாலும் கூட இத் தத்துவத்தை புரியாத ஆன்மாக்களும் இருக்கும் என்பதால் முன்னால் கூறப்பட்ட அதே தத்தவத்தை فأينما تولوا فثم وجه الله “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்ற வசனத்தின் மூலம் – தொடரின் மூலம் அவன் மட்டுமே உள்ளான் என்ற தத்துவத்தை திரை நீக்கி நிறுவியுள்ளான் அல்லாஹ் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை திருக்குர்ஆன் வசனம் ஒன்றைக் கொண்டும், நபீ மொழி ஒன்றைக் கொண்டும் நிறுவுகிறேன் என்று கூறிய நான் இப்போது ஓர் ஆதாரத்தைக் கொண்டு மட்டும் நிறுவியுள்ளேன். இன்னும் நபீ மொழி ஆதாரத்தைக் கொண்டு நிறுவவில்லை.
இன்னும் மேலே கூறப்பட்ட திருவசனத்திற்கான ஆதாரம் நிறைவு பெறவுமில்லையாதலால் இதை முடித்து விட்டு நபீ மொழி ஆதாரத்தை எழுதுகிறேன்.
وَجْهُ اللهِ
– அல்லாஹ்வின் முகம் என்றால் என்ன?
وَجْهُ الشَّيْءِ عَيْنُهُ
“ஒரு வஸ்தின் முகம் என்பது அவ் வஸ்துவையே குறிக்கும்” என்று ஒரு தத்துவம் உண்டு. இத் தத்துவம் அறிவுலகை வலம் வருபவர்களுக்கு மட்டும் புரியுமேயன்றி கிணற்றுத் தவளைகளுக்குப் புரியாது. அத் தவளைகள் கிணற்றின் மேலே வந்து உலகைப் பார்த்தால்தான் உண்மை தெரியும்.
“எல்லாம் அல்லாஹ்” என்பதே தத்துவம் என்றிருந்தால் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ “நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான்” என்று தெளிவாக அவனின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாமல்லவா? ஏன் அவ்வாறு அவன் சொல்லவில்லை? என்று கிணற்றுத் தவளைகள் கேட்கலாம். அவர்களுக்கு இலகுவான முறையில் ஒரு பதில் எழுதுகிறேன்.
கிணற்றுத் தவளைகாள்! நீங்கள் கிணற்றுத் தவளைகள் என்பது நூறு வீதம் சரிதான். ஏனெனில் நீங்கள் சாதாரண விடயங்களைக் கூட விளங்கிக் கொள்ளாமலிருப்பது நீங்கள் கிணற்றுத் தவளைகள் தான் என்பதை நிறுவுகிறது.
ஒருவன் தனது கடன் தொல்லையால் ஒருவருக்கும் தெரியாமல் ஊரைவிட்டும் நள்ளிரவோடு போனால் அவனின் பெயர் குறிப்பிட்டு இன்னான் தலை மறைவு என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்படவில்லையா? அவன் முழுமையாக மறைந்திருக்கும் நிலையில் அவனின் தலையை மட்டும் குறிப்பிட்டு “இன்னான் தலை மறைவு” என்று ஏன் சொல்லப்படுகிறதென்று ஒரு நிமிடமாவது நீங்கள் சிந்தனை செய்து பார்க்கவில்லையா? நீங்கள் கூட்டத்தோடு கோவிந்தா போடுகின்றவர்களேயன்றி சிந்தனையாளர்களுமல்ல. ஆய்வாளர்களுமல்ல. நீங்கள் பேச்சு நாகரிகம் தெரியாதவர்கள் போல் உள்ளீர்கள். ஒருவனின் பெயர் குறிப்பிட்டு இன்னான் ஊரை விட்டும் ஓடிவிட்டான் என்று சொல்வதை விட இன்னான் தலைமறைவாகிவிட்டான் என்று சொல்வதே “பஸாஹத்” நாகரிகம் என்பதை தவளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ என்று சொல்வதை விட فَثَمَّ وَجْهُ اللهِ என்று சொல்வதே நாகரிகம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் கருத்து நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று அவனே சொல்லியிருக்க அவ்வாறு சொல்ல ஏன் நாம் தயங்க வேண்டும்?
எல்லாம் அவனே என்பதற்கு நபீ மொழி ஒன்றையும் ஆதாரமாக எழுதுவேன் என்று மேலே சொல்லியிருந்தேன் இதை அடுத்த தொடரில் எதிர் பாருங்கள். தொடரும்…