தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أَوَّلُ الدِّيْنِ مَعْرِفَةُ اللهِ
“மார்க்கத்தில் முதல் அம்சம் இறைஞானம்”. இது திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும், இறைஞான மகான்களின் அருள் மொழிகளும் தருகின்ற சாரமேயன்றி என் கற்பனையோ, பிறர் கற்பனையோ அல்ல.
“தீன்” என்றால் மார்க்கம். “மார்க்கம்” என்ற சொல் எதையெல்லாம் எடுத்துக் கொள்ளும் என்பதை விளங்கினால் மட்டும்தான் “தீன்” என்றால் என்ன என்பதை அறிய முடியும். தீன் தீன் முஹம்மது – தீனையறியாமல் தீனில் இருக்கிறேன் என்கிறாய்.
நபீ மொழியின் படி “தீன்” என்ற சொல் மூன்று அம்சங்களை உள்வாங்கிய ஒரு சொல். அவற்றில் ஒன்று – “ஈமான்” விசுவாசம் – நம்பிக்கை. இரண்டு – இஸ்லாம் பற்றிய நம்பிக்கை. மற்றது “இஹ்ஸான்” பற்றிய நம்பிக்கை.
இம் மூன்றும் “தீன்” மார்க்கம் என்ற கட்டிடத்தின் அத்திவாரத் தூண்களாகும். இம் மூன்று தூண்களில் ஒன்றேனும் இல்லையானால் “தீன்” என்பது பூரணமாகாது.
இம் மூன்று அம்சங்களில் முதலாம், இரண்டாம் அம்சங்களை “ஈமான் – இஸ்லாம்” எனும் இரு அம்சங்களையும் தொடாமல் மூன்றாம் அம்சமான “இஹ்ஸான்” பற்றி மட்டும் சில குறிப்புகள் எழுதுகிறேன்.
“இஹ்ஸான்”, “இக்லாஸ்” என்ற இரு சொற்களும் ஒரே பொருளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்தான். அது வேறு, இது வேறு அல்ல.
இதற்குப் பல அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறுகின்றனர். அவற்றில் நான் கை வைக்காமல் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் திரு நாவால் அருளிய வரைவிலக்கணத்தை மட்டும் கூறி விளக்கம் எழுதுகிறேன்.
பெருமானாரின் வரைவிலக்கணம்:
“இஹ்ஸான்” அல்லது “இக்லாஸ்” என்பதற்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறிய வரைவிலக்கணம்.
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அல்லாஹ்வை பார்ப்பவன் போல் அவனை வணங்குதாகும். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான்”.
இந்த நபீ மொழிக்கு உரிய விளக்கம் எழுதி அதன் உயிர் அம்சம் என்னவென்று விளங்கும் பாணியில் கூறுவதாயின் நீண்ட விளக்கம் கூற வேண்டும். நான் இது தொடர்பாக கடந்த பல பதிவுகளில் எழுதியுள்ளேன். எனினும் வாசக நேயர்களில் கடந்த பதிவுகளை வாசிக்கத் தவறிய பலரின் நன்மை கருதி மீண்டும் சுருக்கமாக எழுதுகிறேன்.
நபீ பெருமானார் அவர்கள் கூறிய வரைவிலக்கண வசனத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அவ்விரு அம்சங்களில் முதல் அம்சமான أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ “நீ அவனைக் காண்பவன் போல் அவனை வணங்க வேண்டும்” என்ற அம்சத்திற்கு மட்டும் முதலில் விளக்கம் எழுதுகிறேன். ஏனெனில் இந்த அம்சத்தை விளங்காமல் மற்ற அம்சத்தை விளங்குவது கடினம்.
அல்லாஹ்வைக் காண்பது போல் அவனை வணங்க வேண்டும் என்ற வசனம் உருவமில்லாத அல்லாஹ்வை காண்பவன் போல் வணங்க வேண்டுமென்பது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஏனெனில் இந்த வசனத்தில் உள்ள كَأَنَّكَ என்ற சொல்லில் ك – காப் என்ற எழுத்து (போல, போல், போன்று) எனும் பொருளைத் தருகின்ற எழுத்தாகும். இதனால்தான் நீ அவனைக் காண்பவன் “போல்” என்று பொருள் கூறுகின்றோம்.
உதாரணமாக முனாஸ் என்பவனிடம் முபாறக் என்பவன் “நீ உனது நண்பன் “ஜெமீல்” என்பவனைப் பார்ப்பவன் போல் – காண்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள்” என்று சொன்னால் முனாஸ் என்ன செய்ய வேண்டும்? எங்கோ இருக்கும் நண்பன் ஜெமீலின் தோற்றத்தை – உருவத்தை தனது கற்பனைக் கண் முன் நிறுத்தி அவ் உருவத்தை காண்பவன் போன்று நிற்க வேண்டும்.
நண்பன் ஜெமீலுக்கு உடலும், உருவமும் இருந்ததால் முனாஸ் என்பவன் கற்பனைக் கண்ணால் அவனைக் காண்பவன் போல் – பார்ப்பவன் போல் நிற்பதற்கு வாய்ப்பும், சாத்தியமும் இருந்தது. இதனால் அவனால் பார்க்க முடிந்தது.
ஆயினும் ஒரு மனிதன் அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் – காண்பவன் போல் வணங்குவதற்கு வாய்ப்பு அறவே இல்லை. அல்லாஹ் சடமற்றவன், உருவமும் இல்லாதவன். இத்தகைய ஒருவனைக் கண்ணால் காணவும் முடியாது, கற்பனைக் கண் முன் நிறுத்தவும் முடியாது. இது அசாத்தியம். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
எதார்த்தம் இவ்வாறிருக்கும் நிலையில் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அசாத்தியமான ஒன்றைச் செய்யுமாறு சொல்லமாட்டார்கள். ஏனெனில் மனித படைப்புகளில் மிக “அஃகல்” – أَعْقَلْ அதி கூரிய புத்தியுள்ளவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவார்கள்.
நபீ பெருமான் அவ்வாறு சொன்னதையும் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். அல்லாஹ்வைக் கற்பனைக் கண் முன் நிறுத்துவது அசாத்தியம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளோம்.
இது ஒரு சிக்கலான விடயம். இதற்கு நாம் சரியான விளக்கம் பெற வேண்டும்.
இது இவ்வாறிருக்கும் நிலையில் நபீ பெருமானின் வரைவிலக்கண வசனத்தின் இரண்டாவது அம்சம் தொடர்பாகவும் நாம் ஆராய வேண்டும். அந்த அம்சத்தை மீண்டும் இங்கு எழுதுகிகிறேன்.
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அவனைக் காண்பவனாக இல்லையானால் அவன் உன்னைக் காண்கிறான்” என்பது இவ் வசனத்தின் நேரடிப் பொருள்.
மொழியிலக்கண விளக்கம்:
இவ்வசனத்தில் மொழியிலக்கணத்துடன் தொடர்புள்ள விளக்கம் உண்டு. இதைச் சரியாக விளங்கினால் மட்டும் தான் இவ் வரைவிலக்கணத்தின் தாற்பரியம் புரியும். இவ்வசனத்தின் பொருள் சரியாக அமையும்.
நான் பல ஞான நூல்களை ஆய்வு செய்தறிந்த வகையில் இக்காலத்தில் உயிரோடிருக்கும் இலங்கை உலமாஉகள் இவ்வசனத்திற்குச் சொல்லும் பொருள் நூறு வீதமும் பிழையாகும். வெளிநாட்டு உலமாஉகளும் இந்நாட்டு உலமாஉகள் போல் பொருள் சொல்கிறார்களா? அல்லது நான் அறிந்துள்ளது போல் சொல்கிறார்களா? என்பது எனக்குத் தெரியாது. நான் அறிந்துள்ளது போல் இவ்வசனத்தக்கு இலங்கை உலமாஉகளில் எவரும் பொருள் சொன்னதாகவோ, விளக்கம் சொன்னதாகவோ நான் அறியவில்லை.
நான் இப்போது சொல்லப் போகின்ற விளக்கம் மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ளதாகையால் உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கும் மட்டுமே புரியுமாதலால் ஏனையோர் தெளிவாக இவ்விடயத்தை விளங்கிய உலமாஉகளிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நான் உலமாஉகள் என்று இங்கு குறிப்பிடுவது ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளை மட்டுமே குறிக்கும்.
நான் கூறும் விளக்கம் தெளிவில்லாதவர்களும், பிழை காண்பவர்களும் என்னைத் தவறாக விமர்சிக்காமல் என்னை நேரில் கண்டு தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ அறிவு என்பது கற்பதன் மூலமே கிடைக்கும் என்பது தத்துவம். கற்றுக் கொள்ளாமல் கிடைக்கின்ற அறிவும் உண்டு. அது “இல்ஹாம்” என்ற பெயராலும், اَلْعِلْمُ اللَّدُنِّيْ என்ற பெயராலும், عِلْمُ الْمُكَاشَفَةِ என்ற பெயராலும் அழைக்கப்படும்.
இந்த “அறிவு” ஆசிரியர்கள் – உஸ்தாதுமார்கள் மூலமோ, நூல்கள் மூலமோ பெறும் அறிவல்ல. அல்லாஹ் எனும் ஆசிரியர் மூலம் மட்டும் கிடைக்கின்ற அறிவாகும். இவ் அறிவு எல்லோருக்கும் கிடைக்கும் அறிவல்ல. எவர்கள் வலீமாருடன் தொடர்பாக இருந்து, “தரீகா” வழி நடந்து ஆன்மிக வழியில் செல்கின்றார்களோ அவர்களுக்கு மட்டும் அல்லாஹ்வே ஆசிரியனாக இருந்து கற்றுக் கொடுக்கும் அறிவாகும். இதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவற்றை இங்கு எழுதுவதாயின் இத்தலைப்பை நிறைவு செய்ய முடியாமற் போய்விடும்.
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،
“நீ அவனை – அல்லாஹ்வைக் காண்பவனாக இல்லையானால் அவன் உன்னைக் காண்கிறான்” என்றே எல்லா உலமாஉகளும் பொருள் சொல்கிறார்கள். (இவ்விடத்திலிருந்து பின்னால் எழுதப் போகின்ற மொழி இலக்கணச்சட்டம் பொது மக்களுக்கு விளங்காதாகையால் அவர்கள் உலமாஉகளின் உதவியோடு பார்க்கலாம்) இவ்வாறு சொல்லும் உலமாஉகள் இவ்வசனத்தில் வந்துள்ள فَإِنْ என்ற “ஷர்த்”திற்கு فَإِنَّهُ يَرَاكَ என்ற வசனத்தை “ஜவாப்” ஆக கொடுக்கின்றார்கள். فَإِنَّهُ என்பதில் உள்ள ( ف – Fபே) ஷர்த்திற்குரிய “ஜவாப்” என்று நினைக்கிறார்கள். இது பிழையாகும். ஏனெனில் فَإِنْ என்ற ஷர்த்திற்கு فَإِنَّهُ என்ற வசனத்தை “ஜவாப்” ஆக கொடுத்தால் பொருள் பொருந்தாது. இவர்கள் சொல்வது போல் “நீ அவனைக் காணவில்லையானால் அவன் உன்னைக் காண்கிறான்” என்ற பொருள் பொருந்தாது. பொருள் சரியாகாது. இவ்விடத்தில் உலமாஉகள் மிகவும் நிதானமாக ஆய்வு செய்ய வேண்டும்.
فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ
என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல் كَانَ என்ற “நாகிஸ்” ஆன “பிஅல்”களில் ஒன்றாகும். இது “இஸ்ம்” க்கு “றப்உ” செய்து “கபர்” க்கு “நஸ்பு”ச் செய்யும். ஆனால் இவ்விடத்தில் تَكُنْ என்பதை “நாகிஸ்” ஆன “பிஅல்” ஆக கணக்கெடுக்காமல் அதை “தாம்”மான “பிஅல்” ஆக கணக்கெடுத்து فَإِنْ لَمْ تَكُنْ என்ற வசனத்திற்கு “நீ இல்லையென்றால்” என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது فَإِنْ لَمْ تَكُنْ என்ற “ஷர்த்”தின் “ஜவாப்” ஆக பின்னால் வந்த تَرَاهُ என்ற சொல்லைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் “நீ இல்லையென்றால் அவனை – அல்லாஹ்வைக் காண்பாய்” என்று பொருள் அமையும். ஆனால் மொழியிலக்கணச் சட்டப்படி “ஷர்த்”தும், அதன் “ஜவாப்” உம் “ஜஸ்ம்” செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற விதிப்படி تَرَاهُ என்ற சொல் “அலிப்” இன்றி تَرَهُ என்றே வர வேண்டும். ஏனெனில் “ஜஸ்ம்” என்பதற்கு அடையாளமாக تَرَاهُ என்பதில் உள்ள “அலிப்” இருக்காது. அது போய்விடும்.
இதுவே இங்கு சொல்ல வேண்டிய மொழியிலக்கணச் சட்டமாகும்.
இவ்வாறு நாம் அமைத்தால் “நீ இல்லையானால் நீ அவனைக் காண்பாய்” என்று சரியான பொருள் வந்து விடும். இவ்வாறு வரும் போது فَإِنَّهُ يَرَاكَ என்பதிலுள்ள ف – Fபே என்பது “ஷர்த்”தின் ஜவாபில் வந்த ف ஆகாது. அது تَعْلِيْلْ காரணம் சொல்வதற்குரிய “Fபே” என்று சொல்லப்படும். அதாவது “நீ இல்லையென்றால் அவனைக் காண்பாய்” என்பதற்கான காரணம் فَإِنَّهُ يَرَاكَ அவன் உன்னைக் காண்பதாகும்.
உலமாஉகள் இங்கு ஓர் ஆட்சேபனை சொல்லலாம். அதாவது فَإِنْ لَمْ تَكُنْ என்பதற்கு تَرَاهُ என்பதை “ஜவாப்” ஆக கொடுத்தால் تَرَاهُ என்று வராமல் “றே” எழுத்துக்குப் பின்னால் “அலிப்” வராமல் تَرَهُ என்றுதான் வர வேண்டும் என்று ஓர் ஆட்சேபனை சொல்லலாம். அவர்கள் இப்படியொரு ஆட்சேபனை சொல்வது நியாயமானதே. ஆயினும் அறபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிபீகள் இவ்வாறான இடத்தில் “அலிப்” இன்றி تَرَهُ என்றும் சொல்வார்கள். “அலிப்” உடன் تَرَاهُ என்றும் சொல்வார்கள்.
இத்துடன் மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள சட்டங்கள் நிறைவு பெற்று விட்டன.
நான் எழுதிய சட்டங்களும், விளக்கங்களும் பிழையென்று உலமாஉகள் கருதினால் என்னை நேரில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யாமல் றஊப் மௌலவீ தனது சுய விருப்பத்தின் படி ஹதீதுகளுக்கு விளக்கம் சொல்கிறார் என்று மின்பர் மேடைகளில் முழங்க வேண்டாம் என்று உலமாஉகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் கூறிய விளக்கம் எனது கற்பனையோ, எனது ஆய்வோ அல்ல.
நான் கூறிய விளக்கத்தின் படி ஒருவன் அல்லாஹ்வைக் காண்பதாயின் “நான் இல்லை” என்ற முடிவுக்கு அவன் வர வேண்டும். அதாவது தன்னை அவன் அழிக்க வேண்டும். “நானில்லை அல்லாஹ்தான்” என்ற முடிவுக்கு அவன் வர வேண்டும். இந்த நபீ மொழி “பனா” நிலையை சுட்டிக் காட்டுவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதன்று.