“கழா” என்று ஒரு தொழுகை இல்லையாம்! ஒரு வஹ்ஹாபீயின் உளறல்!
நான்கு மத்ஹபுகளின் “பிக்ஹ்” சட்ட நூல்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்க வேண்டும்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நான் அறிந்தவரை மத்ஹபுகளில் எந்த ஒரு மத்ஹபும் “கழா” என்று ஒரு தொழுகை இல்லையென்று சொன்னதுமில்லை. “கழா”வான தொழுகையை தொழத் தேவையில்லை என்று சொன்னதுமில்லை.
உலமாஉகளும், பொது சனங்களில் மார்க்கப் பற்றுள்ளவர்களும் ஒரு தொழுகை தவறி விடுமாயின் அதாவது அத் தொழுகையை உரிய நேரம் தொழத் தவறினால் அதை வேறொரு நேரத்தில் “கழா”வாக தொழுதே வருகிறார்கள். நான் அறிந்த காலத்திலிருந்து முஸ்லிம்கள் “கழா” தொழுகையென்று ஒன்று உண்டு என்றும், அது தொழப்பட வேண்டும் என்றும் நம்பினவர்களாகவும், “கழா” தொழுபவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். “கழா”வான தொழுகையை தொழாமல் விடுவது பாவம் என்ற கொள்கையுள்ளவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். “புகஹாஉ” எனும் ஷரீஆவின் சட்ட மேதைகள் “கழா” தொழப்பட வேண்டும் என்றும், அதற்கென்று சில விஷேட சட்டங்கள் உண்டு என்றும் கூறியிருக்கும் நிலையில் புதிதாக ஒருவர் வந்து புதியதொரு சட்டம் கூறும் வேளையில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளான உலமாஉகளும், “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக் கலை கற்றுக் கொடுக்கின்ற أَسَاتِيْذُ الْأَزْمِنَةِ காலங்களின் மத குருக்கள் என்று அழைக்கப்படுகின்ற ஹழ்றத்மார்களும், இன்னும் தம்மை “ஷரீஆ”வாதிகள் என்றும், “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையின் தூண்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களும், அதன் “முப்தீ” மகான்களும் செவிடர்களாகவும், குருடர்களாகவும் நடிப்பார்களா? அல்லது இவருக்கு ஏதாவது பட்டங்கள் கொடுப்பார்களா? அல்லது தாமும் அவருடன் சேர்ந்து “கோவிந்தா” போடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புப் பொது மக்களே! மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் சகோதரர்களே!
நானும், நீங்களும் ஐந்து நேரமும் தொழுது வருகின்றோம். தவிர்க்க முடியாத காரணங்களால் சில வேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழ முடியாது போனால் அத் தொழுகையை இன்னொரு நேரம் தொழுது வருகிறோம். இவ்வாறு தொழுவதே “கழா” தொழுகை எனப்படுகிறது.
இப்படியொரு தொழுகை இல்லையென்று கூறுபவர் நாட்கள் நகர நகர இன்னும் பல புதிய சட்டங்களும் சொல்வார் என்று எதிர் பாருங்கள்! இறுதியில் இவரும், இவரின் கொள்கையுடையோரும் அல்லாஹ்வை “அர்ஷ்” எனும் இடத்தில் அமரச் செய்து அவன் சடவாதி மட்டும்தான் என்று அவனை “ஜிஸ்ம்” சடத்தில் கட்டுப்படுத்திவிடுவார்கள். வருடத்தில் ஒரு முறை “சகாத்” கொடுத்தால் போதும் என்று சொல்வார்கள். “வுழூ” இன்றி திருக்குர்ஆன் பிரதியை தொடலாம், சுமக்கலாம் என்றும் சொல்வார்கள். இவை மட்டுமல்ல. மாதத் தீட்டுள்ள பெண்ணும் திருக்குர்ஆனை ஓதவும் முடியும், சுமக்கவும் முடியும் என்று சொல்வார்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு முன் – “குத்பா” பிரசங்கம் நிகழ்த்துமுன் “மஹ்ஷர்” ஓதுவது “பித்அத்” அனாச்சாரம் என்று சொல்வார்கள். ஆனால் இவர்களை எங்காவது ஒரு பள்ளிவாயலில் “குத்பா” நிகழ்த்துவதற்கு அழைத்து அவருக்கு மாலை சூடி வரவேற்றால் அந்தப் பள்ளியில் “மஹ்ஷர்” ஓதினால் ஆடாமலும், அசையாமலும் மௌனம் சாதித்து பக்தியுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த ஆசாமியும் இவ்வாறுதான் செய்வார். இவரின் கொள்கைப்படி “மஹ்ஷர்” ஓதுவதும், “அஸா” எடுப்பதும் “பித்அத்” ஆகும்.
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُنْكِرْهُ بِيَدِهِ، فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَلْيُنْكِرْهُ بِلِسَانِهِ، فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَلْيُنْكِرْهُ بِقَلْبِهِ، وَذَاكَ أَضْعَفُ الْإِيمَانِ»
“உங்களில் யாராவது மார்க்கத்திற்கு முரணான ஒன்றைக் கண்டால் அதை கையினால் தடுக்கவும், அதற்கு முடியாது போனால் சொல்லால் தடுக்கவும், அதற்கும் முடியாது போனால் மனதால் வெறுக்கவும். இது “ஈமான்” நம்பிக்கையில் மிகவும் பலம் குறைந்ததாகும்” என்ற பெருமானாரின் அருள் மொழி எங்கே போயிற்று? இவர் யார்? கொள்கைவாதியா? அல்லது எந்தப் பக்கம் “வாசி” உண்டோ அந்தப் பக்கம் தலைப்பாகை திருப்புபவரா?
இவரின் வண்டவாளம் இவ்வாறிருக்கும் நிலையில்தான் ஸூபீ மகான்களில் கை வைக்கத் தொடங்கியுள்ளார். இவர் ஸூபீகளில் இப்போதுதான் கை வைத்துள்ளார். இவரும், இவர் போன்ற வஹ்ஹாபீகளும் ஸூபீகளில் கை வைப்பார்கள் என்பது எனக்கு எப்பவோ தெரியும். யாராவது கை வைக்கட்டும் பார்ப்போம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இவர்தான் முன் வந்துள்ளார்.
وَمَنْ يُشَابِهْ أَبَهُ فَمَا ظَلَمَ
“வன் தனது தந்தை வழியில் செல்கிறானோ அவன் அநீதியாளன் அல்ல” என்ற ஒரு கவிஞனின் வார்த்தை போல் தந்தைக்கு தப்பாமல் பிறந்துள்ளார் மகனார்.
இவரின் “மஜாஸிய்யா”வான தந்தைகள் இருவர். அவர்கள் வேறு யாருமில்லை. நாடெல்லாம் – ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளும், ஸூபிஸ சமூகமும் பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருந்த இரு பெரும் வழிகேடர்களான இப்னு தைமிய்யாவும், இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவருமேயாவர்.
இப்னு தைமிய்யா படித்து வழி கெட்டவர். இப்னு அப்தில் வஹ்ஹாப் படிக்காமல் வழி கெட்டவர். இப்னு தைமிய்யா أَضَلَّهُ اللهُ عَلَى عِلْمٍ படித்திருந்தும் அவரின் அறிவைக் கொண்டே அல்லாஹ் அவரை வழி கெடுத்தான். இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரோ أَضَلَّهُ اللهُ عَلَى جَهْلٍ அறியாமையால் அவரை வழி கெடுத்தான். இருவருக்கும் வேறுபாடு உண்டு. அவர் அறிவால் வழி தவறியவர். இவர் அறிவின்மையால் வழி தவறியவர்.
இப்னு அப்தில் வஹ்ஹாப்:
இவர்தான் வஹ்ஹாபிஸத்தின் தந்தை என்று இஸ்லாமிய நாடுகளில் வாழ்கின்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர் பற்றி சிறிய குறிப்பு.
هو محمد بن عبد الوهّاب بن سليمان التّميميّ النّجديّ، مُجدِّدُ الإسلام فى الجزيرة العربيّة، وُلد سنة 1115 ه (فى العينية) قُرب الرِّياض، ونشأ بها، وتعلّم بها على يدِ والديه، ثمّ رحلَ إلى مكّة والمدينة والعراق والأحساء، وأخذ عن العلماء هناك، ولمّا عادَ قامَ بدَعوتِه الإصطلاحيّة فى نجد، قَصَدَ الدِّرَعِيّة، فتلقَّاهُ أميرُها محمد بن سُعود، فأزَرَه، فعمَّتِ الدّعوةُ أرجاء الجزيرة،
இவர் முஹம்மத். இவரின் தந்தை அப்துல் வஹ்ஹாப். அவரின் தந்தை ஸுலைமான். இவர் தமீம் கிளையைச் சேர்நதவர். “நஜ்த்” பிரதேசத்தைச் சேர்ந்தவர். முஹம்மத் என்பவர் அறபு நாடுகளில் இஸ்லாம் மார்க்கத்தைப் புதுப்பிக்க வந்தவர் “முஜத்தித்” என்று இவரின் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார்.
இவர் ஹிஜ்ரீ 1115ல் பிறந்தார் என்றும், 1111ல் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் “ரியாழ்” – “ரியாத்” என்று அழைக்கப்படும் தலை நகரின் சமீபத்திலுள்ள “ஐனிய்யா” எனும் ஊரில் பிறந்தார். அங்கேயே வாழ்ந்து தனது தந்தை அப்துல் வஹ்ஹாப் என்ற நல்ல மனிதனிடம் கல்வி கற்றார். பின்னர் திரு மக்கா, திரு மதீனா, இறாக், அஹ்ஸா போன்ற நாடுகளுக்குப் பயணித்து அங்கிருந்த உலமாஉகளிடமும் கல்வி கற்றார். மீண்டும் “நஜ்த்” பிரதேசத்திற்கு வந்து “நஜ்த்” எனுமிடத்தில் தனது பிரச்சாரத்தை மேற் கொண்டார். பின்னர் “திறஇய்யா” என்ற பிரதேசத்திற்கு வந்தார். அங்கு முஹம்மத் இப்னு ஸுஊத் என்ற அதன் தலைவரை சந்தித்தார். அவர் மூலம் அறபு நாடுகளில் தனது பிரச்சாரத்தை பரப்பலானார். توفّي فى الدّرعيّة سنة 1206 هـ இவர் வாழ்ந்த காலம் – இவரின் வயது 91 அல்லது 95 ஆகும்.
இவருக்கு முன் வாழ்ந்தவர்தான் இப்னு தைமிய்யா ஆவார்.
இப்னு தைமிய்யா:
تَقِيُّ الدِّينِ أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ عَبْدِ الْحَلِيمِ بْنِ عَبْدِ السَّلَامِ النُّمَيْرِيُّ الْحَرَّانِيُّ، وُلد ابن تيميَّة سنة 661هـ المُوافقة لسنة 1263م في مدينة حران للفقيه الحنبلي عبد الحليم ابن تيمية و«سِتِّ النِّعَم بنت عبد الرحمن الحَرَّانية»، ونشأ نشأته الأولى في مدينة حران. بعد بلوغه سن السابعة، هاجرت عائلته منها إلى مدينة دمشق بسبب إغارة التتار عليها وكان ذلك في سنة 667 هـ. وحال وصول الأسرة إلى هناك بدأ والده عبد الحليم ابن تيمية بالتدريس في الجامع الأموي وفي «دار الحديث السُّكَّرية». أثناء نشأة ابن تيمية في دمشق اتجه لطلب العلم، ويذكر المؤرخون أنه أخذ العلم من أزيد من مائتي شيخ في مختلف العلوم منها التفسير والحديث والفقه والعربية. وقد شرع في التأليف والتدريس في سن السابعة عشرة. بعد وفاة والده سنة 682 هـ،
தமிழில் சுருக்கம்:
இவரின் பெயர் அஹ்மத். இவரின் தந்தையின் பெயர் அப்துல் ஹலீம். இவரின் தந்தை பெயர் அப்துஸ்ஸலாம். தகிய்யுத்தீன், அபுல் அப்பாஸ் என்பவை இவரின் சிறப்புப் பெயர்களாகும். இவர் ஹர்றான் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இப்னு தைமிய்யா ஹிஜ்ரீ 661, கி.பி 1263ல் “ஹர்றான்” பட்டணத்தில் பிறந்தார். அங்கேயே வளர்ந்தார். இவரின் 07ம் வயதில் இவரின் குடும்பத்தினர் ஹிஜ்ரீ 667ல் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு சென்ற பின் இப்னு தைமிய்யாவின் தந்தை அப்துல் ஹலீம் “அல்ஜாமிஉல் அமவீ” எனும் பள்ளிவாயலில் கற்றுக் கொடுத்தார்கள். இப்பள்ளிவாயலுக்கு நானும், என்னுடன் வந்த அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், நஸார் அவர்களும் சென்றுள்ளோம். இங்குதான் ஒரு காலத்தில் பூமிக்கு இறங்கும் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானிலிருந்த வந்திறங்கும் “மனாறா” உண்டு. நபீ தாஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “கப்ர்” உம் உண்டு. இப்னு தைமிய்யா டமஸ்கஸில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் கல்வி கற்க ஆரம்பித்தார். இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி கற்றுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இவர் அவர்களிடம் தப்ஸீர், ஹதீது, “பிக்ஹ்”, அறபு மொழி முதலானவற்றைக் கற்றார். தனது தந்தை ஹிஜ்ரீ 682ல் மரணித்த பிறகு 17ம் வயதிலேயே கற்பித்துக் கொடுப்பதிலும், நூல்கள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார்.
இப்னு தைமிய்யாவுக்கும், இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவருக்கும் இடைப்பட்ட காலம் 545 வருடங்களாகும். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இப்னு தைமிய்யாவுக்கும், அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய உலமாஉகளுக்கும் மார்க்க ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர் – இப்னு தைமிய்யா பல தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், விடுதலை செய்யப்படுவதுமாக இருந்துள்ளார்.
ஹிஜ்ரீ 693 – கி.பி 1294ல் ஒரு தரம் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இது ஒரு தரம்.
ஹிஜ்ரீ 705 – கி.பி 1306ல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் செய்து விடுதலையானார். இது இரண்டாம் தரம். சுமார் 18 மாதங்கள் சிறை வாசம் செய்தார். இவரும், இவரின் சகோதரர்களான ஷறபுத்தீன் அப்துல்லாஹ், செய்னுத்தீன் அப்துர் றஹ்மான் ஆகியோரும் இவருடன் சிறையில் இருந்தனர்.
இந்தக் கைதுக்குக் காரணம் இவர் – இப்னு தைமிய்யா ஏனைய உலமாஉகளுடன் அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் உள்ளான், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை, அல்லாஹ் இரவின் பிற்பகுதியில் அர்ஷில் இருந்து முன் வானத்திற்கு இறங்குகிறான் முதலான விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததேயாகும்.
ஹிஜ்ரீ 707 ஷவ்வால் மாதம் – கி.பி 1308ல் இன்னுமொரு முறை கைது செய்யப்பட்டார். இதற்கான காரணம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தொடர்பாக இக் கொள்கை பிழையென்று இப்னு அறபீ, இப்னு ஸப்ஈன், கவ்னவீ, ஹல்லாஜ் ஆகியோருக்கு எதிராகப் பேசியதாகும்.
இன்னும் ஹிஜ்ரீ 726ல் கி.பி 1326ல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இது கப்றுகளைத் தரிசித்தல், அதற்காகப் பயணித்தல் தொடர்பாக இவருக்கும், ஏனைய மார்க்க அறிஞர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணமாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இப்னு தைமிய்யா ஹிஜ்ரீ 728 – கி.பி 1328ல் மரணிக்கும் வரை சிறையிலேயே இருந்து அங்கேயே மரணித்தார். எனினும் ஸூபீகளை எதிர்த்த இவர் அவர்களின் மையவாடியிலேயே அடக்கம் பெற்றுள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றில் வழிகேடான கொள்கைகளைப் பரப்பியவர்களில் இப்னு தைமிய்யாவும், இப்னு அப்தில் வஹ்ஹாபும் மிகப் பிரசித்தி பெற்றவர்களாவர்.
இப்னு தைமிய்யாவால் ஏற்பட்ட மார்க்க முரணான கருத்துக்களை ஒன்று திரட்டி أَخْطَاءُ اِبْنِ تَيْمِيَّةَ என்ற பெயரில் இந்தியா – வட நாட்டிலுள்ள ஒரு கலாநிதி அஸ்ஹரீ அவர்கள் பெரிய நூல் ஒன்று எழுதியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அந்த நூலில் உள்ள பயங்கர கருத்துக்களுக்கு மறுப்பு எழுதி பொது மக்கள் அறிவதற்கு வழி செய்யப்படும்.
வஹ்ஹாபிஸம் வழி கேடு என்பதே இன்று உலகில் வாழும் தரமான அறிஞர்களின் முடிவாகும். ஆயினும் ஒரு சில அரசியல்வாதிகளும், மார்க்க ஞானம் இல்லாதவர்களும் இன்று உலகில் பெருங் கூட்டமாக இருப்பது வஹ்ஹாபீகளேயாவர். எம்பெருமானார் அவர்கள் பெருங் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளதால் பெருங் கூட்டமாகிய வஹ்ஹாபீகளையே ஆதரிக்க வேண்டும் என்று அரசியல்வாதி ஒருவர் அடித்துச் சொல்கிறார். இன்று உலகில் கிறித்தவர்களே அதிகம் உள்ளனர். அவ்வாறாயின் அரசியல்வாதியின் கருத்தின்படி நாம் யாருடன் சேர வேண்டும் என்று அரசியல் வாதியிடமே கேட்போம்.
தொடரும்….