தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
எந்த ஒரு தொழுகையாயினும் அதில் இரண்டாம் “ஸுஜூத்” செய்த பின் நேரடியாக நிலைக்கு வராமல் சற்று நேரம் – சில நொடிகள் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருதல் “ஸுன்னத்” ஆகும். இது இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” இல் உள்ள சட்டமாகும். இவ் இருப்பு جَلْسَةُ الْإِسْتِرَاحَةِ ஓய்வு எடுக்கும் இருப்பு எனப்படும். ஷாபிஈ மத்ஹபின் சட்ட நூல்களில் இதைக் காணலாம்.
இவ் இருப்பு ஒரு சில நொடிகள் மட்டும் இருக்கும் இருப்பாகும். ஒரு சில நிமிடங்கள் கூட இருக்கும் இருப்பல்ல.
“ஜல்ஸத்” என்றால் இருப்பு, “இஸ்திறாஹத்” என்றால் ஓய்வு எடுத்தல். இரண்டு சொற்கைளயும் சேர்த்தால் “ஓய்வு எடுத்தல் இருப்பு” என்று பொருள் வரும்.
ஓய்வு என்பது உடலை வருத்தியும், வியர்வை சிந்தியும் கஷ்டமான வேலை செய்தவனுக்கே தேவை. இரண்டு “ஸுஜூத்” செய்தவனுக்கு “ரெஸ்ட்” ஓய்வு தேவையில்லை. ஆயினும் “ஷரீஆ”வில் இரண்டு “ஸுஜூத்” செய்தவனுக்கே ஓய்வு தேவையென்று சொல்லப்பட்டுள்ளது.
இவ் இருப்புக்கு ஏன் இவ்வாறு பெயர் வந்தது என்று மதிப்புக்குரிய ஜம்இய்யாவின் முப்தீ அவர்களிடமும், ஏனைய முப்தீகளிடமும் கேட்டால் நான் சொல்லும் விளக்கத்தை விட தரமான விளக்கம் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் “முப்தீ”கள். “முப்தீ” என்பவர் திருக்குர்ஆனையும், நபீ பெருமானின் அருள் மொழிகளையும் கரைத்துக் குடித்தவராகவே இருப்பார். இருக்கவும் வேண்டும்.
இரண்டு “ஸுஜூத்” செய்தபின் “ஓய்வு இருப்பு” எதற்கு? இதிலுள்ள இரகசியம் என்ன? என்ற தத்துவத்தை அறிவதாயின் “ஸூபிஸம்” எனும் கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும்.
தொழுகையில் قِيَامْ நிலை என்றும், “றுகூஉ” குனிந்திருத்தல் என்றும், “ஸுஜூத்” தலையை – நெற்றியை பூமியில் – தரையில் வணங்கும் நோக்கத்தோடு வைத்தல் என்ற நிலை என்றும், “ஜல்ஸத்” இருப்பு நிலை என்றும் பல நிலைகள் உள்ளன. இவையாவும் தொழுகையில் உள்ள நிலைகள்தான். இந் நிலைகளில் மனிதன் அல்லாஹ்வுக்கு அதிகம் நெருங்கிய நிலை “ஸுஜூத்” நிலையாகும். அதாவது நெற்றியை தரையில் வைத்து வணங்கும் நிலையாகும்.
சொல் பற்றிய விபரம்:
இச் சொல் سَجَدَ “ஸஜத” என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதேபோல் “மஸ்ஜித்” مَسْجِدْ என்ற சொல்லும் سَجَدَ என்ற சொல்லடியில் உள்ளதேயாகும். “மஸ்ஜித்” என்றால் பள்ளிவாயல், தொழுமிடம், வணங்குமிடம் என்ற பொருள்களைக் கொண்ட சொல். இதேபோல் مَسْجَدْ “மஸ்ஜத்” என்ற சொல்லும் “ஸஜத” என்ற சொல்லடியில் உள்ளதேயாகும். இதன் பொருள் “நெற்றி” என்று வரும். ஏனெனில் தொழும்போது உடலில் தரையில் வைக்குமிடம் நெற்றி என்ற கருத்தில் இச் சொல் நெற்றி என்ற பொருளுக்கும் பாவிக்கப்படும். “இன்ஸான்” “எண் சான்” உடலில் சிரசே பிரதானம்” என்று முன்னோர் சொல்வார்கள். ஒருவனிடம் “தலை வணங்கு” என்று சொன்னால் இச் சொல் தலை குனிவதையும், தலையை – நெற்றியை தரையில் வைப்பதையும் குறிக்கும்.
பள்ளிவாயலுக்கு அறபியில் மேலே சொன்னது போல் مَسْجِدْ என்றுதான் சொல்லப்படும். ஆயினும் சொல்லிலக்கண விதிப்படி பள்ளிவாயலுக்கு مَسْجَدْ “மஸ்ஜத்” என்றுதான் வர வேண்டும். “ஜீம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” என்ற குறிதான் வர வேண்டும். “கஸ்ர்” என்ற குறி வரக் கூடாது. ஏனெனில் (فَعَلَ يَفْعُلُ) என்ற அமைப்பில் مَاضِيْ – மாழியான பிஅலும், مُضَارِعْ முழாரிஆன பிஅலும் வந்தால் அதன் اِسْمُ مَكَانْ “இஸ்மு மகான்” مَفْعَلْ என்ற அமைப்பிலேயே வர வேண்டும். இவ் விதிப்படி سَجَدَ يَسْجُدُ என்பது فَعَلَ يَفْعُلُ என்ற அமைப்புள்ளதாயிருப்பதால் இதற்கான اِسْمُ مَكَانْ – “இஸ்மு மகான்” مَسْجَدْ “மஸ்ஜத்” என்றே வர வேண்டும். இவ்வாறு வராமல் مَسْحِدْ என்றே வந்துள்ளது. இவ்வாறு சில சொற்கள் அறபு மொழியில் சட்ட விரோதமாக வந்துள்ளன. இவற்றில் அனைத்து சொற்களுக்கும் காரணம் இல்லாது போனாலும் مَسْجَدْ – “மஸ்ஜத்” என்று வர வேண்டிய சொல் مَسْجِدْ என்று வந்ததற்கு ஆன்மிக அடிப்படையில் விளக்கம் சொல்ல முடியும்.
அதாவது “பத்ஹ்” என்ற குறி எப்போதும் ஓர் எழுத்தின் மேல்தான் வரும். அதன் கீழே வராது. “பத்ஹ்” என்ற இச் சொல்லுக்கு திறத்தல், வெற்றி என்று பொருள் வரும்.
“கஸ்ர்” كَسْرْ என்ற குறியீடு எப்போதும் ஓர் எழுத்தின் கீழேதான் வரும். மேலே வராது. இச் சொல்லுக்கு உடைத்தல், முறித்தல் போன்ற பொருள் வரும்.
“பத்ஹ்” என்ற சொல்லையும், “கஸ்ர்” என்ற சொல்லையும் மையமாக வைத்து ஆன்மிக அடிப்படையில் ஆய்வு செய்தால் ஆன்மிக தத்துவங்கள் பல தெளிவாகும்.
அதாவது “பத்ஹ்” என்பது எழுத்தின் மேலே வருகின்ற குறியீடாகும். இது “உலுவ்வு” உயர்வைக் குறிக்கிறது. அடியான் பணிவைத்தான் விரும்ப வேண்டுமேயன்றி உயர்வை விரும்பக் கூடாது என்ற வகையிலும், “கஸ்ர்” என்பது எழுத்தின் கீழே வருகின்ற குறியீடாகும். இது உடைத்தல், முறித்தல் என்ற கருத்தைத் தருகின்றது. அடியான் பணிவையும், மனம் உடைந்து கிடப்பதையும் விரும்ப வேண்டுமேயன்றி பெருமை, புகழ் போன்ற தீக் குணங்களை விரும்பக் கூடாது என்ற வகையிலும், பள்ளிவாயல் என்பது அடியான் மனமொடிந்து கிடக்கின்ற இடம் என்ற வகையிலுமே “மஸ்ஜித்” என்ற சொல் “ஜீம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” செய்யப்படாமல் “கஸ்ர்” செய்யப்பட்டு வந்துள்ளதென்று கூறலாம். இது ஆன்மிக தத்துவத்தை உணர்த்துவது சிந்தனையாளர்களுக்கு மறையாது.
தொழுகையிலுள்ள மேலே கூறப்பட்ட பல நிலைகளில் “ஸுஜூத்” உடைய நிலைதான் மிகச் சிறந்த நிலை என்பதினால்தான் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்,
أَقْرَبُ مَا يَكُوْنُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ،
“ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய கட்டம் அவன் “ஸுஜூத்” செய்து கொண்டிருக்கும் நிலையாகும்” என்று அருளினார்கள்.
இதை ஆதாரமாகக் கொண்டே இமாம்களும், இறைஞானிகளும் தொழுகையில் “ஸுஜூத்” உடைய நிலையில் அறபு மொழியில் அல்லாஹ்விடம் “துஆ” கேட்பது மிக விஷேடமானதென்று கூறியுள்ளார்கள். நல்லடியார்களும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்கள்.
“ஸுஜூத்” உடைய நிலை ஓர் அடியான் அல்லாஹ்விடமிருந்து இரவலாகப் பெற்ற ஏழு “ஸிபாத்” தன்மைகளையும் அவனிடம் ஒப்படைக்கும் நிலையாகும். அதாவது அல்லாஹ்வின் ஏழு தன்மைகளை மனிதன் உயிர் வாழும் வரை அவனுக்கு இரவலாக அல்லாஹ் வழங்கியுள்ளான். அவ் ஏழு தன்மைகளும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியவைகளாகும். அவ்வேழு தன்மைகளையும் மனிதனின் நன்மை கருதி அவனுக்கு இரவலாக அல்லாஹ் வழங்கியுள்ளான். அவ்வேழு “ஸிபாத்” தன்மைகளும் பின்வருமாறு.
“குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உன்” கேள்வி, “பஸறுன்” பார்வை, “இல்முன்” அறிவு, “கலாம்” பேச்சு, “ஹயாத்” உயிர் என்பனவாம்.
இவ் ஏழு தன்மைகளும் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியனவாகும். சொந்தமானவையாகும். வேறெந்த ஒரு படைப்புக்கும் இவற்றில் ஒன்று கூட சொந்தமானதல்ல. எனினும் மனிதன் உயிர் வாழும் காலத்தில் இவ் ஏழும் அவனுக்கு அவசியம் என்பதை அறிந்த அல்லாஹ் அவற்றை அவனுக்கு சொந்தமாகக் கொடுக்காமல் அவன் உயிர் வாழும் வரை இரவலாகக் கொடுத்துள்ளான். அவனால் இவனுக்கு இரவலாக வழங்கப்பட்ட ஏழு தன்மைகளையும் அவன் கேட்கும் முன்னே அவனிடம் ஒப்படைத்து இவன் இவ் உலகில் நடமாடும் “மையித்” ஆக வேண்டும். “ஸுஜூத்” நிலையிலும் இவன் இரவல் பொருட்களை ஒப்படைக்கலாம். இதனால்தான் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
فَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اُمِرْتُ أَنْ اَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاء،
“நான் ஏழு உறுப்புகளில் “ஸுஜூத்” செய்யுமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று அருளினார்கள்.
அவை, நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு கால்களின் விரல்களின் நுணி. இவ் ஏழு உறுப்புகளும் “ஸுஜூத்” நிலையில் தரையில் பட வேண்டும். இவ் ஏழு உறுப்புகளில் நெற்றி மட்டும் திரையின்றி தரையில் பட வேண்டும். மற்றவை திரையோடு தரையில் படுவதால் “ஸுஜூத்” வீணாகாது. ஆயினும் நெற்றி திரையோடு தரையில் படுவதால் “ஸுஜூத்” வீணாகிவிடும். “ஸுஜூத்” வீணானால் தொழுகையும் வீணாகிவிடும். இரு முழங்கால்கள் தரையில் திரையின்றிப் படுவது ஆகுமாயினும் முழங்காலுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதி நிச்சயமாக மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விடயத்தில் கவனமாயிருக்க வேண்டும். இவ்விடயத்தில் “ஜம்பர்” அரைக்கால் சட்டை பாவிப்பவர்கள் சற்றுக் கவனமாக இருத்தல் அவசியம். இதனால் “ஜம்பர்” அரைக் கால் சட்டை போட்ட நிலையில் தொழுவது ஆகாதென்பது கருத்தல்ல. எந்தப் பெயரிலுள்ள எந்த உடை உடுத்தாலும் முழங்காலுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதி தொழுகையில் மறைக்கப்பட வேண்டும். தொழுகைக்கு வெளியேயும் மறைக்கப்பட வேண்டும். இது மட்டுமே ஆண்களின் உடலில் “அவ்றத்” கட்டாயம் எல்லா நேரமும் மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
“ஸுஜூத்” செய்யும் போது நெற்றி திரையுடன் தரையில் பட்டால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது. இவ்விடயத்தில் பொது மக்களிற் பலர் தவறு செய்கின்றார்கள். உதாரணமாக சிலர் தொழும் போது தொப்பி, கைலேஞ்சு போன்றவற்றை நெற்றியில் போட்டுக் கொள்கிறார்கள். கட்டியும் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வோரின் நெற்றி தரையில் பட்டாலும் கூட அது திரையுடன் படுவதால் அவர்களின் தொழுகை நிறைவேறாது. உலமாஉகளுக்கு இவ்வாறு சட்டமிருப்பது தெரிந்த விடயமாயினும் சிலர் தமது கவனமின்மையால் தலைப்பாகையை நெற்றியில் கட்டிக் கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை “குத்பா” பிரசங்கம் செய்யும் போது அவ்வாறு நெற்றியில் கட்டினாலும் தொழுகையின் போது கட்டினால் அவரின் தொழுகை வீணாகிவிடுவதுடன் அறிந்து கொண்டு அவரைப் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகையும் வீணாகிவிடும். நான் இங்கு எழுதும் சட்டங்கள் “ஷாபிஈ” மத்ஹபுக்குரிய சட்டங்களேயாகும்.
நெற்றி தரையில் பட வேண்டுமென்பதால் அது சீமெந்து தரையில், அல்லது மண்ணில், அல்லது மார்பிளில், அல்லது பாயில்தான் பட வேண்டுமென்பது அவசியமில்லை. தகரம், இரும்பு, மரம் போன்றவற்றில் படுவதால் குற்றமில்லை. ஆயினும் “ஸுஜூத்” செய்யும் போது நெற்றியை வைக்கும் இடம் மட்டும் சுத்தமானதாயிருந்தால் போதும். இவ்வாறுதான் ஏனைய உறுப்புகளை வைக்கும் இடங்களும் சுத்தமாயிருத்தல் அவசியமாகும்.
“பாத்றூம்” குளியலறையில் தொழலாமா? ஹோட்டலில் தொழலாமா? வேசையின் வீட்டில் தொழலாமா? “பார்” மதுபானச் சாலையில் தொழலாமா? கடற்கரை மண்ணில் தொழலாமா? வீதியில் தொழலாமா? விகாரையில் தொழலாமா? என்று ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்கத் தேவையில்லை. தொழுமிடம் எந்த இடமாயினும் தொழுகின்றவனின் குறித்த ஏழு உறுப்புக்களும் எவ்விடத்தில் படுகின்றனவோ அவ்விடம் மட்டும் சுத்தமானதாயிருந்தால் போதும். தொழலாம். நாய் வளர்க்கும் வீடுகளிலும் குறித்த இடங்கள் மட்டும் சுத்தமாயிருந்தால் போதும். அவ்விடத்திலும் தொழலாம்.
ஓர் ஏழையின் சிறிய குடிசை, ஒருவர் மேல் ஒருவர் படுக்குமளவுதான் இடமும் உண்டு, அங்கு மனைவியும் உறங்குகிறாள். கணவன் தொழுகின்றான். அவன் “ஸுஜூத்” செய்வதாயின் தனது மனைவியின் காலில்தான் செய்ய வேண்டியதாயிருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று ஒருவர் கேட்பாராயின் அவருக்குப் பின்வருமாறு விடை சொல்லலாம்.
மனைவியின் காலில் “ஸுஜூத்” செய்வது தவிர வேறு வழியில்லாத கட்டத்தில் அவளின் காலில் “ஸுஜூத்” செய்ய முடியும். ஆயினும் இருவரின் உடலும் திரையின்றிப் படாமல் – சந்திக்காமலிருப்பது அவசியம்.
இக்கட்டுரையை வாசிக்கின்ற சிலருக்கு இப்படியொரு கேள்வியும், விடையும் இக்காலத்தைப் பொறுத்த வரை தேவைதானா? என்று கேட்க நினைப்பவர்களும் இருக்கலாம். இவ்வாறு நினைப்பு வருவதில் தவறில்லை. ஏனெனில் அவர்களில் ஓடும் குருதி எத்தன்மையுடையதோ அத்தன்மை எண்ணங்களிலும், செயல்களிலும் வெளியாக வாய்ப்புண்டு. அதேபோல் இப்படியொரு சூழ்நிலை இங்கு இல்லாவிட்டாலும் எங்காவது இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமல்லவா? “ஸுஜூத்” நிலையில் ஏழு உறுப்புகள் தரையில் படவேண்டுமென்பது ஏழு தன்மைகளையே குறிக்கும்.
“ஸுஜூத்” உடைய நிலை பற்றிக் கூறிய கவிஞர், இறைஞானி மஸ்தான் அப்பா அவர்கள்,
முட்டை(ப்) பொரிப்பேன்
முழுக் கோழியும் பொரிப்பேன்
தட்டைப் பீங்கானில் வைத்து
தருவேன் மனோன்மணியே!
என்று பாடியுள்ளார்கள்.
இதற்கான விளக்கமும், இரண்டாம் “ஸுஜூத்” செய்தபின் ஓய்வு எதற்கு? என்பதற்கான விளக்கமும் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்….