தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கடந்த சுமார் 04 ஆண்டுகளாக புதையுண்டு போய்க்கிடந்த மொட்டைத் தலைப் பாம்புகள் தற்போது மெது மெதுவாக தலை நீட்ட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் மருதூர் பொந்தில் மறைந்திருந்த “பறகத்” செய்யப்பட்ட (?) மதனீ என்ற நச்சுப் பாம்பு மக்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் வாயிலாக ஸூபிஸ, ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை இறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நச்சுப் பாம்பை தலையில் அடித்துக் கொல்வதற்கு தாங்களும் ஸூபீகளே என்று வீர வசனம் பேசிய ஜம்இய்யதுல் உலமாவோ, “வஹ்ததுல் வுஜூத்” இறையியலுக்கு எதிராக, உலமா சபைக்கு ஆதரவாக (மறைமுகமாக) கூஜா தூக்கும் லேபல் ஸுன்னீகளோ, ஸூபீகளோ முன் வந்ததாக தெரியவில்லை.
மார்க்கத்திற்கு முரணான கருத்துக்கள் போதிக்கப்படும் நேரம் மௌனிகளாயிருக்கும் அறிஞன் “ஊமை ஷெய்தான்” என்ற பெருமானாரின் வாக்கின்படி நாமும் ஊமை ஷெய்தான்களாக ஆகி விடக்கூடாதென்பதற்காக எம்மால் முடிந்த அளவு அந்த நச்சுப் பாம்பையும், அது போன்ற, இதன் பிறகு வெளிவரவுள்ள நச்சுப் பாம்புகளையும் அவற்றைக் கொல்லாவிட்டாலும், அவற்றின் நச்சுத் தன்மை பொது மக்களைப் பாதிக்காமலிருக்கச் செய்வோம்.
அந்த வகையில் மருதூர் மதனீயின் உளறல்களில் ஒன்று மார்க்கத்தில் “கழா” தொழுகை இல்லை என்பதாகும். இதை இவர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. இவருடைய பாட்டன்மார்களாகிய இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் போன்றோரும், அவர்களின் அடிவருடிகளும் சொன்னதையே இவரும் சொல்கிறார். மார்க்கத்தில் இவர் புதிதாக “இஜ்திஹாத்” செய்து சொன்ன செய்தியல்ல. அவ்வாறு “இஜ்திஹாத்” செய்யும் தகுதியுடையவருமல்ல இவர். திரு மதீனா நகர் சென்று பட்டப்படிப்பு படித்து முடித்து கலாநிதியாக வெளி வந்தால் இவர் கூறும் வார்த்தைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த “வஹீ” என்றோ, “இல்ஹாம்” என்றோ பொது மக்களில் எவரும் எண்ணிவிடலாகாது. இவர்களின் உளறல்கள் எல்லாமே ஏட்டுச் சுரக்காய்களேயன்றி வேறில்லை.
“கழா” என்றால் என்ன?
காலம் குறிப்பிடப்பட்ட ஒரு வணக்கத்தை அதைச் செய்யும் காலத்தில் மறதியாகவோ, தங்கடம் காரணமாகவோ, அல்லது வேண்டுமென்றோ தவறவிட்டால் அதை குறிப்பிட்ட காலத்தின் பின் நிறைவேற்றுவதையே மார்க்கத்தில் “கழா”ச் செய்தல் என்று சொல்லப்படும்.
இஸ்லாத்தில் கூறப்பட்ட வணக்க வழிபாடுகளில் எதையேனும் அவ்வாறு “கழா” செய்வதற்கு, அல்லது செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டதற்கு ஆதாரம் உண்டா என்றால் ஆம், ஆதாரம் உண்டு. அல்லாஹு தஆலா திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ
எவர் அம்மாதத்தை (றமழானை) அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். (02-185)
நாள் குறித்துச் சொல்லப்பட்ட நோன்பு என்ற வணக்கத்தை மேற்குறித்த காரணங்களுக்காக விட்டவர்கள் அந்த நோன்பை அடுத்து வரும் நாட்களில் நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். மேற்குறித்த காரணங்கள் அன்றி வேண்டுமென்று விட்டாலோ, அல்லது நோற்ற நோன்பை முறித்துக் கொண்டாலோ அதையும் “கழா” செய்யவே வேண்டும். அதற்காக “பித்யா” தண்டகுற்றமும் வழங்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது. இந்தக் கருத்தில் நச்சுக் கொள்கையைப் போதிப்பவர்களிடமும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.
இவ்வாறு நாம் கூறும் போது மேற்குறித்த விடயம் நோன்புடன் சம்பந்தப்பட்டது. அது திருமறையிலும், ஹதீதுகளிலும் தெளிவாகச் சொல்லப்பட்டதாகும். ஆனால் தொழுகையை “கழா” செய்வது தொடர்பாக திருமறையில் எங்கும் சொல்லப்பட வில்லை என்று கூறி நழுவிவிடுவார்கள். இவர்கள் மார்க்கம் என்ற கடலில் உள் நீச்சலடிக்காமல் கரையில் நின்று கொண்டு கடலில் மீனுமில்லை, முத்துமில்லை என்று சொல்பவர்களாவர்.
عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ مِنَ اللَّيْلِ مَنَعَهُ مِنْ ذَلِكَ نَوْمٌ أَوْ وَجَعٌ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً»
அண்ணை ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தூக்கம், அல்லது ஏதும் வலி காரணமாக இரவில் தொழவில்லையானால் பகலில் 12 “றக்அத்”துகள் தொழுவார்கள். (ஆதாரம்: ஸுனன் நஸாயீ)
பெருமானார் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் வழமையாக இரவில் தொழுது வந்த தொழுகையை மேற்குறித்த காரணங்களுக்காக விட்டால் அதை பகலில் தொழுதுள்ளார்கள். குறித்த இத் தொழுகை “பர்ழ்” கடமையான தொழுகையல்ல. “நப்ல்” ஆன தொழுகைகளையே இவ்வாறு தவறவிட்டால் “கழா” செய்துள்ளார்கள் என்பது விளங்கப்படுகிறது. இந்த ஹதீதை நச்சுக் கருத்துக்களைப் பரப்பும் மருதூர் மதனீ போன்றோரின் முன்னோர்களில் ஒருவரான “அல்பானீ” என்பவர் “ஸஹீஹ்” பலமானதென்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேலதிகமாக தொழுது வந்தவைகள் என்று கூறி அவர்கள் நழுவக் கூடும். பின்வரும் நபீ மொழியைப் பாருங்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَامَ عَنْ صَلَاةٍ أَوْ نَسِيَهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا» ، ثُمَّ تَلَا: {أَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي}
அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருவன் ஒரு தொழுகையைத் தொழாமல் தூங்கினால், அல்லது மறந்தால் அது நினைவுக்கு வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று கூறிய பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுங்கள்” (தாஹா அத்தியாயம், 14ம் வசனம்) என்ற மறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத்)
மேற்குறித்த நபீ மொழியிலும் பொதுப்படையாக தொழுகை என்று குறிப்பிட்டுள்ளார்களேயன்றி “பர்ழ்” கடமையான தொழுகை என்று குறிப்பிடவில்லை என்று நச்சுப் பாம்புகள் கூறவும் வாய்ப்புண்டு. நச்சுப் பாம்பின் சுவாசத்திலிருந்து எங்கே ஆரோக்கியமான காற்று வீசப் போகிறது?
عَنِ الْحَسَنِ، أَنَّهُ كَانَ يَقُولُ: مَنْ نَامَ عَنْ صَلَاةِ الْعِشَاءِ فَاسْتَيْقَظَ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ قَالَ: يُصَلِّي الْفَجْرَ ثُمَّ يُصَلِّي الْعِشَاءَ
ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லா றழியல்லாஹு அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. ஒருவன் “இஷா” தொழுகையைத் தொழாமல் தூங்கிவிட்டு மறுநாள் காலை சூரியன் உதிக்கும் போதுதான் விழிக்கிறார் என்றால் முதலில் அவர் “ஸுப்ஹ்” தொழுகையை தொழுதுவிட்டு பின்பு “இஷா” தொழுகையை தொழட்டும் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸன்னப் இப்னி அபீ ஷைபா)
பெருமானார் அவர்களோ, ஸஹாபாக்களோ தொழுகையை மறந்து விட்டாலோ, தூக்கத்தின் காரணத்தால் விட்டாலோ அதை மீண்டும் தொழத் தேவையில்லை என்று கூறியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அது நினைவுக்கு வந்தால் உடனே தொழ வேண்டும் என்றுதான் கூறியுள்ளார்கள்.
“ஷரீஆ” மார்க்கத்தின் தாபகர் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு கூட தனது வாழ்வில் ஒரேயொரு தடவை “ஸுப்ஹ்” தொழுகை “கழா” தப்பிவிட்டதால் அது நினைவுக்கு வர – அதாவது தூக்கத்திலிருந்து விழித்தவுடன் தொழுதார்கள்.
عن أبي هريرة: أنَّ رسولَ الله – صلى الله عليه وسلم – حينَ قَفَلَ مِن غَزوةِ خَيبَرَ، فسارَ ليلةً حتَّى إذا أدرَكنا الكَرَى عَرّسَ وقال لبلالٍ: ‘اكلأ لنا الليلَ’ قال: فغَلَبَت بلالاً عَيناهُ، وهو مُستَنِدٌ إلى راحِلَتِه، فلم يَستَيقِظ النبيُّ – صلى الله عليه وسلم – ولا بلالٌ ولا أحدٌ مِن أصحابه، حتَّى ضَرَبَتهم الشَّمسُ، فكانَ رسولُ الله – صلى الله عليه وسلم – أَولَهم استيقاظاً، ففَزِعَ رسولُ الله – صلى الله عليه وسلم -، فقال: ‘يا بلال’ فقال: أخذَ بنفسي الذي أخذَ بنفسكَ، يا رسولَ الله بأبي أنت وأُمِّي، فاقتادوا رواحِلَهم شيئاً، ثمَّ تَوَضَّأ النبي – صلى الله عليه وسلم – وأمرَ بلالاً فأقامَ لهمُ الصَّلاةَ وصلَّى لهمُ الصبحَ، فلما قضى الصَّلاةَ قال: ‘مَن نَسِيَ صلاةً فليُصَلها إذا ذَكَرَها، فإن اللهُ تعالى قال: ‘أَقِمِ الصلاةَ للذِّكْرَى’، قال يونُسُ: وكانَ ابنُ شِهاب يَقرَؤُها كذلك
அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் “கைபர்” யுத்தத்தை முடித்து விட்டு வரும் வழியில் எங்களுக்கு தூக்கம் வந்ததும் பெருமானார் அவர்கள் எங்களைத் தூங்க வைத்தார்கள். பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “பிலாலே! இன்றிரவு எங்களுக்கு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்!” என்றார்கள். பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் தூக்கம் மிகைத்து அவர்களும் தங்களின் வாகனத்தை – ஒட்டகத்தை அணைத்தவர்களாக தூங்கிவிட்டார்கள். பெருமானாரோ, பிலாலோ, வேறு எந்த ஒரு ஸஹாபீயோ சூரிய ஒளி அவர்களில் படும் வரை விழிக்கவில்லை. முதன் முதலில் கண் விழித்தவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். கண்விழித்த பெருமானார் திடுக்கிட்டு பிலாலே! என்று சத்தமிட்டார்கள். பெருமானாரின் அழைப்பினால் கண் விழித்த பிலால் அவர்கள் “என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம்! நாயகமே! உங்களை ஆட்கொண்ட தூக்கம்தான் என்னையும் ஆட்கொண்டுவிட்டது” என்றார்கள். அனைவரும் தங்களின் ஒட்டகங்களை எடுத்துக் கொண்டு சற்று தூரம் சென்றார்கள். பின்பு பெருமானார் அவர்கள் “வுழூ” செய்து பிலாலை “இகாமத்” சொல்லுமாறு பணித்தார்கள். பெருமானார் “ஸுப்ஹ்” தொழுகையை தொழுவித்தார்கள். தொழுது முடிந்த பின் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “எவர் ஒருவர் ஏதெனும் ஒரு தொழுகையை மறந்தால் நினைவு வந்ததும் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ் “நினைவு வந்தால் தொழுகையை நிலை நாட்டுங்கள்” என்று கூறியுள்ளான் என்று அருளினார்கள். (ஆதாரம்: ஸுனன் அபீ தாவூத்)
عَنْ أَبِي عُبَيْدَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ الْمُشْرِكِينَ شَغَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَرْبَعِ صَلَوَاتٍ يَوْمَ الْخَنْدَقِ حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى عِشَاءَ الْآخِرَةِ»
அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “கந்தக்” யுத்த நாளன்று “முஷ்ரிகீன்”கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நான்கு தொழுகைகளை அவற்றின் உரிய நேரத்தில் தொழ விடாமல் ஆக்கிவிட்டார்கள். இரவின் பெரும் பகுதி சென்ற பிறகு பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களை “அதான் – இகாமத்” சொல்லும்படி ஏவினார்கள். அவர்கள் சொன்னார்கள். “ழுஹ்ர்” தொழுகையை தொழுதார்கள், பின்பு பிலால் “இகாமத்” சொன்னார்கள். பெருமானார் “அஸ்ர்” தொழுகையை தொழுதார்கள், பின்பு பிலால் “இகாமத்” சொன்னார்கள். பெருமானார் “மக்ரிப்” தொழுகையை தொழுதார்கள், பின்பு பிலால் “இகாமத்” சொன்னார்கள். பெருமானார் “இஷா” தொழுகையை தொழுதார்கள். (முஸ்னத் இப்னி அபீ ஷைபா)
மேற்குறித்த ஹதீதில் பெருமானார் அவர்களுக்கு நான்கு தொழுகைகள் “கழா” ஆகி அவற்றை “தர்தீப்” ஒழுங்கு முறைப்படி “கழா” செய்துள்ளார்கள்.
இதுவரை மார்க்கத்தில் “கழா” என்ற ஒன்று உண்டு என்றும், குறிப்பாக தொழுகையை “கழா” செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன், ஹதீது – நபீ மொழிகளின் ஆதாரங்கள் கொண்டு நிறுவியுள்ளோம். இன்னும் மத்ஹபுடைய இமாம்களின் கூற்றுக்களும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றை “மத்ஹப்” வழிசெல்லும் “ஸுன்னீ”களே ஏற்றுக் கொள்வர். நச்சுப் பாம்புகள் அதனை ஏற்கமாட்டார்கள். அதனால் அவற்றைத் தவிர்த்தோம். தேவையேற்படின் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
தொழுகையை மறந்தால் அல்லது தூக்கத்தினால் விட்டால் அல்லது யுத்தம் போன்ற விட்டு விட முடியாத, “தீன்” மார்க்கத்தை நிலை நாட்டும் வேலையில் இருந்தால் அதனை உரிய நேரத்தின் பின் “கழா” செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரங்களே மேலே சொல்லப்பட்டுள்ளன. ஆனால் ஒருவன் வேண்டுமென்றே விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான ஆதாரங்கள் கூறப்படவில்லை. மத்ஹபுடைய இமாம்கள் அவ்வாறு ஒருவன் வேண்டுமென்றே மூன்று தொழுகைகளை தொடராக விட்டால் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளார்கள். அதாவது அவன் தொழுகையை அலட்சியமாக எண்ணுபவனாவான். இமாம்கள் இவ்வாறு அலட்சியமாக அறவே தொழாமல் விட்டவன் தொடர்பில் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றியிருப்பது பேணுதலின் அடிப்படையிலாகும். இல்லாவிடின் அவனைக் “காபிர்” என்றுதான் தீர்ப்பு வழங்க வேண்டும். (ஒருவனைக் காபிர் என்று சொல்வது அவனைக் கொலை செய்வது போன்றாகும். இமாம்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் கொலை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை “முப்தீ” மகான்கள் சிந்திப்பதற்கான விடயம் உண்டு என்பதை அறிவுள்ளவன் புரிந்து கொள்வான்)
وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَنْ تَرَكَ الصَّلَاةَ فَقَدْ كَفَرَ، فَيُقَالُ لَهُ: ارْجِعْ عَنِ الْكُفْرِ فَإِنْ فَعَلَ وَإِلَّا قُتِلَ بَعْدَ أَنْ يُؤَجِلَهُ الْوَالِي ثَلَاثَةَ أَيَّامٍ ‘
எவன் தொழுகையை விட்டானோ அவன் “காபிர்” ஆகிவிட்டான். அவனுக்கு “குப்ர்” ஐ விட்டும் மீண்டு விடு – அதாவது தொழு என்று சொல்ல வேண்டும். அவர் தொழுதால் சரி. இல்லையென்றால் அதிகாரியால் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டும் தொழவில்லையானால் கொலை செய்யப்படுவான்.
(ஆதாரம்: தஃளீமு கத்ரிஸ்ஸலாதி லிமுஹம்மத் இப்னி நஸ்ரில் முரூஸீ)
முற்றும்.