மௌலித் ஓதும் முஸ்லிம்களையும், மீலாத் விழா கொண்டாடும் முஸ்லிம்களையும் “முஷ்ரிக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் கூறும் அடிப்படை வாதிகள் யஹூதிகளின் கைக் கூலிகளா? இது இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சனத் தொகையைக் குறைப்பதற்கு கைக் கூலிகள் தீட்டும் திட்டமா? இலங்கை வாழ் முஸ்லிம்களே! உங்களை எச்சரிக்கிறேன். இக் கைக் கூலிகளை வளர விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முஸ்லிம்களின் சனத் தொகை 10 இலட்சத்தை தாண்டாது போய்விடும். ஆகையால் இலங்கை வாழ் ஸுன்னீ முஸ்லிம்களை நான் எச்சரிக்கிறேன்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“மீலாத் விழா என்றால் என்ன? மௌலித் ஓதுதல் என்றால் என்ன?” என்பதை நாம் பக்கச் சார்பின்றி ஆய்வு செய்தால் இவ்விரு கேள்விகளுக்கும் விடை இரண்டும் ஒன்றுதான் என்பறே வரும். ஏனெனில் இரண்டும் பெருமானார் அவர்களைப் புகழ்வதும், கண்ணியப் படுத்துவதுமேயாகும்.
இவ்விரண்டையும் அறபு மொழியில் பாடலாகப் பாடினால் அது மௌலித் என்றும், அவ்விரண்டு பற்றிப் பேசினால் அது மீலாத் விழா என்றும் சொல்லப்படும். சாராம்சத்தில் இரண்டும் ஒன்றுதான். இரண்டும் இஸ்லாம் அனுமதித்தவையே.
இவ்விரு விடயங்களையும் அறிவுக் கண் குருடான அடிப்படைவாதிகள் “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் சொல்கிறார்கள்.
இன்னும் சற்று விளக்கமாக எழுதுகிறேன். “மீலாத் விழா” என்றாலும், “மௌலித்” என்றாலும் நபீ பெருமானின் வாழ்க்கை வரலாறுகளையும், மற்றும் அவர்களின் சிறப்பியல்புகளையும், மற்றும் அவர்களின் அகமியங்களையும் கவி நடையிலும், உரை நடையிலும் பாடியும், பேசியும் நடத்தப்படுகின்ற ஒரு விழா அல்லது ஒரு சபையாகும்.
மேற்கண்ட இவ்விரு விடயங்களிலும் “ஷரீஆ”வுக்கு முரணான அம்சம் எது உள்ளது? என்று நாம் சிந்திக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஓர் அம்சமாவது இருந்தால் அதை மட்டும் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும். அதன் எல்லா அம்சங்களுமே “ஷரீஆ”வுக்கு முரணாயிருந்தால் அதை முழுமையாக நிறுத்தி விட வேண்டும்.
இப்போது மீலாத் விழாவிலுள்ள அம்சங்களில் எது “ஷரீஆ”வுக்கு முரணானது என்று ஆய்வு செய்வோம்.
01. மீலாத் விழா பற்றி நோட்டீஸ் அடித்தல் – பிரசுரம் வெளியிடுதல். இது ஷரீஆவுக்கு முரணானதா? இல்லை. ஒரு முக்கிய செய்தியை மக்களுக்கு சொல்வதாயின் அவர்களுக்கு அறிவிக்கவே வேண்டும். அவர்கள் தெரிந்து கொள்ளவும் வேண்டும். இது ஷரீஆவுக்கு முரணானதா? இல்லை.
02. மேடை அமைத்தல். இது “ஷரீஆ”வுக்கு முரணானதா? இல்லை. ஏனெனில் சிறிய கூட்டத்தில் பேசுவதற்கு மேடை தேவையில்லை. ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடும் கூட்டமாயின் மேடை அவசியம்தான். இது “ஷரீஆ”வுக்கு முரணானதா? இல்லை.
03. ஒலி பெருக்கியில் பேசுதல். இது “ஷரீஆ”வுக்கு முரணானதா? இல்லை. ஏனெனில் ஆயிரக் கணக்கான மக்கள் மத்தியில் பேசுவதாயின் ஒலி பெருக்கி அவசியம்தான். இதுவும் “ஷரீஆ”வுக்கு முரணான அம்சமல்ல.
04. மேடையை அலங்கரித்தல். ஆடம்பரம் எதுவுமின்றி மேடையை அளவிற்கேற்றவாறு அலங்கரிப்பது எந்த வகையிலும் பிழையாகாது. வீட்டை அலங்கரித்தல், கடையை அலங்கரித்தல், பள்ளிவாயலை அலங்கரித்தல், பாடசாலைகளை அலங்கரித்தல் எந்த வகையிலும் “ஷரீஆ”வுக்கு முரணாகாது.
“ஷரீஆ”வின் “அமல்” வணக்கமாயினும் அது கவர்ச்சியாக இருத்தல் வேண்டும்.
உதாரணமாக வெள்ளிக்கிழமை “குத்பா” பிரசங்கம் செய்பவருக்காக “மின்பர்” மேடை அமைப்பதும், பிரசங்கம் செய்பவர் கவர்ச்சியான தோற்றமுள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்காக பிரசங்கம் செய்பவர் கையில் ஓர் “அஸா” கைக் கோல் எடுப்பதும், கரண்டை வரை “ஜுப்பா” அணிவதும், தலைப்பாகை அணிவதும், ஒரு விரிப்பில் அமர்வதும், கால்களுக்கு “சொக்ஸ்” உறை போட்டுக் கொள்வதும், தலை முடி வார்ந்தும், தாடி முடி வார்ந்தும் அழகாக வைத்துக் கொள்வதும் இஸ்லாமிய சட்டக் கலையில் நல்லவை என்று கூறப்பட்ட அம்சங்களேயாகும்.
மார்க்க அனுஷ்டானங்களிலும் கவர்ச்சி வேண்டும் என்பதினால் தான் தொழுகையில் “ஸப்” வரிசைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
எதுவாயினும் கவர்ச்சியாக இருத்தல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதேயன்றி விலக்கப்பட்டதல்ல.
மீலாத் விழாக்களில் கவர்ச்சி இல்லையானால் நல்ல கருத்தைக் கேட்பதற்குக் கூட மக்கள் கூட்டம் வராது. எனவே, கவர்ச்சி என்பது மார்க்கம் அனுமதித்த ஒன்றுதான். இதுவும் “ஷரீஆ”வுக்கு முரணான அம்சம் அல்ல.
மேடையில் பேச்சாளர்கள் பேசுவதும் மார்க்கத்திற்கு முரணான செயல் அல்ல. மேடையில் தேனீர் கொடுப்பதும், குடிப்பதும் “ஷரீஆ”வுக்கு முரணான செயல் அல்ல.
ஆகையால் “மீலாத் விழா”வில் மார்க்கத்துக்கு முரணான எந்த ஓர் அம்சமும் இல்லாதிருப்பதால் அது கூடும் என்பதே அறிஞர்களின் முடிவாகும்.
புரியானி சாப்பிடுவது ஆகும் என்றோ, ஆகாதென்றோ அறிவிக்கக் கூடிய எந்த ஓர் ஆதாரமும் திருக்குர்ஆனிலும் இல்லை, நபீ மொழிகளிலுமில்லை. அதாவது “புரியானி” என்ற பெயர் கூறப்பட்டு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
ஆகையால் அது சாப்பிடுவது ஆகுமா? ஆகாதா? என்று முடிவு செய்வதாயின் அதில் சேர்க்கப்படுகின்ற சாமான்களில் ஒன்றுமே மார்க்கத்தில் விலக்கப்பட்டதாக இல்லையானால் அதை சாப்பிடுவது “ஹலால்” மார்க்கம் அனுமதித்ததேயாகும். நமது நாட்டில் புரியானியில் மார்க்கத்திற்கு முரணான எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல் புதிய பெயரில் ஓர் உணவுப் பொருள் தயாரிக்கப்பட்டு வந்தால் அது புதிய பெயராக இருப்பதால் அந்தப் பெயர் சொல்லப்பட்டு திருக்குர்ஆனிலும் ஆதாரம் இருக்காது. நபீ மொழியிலும் ஆதாரம் இருக்காது. இதனால் அதைச் சாப்பிடுவது “ஹறாம்” என்று முடிவு செய்தல் மார்க்கமல்ல.
அதில் சேர்க்கப்பட்டுள்ள சாமான்கள் 50 சாமான்களாயிருந்தாலும், 500 சாமான்களாயிருந்தாலும் அவை அனைத்தும் மார்க்கத்தில் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையாக இருந்தால் அந்த புரியானியை சாப்பிடலாம். அவற்றில் ஒன்றாவது ஹறாமாக்கப்பட்டதாக இருந்தால், அல்லது அசுத்தமானதாயிருந்தால் அதை சாப்பிடுவது விலக்கப்பட்டதாகும்.
இவ்வாறுதான் மீலாத் விழாவுமாகும். நான் மேலே எழுதிக் காட்டியது போல் அதிலுள்ள எல்லா அம்சங்களும் “ஷரீஆ”வுக்கு முரணில்லாமல் இருந்தால் அது ஆகும் என்பதே “ஷரீஆ”வின் முடிவாகும்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த காஸிமீ ஸாஹிபு மௌலித் ஓதுவதும், மீலாத் விழாக் கொண்டாடுவதும் சிலரின் வயிற்றுப் பிழைப்பு என்று பேசுகிறார். அப்படியானால் இவரும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே பிரசங்கம் செய்கிறார். தொழில் செய்கிறார். வயிற்றுப் பசிக்காக தொழில் செய்வது குற்றமா? வயிற்றுப் பிழைப்பிற்காக மார்க்கத்துக்கு விரோதமானவைதான் செய்யக் கூடாதேயன்றி மார்க்கம் அனுமதித்ததை செய்வதில் தடை ஒன்றுமில்லை.
இவ்விபரங்களை அறிந்த எவரும் மீலாத் விழா கொண்டாடக் கூடாதென்று சொல்லமாட்டார். அவர் சொல்வதாயின் இது மார்க்கத்திற்கு முரணான “பித்அத்” என்ற வகையில் மட்டுமே “ஷரீஆ”வுக்கு முரணானதென்று சொல்ல முடியும். அடிப்படைவாதிகளான நமது அறிஞர்கள் இவ்வாறுதான் சொல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் சொன்னாலும் கூட அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
ஏனெனில் நபீகளார் அவர்கள் “மௌலித்” என்ற பெயர் குறித்து அல்லது “மீலாத் விழா” என்ற பெயர் குறித்து சொல்லாது போனாலும் “பித்அத்” எல்லாமே வழிகேடு என்ற வகையில் இதுவும் வழிகேடுதான் என்று சொல்வார்களாயின் நபீ பெருமானின் முன்னிலையிலேயே “மௌலித்” ஓதப்பட்டபொழுது அவர்கள் அதைச் செவியேற்றது மட்டுமன்றி மௌலித் ஓதிய நபீ தோழர்களான ஹஸ்ஸான், கஃப் இப்னு சுஹைர் போன்றவர்களை பாராட்டியுள்ளார்களே இதற்கு மௌலித், மீலாத் கூடாததென்று கூறும் அடிப்படை தெரியாத அடிப்படைவாதிகள் என்ன பதில் சொல்வார்களோ! சரியான பதில் தருவார்களா? அல்லது பற்றை மறைவில் பதுங்கிக் கொள்வார்களா?
“ஹதீது” என்பது நபீகளார் அவர்கள் சொன்னதும், செய்ததும், மற்றும் சரியென்று ஆமோதித்ததும் என்று “ஷரீஆ”விலும், ஹதீதுகளிலும் சொல்லப்பட்டுள்ளதே இதற்கு அடிப்படை வாதிகளும், காஸிமீ ஸாஹிபுவும் என்ன விளக்கம் சொல்வார்களோ?
பெருமானார் அவர்கள் சொன்னதும், செய்ததும், ஏற்றுக் கொண்டதும் மட்டும்தான் ஹதீதில் அடங்குமேயன்றி அவர்கள் சொல்லாததும், செய்யாததும், ஏற்றுக் கொள்ளாததும் ஹதீதில் அடங்காதாகையால் அவையாவும் “பித்அத்” என்றல்லவா ஆகிவிடும்.
அவ்வாறாயின் ஹஸ்ஸான், கஃபு போன்ற நபீ தோழர்களும், நபீ பெருமான் அவர்களும் கூட “பித்அத்” செய்தவர்களான வழிகேடர்களாகி விடுவார்கள் அல்லவா? நபீ தோழர் ஒருவர் பெருமானார் அவர்களுக்கு தனது வீட்டில் விருந்து வழங்கிய நேரம் கறி சமைத்து வைத்திருந்தார். நபீ பெருமானார் இது என்ன கறியென்று வினவிய போது இது உடும்புக் கறியென்று வீட்டுக் காரரான நபீ தோழர் சொன்னார். அப்பொழுது நபீ பெருமானார் அவர்கள் கறியில் வைத்த கையை எடுத்து விட்டு இது எங்கள் பிரதேசத்தில் இல்லையாதலால் நான் சாப்பிட விரும்பவில்லை என்று கூறியதுடன் ஏனையோரை சாப்பிட வேண்டாமென்று தடுக்கவில்லை. இது பெருமானார் செய்யாவிட்டாலும் மற்றவர்களைத் தடுக்கவில்லை. இதன் மூலம் உடும்பு சாப்பிடலாம் என்று ஷரீஆவில் சொல்லப்பட்டுள்ளது. இது பெருமானாரின் அங்கீகாரம் கொண்டு சட்டமாக்கப்பட்டதாகும்.
நபீ தோழர்களிற் பலர் நபீயவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகாரமும் வழங்காத பல விடயங்களைச் செய்துள்ளார்கள். இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவற்றிற் சிலதை இங்கு எழுதுகிறேன். அடிப்படைவாதிகள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் எல்லா முயல்களுக்கும் மூன்று கால்கள்தான் என்று அடம் பிடிப்பது போல் அடம் பிடிக்காமல் எது சரியோ அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டும்.
நபீ தோழர்கள் செய்த “பித்அத்”துகள்.
நபீ தோழர்களான அனஸ், ஜாபிர், ஹஸன், ஹுஸைன் ஆகியோர் அறிவித்ததாக இப்னுல் முன்திர் பின்வருமாறு கூறுகிறார்கள். (றழியல்லாஹு அன்ஹும்)
(ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றசூல் அவர்களின் கலீபா அவர்களே! திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த “ஹாபிள்”களை காபிர்கள் தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள். இது தொடருமாயின் “ஹாபிள்”களில் பலர் கொல்லப்பட்டு விட்டால் திருக்குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்ப்பது கடினமாகிவிடும். நாம் ஹாபிள்களிடமிருந்து திருக்குர்ஆன் வசனங்களை ஒன்று சேர்த்து ஒரு “முஸ்ஹப்” போன்று ஆக்கினால் பாதுகாப்பாக இருக்குமல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர் நாயகம் அவர்கள் எங்களின் நபீ அவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்யலாமா? என்று பதில் கூறினார்கள். அப்போது கலீபா உமர் அவர்கள் அபூ பக்ர் நாயகம் அவர்கள் சொன்னதைச் சரி கண்டார்கள். இருந்தாலும் இறுதியில் இரண்டு கலீபாக்களும் அவ்வாறு செய்வதாக முடிவு செய்து இரு கலீபாக்களும் “செய்த் இப்னு தாபித்” எனும் நபீ தோழரிடம் வந்து விடயத்தைக் கூற அவர்களும் அவ்வாறு செய்வதற்குப் பின் வாங்கியவர்களாக நபீ பெருமான் செய்யாத ஒன்றை நாம் எவ்வாறு செய்வது என்று கூறினார்கள். பின்னர் நீண்ட நேர கலந்துரையாடலின் பின் மூவரும் ஒரே முடிவுக்கு வந்து திருக்குர்ஆன் வசனங்களை பல நபீ தோழர்களிடமிருந்து ஒன்று சேர்த்து “முஸ்ஹப்” அமைப்பில் ஆக்கினார்கள்.
இவ்வாறு செய்தது “பித்அத்” என்பதில் சந்தேகமே இல்லை. இது “பித்அத்”தில் திருக்குர்ஆன் தொடர்பாக செய்யப்பட்ட “பித்அத்”தாகும்.
இவ்விடயத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு கலீபாக்களும், “கலீபா” அல்லாத ஒரு நபீ தோழரும் ஆவார்கள். மூவரும் சேர்ந்துதான் இந்த “பித்அத்” செய்துள்ளார்கள்.
இதேபோல் நபீ தோழர்களில் பலர் “பித்அத்” செய்துள்ளார்கள் என்பதற்கு என்னால் பல ஆதாரங்கள் தர முடியும். இன்ஷா அல்லாஹ்!
அடிப்படைவாதிகளும், தென்னிந்திய காஸிமீ மௌலவீ அவர்களும் இதற்கு முதலில் பதில் தரட்டும். எனது ஆதாரங்களும், விளக்கங்களும் தொடரும்…
தொடரும்….