Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஐக்கியமே எமக்கு முக்கியம்

ஐக்கியமே எமக்கு முக்கியம்

இனஇ மத, மொழி, நிற பேதமின்றி மனிதர்கள் யாவரும் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே!

பௌத்த மதத்தை பின்பற்றி வாழும் பௌத்தர்களும், இந்து மதத்தை பின்பற்றி வாழும் இந்துக்களும், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழும் முஸ்லிம்களும் ஆதிபிதா – முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே!

அனைத்து மத, இன மக்களுக்கும் தந்தை அவர்கள்தான். முஸ்லிம்களுக்கு மட்டும் அவர்கள் தந்தை என்ற கருத்து இஸ்லாம் கூறும் கருத்தல்ல.

முஸ்லிம்களுக்கு ஆதிபிதா யாரோ அவர்தான் ஏனைய மதத்தவர்களுக்கும் ஆதிபிதா ஆவார்!

எந்த மதத்தைப் பின்பற்றி எந்த மொழி பேசுகின்ற எந்த நாட்டவனாயினும் அவன் اَلْخَلْقُ عِيَالُ اللهِ – “அல் கல்கு இயாலுல்லாஹ்” – “படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ்வின் குடும்பம்” என்ற நபீ மொழியின் படி அல்லாஹ்வின் குடும்பத்தில் ஒருவனாகவும், ஆதம் உடைய மக்களில் ஒருவனாகவுமே இருப்பான்.

இந்த வகையில் எந்த நாட்டில், என்ன மொழி பேசி வாழ்கின்றவர்களாயினும், என்ன நிறமுடையவர்களாயினும் அவர்கள் அனைவரும் ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே! அனைத்து மத, இன, மொழி மக்களுக்கும் தந்தை ஆதம் நபீ அவர்கள்தான்.

மேற்கண்ட இத் தத்துவத்தின்படி பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்ட அப்புஹாமியும், இந்து சமயத்தை ஏற்றுக் கொண்ட அருணாசலமும், இஸ்லாம் சமயத்தை ஏற்றுக் கொண்ட அப்துல்லாஹ்வும் ஒரே குடும்பத்தவர்களும், ஒரே தந்தையின் பிள்ளைகளுமேயாவர். இத் தத்துவத்தை விளங்கிச் செயல்படுபவன் ஜெயம் பெறுவான். விளங்காதவனும், விளங்கியும் அதன்படி செயல்படாதவனும் நட்டமடைந்து போவான்.

ஆதம் நபீயின் அனைத்து மக்களும் இன, மத, மொழி, நிற வேறுபாடின்றி அல்லாஹ்வால் சங்கைப்படுத்தப்பட்டவர்களேயாவர். وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْ آدَمَ “ஆதமின் மக்கள் அனைவரையும் நாங்கள் சங்கைப்படுத்தி வைத்துள்ளோம்” (17-70) என்று அல்லாஹ் தனது அருள் மறையில் கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் இக்கூற்றின்படி உலகில் வாழ்கின்ற எச் சமயத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வினால் சங்கைப்படுத்தப்பட்டவர்களேயாவர். முஸ்லிம்கள் மட்டுமல்ல.

இத்திரு வசனத்திற்கு விளக்கம் எழுதிய திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் பலர் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளார்கள்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْ آدَمَ بِطَهَارَةِ أَبْدَانِهِمْ “ஆதம் உடைய மக்கள் அனைவரினதும் உடல்களை சுத்தமாக்கி வைத்து அவர்களை சங்கைப்படுத்தி உள்ளோம்” என்று எழுதியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் இக்கூற்று மனிதர்கள் யாவரும் உடல் ரீதியாக ஏற்றத் தாழ்வின்றியும், பாரபட்சமின்றியும் சுத்தமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.

ஒரு முஸ்லிம் பௌத்த மதத்தைச் சேர்ந்த, அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த, அல்லது கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை எத்திரையுமின்றி கட்டியணைத்து ஆலிங்கனம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரணம் அவர்களின் உடல்கள் சுத்தமானவையாக இருப்பதேயாகும்.

நாய், பன்றி முதலான அசுத்தமான பிராணிகளைத் தொட்டால் உரிய முறைப்படி கை கழுவ வேண்டும் என்று கூறிய இஸ்லாம் மாற்று மதத்திலுள்ள ஒருவனை தொட்டால் கை கழுவ வேண்டுமென்று கூறவில்லை. இதற்கு காரணம் அவனின் உடல் சுத்தமாயிருப்பதேயாகும். இறைவனின் இரக்கத்தை என்னென்பது?!

“உடல் சுத்தம்” என்ற அம்சத்தில் அப்புஹாமியின் உடலும், அருணாசலத்தின் உடலும், அப்துல்லாஹ்வின் உடலும் ஒன்றுதான். பொதுவாக மனிதர்கள் அனைவரின் உடலும் சுத்தமானதேயாகும். இந்த விடயத்தில் அல்லாஹ் முஸ்லிம்களையும், மற்றவர்களையும் ஒரேமாதிரியே சங்கைப்படுத்தியுள்ளான். முஸ்லிம் தரமானவன் ஆகையால் அவனின் உடல் சுத்தமானதென்றும், மற்ற மதத்தினர் தரமில்லாதவர்கள் ஆகையால் அவர்களின் உடல் அசுத்தமானதென்றும் அல்லாஹ் கூறவில்லை. எந்த மதத்தவருக்கு குழந்தை பிறந்தாலும் அது இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையிலேயே பிறக்கிறது. பெற்றோர்களே அதை யஹூதியாக – யூதனாக, அல்லது நஸாராவாக – கிறித்துவராக மாற்றுகிறார்கள் என்று மண்ணில் பாதம் பதியாத நபீ பெருமான் அருளினார்கள்.

இவ்வாறுதான் ஒரு முஸ்லிமின் உடலில் உள்ள குருதியும், ஏனைய மதத்தவர்களின் உடல்களிலுள்ள குருதியுமாகும். அனைவரினது குருதியும் ஒரே நிறத்தையும், ஒரே தரத்தையும் உடையதாகவே அல்லாஹ் படைத்துள்ளான். இந்த அம்சத்தில் முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவரும் ஒன்றுதான்.

இவ்வாறான ஒற்றுமை, நெருக்கம் முஸ்லிமுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இருப்பதினால்தான் அவர்களில் ஒருவரின் பெயர் சொல்லி அவரை அழைப்பதற்கு அவரின் பெயர் தெரியாத ஒருவர் அவரை “அங்கிள்” மாமா என்றும், “ப்றதர்” சகோதரர் (அண்ணன், தம்பி) என்றும், ஐயா, மல்லி என்றும் அழைக்கும் வழக்கம் வந்தது போலும்.

அறபு நாடுகளில் பெயர் தெரியாத ஒருவரை அழைக்கும் போது “அம்மு” என்ற சொல்லைப் பயன்படுத்தி “யா அம்மு” என்று அழைப்பார்கள். இதற்கு சாச்சா – சிறிய தந்தை என்று பொருள் வரும். தந்தையின் தம்பி சாச்சா என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு அழைப்பதிலும் ஒரு முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத ஒருவருக்குமிடையில் மறைந்துள்ள உறவு முறை வெளிப்படுத்தப்படுவதை அறிய முடியும்.

இலங்கை நாட்டில் பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பௌத்த சகோதரர்களும், இந்து சகோதரர்களும் முஸ்லிம்களுடன் கண்ணியமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று பௌத்த சகோதரர்களிற் பலர் முஸ்லிம்களை முதலாளி என்று அழைத்து வந்ததும், இந்துக்களிற் பலர் அவர்களை “காக்கா” என்று அழைத்து வந்ததுமாகும்.

ஒரு குடும்பத்திலுள்ள மூத்த சகோதரன் “காக்கா” என்றழைக்கப்படும் வழக்கம் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் இருந்து வரும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்க்கும் போது இருவருக்கும் தந்தையான ஆதிபிதா ஆதம் அவர்களின் நினைவு வர வேண்டும். இந்நினைவு இருவருக்குமிடையில் பாசம் ஏற்பட வழி செய்யும். சகோதரத்துவ உணர்வையும் ஏற்படுத்தும்.

தத்துவம் இவ்வாறிருக்கும் நிலையில் அப்துல்லாஹ் அப்புஹாமியை அடிப்பதும், அருணாசலம் அப்துல்லாஹ்வை அடிப்பதும் ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் தமக்கிடையில் அடித்துக் கொள்வதாகவே ஆகும்.

இன்னொரு வகையில் சற்று ஆழமாக ஆய்வு செய்தால் தாமாகத் தோன்றி காட்சியளிக்கும் தமது கர்த்தாவை அடிப்பதாகவே ஆகும். ஏனெனில் அனைத்து சிருட்டிகளும் இறைவனின் வேறுபடாத வெளிப்பாடுகள் என்பதை அறிந்த ஒருவன் எவருக்கும் தீமை செய்ய மாட்டான். மனிதன் தனக்குத்தானே தீமை செய்வானா?

காலம் என்பது கருணாநிதியின் வெளிப்பாடு என்பதினால்தான் “காலத்தை ஏசாதீர்கள். காலமாய்த் தோற்றுவோனும் இறைவன்தான்” என்று நபீகட்கரசரும், முற்றும் அறிந்து முற்றும் துறந்த முழுமதி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் لَا تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ “காலத்தை ஏசாதீர்கள். காலம் என்ற கோலம் கொண்டவன் இறைவன்தான்” என்று கூறினார்கள்.

மேற்கண்ட இந்த நபீ மொழிக்கு “தஸவ்வுப்” ஸூபிஸம் பேசும் ஸூபீ மகான்கள் வலிந்துரை எதுவுமின்றி அதற்கு நேரடிப் பொருள் கொண்டு “காலத்தை ஏச வேண்டாம்” ஏனெனில் காலமாக காட்சி தருபவனும் இறைவன்தான் என்று கூறியிருப்பது ஒரு புறமிருக்க இதற்கு வலிந்துரை கொண்டு பொருள் சொல்வோர் “காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில் காலத்தைப் படைத்தவனும் அல்லாஹ்தான்” என்று சொல்வதைக் கருத்திற் கொண்டு இந்த நபீ மொழியை நோக்கினால் எவரும் எவரையும் துன்புறுத்தவோ, வேதனைப்படுத்தவோ முடியாதென்ற தத்துவம் தெளிவாகும். ஏனெனில் காலத்தைப் படைத்தவனும், உயிர்களைப் படைத்தவனும் அல்லாஹ்தான்.

எனவே, அப்புஹாமி அப்துல்லாஹ்வை ஏசினாலும், இவ்விருவரும் அருணாசலத்தை ஏசினாலும் அனைவரும் இறைவனை ஏசுகிறார்கள் என்றே கருத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஸூபிஸவாதிகளின் தத்துவமாகும்.

இதுவே அனைத்து மதமும், மார்க்கமும் சொல்கின்ற தத்துவமாகும்.
எந்த ஒரு மதமும் அநீதி செய்யுமாறோ, கொலை செய்யுமாறோ சொல்லவில்லை. மாறாக ஆன்மீக வழியிலும், சாத்வீக வழியிலும் செல்லுமாறே சொல்கிறது.

இதேபோல் குற்றம் செய்தவன் தான் செய்த குற்றத்திற்கேற்றவாறு மார்க்கம் கூறும் வழியில் தண்டிக்கப்பட வேண்டியவனே ஆவான். இதில் சொந்த பந்தம், பாரபட்சம் இருத்தல் ஆகாது. எவனாயினும் அவனுக்கு சட்டம் சரியாகச் செய்யப்பட வேண்டும். ஆண்டிக்கும், அரசனுக்கும் சட்டம் ஒன்றேதான்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوَ سَرَقَتْ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا

முஹம்மதின் மகள் பாதிமா திருடினாற் கூட அவரின் கையை நான் துண்டிப்பேன் என்றார்கள் எம்பெருமானார்.

கொலைகாரன் சக்றானும், அவன் சொற்கேட்டு செயற்பட்டவர்களும் – தற்கொலை செய்தவர்களும் கடும் தண்டனைக்குரியவர்களேயாவர். அவர்களில் செத்திறந்து போன “ஷெய்தான்கபீர்” தவிர கொலைக்கு உடந்தையாக இருந்து உயிர் தப்பிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இவர்கள் போன்ற இன்னொரு கொலைகார அமைப்பு இந்நாட்டில் தலை தூக்காமல் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனவாதத்தை தூண்டும் எவராயினும் அல்லது மதவாதத்தை தூண்டும் எவராயினும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கம் பாரபட்சம் காட்டக் கூடாது. அரசியல்வாதிகளின் தலையீடும் இருக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் வஹ்ஹாபிஸ நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கி வருகின்ற அனைத்து அமைப்புக்களும் தடை செய்யப்பட வேண்டும். அல்லது அவ் அமைப்புக்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்கென்று அரசு கண்காணிப்புக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளில் வலுவானவர்களும் இடம்பெற வேண்டும்.

இன்று இலங்கையில் பல பெயர்களில் வஹ்ஹாபிஸ அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவ் அமைப்புக்கள் யாவும் கொள்கையில் வஹ்ஹாபிஸக் கொள்கையுடையதாயினும் இவ் அமைப்புக்களில் ஒன்றும் இது வரை கொலைகாரன் சக்றானின் போக்கினில் எதையும் கையாண்டதாக எத்தகவலும் இல்லை.

எனினும் வஹ்ஹாபிஸ அமைப்புக்கள் யாவும் அவ்லியாஉகளினதும், நல்லடியார்களினதும் “கப்று” – சமாதிகளை – தர்ஹாக்களை உடைத்து தரை மட்டமாக்கும் கொள்கையுடையவையும், கந்தூரி, மீலாத் போன்ற மார்க்க அனுட்டானங்களை எதிர்க்கும் கொள்கையுடையவையுமேயாகும்.

இப்போதுள்ள சூழ் நிலையில் அவ் அமைப்புக்கள் மௌனிகளாயிருந்தாலும் எதிர்காலத்தில் மேற்கண்ட விடயங்கள் தொடர்பாகவும், வஹ்ஹாபிஸ வழிகேட்டைப் பரப்புகின்ற விடயம் தொடர்பாகவும் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை திட்டமாகக் கூற முடியாது.

ஆகையால் இவ் அமைப்புக்கள் தடை செய்யப்படாவிட்டாலும் இவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்று ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.

கொலைகாரன் ஸக்றான் காத்தான்குடியில் ஒரு வஹ்ஹாபியாக மட்டுமே தலை நீட்டினான். அனைத்து உலமாஉகளையும், ஊர்ப்பிரமுகர்களையும் எதிர்த்தான். ஏசினான். அட்டூழியம் செய்தான். குறிப்பாக என்னையும், நான் பேசி வருகின்ற “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தையும் எதிர்த்தான். கடைசியில் கொலைகாரனாகவும், கொலைகார கும்பலின் தலைவனாகவும் மாறினான்.

இவன் காத்தான்குடியில் மார்க்க ரீதியான அட்டூழியம் செய்து கொண்டிருந்த காலத்தில் இவனுக்கு எதிராக இவ் ஊர் தலைகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாயிருந்தது இவனின் வழி கேட்டிற்கு உரமாகிவிட்டது. இவனின் வழி கேடு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருந்தால் இன்று காத்தான்குடி மக்களுக்கு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள அவமானம் ஏற்பட்டிருக்கவுமாட்டாது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழி காத்தான்குடியானைக் கண்டால் என்று மாறியிருக்கவுமாட்டாது. சங்கைமிகு சம்மேளனத்தாரும், உளத்தூய்மை மிகு உலமா சபையாரும் சாலையில் தலை குனிந்து உடல் வளைத்துச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.

காத்தான்குடியில் இவனின் கொள்கையை முதலில் பகிரங்கமாக எதிர்த்தவனும், இவன் இறக்கும் வரை எதிர்த்தவனும் நான்தான். இவன் காத்தான்குடி அலியார் பேக்கரி சந்தியில் எனக்கு எதிராக நடத்தவிருந்த ஒரு பிரசாரக் கூட்ட ஏற்பாட்டின் போது எனது ஆதரவாளர் ஒருவரை இவன் கத்தியால் குத்திக் காயப்படுத்தினான். அதைத் தெடர்ந்து இவன் தலை மறைவானவன்தான். தற்கொலைச் சம்பவம்வரை அவன் பகிரங்கமாக காத்தான்குடிக்கு வந்ததாக அறிய முடியவில்லை.

காத்தான்குடி வாழ் முஸ்லிம் சகோதரர்களே!

நானும், இவ்வூரில் என்னுடன் இருக்கின்ற “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளும் எங்களின் தொண்டை கிழியும் வரை “வஹ்ஹாபிஸம்” வழிகேடு என்று இராப் பகலாக கத்தினோம். பல பொதுக் கூட்டங்களில் பேசினோம். கட்டுரைகள் எழுதினோம். பல இலட்சம் ரூபாய் செலவில் நூல்கள் எழுதி இலவசமாக வழங்கினோம். நீங்கள் செவியேற்கவில்லை. இவ்வூரிலுள்ள “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளான உலமாஉகளை வஹ்ஹாபிஸத்தை ஒழிக்க எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தோம். எவரும் எமது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.

قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا، فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا

இறைவா! நான் எனது மக்களை இராப்பகலாக அழைத்தேன். என் அழைப்பை அவர்கள் செவியேற்கவில்லை என்று நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
(ஸூறது நூஹ் – 05,06)

ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளான உலமாஉகளே!

கொலைகாரன் சக்றானின் திட்டத்தை இப்போது கண்டு கொண்டீர்களல்லவா? வஹ்ஹாபிஸத்தின் கடைசித் துரும்பு கொலை என்பதை புரிந்து கொண்டீர்களல்லவா? இதன் பிறகும் நீங்கள் மௌனிகளாயிருந்து இவ்வூர் கொலைக்களமாக மாறி ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் நசுக்கப்படுவதையும், வஹ்ஹாபிகளாக மாற்றப்படுவதையும் விரும்புகிறீர்களா? உங்களின் இடுப்பில் பலமில்லாவிட்டால் பலமுள்ளவர்களின் இடுப்புகளை பிடித்துக் கொண்டாவது வாருங்கள். உறங்கியது போதும். விழித்தெழுங்கள். கொலைகளைத் தடுக்கவும், அநீதிகளை அழிக்கவும் அணி திரளுங்கள்.

பௌத்த மதச் சகோதரர்களே! இந்து மதச் சகோதரர்களே! கிறித்துவ மதச் சகோதரர்களே!

முஸ்லிம்களான நாங்களும், நீங்களும் மதத்தால், மொழியால், இனத்தால் மாறு பட்டாலும், வேறுபட்டாலும் நாம் அனைவரும் ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகள் என்பதையும், அல்லாஹ்வின் குடும்பத்தவர்கள் என்பதையும் மறந்துவிடாமல் எமது கைகளை இறுகக் கோர்த்து ஒற்றுமையுடன் செயல்படுவோம். எவரின் உயிராயினும் இறைவனின் உயிர்தான். அதைக் காப்போம்.

இந்நாடு இறைவனின் அருள் நிறைந்த நாடு. ஆதிபிதா ஆதம் நபீ காற்பதித்த நாடு. சரண் தீவூ, பல்மத ஞானிகளும், யோகிகளும், சுவாமிகளும், பக்தர்களும், துறவிகளும் வாழ்ந்த நாடு. அனைத்து மத மக்களுக்கும் அனைத்துரிமைகளும் வழங்கப்பட்ட நாடு. உலக நாடுகளில் இது சிறந்த நாடு. மன நிம்மதிக்கு இது போன்ற நாடு உலகில் இல்லாத நாடு. அனைத்து வளங்களும் உள்ள நாடு. நற்குணங்கொண்ட நன்மக்கள் உள்ள நாடு.

இத்தகு சிறப்புகள் கொண்ட இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க அணி திரள்வோம். இன, மத, மொழி வேறுபாடுகளை மறப்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம். மதங்களை மதிப்போம். மத வழிபாட்டுத்தலங்களை கண்ணியப்படுத்துவோம். அனைத்து மதத் தலைவர்களையும் மதிப்போம்.

கிறித்துவ மத சகோதரர்களே!

கொலை வெறியன் ஸக்றானின் அட்டூழியத்தையும், அட்டகாசத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இஸ்லாம் கூறும் தத்துவம் தெரியாமல் முஸ்லிம் என்ற பெயரில் வாழ்ந்த ஸக்றான் என்பவனால் பௌத்த, இந்து, குறிப்பாக கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் வருந்தி கண்ணீர் வடித்தவனாகவும், இறைவன்பால் இருகரம் ஏந்தியவனாகவும் நாமனைவரும் ஒற்றுமைக் கயிற்றை இறுகப் பற்றி இன, மத, மொழி பேதமின்றி வாழ்வோம் என்று வேண்டுகிறேன்.

அவன் ஸஹ்றான் அல்ல. அவன் இரத்த வெறியும், மனித மாமிசப் பசியும், பண மோகமும் தலைக்கேறி மூளை இயக்கமற்ற “ஸக்றான்” போதையில் புரண்டவன் ஆவான்.

கண்ணியத்திற்குரிய கிறித்துவ மதத் தலைவர்களே! போதகர்களே!

இன்று இந்நாட்டில் பல உறவுகளையும், உயிர்களையும் இழந்து கண்ணீர் வடித்து வாழும் கிறித்துவ சகோதரர்களுக்கு அன்பு மொழியால் ஆறுதல் கூறி, அவர்களை அமைதிப்படுத்தி இந்நாட்டில் அனைத்து இன, மத, மொழி மக்களும் ஒரே தாய் தந்தைகளின் பிள்ளைகள் போல் கை கோர்த்து வாழ வழி செய்யுமாறு “றூஹுல்லாஹ்” அல்லாஹ்வின் உயிர் என்று அவனாலேயே வாழ்த்துக் கூறப்பட்ட நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திரு முகத்திற்காக உங்கள் அனைவரையும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ
தலைவர் – அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா,
தலைவர் – அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு.
(46 – 2009 ம் இலக்க சட்டத்தால் பாராளுமன்றில் கூட்டிணைக்கப்பட்டது),
BJM வீதி, காத்தான்குடி 06.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments