தொகுப்பு: மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ
இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம், வெண்குஷ்டம், கருங்குஷ்டம், பிளேக் மற்றும் நோயுள்ளவர்களின் நோய் தொற்றுமா? வைத்தியர்கள் அது தொற்றும் என்று சொல்கிறார்களே! என்று கேட்கப்பட்டது.
அதற்கு பின்வருமாறு அவர்கள் பதிலளித்தார்கள். தோற்று நோய் உண்டு என்றும், இல்லை என்றும் பல ஹதீதுகள் வந்துள்ளன. அவற்றின் வெளிரங்கம் முரண்போல் தெரிகின்றது. அவற்றில் நின்றுமுள்ள ஒரு ஹதீதுதான் இப்னு மாஜஹ், மற்றும் சிலர் அறிவித்துள்ள “குஷ்டரோகிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்” என்பதாகும். அதேபோல் நஸாஈ, துர்முதீ, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ள ஹதீதுமாகும். அதாவது ஒரு தூதுக்குழுவில் ஒரு குஷ்டரோகியும் வந்திருந்தார். அவரிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பைஅத்” செய்யாமல் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடம் நாம் “பைஅத்” செய்துவிட்டோம் என்று சொல்லி அனுப்பினார்கள். அதேபோல் இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் பதிவு செய்துள்ள “குஷ்டரோகியைக் கண்டால் நீ சிங்கத்தைக் கண்டு விரண்டோடுவது போல் விரண்டோடு” என்ற ஹதீதுமாகும். இந்த ஹதீதுகளின் வெளிப்படை தொற்று நோய் உண்டு என்பது போன்று காட்டுகின்றது.
அதே நேரம் தொற்று நோய் இல்லையென்று வெளிப்படையாக, தெளிவாக வந்துள்ளதுதான் “பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு குஷ்டரோகியின் கரத்தைப் பிடித்து அல்லாஹ் எனும் திருப் பெயராலும், அவன் மீது நம்பிக்கை வைத்தும், அவன் மீது பாரம் சாட்டியும் சாப்பிடு என்று ஒரே பாத்திரத்தில் தன்னுடன் சாப்பிட வைத்தார்கள் என்ற ஹதீதாகும். இந்த ஹதீதை இப்னு அபீ ஷைபா, துர்முதீ, மற்றும் இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வியாதி பிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் வியாதி இல்லாத ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தனது ஒட்டகத்தைக்கொண்டு செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள். மேலும் தொற்று நோய், பறவை சாஸ்த்திரம், சகுணம் பார்த்தல், ஸபர் மாதம் பீடை என்பது கிடையாது என்றும் கூறியுள்ளார்கள்.
இதற்கான பதிலாகின்றது, இந்த ஹதீதுகளுக்கிடையில் முரண்பாடு கிடையாது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குஷ்டரோகியைக் கண்டால் விரண்டோடச் சொன்னதும், குஷ்டரோகியை தொடர்ந்து பார்வையிட வேண்டாம் என்று தடுத்ததும், இன்னுமொரு குஷ்டரோகியை “பைஅத்” செய்யாமல் தொலைவில் வைத்து திருப்பி அனுப்பியதும் தன்னுடைய “உம்மத்” மீது கொண்ட அன்பினாலும், குஷ்டரோகியை நெருங்கி கலப்பதால் நெருங்குபவனுக்கு அது பீடித்தால் அவன் குஷ்டரோகம் தானாக தொற்றக் கூடியது என்று தனதுள்ளத்தில் அவன் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும்தான். அது சில “காபிர்”களின் நம்பிக்கையாக இருந்தது. விபரம் பின்னால் வரும்.
“முஹக்கீகூன்” எனப்படும் உறுதியானவர்களின் கொள்கை தொற்று நோய் என்பது அறவே இல்லை என்பதாகும். அதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பின்வரும் விபரங்களின் மூலம் இல்லாமலாக்கியுள்ளார்கள். ஒரு காட்டறபீ பாலைவனத்தில் மான்களைப் போன்று இருந்த ஒட்டகங்களுடன் சிரங்கு பிடித்த ஒட்டகங்கள் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே என்று கேட்டதற்கு, அந்த முதல் ஒட்டகத்திற்கு தொற்ற வைத்தது எது? என்று கேட்டு வாயடைக்கச் செய்தார்கள். அதேபோல் தொற்று நோய் இல்லை (லா அத்வா) என்று தெளிவாகவும் கூறியுள்ளார்கள். மேலும் ஒன்று இன்னொன்றிலிருந்து தொற்றாது என்றும் கூறியுள்ளார்கள். இதனால் குஷ்டரோகியுடன் ஒரே பாத்திரத்தில் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தும், “தவக்குல்” வைத்தும் சாப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் இந்த ஹதீதுகள் அனைத்தையும் “முஹக்கிகீன்”கள் முரண்பாடற்றதாக ஆக்கியுள்ளார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவரவருக்குப் பொருந்தும் வகையில் பேசியுள்ளார்கள். சிலர்கள் “ஈமான்” பலமானவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் “தவக்குல்” அடிப்படையில் பேசியுள்ளார்கள். இன்னும் சிலர் “ஈமான்” பலமில்லாதவர்களாக இருந்தார்கள் அவர்களுடன் அதற்கேற்றவாறு பாதுகாப்பாக பேசியுள்ளார்கள். இரண்டு விதமாகவும் நடந்தும் காட்டியுள்ளார்கள். ஒரு தடவை குஷ்டரோகியை “பஷரிய்யத்” என்பதைக் கவனித்து தவிர்ந்துள்ளார்கள். இன்னொரு தடவை இறை சக்தி (“குவ்வதே இலாஹிய்யா”) தன்னில் மிகைத்த போது (“பஷரிய்யத்” இல்லாமலாகி) குஷ்டரோகியுடன் கலந்து பகர்ந்தார்கள். இரண்டு அந்தஸ்த்திலுள்ளவர்களும் எடுத்து நடக்கும் படி காட்டியுள்ளார்கள். இரண்டு நிலையிலுள்ளவர்களுக்கும் ஆதாரம் உண்டு. (“பஷரிய்யத்” மிகைத்தவர்கள், “குவ்வதே இலாஹிய்யஹ்” மிகைத்தவர்கள்)
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் சிலரும் எடுத்துக்கொண்ட விளக்கமாகின்றது முதலாவது விளக்கமாகும். (அதாவது தொற்று நோய் இல்லை என்பதாகும்) ஜாஹிலிய்யா காலத்தவர்கள் தொற்று நோய் அது தானாக அல்லாஹ்வுக்கு எந்தவொரு சம்பந்தமுமின்றி பரவக் கூடியது என்று நம்பியிருந்தார்கள். எனவே அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் “தொற்று நோய் இல்லை” என்ற ஹதீது கொண்டு பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற ஹதீது ஒன்றின் மூலம் சில நேரம் தங்கடம் ஏற்படுவது அல்லாஹ்வின் “கழா கத்ர்” கொண்டுதான் என்றும் வழிகாட்டியுள்ளார்கள்.
இப்னு குதைபா பின்வருமாறு பதிலளித்தார்கள். குஷ்டரோகியையும், காச நோய் உள்ளவரையும் நெருங்குவது சில வேளை நோயை ஏற்படுத்தலாம். ஆனால் அது காற்றைக் கொண்டுதான். தொற்றைக் கொண்டு அல்ல. காற்று தொற்றை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்று என்றும் மறுத்தார்கள்.
இமாம் தபறானீ அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள். பெருமானார் அவர்கள் குஷ்டரோகியை தவிர்ந்து கொள்ளச் சொன்னது மனதில் தொற்று உண்டு என்ற எண்ணம் வந்துவிடும் என்று பயந்துதான். பின்பு குஷ்டரோகியுடன் சேர்ந்து நடந்ததன் மூலம் அதற்கு மாறு செய்துகாட்டினார்கள். மேலும் விரண்டோடச் சொன்னது “பர்ழ்” கடமையில்லை என்பதை “லா அத்வா” தொற்று இல்லை என்று சொல்லி விபரித்தார்கள்.
அல்பாஜீ என்பவர்கள் விரண்டோடச் சொன்னது அது ஆகும் என்பதற்காகத்தான். அதாவது நீ அவன்படும் வேதனையை தாங்கிக் கொள்ள மாட்டாய் என்றிருந்தால், அவனுடன் கலப்பதை வெறுத்தால் ஆகும் என்பதற்காகத்தான். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “குஷ்டரோகியுடன் உனக்கும் அவனுக்கும் மத்தியில் ஒரு ஈட்டியின் அல்லது இரண்டு ஈட்டியின் அளவு இடைவெளி வைத்துசாப்பிடு” என்று சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குஷ்டரோகிகளுக்குப் பக்கத்தால் சென்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது மூக்கைப் பொத்திக் கொண்டு சென்றார்கள். அந்நேரம் ஸஹாபாக்கள் நாயகமே! தொற்று இல்லை என்று நீங்கள் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு பெருமானார் அன்னவர்கள் ஆம், சொல்லியுள்ளேன். ஆனால் அவர்களின் வாடையையுமா? என்று சொன்னார்கள். இதை அறிவித்தவர்களில் ஒருவர் இது சலுகை என்று சொன்னார்.
அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களும், இன்னும் சிலரும் விரண்டோடச் சொன்னது தொற்று நோய் இல்லை என்று பெருமானார் அவர்கள் சொன்னது கொண்டும், இன்னும் இது போன்றது கொண்டும், குஷ்டரோகியுடன் ஒன்றாக இருந்து சாப்பிட்டது கொண்டும் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்கள்.
ஹஸ்றத் அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு ஹதீதுகளையும் (தொற்று நோய், பறவை சாஸ்திரம் இல்லை என்ற ஹதீதையும், நோயுள்ள ஒட்டகத்தை நல்ல ஒட்டகத்துடன் சேர்க்க வேண்டாம் என்ற ஹதீதையும்) அறிவித்தார்கள். பிறகு முந்தியதை அறிவிக்கவில்லை. அவர்களிடம் சிலர் அது பற்றிக் கேட்க அவர்கள் பதிலளிக்கவில்லை. அதனால் இந்த சிலர் அது உண்டு என்று நம்பினார்கள். அபூ ஸலமா இது தொடர்பில் (அபூ ஹுறைறா மறந்தார்களா? அல்லது ஒன்று மாற்றப்பட்டுவிட்டதா? என்பது எனக்கு தெரியாது) என்று கூறியுள்ளார்கள்.
இது நல்ல வார்த்தை அல்ல. விடயம் என்னவெனில் இந்த விபரத்தில் நான்கு கருத்துக்கள்தான் உள்ளன.
01. தொற்று நோய் உண்டு.அது தானாக இன்னொருவருக்கு தொற்றும். இது “காபிர்”களின் கூற்று.
02. அல்லாஹ்வின் உத்தரவுக்கமைய அது தொற்றும். அது நீங்காது. ஆனால் “முஃஜிஸத்” அல்லது “கறாமத்” அற்புதமுள்ள ஒருவருக்கு நிகழ்ந்து நீங்கினாலே தவிர. இதுதான் சரியான இஸ்லாமிய வழி.
03. தொற்று நோய் உண்டு. ஆனால் அதன் இயற்கைத் தன்மை கொண்டுதான் தொற்றும். அதன் மீது அல்லாஹ் நடத்தாட்டும் வழக்கமானதைக்கொண்டு. சில வேளை அது வழமையான நேர்ச்சைகள் செய்வது கொண்டு அல்லாஹ் நாடினால் நீங்கும்.
04. அறவே தொற்றாது. இயற்கையாகவோ, வழக்கத்திலோ இல்லை. எவனுக்கு அது ஏற்படவேண்டுமென்று நாட்டமிருக்கிறதோ அவனுக்கு அது ஏற்படும். அது அவனிலேயே ஆரம்பிக்கின்றது.
இதனால்தான் நாம் அதிகமான தொற்று நோயாளர்கள் நோயில்லாதவர்களுடன் கலப்பதைக் காண்கிறோம். அது அவர்களுக்கு தொற்றுவதும் இல்லை. இறுதியானதுதான் சரியானது. “ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தொற்றாது” என்ற ஹதீது கொண்டும், “முந்தியதுக்கு (முதலாவது ஒட்டகத்துக்கு) தொற்றவைத்தது யார்?” என்ற ஹதீது கொண்டும் மூன்றாவது பிரபல்யமாக இருந்தாலும் சரியே! “முஹக்கிகீன்”கள் “தொற்று நோய் என்பது இல்லை என்பதன் கருத்து ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இயற்கையாக தொற்றாது. அது இறைவனின் நாட்டத்தைக்கொண்டும், ஏற்பாட்டைக் கொண்டும், அவனுடைய செயலைக்கொண்டுமே உண்டாகும் என்று கூறியுள்ளனர். இன்னும் தொற்றுநோய் இல்லை என்றால் அவ்வாறு சொல்லத்தடை அல்லது நம்பத்தடை என்பதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் அது செய்தியே தவிர நடக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.