தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ
மறுமை நாளுக்குரிய அடையாளங்களில் பல அடையாளங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அது தொடர்பாக நான் வழங்கும் இன்றைய விருந்து
عَنْ مِرْدَاسٍ الأَسْلَمِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَذْهَبُ الصَّالِحُونَ، الأَوَّلُ فَالأَوَّلُ، وَيَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ، أَوِ التَّمْرِ، لاَ يُبَالِيهِمُ اللَّهُ بَالَةً
ஸாலிஹீன்கள் – நல்லடியார்கள் ஒவ்வொருவராக மரணிப்பார்கள். அவ்வேளை தொலிக் கோதுமை அல்லது ஈத்தமரத்தின் கழிவு போன்ற கழிவுதான் எஞ்சியிருக்கும். அல்லாஹ் அவர்களை மண்ணளவும் கணக்கெடுக்கமாட்டான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: மிர்தாஸ் அல்அஸ்லமீ
நல்லடியார்கள் ஒருவர் பின் ஒருவராக மரணிப்பது இறுதி நாளின் அடையாளமாகும். நல்லடியார்கள் என்பவர்கள் அவ்லியாஉகளை விடப் பதவியில் குறைந்தவர்கள்தான். ஆயினும் அவர்கள் மற்றவர்களை விடவும் சிறந்தவர்களேயாவர். பொதுவான கண்ணோட்டத்தில் “ஷரீஆ”வுக்கு முரணின்றி வாழ்பவர்கள் அனைவரையும் இச்சொல் உள்வாங்கிக் கொள்ளும்.
இவர்களின் மரணம் இறுதி நாளுக்குரிய அடையாளமாயினும் இவர்கள் மரணிப்பதற்கான காரணங்கள் இரண்டு எனலாம். ஒன்று: இவர்களின் மரணம் இறுதி நாளுக்கான அடையாளம் என்பதை ஏனையோர் விளங்கி அவர்கள் தம்மை தயார் செய்து கொள்ளுதல். இது ஒரு காரணம்.
இன்னொரு காரணம் இவர்கள் மரணிக்க வேண்டுமென்று இவர்களுக்கே விருப்பம் வருதல். நாட்டில் நடக்கின்ற அட்டூழியம், அனாச்சாரம், மார்க்க துரோகங்களை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாமற் போகுமிடத்தில் அல்லாஹ்விடம் இவர்கள் மரணத்தை கேட்டல்.
பின்னொரு காலத்தில் அநீதி, அட்டூழியம், அனாச்சாரம், மார்க்க துரோகங்கள் மலிந்து காணப்படுமென்ற கருத்து இந்த ஹதீதில் மறைந்திருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
இதற்கு இக்காலத்தில் வாழ்கின்ற மக்களின் நடைமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் உதாரணங்களாகக் கொள்ளலாம். ஒருவர் பின் ஒருவராக நல்லடியார்கள் மரணித்தால் மற்றவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாயிருப்பார்கள் என்பதை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “ஹுபாலத்” என்ற சொல் காட்டுகின்றது. இச்சொல்லுக்கு اَلرَّدِيُّ مِنَ الشَّيْئِ ஒன்றின் கழிவு என்றும், தரம் குறைந்ததென்றும் பொருள் வரும். நமது நாட்டில் உமி என்றும், தூசு என்றும் சொல்வது போன்றதாகும். சுருக்கம் என்னவெனில் “ஸாலிஹீன்” என்போர் மரணித்தால் எஞ்சியிருப்பவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே இருப்பார்கள் என்ற கருத்து வரும்.
ஒருவர் “ஸாலிஹ்” ஆனவரா? இல்லையா? என்று அறிந்து கொள்வதற்கான அளவுகோல் “ஷரீஆ”வும் “உர்பு” என்ற ஊர் வழமையுமாகும். ஒருவரின் நடைமுறை, பழக்க வழக்கம் “ஷரீஆ”வுக்கு முரணாயிருந்தாலும், ஊர் வழமைக்கு மாறாக இருந்தாலும் அவர் “ஸாலிஹீன்” பட்டியலில் சேரமாட்டார்.
உதாரணமாக தலை மறைத்தல் போன்றும், கரண்டைக்கு கீழ் (கைலி) சாரம், “றவ்ஸர்” உடுப்பது போன்றும், தெருக்களில் சாப்பிட்டுத் திரிவது போன்றுமாகும். இம்மூன்று உதாரணங்களிலும் முந்திய இரண்டும் “ஷரீஆ”வுக்கு முரணானதும், பிந்திய ஒன்று ஊர்வழக்கத்திற்கு முரணானதுமாகும்.
எனவே, இவ்வாறு செய்பவர்கள் “ஸாலிஹீன்” நல்லடியார் பட்டியலில் சேரமாட்டார்கள். நல்லடியார்கள் மரணித்தால் இவர்களே எஞ்சியிருப்பார்கள். இவர்களால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது. இவர்களை மக்கள் கணக்கெடுக்கவும் மாட்டார்கள்.
இவர்கள் பற்றியே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தலைப்பில் எழுதிய ஹதீதில் لا يباليهم الله بالة இவர்களை அல்லாஹ் மண்ணளவும் கணக்கெடுக்கமாட்டான் என்று குறிப்பிட்டார்கள். இந்த வசனம், இவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்ற வசனம் போன்றதாகும்.
இந்த வசனத்திற்கு பொருள் எழுதிய நான் “மண்ணளவும்” என்று எழுதியுள்ளேன். அறபு மொழி ஓரளவேனும் தெரிந்த ஒருவர் “மண்” என்ற பொருளுக்குரிய “துறாப்” என்ற சொல் ஹதீதில் வராத நிலையில் “மண்ணளவும்” என்ற பொருள் எவ்வாறு வந்ததென்று சிந்திக்கலாம். இதற்கு அறபு மொழி இலக்கணத்தோடு தொடர்புள்ள சட்டம் ஒன்றைக் கூற வேண்டும்.
அதாவது வசனத்தில் வந்துள்ள”بَالَةً” என்ற சொல் يُبَالِيْ என்ற சொல்லுக்கு “மப்ஊல் முத்லக்” – مفعول مطلق என்று மொழியிலக்கணக் கலையில் சொல்லப்படும். இதற்கு மத்ரஸா தமிழில் பொருள் சொல்வதாயின் “பொருட்படுத்துவதாக பொருட்படுத்தமாட்டான்” என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லுதல் ஓதும் மாணவர்களுக்கு புரியுமேயன்றி மற்றவர்களுக்குப் புரியாது. ஆகையால் அறவே பொருட்படுத்தமாட்டான் என்ற கருத்தை வேறுபாணியில் “மண்ணளவும்” பொருட்படுத்தமாட்டான் என்று எழுதியுள்ளேன். நீதி என்ற தராசுக்கு முன்னால் நின்று சிந்திப்பவர்களுக்கு இது தவறாக விளங்காது.
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவாக விளக்கி வைக்க முடியும். ஒருவன் ضَرَبْتُ ضَرْبًا என்று சொன்னால் இதற்கு மத்ரஸா தமிழில் “அடிக்கிறதாக அடித்தேன்” என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதை மத்ரஸா தமிழ் தெரியாதவர் இதன் சரியான பொருளை அறிந்து கொள்ளமாட்டார். அவ்வாறு சொல்லாமல் “கடுமையாக அடித்தேன்” என்று பொருள் சொன்னால் அனைவரும் விளங்கிக் கொள்ள வாய்ப்புண்டு.
இதனால்தான் ஹதீதில் வந்த வசனத்திற்கு “மண்ணளவும்” என்ற பொருள் எழுதினேன். மர்தஸா தமிழால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, ஹழ்றத்மார்கள் மாணவர்களுக்கு தற்காலத் தமிழில் பொருள் சொல்லிக் கொடுப்பது வரவேற்கத்தக்கதாகும்.