(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
தாஊன் – வபா என்ற சொற்கள் நபீ மொழிகளில் வந்துள்ளன. இவ்விரண்டும் நோயின் பெயர்களாகும். இவ்விரண்டுக்கும் தமிழ் சொற்கள் எவை என்று திட்டமாக சொல்ல முடியாதுள்ளது. ஹதீதுக் கலை மேதைகளிடமும் இவ்விடயத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் விபரம் கூறும் நோய்க்கு நாம் என்ன பெயர் சொல்வதென்று ஆராய வேண்டியுள்ளது.
முதலில் தமிழ் அகராதியும், அறபு அகராதியும் தருகின்ற விளக்கத்தை கவனிப்போம். “தாஊன்” என்ற சொல்லுக்கு அறபு அகராதியில் اَلْوَبَاءُ الْمَعْرُوْفُ أَوِ المَوْتُ مِنَ الْوَبَاءِ அறியப்பட்ட “வபா” என்றும் “வபா” நோயால் மரணித்தல் என்று மட்டும் தான் எழுதப்பட்டுள்ளதேயன்றி தாஊன் என்ற நோய்க் கென்று விளக்கம் தரப்படவில்லை. எனினும் இது “வபா” என்று கூறப்பட்டிருப்பதால் இதற்கான பொருளைக் கவனிப்போம். الوَبَاءُ كلّ مَرَض عَامٍّ பொதுவான நோய் என்று எழுதப்பட்டுள்ளது. அகராதி தருகின்ற இரண்டும் பொருத்த மற்றதாகும்.
இவ்விரண்டிற்கும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்ற பொருளைக் கவனிப்போம்.
وَأَمَّا الطَّاعُوْنَ فَهُوَ قُرُوْحٌ تَخْرُجُ فِي الْجَسَدِ، فَتَكُوْنُ فِي الْمَرَافِقِ أو الآبَاطِ أو الأَيْدِيْ أو الأَصَابِعِ وَسَائِرِ الْبَدَنِ، ويكون معه وَرَمٌ وَأَلَمٌ شَدِيْدٌ،
“தாஊன்” என்பது உடலில் ஏற்படுகின்ற பொக்களங்கள். அவை முன்கை, கமுகட்டு, பொதுவாக கை, கைவிரல்கள், மற்றும் உடலெங்கும் ஏற்படுகின்ற பொக்களங்களாகும். அவற்றுடன் வீக்கமும், கடும் வலியும் இருக்கும். இவ்வாறு ஷர்ஹ் முஸ்லிம் 14ம் பாகம் 204 ம் பக்கத்தில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது. இமாம் நவவீ அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். அவர்களின் கூற்றின்படி – விளக்கத்தின்படி இந்நோய்க்கு மருத்துவம் கூறும் பெயர் என்னவென்று திட்டமாகக் கூற முடியாதுள்ளது.
இந்தியா தமிழ் நாடு, கேரளா மாநிலங்களில் வபா, தாஊன் என்ற நோய்களுக்கு கால்றா, வாந்தி பேதி, பொக்களிப்பான் என்று கூறுவர். அம்மாள் என்றும் சொல்வார்கள்.
தமிழ் அகராதி தரும் கருத்தை கவனிப்போம். “பொக்களிப்பான்” பெரியம்மைக்கு இவ்வாறு சொல்லப்படும். மக்கள் தமது பேச்சு வளக்கில் பொக்களிப்பான் வந்த அடையாளம் இன்னும் முகத்தில் உள்ளது என்றும், அவர்கள் வீட்டில் பொக்களிப்பானாம்! நீ அங்கு போகாதே என்று சொல்வதுண்டு. இதற்கு ஆங்கிலத்தில் (smallpox) என்று சொல்லப்படும்.
வாந்தி பேதி – பெரும்பாலும் நீரின் மூலமாகவும், எழிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான வயிற்றுப் போக்கையும், வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய். இது ஆங்கிலத்தில் (cholera) கால்றா என்று சொல்லப்படும்.
எனது ஆய்வின் படி மருத்துவ நிபுணர்கள் எதெல்லாம் தொற்று நோய் என்று சொல்கிறார்களோ அதெல்லாம் தாஊன், வபா என்ற இரண்டிலும் அடங்கி விடும்.
மருத்துவ நிபுணர்கள் எல்லா நோய்களும் தொற்று நோயென்று சொல்லமாட்டார்கள். எனினும் சில நோய்களை மட்டுமே தொற்று நோயென்று கூறுவர். அவர்களின் கூற்றும் கூட நூறு வீதம் சரியானதென்று கூற முடியாது. ஏனெனில் நோய் என்பது நாட்டுக்கு நாடு, காலத்திற்கு காலம் மாறுபடுவதற்கும் சாத்தியமுண்டு.
தொற்று நோய் என்பது உண்மையா? இல்லையா? இஸ்லாம் அது பற்றி என்ன சொல்கிறது என்ற விபரம் அடுத்தடுத்த பதிவுகளில் இடம் பெரும்.
பொதுவாக மருத்துவ நிபுணர்களும், பழையவர்களும், பொதுமக்களும் எதெல்லாம் தொற்று நோய் என்றும், பயங்கர நோயென்றும் கணிக்கின்றார்களோ அவற்றை நாம் சரி கண்டாலும், காணாது போனாலும் தற்காப்புக் கருதி மருத்துவர்களும், அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும் கூறும் ஆலோசனைகளைப் பேணிச் செயல்படுவது சிறந்ததே.
தாஊன் – வபா தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய கருத்துக்களை அறிந்தவர்கள் எமக்கு அறிவித்தால் பெரிய உதவியாக இருக்கும்.