Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மரணிக்கு முன் மரணிப்பதெவ்வாறு?

மரணிக்கு முன் மரணிப்பதெவ்வாறு?

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

“ஸுபீ” மகான்களின் ஞான வழியில் மரணம் இரு வகைப்படும். ஒன்று – مَوْتٌ حَقِيْقِيٌّ இயற்கை மரணம். மற்றது مَوْتٌ مَجَازِيٌّ – செயற்கை மரணம்.

இயற்கை மரணம் என்பது

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ.

ஒவ்வொருவருக்கும் ஒரு தவணை உண்டு. குறிப்பிட்ட கால வரையறை உண்டு. அவர்களுக்குரிய காலம் வருமாயின் அவர்கள் ஒரு நொடி நேரம் கூட பிந்தவுமாட்டார்கள். அதே போல் முந்தவுமாட்டார்கள்.  (திருக்குர்ஆன் – 7 – 34)

இந்த வகை மரணம் மனிதனுக்கு மட்டுமன்றி உயிரினம் அனைத்துக்கும் உண்டு. நான்கு பேர்கள் மட்டுமே நீண்ட காலம் வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் வாழ்வார்கள் ஆயினும் அவர்களும் மரணிப்பவர்கள்தான். அவர்கள் நால்வரும் நபீமார்களேயாவர். அவர்கள் ஈஸா, மஹ்தி, இத்ரீஸ், இல்யாஸ் அலைஹிமுஸ்ஸலாம் ஆவார்கள். இந்த மரணத்திலிருந்து யாரும் விடுபட முடியாது. இது இலஞ்சம் கொடுத்து நடக்கப் போகின்ற ஒன்றுமல்ல.

இரண்டாம் வகை மரணம். مَوْتٌ مَجَازِيٌّ – செயற்கை மரணம் என்று சொல்லப்படும். இந்த மரணம் முந்தின மரணம் போல் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றல்ல. இதை அடைவதற்கு முயற்சித்தவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இது கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்த வகை மரணம் அடைந்தவர் புனிதப் போருக்காக போர்க்களத்தில் இறங்கி போர் செய்து எதிரிகளின் வாளுக்கு இரையான شَهِيْدُ الدُّنْيَا وَالْآخِرَة ஈருலகத்தின் “ஷஹீத்” என்று சொல்லப்படுபவரை விட அந்தஸ்த்தில் சிறந்தவராவார்.

ஸூபீ மகான்கள் தமது கண்களை மூடிக் கொண்டு இப்படியொரு மரணம் இருப்பதாகக் கூறவில்லை. நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “ஹதீது” நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டே சொல்கிறார்கள்.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளுடன் போர் செய்து வெற்றிவாகை சூடிய நிலையில்

رَجَعْنَا مِنَ الْجِهَادِ الْاَصْغَرِ اِلَى الْجِهَادِ الْاَكْبَرِ

சிறிய போரை முடித்து விட்டு பெரிய போருக்குத் திரும்பியுள்ளோம் என்று கூறினார்கள். தோழர்கள் وَمَا الْجِهَادُ الْاَكْبَرُ يَا رَسولَ الله؟ பெரிய போரென்றால் எது நாயகமே? என்று கேட்டார்கள். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் جِهَادُ النَّفْسِ “நப்ஸ்” என்ற மனவாசையுடன் போர் செய்வதாகும் என்று விடை பகர்ந்தார்கள்.

இந்த ஹதீது இஸ்லாமிய போரின் போது போர்க்களத்தில் மரணித்த “ஷஹீது”களை விட மனப்போரின் போது மரணிக்கின்ற – அதாவது அதைத் தோற்கடித்து வெற்றி பெறுகின்றவர்கள் மேலானவர்கள் என்பதையும், புனிதப் போரை விட இப்போர் சிறந்தது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

“நப்ஸ்” உடன் போராடுதல் என்பது மனவெழுச்சிக்கு – மன ஆசைகளுக்கு நாம் வழிப்படாமல் நடப்பதையே குறிக்கும். இப்போர் மிகக் கடினமான போர் தான். இதில் வெற்றி பெறுபவர்கள் அரிதினுமரிதென்றே கூற வேண்டும். இக்காலத்தைப் பொறுத்தவரை புனிதப் போரெனும் இஸ்லாமியப் போர் – தீனுக்கான போர் இல்லையாதலால் போர் செய்து “ஷஹீத்”ஆக விரும்புவோர் மனப்போர்தான் செய்ய வேண்டும்.

மனப் போர் செய்ய விரும்புவோர் தமது சொற் செயல் எண்ணம் யாவிலும் “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு அடிமையாகாமல் அதைத் தமக்கு அடிமையாக்கி வாழ வேண்டும். உண்ணல், உடுத்தல், குடித்தல், பேசுதல், மற்றும் அனைத்து விடயங்களிலும் அதற்கு மாறுசெய்து போராட வேண்டும்.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், اَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ உனது எதிரிகளில் உனக்கு மிகக் கொடிய எதிரி உனது இரு விலாக்களுக்குமிடையே உள்ள “நப்ஸ்” தான் என்று கூறினார்கள். வெளியே உள்ள ஓர் எதிரியின் தாக்கத்திலிருந்து தப்பிக் கொள்ள முடியும். பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நம்முள்ளே இருக்கின்ற எதிரியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கொள்வது மிகக் கடினமேயாகும்.

இமாம் பூஸீரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “புர்தா ஷரீபா” என்ற நபீ புகழ் காப்பியத்தில்
وَخَالِفِ النَّفْسَ وَالشَّيْطَانَ فَاعْصِهِمَا – وَإِنْ هُمَا مَحَضَاكَ النُّصْحَ فَاتَّهِمِ

“நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கும், “ஷெய்தான்” என்ற எதிரிக்கும் நீ மாறு செய்து நடந்துகொள். அவ்விருவரும் உனக்கு அழகான அறிவுரை வழங்கினாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! என்று கூறியுள்ளார்கள்.

“நப்ஸ்”, “ஷெய்தான்” இரண்டும் மனிதனை நரகத்திற்கு அனுப்பும் தந்திரக்காரர்களும், மந்திரக்காரர்களுமாவர். குடிப்பதற்கு பால் தருவார்கள். ஆனால் அதில் விஷம் கலந்திருப்பார்கள். நீ அதை அறியாமல் குடித்து மரணித்து விடுவாய். உண்ண உணவு தருவார்கள். ஆனால் அதில் கிருமிகளை கலந்திருப்பார்கள். நீ அதை அறியாமல் சாப்பிட்டு உயிரை இழந்து விடுவாய். அவர்கள் எது தந்தாலும் முதலில் அதைச் “செக்” (CHECK) பண்ணிக் கொள். பரிசீலனை செய்துகொள்.

“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம்தான் அவர்கள் தருவதை “செக்” (CHECK) பண்ணும் கருவி என்பதை மறந்து விடாமல் அதை அளவுக்கு அதிகமாகக் கற்றுக்கொள்.

قال الْقُطْبُ الأكبرُ أبوالحسن الشّاذلي قُدِّسَ سرُّهُ ” مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِيْ عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ،
அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள், “நாங்கள் பேசிவருகின்ற ஸூபிஸ ஞானமான இறை ஞானத்தை ஆழமாக – பூரணமாக கற்றுக்கொள்ளாதவன் தானறியாமலேயே பெரும்பாவத்தில் நிலைத்திருந்த நிலையில் மரணிப்பான்” என்று கூறியுள்ளார்கள்.

இவர்கள் போல் உலகில் தோன்றிய அவ்லியாஉகள், குத்புமார்கள், மகான்கள் அனைவரும் சொல்லியே உள்ளார்கள். இது பற்றி மஸ்தான் மகான் அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்கள் நீண்ட பாடலொன்றில் “சொட்டாயினும் தொட்ட பேர் நல்லவர்கள்” என்று கூறியுள்ளார்கள். ஸூபிஸ ஞானத்தில் ஒரு சொட்டையாவது தொட்டுப் பார்த்தாலே போதும் என்கிறார் மஸ்தான்.

“ஸூபிஸம்” என்பது இறை போதையை ஏற்படுத்துகின்ற ஒரு வகை “கம்ர்” மதுவாகும். தென்னங்கள், பனங்கள், விஸ்கி, சாராயம், பிறேன்டி என்பன சிற்றின்பத்துக்கு வழிகோலும் போதைகளாகும். இவைதான் “ஷரீஆ”வில் விலக்கப்பட்டவையாகும். ஆயினும் ஸூபிஸ மதுவை வயிறு நிரம்பக் குடிக்கலாம். தடையே இல்லை.

ஞானிகளும், ஸூபிகளும் ஒரே குரலில் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَصَوَّفَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقْ

ஒருவன் “ஷரீஆ” வை மட்டும் கற்று ஸூபிஸம் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகி விட்டான். ஒருவன் ஸூபிஸம் மட்டும் கற்று “ஷரீஆ”வைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “ஸிந்தீக்” ஆகிவிட்டான். ஒருவன் இரண்டையும் கற்றுக் கொண்டால் அவன் “தஹ்கீக்” சரியான வழியில் திட்டமானவனாகிவிட்டான்” என்று கூறியுள்ளார்கள்.

زِنْدِيْقٌ – لَفْظٌ فَارِسِيٌّ اَوْ هُوَ عَبْرَانِيٌّ، معناه مَنْ يُضْمِرُ الْكُفْرَ وَيُظْهِرُ الْإِيْمَانَ

“ஸிந்தீக்” என்ற சொல் பாரசீக அல்லது அப்றானி மொழிச் சொல்லாகும். இதற்கு “குப்ர்” என்ற இறை மறுப்பை மறைத்து “ஈமான்” என்ற விசுவாசத்தை வெளிப்படுத்துபவன் என்று பொருள் வரும்.

(தொடரும் إن شاء الله )

RELATED ARTICLES

Most Popular

Recent Comments