Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தொழுகையில் ஓய்வு எதற்கு?

தொழுகையில் ஓய்வு எதற்கு?

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

தொழுகை என்பது ஒருவன் தனது உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும், வியர்வை சிந்தியும் செய்யக் கூடிய ஒரு வணக்கமல்ல. ஆனால் மண் அள்ளுதல், கல் அள்ளுதல், மடுத் தோண்டுதல் போன்ற வேலைகள்தான் உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும் செய்ய வேண்டியவையாகும்.

இவ்விரு வகை வேலைகளில் தொழுகை போல் உடலை வருத்தாமலும், அதைக் கஷ்ப்படடுத்தாமலும் செய்கின்ற வேலைகளுக்கு (REST) “றெஸ்ட்” ஓய்வு தேவையில்லை. ஆயினும் இதற்கு மாறாக மேலே குறிப்பிட்ட உடலை வருத்திச் செய்யக் கூடிய வேலைகளுக்கு ஓய்வு அவசியமானதே.

இந்நிலையில் தொழுகையில் முதலாவது “றக்அத்தி”ல் இரண்டாம் “ஸுஜூத்” செய்த பின் நேராக நிலைக்கு வராமல் சற்று நேரம் இருந்து அதன்பின் நிலைக்கு வருதல் “ஸுன்னத்” நபீ வழியாகும். இவ்வாறு இருக்கும் இருப்புக்கு இஸ்லாமிய சட்டக்கலையில் جلسة الإستراحة – “ஜல்ஸதுல் இஸ்திறாஹத்” ஓய்வு எடுக்கும் இருப்பு என்று சொல்லப்படும்.

இந்த ஓய்வு எதற்கு? இதுலுள்ள தத்துவம், ஆன்மீகம், இரகசியம் என்ன என்பன தொடர்பாக சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இவ்வாறு இரண்டு “றக்அத்” தொழுகையில் ஒரு தரமும், நான்கு “றக்அத்” தொழுகையில் இரண்டு தரமும், மூன்று “றக்அத்” தொழுகையில் ஒரு தரமும் மொத்தமாக ஒரு நாளைக்கு எட்டுத் தரம் இருக்க வேண்டும்.

இதற்கு ஓய்வெடுக்கும் இருப்பு என்று பெயர் இருந்தாலும் கூட இவ் இருப்பில் நீண்ட நேரம் இருத்தல் கூடாது. அதிக பட்சம் ஐந்து நொடிகள் இருக்கலாம். இது சிறிய ஓய்வுதான். இதை ஓய்வென்று கூட சொல்ல முடியாது. ஆயினும் இதை ஆன்மீகத்தின் சிறியதோர் பயிற்சி என்றும், மறைமுகமாக ஒரு போரை உணர்த்தும் செயலென்றுமே கொள்ள வேண்டும்.

நோன்பு மாதம் தொழுகின்ற விஷேட தொழுகைக்கு “தறாவீஹ்” ஓய்வெடுக்கும் தொழுகையென்று பெயர் வந்ததற்கான காரணம் இத்தொழுகையில் நான்கு “றக்அத்”துகளுக்கு ஒரு தரம் ஓய்வெடுக்கும் அமைப்பு உண்டு. இந்த அமைப்பை நவீன மார்க்க வாதிகள் சரிகாண மாட்டார்கள். ஆனால் ஸுன்னிகள் சரிகாண்பார்கள்.

“ஜல்ஸதுல் இஸ்திறாஹத்” என்று நாம் பேசிவருகின்ற ஓய்வெடுக்கும் இருப்பு மார்க்கமாக்கப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு.

“ஸுஜூத்” என்பது இறைவனை வணங்குமொருவன் தன்னை அவனுக்கு முழுமையாக அற்பணம் செய்யும் நிலையாகும். நின்ற நிலையில் அவனை வணங்குவதற்கும், குனிந்த நிலையில் வணங்குவதற்கும், இருந்த நிலையில் வணங்குவதற்கும், தலையை தரையில் முட்டிய நிலையில் வணங்குவதற்கும் ஏகபோக வித்தியாசம் உண்டு. மேற்கண்ட நான்கு நிலைகளிலும் இறைவனின் அன்பையும், கருணையையும் அதிவேகமாக இழுத்து வரும் நிலை தலையைத் தரையில் முட்டும் “ஸுஜூத்” நிலையேயாகும்.

இதனால்தான் இறைவன் திருமறையில் (96 – 19) وَاسْجُدْ وَاقْتَرِبْ “நீ “ஸுஜூத்” நிலைக்குச் சென்று நெருங்கு” என்று குறிப்பிட்டான் போலும். மற்ற மூன்று நிலைகள் குறித்தும் இவ்வாறு சொல்லவில்லை.

இந்நிலை ஒருவனின் மனதை நெகிழ வைக்கும் நிலை என்பதால் தான் ஒருவனிடம் ஒரு வேலையை முடிக்க விரும்பும் ஒருவன் அவன் காலில் விழுந்து கிடப்பதாகும். இந்நிலையில் கல் மனமும் கரையத்தான் செய்யும். அல்லுபகலாக அடிமை மனம் தேம்புதற்கு கல்லும் கரைந்துடுமென் கண்ணே றஹ்மானே!

அடியான் தரையில் சிரம் வைத்து இறைவனை நெருங்கும் கட்டத்தில் அவன் தனக்கு இரவலாக வழங்கிய ஏழு தன்மைகளையும் அவனிடமே ஒப்படைத்து அடியான் தனக்கென்று ஒன்றுமில்லாதவனாகவும், தானும் இல்லாதவனாகவும் ஆக வேண்டும். இறைவன் அடியானுக்கு வழங்கிய ஏழு தன்மைகளான குத்றத்- சக்தி, இறாதத் – நாட்டம், ஸம்உன் – கேள்வி, பஸறுன் – பார்வை, இல்முன் – அறிவு, கலாமுன் – பேச்சு, ஹயாதுன் – உயிர் என்பவற்றை அக்கட்டத்தில் அவனிடம் ஒப்படைத்து அனைத்தையுமிழந்து பிணமாக வேண்டும். மையித் ஆக வேண்டும்.

அடியான் தனக்கு அல்லாஹ் இரவலாக வழங்கிய ஏழு தன்மைகளையும் அவனிடமே ஒப்படைத்து விடுகிறான் என்பதற்கான வெளிப்படையான ஆதாரமே அவன் “ஸுஜூத்” நிலையில் தனது ஏழு உறுப்புக்களையும் தரையில் வைக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறியதற்கான காரணமாகும், இது தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.

இது குறித்து நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் اُمِرْتُ اَنْ اَسْجُدَ عَلَى سَبْعَةِ أعضاء “ஏழு உறுப்புகள் மீது “ஸுஜூத்” செய்யுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று அருளினார்கள்.

இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ”மத்ஹப்” வழி நடப்பவர்கள் “ஸுஜூத்” நிலையில் தமது ஏழு உறுப்புகளை தரையில் வைப்பது கடமையாகும். தவறினால் தொழுகை வீணாகிவிடும். இவ்விடயத்தில் சட்டம் படித்த உலமாஉகள் கூட தமது கவனயீனத்தால் தவறு செய்வதை நாம் கண்டு வேதனையடைகிறோம். உலமாஉகளே தவறு செய்தால் பொது மக்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

“ஸுஜூத்” நிலையில் மேலே கூறியவாறு ஏழு தன்மைகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்தல் என்பது சாதாரண காரியமல்ல. அது ஒரு போரேதான். அவ்வாறு போர் செய்தவனுக்கு ஓர் ஓய்வு வேண்டுமென்பதைக் கருத்திற் கொண்டுதான் “ஜல்ஸதுல் இஸ்திறாஹத்” ஓய்வெடுக்கும் இருப்பு ஸுன்னத்தாக்கப்பட்டதென்று நான் அறிகிறேன்.

“ஸுஜூத்” நிலையில் ஷாபிஈ மத்ஹப் வழி செல்வோரில் அநேகர் ஏழு உருப்புக்களை தரையில் வைக்கும் விடயத்தில் கவனக்குறைவாக இருப்பதை நாம் காண்கிறோம். நாம் அவர்களுக்கு ஆயிரம் தரம் சொன்னாலும் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்வதாக தெரியவில்லை. சொல்லலாம். அவ்வளவுதான். ஒவ்வொருவர் பின்னாலும் நின்று காலைப் பிடித்து நாம் வைப்பது சாத்தியமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது பழமொழி.

மகான் மஸ்தான் அப்பா அவர்களின் பின்வரும் பாடல் ஒரு வகையில் மேற்கண்ட இத்தத்துவத்தையே உணர்த்துகிறது.

முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்
தட்டைப் பீங்கானில் வைத்து தருவேன் மனோன் மணியே!

இன்னொரு வகையில் வேறொரு தத்துவத்தை உணர்த்துவதாகவும் அமையும். என்ன சொல்வது? எதிரிகள் வாளுடன் நிற்கிறார்களே! உலமாஉகள் எழுதுகோலுடன் நிற்கிறார்களே!

اِذَا سَكَتَّ نَجَوْتَ – وَاِنْ فَتَحْتَ فَاكَ قُتِلْتَ،

குறிப்பு:
ஏழு உறுப்புக்கள்: நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு கால்களிலுள்ள விரல்களின் உட்பகுதி. மூக்கு தரையில் படுவது “ஸுன்னத்” ஆகும்.

கடும் போர் செய்த ஒருவனுக்கு ஒருசில நொடி நேர ஓய்வு போதுமா? என்ற கேள்விக்கு போதாதென்று தான் பதில் கூற வேண்டும். அதற்கான விளக்கம் அடுத்த பதிவில் இடம் பெறும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments