Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல் இஸ்முல் அஃளம்

அல் இஸ்முல் அஃளம்

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ

வலீகட்கரசர் குத்புல் அக்தாப் அல் பாசுல் அஷ்ஹப் – اَلْبَازُ الْاَشْهَبْ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

اِسْمُ اللهِ الْاَعْظَمُ هُوَ اللهُ – இறைவனின் வலுப்பமிகு திருநாமம் அல்லாஹ் என்ற திரு நாமமாகும்.

இவ்வாறு ஏன் சொன்னார்களென்றால் இறைவனின் திரு நாமங்களில் ஒரு திருநாமம் உண்டு. அதற்கு ஸூபீ மகான்கள் اَلْاِسْمُ الْاَعْظَمْ – “அல் இஸ்முல் அஃளம்” என்று சொல்வார்கள். வலுப்பமிகு திரு நாமம் என்பது இதன் பொருள். இதன் விஷேட மென்னவெனில் இத்திரு நாமத்தை மொழிந்து கேட்கப்படும் “துஆ” பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பத்தகுந்த பல ஆதாரங்கள் உள்ளன.

இத்திருநாமம் எது என்பதில் ஸூபீ மகான்களிடமும், மற்றும் அறிவுலக மேதைகளிடமும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற விதத்தில் ஒவ்வொன்றைச் சொல்லியுள்ளார்கள்.

சிலர் “ஹய்யுன்” என்ற திருநாமம் என்றும், இன்னும் சிலர் “பதீஉஸ்ஸமாவாதி வல்அர்ழ்” என்றும், வேறு சிலர் “ஹூ” என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேறு திருநாமங்களென்றும் கூறுகிறார்கள்.

ஆயினும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்கள் “அல்லாஹ்” என்ற திரு நாமமே “இஸ்முல் அஃளம்” என்று திட்டமாகச் சொல்லியுள்ளார்கள். இவ்விடயத்தில் கருத்து வேறுபாடு இருப்பதினால்தான் அவ்வாறு அவர்கள் சொன்னார்கள். இதுவே எனது தனிப்பட்ட கருத்துமாகும்.

அல்லாஹ் என்பதே “இஸ்முல் அஃளம்” என்று திட்டமாகச் சொன்ன குத்பு நாயகம் அதன் பின்னால் இன்னொரு வசனமும் கூறியுள்ளார்கள். அதையும் இதோடு சேர்த்து முழுமையாக எழுதுகிறேன்.

اِسْمُ اللهِ الْاَعْظَمُ هُوَ اللهُ ، وَاِنَّمَا يُسْتَجَابُ لَكَ اِذَا قُلْتَ اللهْ، وَلَيْسَ فِيْ قَلْبِكَ غَيْرُهُ (قلائد الجواهر، ص – 80)

அல்லாஹ் என்ற திரு நாமமே “இஸ்முல் அஃளம்” ஆகும். நீ அல்லாஹ் என்று சொன்னாலும் கூட அவனல்லாதது உனது உள்ளத்தில் இல்லையென்றால் மட்டும்தான் உனக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள்.

இதன் விபரம் அடுத்து பதிவுகளில் எழுதப்படும்.

இறைவனுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன. அவற்றில் “அல்லாஹ்” என்ற திரு நாமம் அடங்காது. இது தவிரவே 99 திரு நாமங்கள் உள்ளன. “அல்லாஹ்” என்ற திரு நாமம் மட்டுமே اِسْمُ الذاتِ – தாத்தின் பெயர் எனப்படும். ஏனைய 99 திருநாமங்களும் اَسْمَاءُ الصِّفَاتِ – என்று சொல்லப்படும். அதாவது தன்மைகளைக் கருத்திற் கொண்ட திரு நாமங்களாகும். உதாரணமாக رَحْمَانْ- றஹ்மான், رَزَّاقْ – றஸ்ஸாக், هَادِي – ஹாதீ என்பன போன்று. இவ்வடிப்படையில் “அல்லாஹ்” என்ற திரு நாமம் اِسْمُ الْاَسْمَاءِ திரு நமங்களின் திரு நாமம் என்று சொல்லப்படும்.

அல்லாஹ் என்ற சொல் இறைவன் என்று மொழியாக்கம் செய்யப்பட்டாலும் கூட அது 100 வீதம் அச்சொல்லுக்குரிய மொழியாக்கமல்ல. “கோட்” (God) என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், தமிழில் இறைவன் – கடவுள் என்று சொன்னாலும் கூட இவை அல்லாஹ் என்ற அறபு மொழிச் சொல்லின் தமிழாக்கம் அல்ல. மேற்கண்ட மொழிகளில் சொல்லப்படுவது படைத்தவனை – மூலவனை – முதலவனை பொதுவாக குறிக்கும் சொற்களேயன்றி அல்லாஹ் என்ற சொல்லின் பொருள் என்று கொள்ள முடியாது.

அல்லாஹ் என்ற சொல் ஓர் அற்புதமான சொல். அச் சொல்லின் பிறப்பிடம் எதுவென்று ஆய்வு செய்தால் ஆய்வாளர்களே அசந்து போவார்கள். செய்வதறியாதும், சொல்வதறியாதும் தடுமாறிவிடுவார்கள். பெயருக்கே இப்படியொரு நிலையென்றால் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அந்த மெய்ப் பொருளின் நிலையை என்னென்பது?!

இதனாலன்றோ அல்லாஹ்வின் படைப்புகளில் மிகச் சிறந்தவர்களும், அவர்களில் மிகவும் அறிஞருமான அண்ணல் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ யா அல்லாஹ்! உன்னை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அறியவில்லை என்று சொன்னார்கள் போலும். இதனாலன்றோ பெருமானின் கலீபா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் اَلْعَجْزُ عَنْ اِدْرَاكِهِ اِدْرَاكٌ என்றும், اَلْعَجْزُ عَنْ دَرْكِهِ دَرْكٌ என்றும் சொன்னார்கள் போலும். இவ்விரு வசனங்களுக்கும் பொருள் ஒன்றுதான். அல்லாஹ் என்ற மெய்ப் பொருளை – அவனின் “தாத்”தை எட்டிக் கொள்ள முடியாமற் போவதே அதை எட்டிக் கொள்வதாகும் என்பதாகும். அதாவது அந்த “தாத்”தை அறிந்து கொள்ள எந்த ஒரு நபிய்யாலும், எந்த ஒரு வலிய்யாலும் முடியாதென்பதே ஞான மகான்களின் முடிவாகும்.

இன்று விஞ்ஞானிகள், நம்ப முடியாத பல அற்புதமான கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடித்தாலும், மெய் ஞானிகள் வியக்கத்தக்க பல தத்துவங்களை கண்டு பிடித்தாலும் அந்த மெய்ப் பொருளின் “தாத்”தை கண்டு பிடிக்கவே முடியாது. ஒவ்வொருவரும் அவரவரால் முடிந்த வரை அது பற்றி அறிந்து கொள்ளலாமேயன்றி அதை முழுமையாக சூழ்ந்தறிய எவராலும் முடியாது. முடியாதென்பதன் கருத்து அது அசாத்தியம் என்பதேயாகும்.

ஏனெனில் விஞ்ஞானி அதைக் கண்டு பிடிப்பதாயினும், மெய் ஞானி அதைக் கண்டு பிடிப்பதாயினும் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் சிருட்டிகளே! படைப்புகளே! சிருட்டி கண்டு பிடித்து விட்டால் அது غَالِبْ – மிகைத்ததாக ஆகி அல்லாஹ் “தாத்” مَغْلُوْب மிகைக்கப்பட்டதாக ஆகிவிடும். இது அசாத்தியமானதும், தத்துவத்திற்கு முரணானதுமாகும்.

وَاللهُ هُوَ الْغَالِبُ، فَلَا يَغْلِبُهُ شَيْئٌ، وَهَذِهِ هِيَ الْحَقِيْقَةُ وَالْعَقِيْدَةُ السَّلِيْمَةُ

நான் இவ்வாறு சொல்வதால் – அதாவது அல்லாஹ்வின் “தாத்”தை அறிய முடியாதென்று சொல்வதால் அவனின் அல்லாஹ் என்ற திருநாமத்தை அறிய முடியாதென்று கருத்து வந்து விடாது. அதை அறிய முடியும்.

“இஸ்முல் அஃளம்” எது என்பதை அல்லாஹ் மறைத்துள்ளான். அவன் மறைத்தது அவனுக்கு அடியார் மீதுள்ள அன்பினால்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் மறைத்தான்? என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நடத்தினால் மறைத்ததிலுள்ள மர்மம் தெளிவாகும்.

ஒரு கணவன் தனது மனைவியை, அல்லது ஒரு காதலன் தனது காதலியை அழைக்கும் போது உடனே அவள் அவன் முன்னால் வந்து நிற்பது ஒரு வகையில் அவனுக்கு அது மகிழ்ச்சிதான்.

ஆயினும் அவன் அழைக்கும் போது அவள் உடனே வராமல் எங்காவது ஓர் இடத்தில் மறைந்து கொண்டு தானிருக்கும் இடத்தை அவன் தேடியலைந்து கண்டு பிடிக்க வேண்டுமென்பதில் தனக்குள்ள ஒரு சிற்றின்ப உணர்வைக் கருத்திற் கொண்டு திசையறிய முடியாத வகையில் ஒரு குரல் கொடுத்து அவனை அலையச் செய்த பின்னர் தன்னைக் காட்டிக் கொள்ளும் வேளை அவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சிற்றின்ப மகிழ்வுக்கு எல்லையில்லாமற் போய்விடுமல்லவா?

இதே போல், இதே பாணியில் தனது வலுப்பமிகு திருநாமத்தை மறைத்து வைத்து அடியானுடன் செல்லம் விளையாடுகிறான் இறைவன். அவன் தனது வலுப்பமிகு திருநாமத்தை பகிரங்கமாகவும், தெளிவாகவும் கூறாமல் மறைத்ததிலுள்ள இரகசியம் புரிகிறதல்லவா?

مَقَامُ الْقُرْبِ – நெருங்கிய நிலையில் வார்த்தைப் பிரயோகங்களும், கேள்வி பதில்களும் வித்தியாசமானதாகவே இருக்கும். இந்த “மகாமை” مَقَامُ التَدَلُّلْ என்றும் ஸூபீ மகான்கள் குறிப்பிடுவார்கள். இதற்குப் பொருள் கூறுவதாயின் கொஞ்சிக் குலாவும் “மகாம்” என்று கூறலாம்.

இதை இன்னும் சற்றுத் தெளிவாக நான் சொல்லவும் வேண்டும், காதலர்கள் விளங்கவும் வேண்டும் என்பதற்காக திருமறையில் ஓர் ஆதாரம்.

நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் கையில் ஒரு “அஸா” கோல் வைத்திருப்பது வழக்கம். அவர்கள் கையில் கோல் எடுத்த காலத்திலிருந்து அவர்களின் கையிலுள்ளது அவர்களின் கோல் என்பது அல்லாஹ்வுக்கு நன்றாகத் தெரிந்ததேயாகும். தனக்குத் தெரிந்த ஒன்று பற்றி அவன் கேட்கிறானென்றால் அந்தக் கேள்வி தெரிந்து கொள்வதற்காக கேட்ட கேள்வியல்ல என்பது புத்தியுள்ள அனைவரும் அறிந்த ஒன்றே.

உண்மை இவ்வாறிருக்கும் நிலையில் وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى – மூஸாவே உங்கள் வலக்கரத்தில் இருப்பது என்ன? என்று கேட்டான். அல்லாஹ் அல்லாத வேறு யாராவது அவ்வாறு கேட்டிருந்தால் அறியாமல் கேட்கப்பட்ட கேள்வியென்று கொள்ளலாம். இது சிந்திக்க வேண்டிய இடமாகும்.

அதற்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேள்விக்குரிய பதிலை மட்டும் கூறாமல் தொடர்ந்து பல பதில்களை அடுக்கிக் கொண்டே போனார்கள்.

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَى

இது எனது கோல், இதைக் கொண்டு நிலத்தில் ஊன்றிக் கொண்டு நடப்பேன் எனது ஆடுகளுக்கு இலைகளைத் தட்டியும் கொடுப்பேன், இன்னும் இதில் எனக்கு பல பலன்களும் உள்ளன என்று பதில் கூறினார்கள்.

அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டது ஒரு கேள்விதான். ஆனால் நபீ மூஸாவோ கேட்டதற்கும் பதில் கூறி கேட்காத மூன்று கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளார்கள். “ஹக்”தஆலாவின் சமூகத்தில் எவரும் வளவளவென்று பேசுவது இறை சந்நிதானத்திற்கு பொருத்தமற்றதாகும். ஒவ்வொருவரினதும் தகுதிக்கேற்றவாறு சந்நிதானம் பேணப்படுவதே ஒழுக்கமாகும்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒருவரிடம் உனது பெயர் என்ன என்று கேட்டால் கேள்விக்கு மட்டும் தான் பதில் கூற வேண்டும். அவன் தனது பெயரையும், அவனின் பத்து தலைமுறையிலுள்ளவர்களினது பெயர்களையும் அடுக்கிக் கொண்டு சொல்வது சந்நிதானத்திற்கு பொருத்தமற்றதாகும். நமக்குத் தெரிந்த இச்சிறிய விடயம் நபீ மூஸா அவர்களுக்குத் தெரியாமற் போனதேன்? சிந்திப்போம். விடைகிடைக்கும்.

குர்புடைய மகாமில் செல்லக்கதைகள், சம்பாஷணைகளும் நடைபெறும், இது சிற்றின்பத்திலும் உண்டு. பேரின்பத்திலும் உண்டு.

இதனால்தான் وَمَا تِلْكَ என்ற استفهام கேள்விக்கு اِسْتِفْهَامُ اُنْسَةٍ என்றும், اِسْتِفْهَامُ اِيْنَاسٍ என்றும் ஸூபீ மகான்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறு பிள்ளைத் தனமாகவோ, “டீசன்ட்” (Decent) இல்லாமலோ நடக்கிவில்லை. وَمَا تِلْكَ என்ற கேள்வியுடன் அல்லாஹ் ஏன் கேட்கிறான் என்பதை ஞானம் மூலம் தெரிந்து கொண்ட நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கேற்ற பாணியில் பதில் கூறினார்கள். இதில் தவறுமில்லை. இது “டீசன்ட்” இல்லாத உரையாடலுமில்லை.

قال محمد بن إدريسَ الشافعيّ ” لَوْ لَمْ يُوْقِنْ مُحَمَّدُ بْنُ اِدْرِيْسَ الشافعيُّ بِاَنَّهُ يَرَى رَبَّهُ فِي الْمِيْعَادِ لَمَا عَبَدَهُ”

முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஆகிய நான் மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்று நம்பினதால்தான் அவனை வணங்கினேன். இன்றேல் அவனை வணங்கியிருக்க மாட்டேன் என்று கூறியது இவ்வடிப்படையில்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றேல் இப்பேச்சு “குப்ர்” இறை மறுப்பை ஏற்படுத்தும் பேச்சுப் போன்றதாகும். ஏனெனில் மறுமையில் காணமுடியுமென்றிருந்தாலும், முடியாதென்றிருந்தாலும் அவன் வணங்கப்பட வேண்டியவனேயாவான்.

இமாம் அவர்களின் இப்பேச்சுத் தொடர்பாக எழுதிய குர்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ழவ்உஸ் ஸிறாஜ்” என்ற நூலில் هَذَا مِنْ كَلَامِ الْمُتَدَلِّلِيْنَ இது கொஞ்சிக் குலாவும் கட்டத்தின் பேச்சாகும் என்று கூறியுள்ளார்கள்.

அந்தகர்களால் குயிலின் வாய்க்கு போடப்பட்ட விலங்கு உடைக்கப்பட்டால் குயிலின் குரல் வங்காள விரிகுடாவிற்கு அப்பாலும் கேட்கும்.

قال قطب الواصلين عبد العزيز الدبّاغ رضي الله عنه، ‘ ولو وضَعَ سيّد الوجود صلّى الله عليه وسلّم لِلمعاني التي حصلت له من مُشاهداتِه الّتي لا تُطاقُ أسماءً لَذَابَ كلُّ من سمعها، ولكنّه سبحانه وتعالى لطيفٌ بعباده، والله أعلم،
قلتُ وإيّاك أن تَظُنَّ أنّ هذا الكلام فيه مخالفةٌ للعقيدة، وهي أنّ الأسماء الحُسنى قديمةٌ، فإنّ المراد بِقِدَمِها قِدَمُ معانيها، لا الفاظُها الحادثةُ، لأنّ كلّ لفظٍ عرضٌ، وكلُّ عرضٍ فهو حادثٌ،

குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.

(“ஸெய்யிதுல் வுஜூத்” நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு கிடைத்த “முஷாஹதா”வுக்குப் பொருத்தமான பெயர் சொல்லியிருந்தார்களாயின் அப் பெயரைச் செவியேற்பவர்கள். அனைவரும் கரைந்து விடுவார்கள், உருகிவிடுவார்கள். அல்லாஹ் தனது அடியார்கள் மீது இரக்கமுள்ளவனாவான்)

“அல்லாஹ்” பூர்வீகமானவன், அதேபோல் அவனின் திரு நாமங்களும் பூர்வீகமானவையாகும். அவனின் “தாத்” حَادِثٌ – புதிதானதல்ல. அதேபோல் அவனின் திரு நாமங்களும் புதிதானவையல்ல. இந்நிலையில் நபீமார்களே அவனுக்குப் பெயர் சொன்னார்கள் என்பது “ஷரீஆ”வுக்கு – “அகீதா” கொள்கைக்கு முரணாகாதா? என்று நீ சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் அவனின் திரு நாமங்கள் பூர்வீகமானதென்பது கருத்தைப் பொறுத்ததேயன்றி சொல்லைப் பொறுத்ததல்ல. “சொல்” என்பது عَرَضٌ – ஆதேயமாகும். ஆதேயமான அனைத்தும் حادث புதியனவேயன்றி قديم பூர்வீகமானவையல்ல. ஆகையால் இந்தக் கருத்து “அகீதா”வுக்கு முரணானதல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
وقال السيّد قطب الواصلين عبد العزيز الدبّاغ رضي الله عنه فى اسم الله العظيم الأعظم، أنّه كمال المأة، وليس من التسعة والتّسعين، وإنّ كثيرا من معانيه فى الأسماء التسعة والتّسعين، وأنّه هو ذكرُ الذّات لا ذكر اللّسان فتَسْمَعَه، يخرج من الذات كَطَنِيْنِ النُّحَّاس الصِّفر، وهو يثقُلُ على الذّات، لا تُطيق الذّاتُ ذكرَه إلّا مرّةً أو مرّتين فى اليوم، فقلت وَلِمَ؟ فقال رضي الله عنه لأنّه لا يكون إلّا مع المشاهدة التّامّة، وذلك ثقيلٌ على هذه الذات، وإذا ذكرَتْه الذّاتُ فَقَد العالم كلّه هيبةً وجلالا ومَخَافةً،
وقال رضي الله عنه وكان فى السيّد عيسى بن مريم على نبيّنا وعليه الصلاة والسلام قُوَّةٌ على ذكره، وكان يذكره فى اليوم أربع عشرةَ مرّةً، والله أعلم،
குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்” என்ற திரு நாமம் தொடர்பாக கூறுகையில் அது 99 திரு நாமங்களில் ஒன்றல்ல. அது நூறாவது திருநாமம் என்று கூறியுள்ளார்கள். இக்குறிப்பு முன்னும் பதிவு செய்யப்பட்டதே.

அல்லாஹ் என்ற திரு நாமம் “தாத்”தின் திரு நாமமேயன்றி “லிஸான்” நாவின் திரு நாமமல்ல. ஆகையால் அதைக் கேட்க முடியாது. கேட்டாலும் கேட்பவனால் தாங்க முடியாது.

ஒரு வெங்கல அண்டாவில் – கிடாரத்தில் ஓர் இடத்தில் இரும்புக் கம்பியால் அடித்தால் அந்த அண்டாவின் முழுப்பகுதியிலிருந்தும் ஒலி எழும்புவது போன்றதாக அது இருக்கும். இதை மனிதனின் “தாத்” உடல் தாங்காது. ஒரு நாளில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் மட்டுமே அந்த திரு நாமத்தை மொழிவதற்கு மனித உடல் சக்தி பெற்றதாகும். அது கூடத் தகுதி பெற்றவர்களுக்கே.

இவ்வாறு அவர்கள் சொன்ன போது அதற்கான காரணம் என்ன? என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், பூரணமான “முஷாஹதா”வின் நிலை அவ்வாறுதான். அந்த நிலையில் “தாத்” அவ்வாறு “திக்ர்” செய்தால் – அல்லாஹ் என்று சொன்னால் செய்தவன் பயத்தாலும், ஒரு வகை அச்சத்தாலும், ஜலாலிய்யத்தாலும் உலகத்தையே இழந்துவிடுவான்.

மேலும் குத்புல் வாஸிலீன் அத்தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாற் கூட ஒரு நாளில் 14 தரம் மட்டுமே “அல்லாஹ்” என்று உரிய முறையில் “திக்ர்” செய்ய முடியுமானதாக இருந்தது என்றும் கூறினார்கள்.

இறைவனின் திரு நாமங்களில் அல்லாஹ் என்ற திரு நாமம் மட்டும் அவனுடைய “தாத்”தின் திரு நாமமாயிருப்பதால் ஒரு “காமில்” ஒலித்தனத்தின் “மர்தபா” இடத்தை அடைந்த ஞானகுருவிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்ற ஒரு “ஸாலிக்” இறைவழி நடப்பவன் அல்லாஹ் என்ற திரு நாமத்தை பக்திப் பரவச நிலையில் நாவால் சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்து வரும் போது اَلْعِنَايَةُ الرَّبَّانِيَّةُ என்ற இறையருளும் அதற்கு உந்து சக்தியாக அமையும் போது ஹக்குடைய காட்சி நிலை ஏற்படும். தொடக்கத்தில் மின்னல் போல் தென்படும் காட்சி நாளடைவில் வலுப் பெற்று நாவு இஸ்தம்பித்து அவனுடைய “தாத்” உடல் “திக்ர்” செய்யத் தொடங்கிவிடும். நாளடைவில் இந்நிலையும் வலுப்பெற்று அவனின் உடல் “நானே மெய்ப்பொருள்” என்று சொல்லும் நிலையை அடைந்துவிடும்.

இதே கருத்தை உள்வாங்கி ஒரு ஞான மகான் பின்வருமாறு பாடியுள்ளார்கள்.

தன்னை மறந்து தவத்திலிருக்கையில்
மின்னலைப் போலெங்கும் தெரிந்திடுமே
சொல்லரிதாகிய சுகவாரியானதில்
சொக்கியிருந்திடுவாய் மகனே!

ஒருவன் கோடிக்கணக்கில் “திக்ர்” செய்தாலும் தன்னை மறந்து செய்யாதவரை காட்சிக்கும், அவனுக்கும் சம்பந்தமில்லாது போய்விடும்.

அல்லாஹ் தனது அடியானுக்கு உன்னை மறந்த நிலையில் என்னை நினைத்துக் கொள் என்றுதான் கூறியுள்ளான். وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ நீ மறந்தால் உனது “றப்பு” இரட்சகனை நினைத்துக் கொள் என்று திருமறையில் கூறியுள்ளான்.

இவ்வசனத்தில் ஒரு நுட்பம் உண்டு. அதை அறிந்து கொள்ள வேண்டும். நான் இப்போது சொல்லப் போகின்ற விளக்கம் உலமாஉகளுக்கும், علم النحو அறபு மொழியிலக்கணம் படிக்கின்ற மாணவர்களுக்கும் எளிதாக விளங்கும். மற்றவர்கள் முயற்சி செய்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

அதாவது இத்திருவசனத்தில் “நஸீத்த” نَسِيْتَ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் நீ மறந்தாய் என்று வரும். இச் சொல்லுக்கு முன்னால் إِذَا என்று ஒரு சொல் வந்துள்ளது. இரண்டையும் சேர்த்தால் நீ மறந்தால் என்ற பொருள் வரும். முழு வசனத்திற்கும் “உனது இறைவனை நீ நினைத்து கொள். நீ மறந்தால்” என்று மட்டுமே பொருள் வரும். நீ எதை மறந்தால் என்ற விபரம் கூறப்படவில்லை.

அதாவது “நஸீத்த” என்ற சொல்லுக்கு மொழியிலக்கணத்தின்படி ஒரு மப்ஊல் – مفعول தேவை. அது திருவசனத்தில் கூறப்படவில்லை. அது எவ்வாறிருக்கும் என்பதில் சிலர் ஒரு கருத்தும், வேறு சிலர் அவர்களின் கருத்திற்கு எதிரான கருத்தும் கூறுகிறார்கள்.

சிலர் அதன் “மப்ஊல்” “றப்பக” رَبَّكَ உனது இறைவனை என்றிருக்கும் என்று கூறுகிறார்கள். இவர்களின் கூற்றின்படி “உனது இறைவனை நீ மறந்தால் நீ அவனை நினைத்துக் கொள்” என்று கருத்து வரும். وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَهُ “ஹூ” என்பது “றப்பக” என்பதையே குறிக்கும்.

இவ்விடம் மிக ஆழமாக ஆராய வேண்டிய ஓர் இடமாகும். ஏனெனில் மறந்த ஒன்று மறந்ததுதான். அதை நினைக்க முடியாது. நெஞ்சில் பதிவாகி மறக்காமலும், மறையாமலும் உள்ள ஒன்றையே நினைக்க முடியும். நெஞ்சை – மனதை விட்டும் போன ஒன்றை நினைத்தல் என்பது அசாத்தியமானதாகும்.

وأما الشيئ الّذي نُسي وزال عن الذّهن فلا يتصوّر ذكره، بل هو محال، ولكنّ الشّيئ الّذي لم يُنس ولم يزل عن الذّهن فمُمْكِنٌ تصوُّرُه وذكرُه،

ஆகவே, திரு வசனத்தில் வந்துள்ள “நஸீத்த” என்ற சொல்லுக்கு “றப்பக” என்ற சொல்லை அல்லது அதைக்குறிக்கும் “ஹூ” என்பதை “மப்ஊல்” مفعول என்று கொள்வது பொருத்தமற்றதாகிவிடும். ஆகையால் எதை மப்ஊலாக கொடுப்பது என்று ஆராய்வோம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments