Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்காத்தான்குடியைக் "காத்து நிற்கும்" ஸுபிஸ மரபு

காத்தான்குடியைக் “காத்து நிற்கும்” ஸுபிஸ மரபு

இஸ்லாத்தின் முக்கிய தியான வழிபாடும். கிழக்கிலங்கை மக்களின் பாரம்பரிய மரபுகளில் ஒன்றாகவும் காணப்படுவது சூபிஸ மரபாகும், இம் மரபைத் தழுவிய பல சிந்தனைப் பள்ளிகள்(School of Thought) தோற்றம் பெற்று உள்ளன அந்த வகையில் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் அமைந்துள்ள சூபிஸ மரபுசார் இடமான பத்றியா பள்ளிவாசலை அடிப்படையாகக்கொண்ட காத்தான்குடி அப்துல் ரவூப் மிஸ்பாஹி அவர்களது ஆன்மிக தளத்திற்கு அவர்களின் அழைப்பின் பேரில் நண்பர்களான Arzath Faleel Rushdie Nazeer அவர்களுடன் விஜயம் செய்ய கிடைத்தது அது பற்றிய பதிவே இதுவாகும்

#அறிமுகம்..

இலங்கையின் இன்றைய சூழலில் காத்தான்குடியின் நவீன போக்கு , மற்றும் சமய சாயல்கள், பண்பாடுகள் பற்றி பல்வேறு கருத்தாடல்கள் ஆட்சியாளர்கள் மற்றும் தெற்கின் பெரும்பான்மை அடிப்படைவாதிகளால் அச்சத்துடன் எழுப்பப்படுகின்ற கேள்விகளும் அதற்கு காத்தான்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் மக்களின் எதிர் நீச்சலான பதில்கள், இக்கட்டான நிலை. என்பவற்றிற்கு மத்தியில் காத்தான்குடியில் முஸ்லிம் மரபுசார் பண்பாடுகள் இன்னும் நிலைத்திருக்கின்றன என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மட்டுமல்ல இது தென்னிலங்கையில் அச்சத்தில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் ஒரு ஆறுதலான செய்தியாகும்

#அப்துல்_றஊப் #மிஸ்பாஹி_அவர்கள்

காத்தான்குடியில் அமைந்துள்ள பத்ரிய்யா பள்ளிவாசலும் அதனோடு இணைந்த மரபுசார் விடயங்களும் சிறப்பாக நடைபெற குறித்த நிலையத்தின் வழிகாட்டி யாக அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களே பிரதான காரணமாக உள்ளார்

76 வயதை உடைய அப்துல் றஊப் மிஸ்பாஹி அவர்கள் துருக்கிய பரம்பரையில் பிறந்த சன்மார்க்க அறிஞர் மட்டுமல்ல அவரது தந்தை ஹாஜி அப்துல் ஜவாத் ஆலிம் அவர்களும் ஒரு மார்க்க அறிஞராக திகழ்ந்து குறித்த பிரதேசத்தில் பல்வேறு பணிகளை புரிந்தவராக காணப்படுகின்றார்

அந்த வகையில் அப்தூர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஒரு சன்மார்க்க அறிஞராகவும் இறையியல் சார் நிபுணராகவும் விளங்குகின்றார் அவரது சன்மார்க்க அறிவுடன் கூடிய இறையியல் சார் கருத்துக்கள் இஸ்லாமிய நம்பிக்கை வழிபாட்டில் ஒரு புதியதொரு உத்வேகத்தையும் புதியதொரு சிந்தனைப் பாதையையும் உருவாக்கி இருக்கின்றது
இது பல விமர்சனங்களை கொண்டதாக நோக்கப்பட்டாலும் அதில் வரவேற்கத்தக்க பல்வேறு அறிவுசார் விடயங்கள் உள்ளன என்று குறிப்பிடலாம் ,

மார்க்க மற்றும் மானிட வாழ்வியல் தொடர்பான விடயங்களில் மிகவும் வெளிப்படையாகவும். நகைச்சுவை யாகவும் பேசும் பண்பைக் கொண்ட அதே வேளையில் நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான சீடர்களைக் கவரும் பேச்சாற்றலைக் கொண்டவராகவும் உள்ளார்…உலமாக்கள். மற்றும் சீடர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பதுடன் மிகவும் கண்ணியமாகவும் பணி புரிகின்றனர்…

#சமூக_நலன்_சார்_சேவைகள்

பத்ரியா பள்ளிவாசலை அடிப்படையாகக் கொண்ட மத்திய தளத்தில் பல்வேறு சமூக நலன் சார் மற்றும் ஆன்மீக அமைப்புக்களும் அமைந்துள்ளன அந்த வகையில் ஜவாத் ஆலிம் நம்பிக்கை நிதியம் , பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் ,ஜாமியதுல் றப்ப்னியா அறபுக் கலாசாலை ,
அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞான பேரவை, கரீப் நவாஸ் பவுண்டேஷன் போன்ற இன்னும் பல அமைப்புகள் இந்த இடத்தில் இயங்கி வருகின்றன

அதேபோல் குறித்த இடத்தில் புதிய ஜும்மா பள்ளிவாசல் மிகவும் பிரமாண்டமான ஓர் வடிவமைப்பில் கட்டப்பட்டு வருகின்றது குறித்த பள்ளிவாசல் தொழுகைக்கான இடம் மற்றும் தியான மண்டபம், கலாசார மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது

இது மொரோக்கோ பாரசீகம் , துருக்கி, மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் கட்டிட சாயல் அமைப்புகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது இதில் உள்ள நல்ல வடிவான மினாரா பூமியில் இருந்து 215 அடி உயரம் கொண்டதாக கட்டுப்படுவதுடன் இது எதிர்கால இலங்கையின் ஸுபித்துவ மரபுசார் மத்திய தளமாக அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் குறித்த கட்டத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது
குறித்த கட்டிடத்தில் நூதனசாலை அரபி மதரஸா மற்றும் தியானம் நிகழ்வதற்கான மண்டபங்கள் என்பன உட்பட பல்வேறு விடயங்கள் தனித்துவமாக உள்ளடக்கப்பட்டுள்ளன

#இறையியல்_சார் (தியோலஜி Theology) #கருத்துக்கள்

இஸ்லாமிய அறிஞர்களிடையே குறிப்பாக இலங்கையில் சமய ரீதியான விடயங்கள் ஆழமாகப் பேசப்பட்டாலும் இறையியல் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பது குறைவானதாகவே காணப்படுகிறது அந்த வகையில்” இறையியல் என்பது இறைவனது தன்மைகள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் (The study of the nature of God and religious belief ) தொடர்பானதாகும். இவ்வாறான கருத்துக்களை மார்க்க அறிஞர்கள் முன்வைக்க தயங்குகின்ற வேளையில் அப்துர் ரஊப் மிஸ்பாஹி போன்றோர் இவ்வாறான கருத்துக்களுக்கு ஆழமான ஸுபிஸ பார்வை வழங்குவது இங்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது

மட்டுமல்ல பிலோசபி, கருத்தியல் மற்றும் ஆய்வு ,சமயங்களின் ஒப்பீடு தொடர்பான பாடப்பரப்பு விடயங்களில் ஆய்வுகளை நிகழ்த்துபவர்களுக்கான புதிய கருத்துக்களும் அவற்றுக்கான வியாக்கியானங்களும் இதில் நிறைந்து காணப்படுகின்றன

அப்துல் ரவூப் மிஸ்பாஹி அவர்கள் தனது ஆரம்ப கல்வியை அது மதரஸதுல் றப்பானியா.பாக்கியதுல் ஸாலிஹாத். அதுபோன்ற பல பிரபல மதரஸாக்களில் கற்றிருந்த அதேவேளை தனது ஆன்மீக குருக்களாக பல்வேறு பெரியவர்களிடம் தனது ஆன்மீக பணிக்கான ஆசிர்வாதங்களைப் பெற்று இருக்கின்றார்

#மார்க்க_கொள்கை

குறித்த நிலையத்தில் சமயக் கொள்கையாக சுன்னத்வல் ஜமாஅத் என்ற பிரதான கொள்கை பின்பற்றப்படும் அதேவேளை “அல் அஸ்அரியா” என்ற வழிமுறையை பின்பற்றும் இடமாகவும் காணப்படுகின்றது.. இங்கு காதிரியா, மற்றும் நக் ஷபந்தியா தரீக்காக்களுக்கு அதிக முன்னுரிமையும் வழங்கப்படுகிறது

குறித்த அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் இவை தொடர்பாக தமிழ் மற்றும் அரபு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவராகவும் காணப்படுகின்றார் இவரது அறிவையும், ஆன்மீக உயர்வையும் மதித்து “ஷம்சுல் உலமா”ஈழத்தின் சொற்கொண்டல் , ஞானபிதா ,ஜவ்வ்ருல் அமல்….போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டிருகின்றன

குறித்த இடத்தில் அல்ஹாஜ் ஜவாத் ஆலிம் அவர்களின் நினைவாக நம்பிக்கை நிதியம் பத்ரிய்யாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் அறபுக் கலாசாலை போன்றன காணப்படுகின்றன

இங்கு சிறந்த அராபிய மற்றும் தமிழ் நூல்களைக் கொண்ட ஒரு நூலகம் காணப்படுகின்றது மட்டுமல்ல இங்கு கற்கும் மாணவர்களுக்கான விரிவுரையாளர்கள் அல் அஸ்ஹர். மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்ற சிறந்த விரிவுரையாளர்களாகவும் காணப்படுகின்றனர்.. அத்தோடு சூபிஸ மரபுசார் பண்பாட்டு நிகழ்வுகள்க பல தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன..அவை தமிழ் மற்றும் அரபு மொழிகளில் இடம்பெறுகின்ற மை இன்னும் சிறப்பு.

அந்த வகையில் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களினால் காத்தான்குடியில் நடத்தப்பட்டு வரும் பள்ளிவாசல், மற்றும் நடைமுறைகள் தொடர்பான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் குறித்த இடமும் குறித்த அமைப்பும் இலங்கையின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சார் விடயங்களில் முஸ்லிம்களின் செயற்பாடு , இன ஒற்றுமை சார் நடவடிக்கைகள் என்பவற்றை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது

#நமக்கான_செய்தி..

அதேவேளை இன்றைய காத்தான்குடி “அராபிய பாணியிலான முஸ்லிம் அடிப்படைவாதிகளை அதிகமாக கொண்ட ஊர்” என்ற தென்னிலங்கை இனவாதிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டை மறுப்பதற்கான ஆதாரமாகவும், குறித்த ஊரில் இலங்கைக்கே உரித்தான புராதன மக்கள் சார் முஸ்லிம் மரபுகள் இன்னும் உயிர் வாழுகின்றன என்பதற்கான தெளிவான செய்தியாகவும் இந்த பத்றியா மத்திய நிலையமும் அங்கு இடம்பெற்று வரும் நிகழ்வுகளும் அமைவதுடன்

அதுவே காத்தான்குடி மக்களின் இருப்புக்கான ஆதாரமாக மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களின் ஸுபிஸ மரபை பாதுகாப்பதற்கான ஒரு குழுவினர் உயிர்ப்புடன் இன்னும் வாழும் இடமாகவும் காணப்படுகிறது என்பதை சமய இயக்க வேறுபாடுகளூக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது குறித்த இடம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அறிய முயல்வோர் அங்கு விஜயம் செய்வது சாலப் பொருத்தம்.

அந்த வகையில் முரண்பாடுகளைக் களைந்து அனைவரது சமய, கலாசார. பண்பாட்டு உளவியல் மற்றும் நடத்தை சார் விடயங்களை மதித்து நடக்கும் தன்மை இன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல . காத்தான்குடிக்கும் பொருத்தமானதாகவும் அமையும்.

(சமய கொள்கை சார் வீணான.பின்னூட்டங்கள் தவிர்க்கப்படுவது சிறந்தது.)

முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
25;08:2020

RELATED ARTICLES

Most Popular

Recent Comments