Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மஜ்தூப், மஜானீன்களுக்கிடையில் உள்ள வேறுபாடு

மஜ்தூப், மஜானீன்களுக்கிடையில் உள்ள வேறுபாடு


(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

وما_الفرق_بين_المجاذيب_والمجانين؟

إنّ الفرق بينهما هو أنّ المجانين سببُ جنونهم فسادُ المِزاجِ عن أمرٍ كونيٍّ، من غِذاءِ أو جُوع أو فَزَع أو نحو ذلك، وأمّا المجاذيبُ فسببُ ذهابِ عقولهم التَّجلّى الإلهيُّ الّذي جائهم على بغتةٍ فذهب بعقولهم، فعُقُولهم مخبوئةٌ عند الحقّ تعالى مُنعمةٌ بشهوده، عاكفةٌ بحضرته مُتَنَزِّهةٌ فى جماله، فهم أصحابُ عقولٍ بلا عُقولٍ، وسُمِّيَ هؤلاء عقلاء المجانين،
(اليواقيت، ج 1 ، ص 136 )


“மஜ்தூப்” என்ற சொல் இறைஞான வழி நடப்பவர்களினதும், ஸூபீ மகான்களினதும் நாவுகளில் தினமும் நடமாடும் சொல்லாகும். இச்சொல்லின் பன்மை “மஜாதீப்” என்று வரும். “புகஹாஉ” என்னும் சட்டமேதைகளுக்கும், “ஷரீஆ”வோடு மட்டும் நின்று கொள்பவர்களுக்கும் இச்சொல்லுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

“மஜ்னூன்” என்ற இச் சொல்லின் பன்மைச் சொல் “மஜானீன்” என்று வரும். இச் சொல் படித்த, படிக்காத அனைவரின் நாவுகளிலும் நடமாடும் சொல்லாகும்.

“மஜ்தூப்” என்ற சொல்லுக்கு இழுக்கப்பட்டவன் என்று பொருள் வரும். “மஜ்னூன்” என்ற சொல்லுக்கு பைத்தியக் காரன் என்று பொருள் வரும்.

“மஜ்தூப்” என்ற சொல் جَذَبَ என்ற சொல்லடியிலுள்ளது. “ஜதப” என்றால் இழுத்தான் என்று பொருள் வரும். “மஜ்தூப்” என்றால் இழுக்கப்பட்டவன் என்று பொருள் வரும்.

அதாவது அல்லாஹ் ஒருவனை தன் பக்கம் சேர்த்துக் கொள்ள விரும்பினால் தூண்டில் மூலம் மீனைக் கொழுகி இழுப்பது போல் அவனின் ஆறு புலன்களையும் தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்வான். அவன் கையிலேயே அவனின் புலன்கள் யாவும் இருக்கும். அப்போது அந்த மனிதனின் அனைத்துப் புலன்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிற்குள்ளாகிவிடும். அந்த மனிதனுக்கு அவனின் சுயவிருப்பத்தின்படி ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமற் போய்விடும்.

அவன் பொது மக்களின் வெளிப்பார்வையில் பைத்தியக்காரன் போன்றவனே! எதிலும் அவனுக்கு اختيار – என்ற சுயவிருப்பம் இருக்காது. சுருங்கச் சொன்னால் அவன் தனது சுய நினைவையே இழந்துவிடுவான். அவனின் “றிமோட்” இறைவனின் கையில் இருக்கும்.

இந்நிலை ஏற்பட்டவர் அதிலிருந்து தெளிவு பெறும் வரை “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணி நடக்கமாட்டார். சுத்தம், சுகாதாரம் என்பதே அவருக்குத் தெரியாது.

இவர் இந்நிலைக்கு ஆளானதற்கான காரணம் وأمّا المجاذيبُ فسببُ ذهابِ عقولهم التَّجلّى الإلهيُّ الّذي جائهم على بغتةٍ فذهب بعقولهم இறைவனின் “தஜல்லீ” எதிர்பாராமல் அவரை ஆட்கொண்டு அவரின் முழுப்புலன்களையும் கவர்ந்து சென்றதேயாகும். فعُقُولهم مخبوئةٌ عند الحقّ تعالى مُنعمةٌ بشهوده، عاكفةٌ بحضـرته مُتَنَزِّهةٌ فى جماله، فهم أصحابُ عقولٍ بلا عُقولٍ، وسُمِّيَ هؤلاء عقلاء المجانين இத்தகையோரின் புத்திகள் அல்லாஹ்விடம் மறைக்கப்பட்டவையும், அவனின் காட்சிகள் பெற்று இன்புற்றிருப்பவையும், அவனின் திருச் சமூகத்தில் பிரியாமல் தரிபட்டிருப்பவையும், அவனின் பேரழகில் சுகம் பெறுபவையுமாகும். இவர்கள் மூளையில்லாத மூளைசாலிகளாவர். இவர்கள் பைத்தியக்காரர்களில் புத்திமான்கள் என்று சொல்லப்படுவார்கள்.

இத்தகையோரை கண்ணியம் செய்ய வேண்டும். இவர்களை ஏசுவதும், அடிப்பதும், பகைப்பதும், புறக்கணிப்பதும் அல்லாஹ்வுடன் போர் செய்வதற்குச் சமமாகும். உதவி செய்ய முடியுமாயின் செய்ய வேண்டும். இன்றேல் உபத்திரம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

இப்படியான ஒரு “மஜ்தூப்” 1970ம் ஆண்டளவில் அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் உலாவிக் கொண்டிருந்தார். நான் அக்கால கட்டத்தில் அங்குள்ள “மன்பஉல் கைறாத்” அறபுக் கல்லூரியில் “உஸ்தாத்” ஆக ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

இவர் பற்றிய விபரங்களைத் திரட்டிய போது இவர் இந்தியா – தமிழ் நாட்டில் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் எப்போது எவ்வாறு வந்தார் என்ற விபரம் அவ்வூர் வாசிகளுக்கே தெரிந்திருக்கவில்லை. அதிக நேரம் அக்கரைப்பற்று பஸ் நிலையம், கடைத்தெருவில் நின்றிருப்பார். எவருடனும் பேசமாட்டார். யாசகம் செய்யவுமாட்டார். விடயம் தெரிந்த ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இவரை பைத்தியக்காரன் என்றே அறிந்திருந்தனர்.

ஒரு நாளிரவு இவர் ஒரு செல்வந்தனுக்குரிய கடையின் முன்பக்கமிருந்த படியொன்றில் உறங்கியிருக்கின்றார். கடைக்காரன் காலையில் வந்தபோது இவர் கடைக்கு முன்னால் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தவன் அவருக்கு அடித்து அவரைத் தூக்கியெறிந்துவிட்டு வயல் காணியைப் பார்த்து வருவதற்காக “றெக்டர்” ஒன்றில் சென்ற போது அது தலை கீழாய் புரண்டு முதலாளி அவ்விடத்திலேயே மரணித்தார். “மஜ்தூப்” மனம் நொந்தால் மரணம் நிச்சயம்.

1970ம் ஆண்டளவில் நான் அக்கரைப்பற்று “மன்பஉல் கைறாத்” அறபுக் கல்லூரியில் ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாளிரவு இந்த மனிதனைக் கனவில் கண்டேன். காலையானதும் அவருக்கு ஏதாவது கொடுப்போம் என்று நூறு ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு அவரைத் தேடி அலைந்தேன். அவரைக் காணவில்லை. தொடராகப் பல மாதங்கள் தேடினேன் காண முடியவில்லை. சுமார் ஐந்து மாதங்களின் பின் மீண்டும் அவரைக் கனவில் கண்டேன். அவர் ஒரு கடிதம் தந்துவிட்டு மறைந்து விட்டார். கடிதத்தைப் பார்த்தேன். அதில் اَلْمَالُ وَالْبَنُوْنَ زِيْنَةُ الْحَيَاةِ الدُّنْيَا என்ற திருவசனம் எழுதப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரை இன்று 14.05.2020வரை காணவில்லை.

قال النّبي صلّى الله عليه وسلّم: جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمَنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ (عوارف المعارف، فى هامش الإحياء: 2 -91 )
அல்லாஹ்வின் “ஜத்பு”களில் ஒரு “ஜத்பு” மனு, ஜின் உடைய வணக்கத்திற்குச் சமமானதாகும் என்று நபீகள் பெருமான் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அவாரிபுல் மஆரிப் – 02-91)

“மஜ்தூப்” நிலையடைந்தவர்களை தர்ஹாக்கள், மலைக்குகைகள், காட்டுப் புறங்களில்தான் அதிகமாக காண முடியும். “மஜ்தூப்” ஆன ஒருவருடன் ஒரு வலீயுடன் நடந்து கொள்வது போல் கண்ணியமாக நடந்து கொள்வது கடமையாகும்.

“மஜ்தூப்” என்பவரும், “மஜ்னூன்” என்பவரும் உடை, நடை, பாவனை, பேச்சு என்பவற்றில் ஒரேமாதிரியாக இருந்தாலும் ஆன்மீகவாதிகளால் மட்டும் அவர்களை இனங்கண்டு கொள்ள முடியும். மற்றவர்களால் எழிதில் புரிந்து கொள்ள முடியாது.

إنّ المجانين سببُ جنونهم فسادُ المِزاجِ عن أمرٍ كونيٍّ، من غِذاءِ أو جُوع أو فَزَع أو نحو ذلك

பைத்தியக் காரர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். சாப்பாடு, பசி, பயம், அதிர்ச்சி போன்ற உலகத்தோடு தொடர்பான ஏதாவதொரு காரணத்தால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதால் ஏற்படுவதே பைத்தியமாகும். ஆகையால் பைத்தியக்காரன் வெளிப்படையான நடவடிக்கைகளில் “மஜ்தூப்” போலிருந்தாலும் அவனை மஜ்தூபின் இடத்தில் வைத்து நோக்க முடியாது. நோக்கவும் கூடாது. (முற்றும்)

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments