(தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பல வகையான வணக்க வழிபாடுகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் கடமையான, கடமையல்லாத வணக்கங்களும் உள்ளன. எந்த வணக்கமாயினும் அதன் பின்னணி ஆன்மீகமாகவே இருக்கும். ஆன்மீகமே இஸ்லாம் மார்க்கத்தின் உயிராகும்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அநேகர் தொழுதாலும், மற்றும் ஏனைய வணக்கங்கள் செய்தாலும் கூட ஆன்மீகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். சுருங்கச் சொன்னால் இன்று உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆன்மீகம் என்றால் என்ன? ஸூபிஸம் என்றால் என்ன? என்ற விபரங்கள் கூடத் தெரியாதவர்களாகவே உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
இஸ்லாம் முஸ்லிம்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு அறிமுகம் செய்த வணக்கங்களில் ஒன்று “இஃதிகாப்” என்ற வணக்கமாகும். இவ்வணக்கம் பற்றி இங்கு எழுதுகிறேன்.
முதலில் இவ்வணக்கம் பற்றி அருள் நபீ நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிய அருள் மொழிகளிற் சிலதைக் குறிப்பிடுகிறேன்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ» (رواه البخاري ومسلم)
عن ابن عبّاس كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ، كَانَ جِبْرِيلُ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ، يَعْرُضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ» (رواه البخاري ومسلم)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ يُعْرَضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي العَامِ الَّذِي قُبِضَ ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا، فَاعْتَكَفَ عِشْرِينَ فِي العَامِ الَّذِي قُبِضَ » (رواه البخاري )
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا اعْتَكَفَ، اَدْنَي إِلَيَّ رَأْسَهُ وهو في المسجد فَأُرَجِّلُهُ، وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ» (رواه البخاري ومسلم)
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ عُمَرَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُنْتُ نَذَرْتُ فِي الجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي المَسْجِدِ الحَرَامِ، قَالَ: «فَأَوْفِ بِنَذْرِكَ» (رواه البخاري ومسلم)
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الفَجْرَ، ثُمَّ دَخَلَ فِي مُعْتَكَفِهِ. (رواه أبو داؤود وابن ماجه)
عَنْ عَائِشَةَ – قَالَ النُّفَيْلِيُّ – قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعودُ بِالْمَرِيضِ، وَهُوَ مُعْتَكِفٌ، فَيَمُرُّ كَمَا هُوَ، فَلَا يُعَرِّجُ ، يَسْأَلُ عَنْهُ، (رواه أبو داؤود وابن ماجه)
ஏழு நபீ மொழிகளின் தமிழாக்கமும், விபரமும்.
ஹதீது ஒன்று – நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் றமழான் மாதத்தின் பிந்தின பத்து நாட்களும் – கடைசிப் பத்து – “வபாத்” ஆகும் வரை “இஃதிகாப்” இருந்துள்ளார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் மனைவியர் “இஃதிகாப்” இருந்துள்ளார்கள் என்று ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ – முஸ்லிம்)
றமழான் பிந்தின பத்து நாட்களும் முந்தின இருபது நாட்களை விட மிக விஷேடமான நாட்களாகும். இதனால்தான் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதிகமாக பிந்தின பத்தில் “இஃதிகாப்” இருப்பதை வழமையாக்கிக் கொண்டார்கள்.
ஏனெனில் பிந்தின பத்து நாட்களில் ஒற்றையான இரவுகளில் ஓர் இரவில்தான் புனித மிகு “லைலதுல் கத்ர்” இரவு வருமென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். ஆகையால் அந்நாளை எதிர்பார்த்து பிந்தின பத்து இரவுகளில் ஓர் இரவைக் கூட தவற விடாமல் பத்து இரவுகளையும் பக்தியுடன் கழிக்க வேண்டும்.
மனைவியரின் கூடாரங்கள்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பள்ளிவாயலில் “இஃதிகாப்” இருந்ததை அறிந்த அவர்களின் மனைவியர்களில் ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் தானும் அங்கு “இஃதிகாப்” இருப்பதற்கு அனுமதி கேட்ட போது அவர்கள் அனுமதி வழங்கினார்கள். ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பள்ளிவாயலின் ஓர் இடத்தில் ஒரு கூடாரம் அமைத்து “இஃதிகாப்” இருந்தார்கள்.
இதையறிந்த மனைவி ஹப்ஸா நாயகி அவர்களும் அங்கு ஒரு கூடாரம் அமைத்து “இஃதிகாப்” இருந்தார்கள். இதையறிந்த மனைவி செய்னப் நாயகி அவர்களும் அங்கு ஒரு கூடாரம் அமைத்து “இஃதிகாப்” இருந்தார்கள்.
ஒரு நாள் இக் கூடாரங்களைக் கண்ட நபீ பெருமான் இது என்ன? என்று வியந்து கேட்டார்கள். மனைவியரின் கூடாரங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது اِنْزِعُوْهَا இவற்றைக் கழற்றி விடுங்கள் என்று பணித்தார்கள். அவை கழட்டப்பட்டன. பெருமானாரின் மறைவுக்குப் பின் மனைவியர்கள் தமது வீடுகளில் “இஃதிகாப்” இருந்தார்கள்.
பெண்களின் சுபாவம்.
நபீ பெருமான் பள்ளிவாயலில் கூடாரம் அடித்து “இஃதிகாப்” இருந்ததையறிந்த மனைவி ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் தானும் அவ்வாறிருக்க வேண்டுமென்று விரும்பி நபீ பெருமானிடம் அனுமதி கேட்டு கூடாரம் அமைத்து இருந்தார்கள். இதைக் கண்ட மனைவி ஹப்ஸா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபீ பெருமானிடம் அனுமதி கேட்காமல் அவர்கள் மனைவி ஆயிஷா அவர்களுக்கு வழங்கிய அனுமதியை ஆதாரமாகக் கொண்டு தானும் கூடாரம் அமைத்து இருந்தார்கள். இதைக் கண்ட மற்றோரு மனைவி செய்னப் நாயகி அவர்கள் நபீ பெருமானிடம் அனுமதி கேட்காமல் அவர்கள் ஆயிஷா நாயகி அவர்களுக்கு கொடுத்த அனுமதியை ஆதாரமாகக் கொண்டு தானும் கூடாரம் அமைத்து இருந்தார்கள்.
சிறிய பள்ளிக்குள் நான்கு கூடாரங்கள் எதற்கு? இதைக் கண்ட பெருந்தகை பெருமானார் அவர்கள் சற்றுச் சூடானவர்கள் போல் இக் கூடாரங்களை கழட்டி விடுங்கள் என்று கூறினார்கள்.
ஏன் கழட்டுமாறு சொன்னார்கள் என்பதற்கு ஹதீதில் எந்த ஒரு காரணமும் கூறப்படவில்லை. எனினும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு பல மனைவியர் இருந்தனர். நபீ பெருமான் “வபாத்” மறைந்த போது ஒன்பது மனைவியர் இருந்தனர். கூடாரம் அமைத்த மூன்று மனைவியர் போல் ஒன்பது மனைவியரும் கூடாரம் அமைக்கத் தொடங்கினால், அதே போல் நபீ தோழர்களும் தொடங்கினால் “அறபா – மினா” போன்ற பாலைவனத்திற்கே பள்ளிவாயலை மாற்ற வேண்டி வந்திருக்கும். அல்லாஹ் பாதுகாத்தான்.
கதிரைக் கலாச்சாரம்
பள்ளிவாயலா? பட மாளிகையா? அல்லது கிறிஸ்த்துவர்களின் தேவாலயமா?
அக்காலத்தில் பள்ளிவாயல்கள் தலைப்பாகைகளாலும், பெரிய ஜுப்பாக்களாலும், அடர்ந்த தாடிகளாலும் நிரம்பி வழிந்தன. ஆனால் இக்காலத்திலோ நாகரீக நாற்காலிகளால் நிரம்பி வழிகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சாய்மணக் கதிரைகளால் நிரம்பி வழியும் போல் தோணுகிறது. இது மட்டுமல்ல. வெள்ளிக்கிழமை “கதீப்” பிரசங்கத்தை முடித்து விட்டு தொழுகைக்காக “மிஹ்றாப்” வந்து “இஸ்தவூ இலஸ்ஸலாஹ்” சொன்னதும் சில ஆலிம்களையும், ஹாஜிகளையும் நீரூற்றி எழுப்ப வேண்டிய நிலமையும் ஏற்படலாம் போல் தோணுகிறது.
நமது இலங்கை நாட்டில் பள்ளிவாயல்களில் கதிரைக் கலாச்சாரம் வந்தது உண்மையான நோயாளர்களால் அல்ல. குஸாலாக்களினால்தான்.
ஒருவர் காலையிலும், மாலையிலும் வோக்கிங் (Walking) செல்கிறார். குடும்ப சகிதம் கடைத் தெருவுக்கு கால் நடையாகச் சென்று சாமான்கள் வாங்குகிறார். மோட்டார் சைக்கிள் ஓடுகிறார். வலீமா விருந்திற்குச் சென்றால் கால் மடித்து அமர்கிறார். வருடத்திற்கு ஒரு குழந்தை தவறாமல் பெற்றெடுக்கிறார். பள்ளிவாயலுக்குத் தொழ வந்தால் மட்டும் கதிரை தேடி அலைகிறார்.
எந்த வகையான நோயாளி “பர்ழ்” கடமையான தொழுகையை அமர்ந்து தொழலாம்? எந்தக் கட்டத்தில் நின்று தொழலாம்? என்ற விபரங்கள் ஒன்றுமே தெரியாமல் “பர்ழ்” கடமையான தொழுகையை எந்த ஒரு தடையும், நோயுமின்றி அமர்ந்து தொழுதால் தொழுகை நிறைவேறாது. ஏனெனில் “பர்ழ்” கடமையான தொழுகையில் “கியாம்” நிற்பது கடமை. இருப்பதற்குரிய காரணம் இருந்தால் மட்டும்தான் இருந்து தொழலாம்.
மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்களுக்கும், அறிவுக்கும் சம்மந்தமே கிடையாது. ஆன்மீகப் படித்தரங்களில் குறைந்தபட்சப் படித்தரமாவது அவர்களிடமில்லை. ஆனால் பணம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. அது கூட உயிரற்ற அசையாப் பணம்தான். ஒரு சொட்டேனும் தொட்டுத் தெறிக்காத இறுக்கமான கை உள்ளவர்கள்.
இவர்களுக்கு நோய் எதுவுமில்லாது போனாலும் கதிரையிலிருந்து தொழுவதை கௌரவமாக நினைக்கிறார்கள். இவர்கள் உலமாஉகளிடம் சரியாக சட்டத்தைக் கேட்டுச் செயல்பட வேண்டும். இன்றேல் இவர்கள் காலமெல்லாம் தொழுதாலும் தொழாதவர்களேதான். செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு .
எனவே வெள்ளிக் கிழமை “ஜும்ஆ”ப் பிரசங்கம் செய்யும் உலமாஉகள் இது தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் தொழுகைக்கான சட்டங்களைக் கூற வேண்டும். தவறினால் உலமாஉகள் பதில் கூற வேண்டும்.
நபீ பெருமான் பள்ளிவாயலில் கூடாரம் அமைத்து “இஃதிகாப்” இருந்ததைக் கண்ட ஆயிஷா நாயகி அவர்கள் அன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்திற் கொண்டும், தான் அனுமதி கேட்டு கூடாரம் அமைத்தால் ஏனைய மனைவியரும் கூடாரம் அமைக்கத் தொடங்கி விடுவார்கள் என்றும், இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுமென்றும் விளங்கியிருந்தால் அவ்வாறு செய்திருக்கமாட்டார்கள். ஆயிஷா நாயகி வயதிலும், அனுபவத்திலும் குறைந்நவராயிருந்ததால் தூர நோக்கோடு சிந்திக்கத் தவறிவிட்டார்கள். இதனால் அவர்களைத் தரக் குறைவாக எவரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அவர்கள் “உம்மஹாதுல் முஃமினீன்” விசுவாசிகளின் தாய்மார்களில் ஒருவர். நபீ பெருமானின் அன்பு மனைவி. நபீ மொழிகளை அறிவித்த பெண்களில் மிகச் சிறப்பிற்குரியவர்கள்.
பல மனைவியர்களின் கணவனாயிருப்பவன் ஒரு மனைவிக்கு மட்டும் உபகாரம் செய்ய விரும்பினால் மற்றவர்களையும் கருத்திற்கொண்டு செய்ய வேண்டும். இன்றேல் மற்றவர்களின் தொல்லையை சமாளிக்க முடியாமற் போய்விடும்.
நீங்கள் கூறும் இவ் ஆலோசனை எல்லாமறிந்த பெருமானாருக்கு வராமற் போனதேனோ? என்று ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு பல பதில்கள் சொல்ல முடியும்.
அவற்றில் ஒன்று. நபீ பெருமானார் உலக மக்கள் அனைவருக்கும் “றஹ்மத்” அருளாக வந்தவர்கள். அவர்கள் சில வேளை بَيْنَ الخَوْفِ والرجاء பயம், ஆதரவு இவ்விரு தன்மைகளும் சமமானவர்களாக இருப்பார்கள். இன்னும் சில வேளை “கவ்ப்” என்ற பயம் மிகைத்தவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சமயம் “றஜா” ஆதரவு மிகைத்தவர்களாக இருப்பார்கள். இம் மூன்று நிலைகள் தவிர நாலாம் நிலை அவர்களுக்கு இல்லை.
ஓர் “இன்ஸான்” – மனிதன் பயத்திற்கும், ஆதரவிற்கும் இடையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயமும் அவனுக் இருக்க வேண்டும். அடியான் குற்றம் செய்தால் அவனை அல்லாஹ் மன்னிப்பான் என்ற ஆதரவும் இருக்க வேண்டும்.
ஆன்மீக மகாம்.
இது ஆன்மீக மகாம்களுடன் தொடர்பான பேச்சாகும். ஆன்மீக மகாம்களைக் கூறும் நபீ மொழிகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே எழுதி இத்தலைப்பை பெரிதாக்க நான் விரும்பவில்லை. விபரம் தேவையானோர் எமது ஆன்மீகம் தொடர்பான நூல்களை எமது அலுவலகத்தில் பெற்று படிக்குமாறும், CD களைப் பெற்றுக் கேட்டுப் பயனடையுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
எனினும் ஜாடையாக ஒரு ஹதீதைக் கூறுகிறோம். (நபீ பெருமான் மக்கா நகரிலிருந்து திரு மதீனா நகருக்குச் சென்ற கால கட்டத்தில் ஒரு வழியால் நடந்து சென்றார்கள். பேரீத்தம் தோட்டமொன்றில் தோழர்கள் ஏதோ செய்து கொண்டிருந்ததைக் கண்டு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ஈத்த மரம் அதிக பழம் தர வேண்டுமென்பதற்காக ஒரு வேலை செய்கிறோம் என்றார்கள். அதற்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “நீங்கள் செய்யாமல் விட்டால் நல்லது” என்றார்கள். அதன் படி அவர்கள் அவ்வாறு செய்யாமல் விட்டு விட்டார்கள். அந்த வருடம் அவர்கள் எதிர்பார்த்தது போல் அதிக பழம் கிடைக்கவில்லை. நபீ தோழர்கள் நபீயவர்களிடம் வந்து, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னீர்கள். அதன் படி நாங்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டோம். ஆனால் பழம் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளதென்று முறைப்பட்டார்கள். அப்போது பெருமானார் அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள். அந்த ஹதீதை இங்கு எழுதி தொடர்ந்து விளக்கம் எழுதுகிறேன்.
عن رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَدِمَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَهُمْ يُوَبِّرُونَ النَّخْلَ، يَقُولُونَ يُلَقِّحُونَ النَّخْلَ، فَقَالَ: «مَا تَصْنَعُونَ؟» قَالُوا: كُنَّا نَصْنَعُهُ، قَالَ: «لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا» فَتَرَكُوهُ، فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ، قَالَ فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ، وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأْيِي، فَإِنَّمَا أَنَا بَشَرٌ” (رواه مسلم – 2362)
பெருமானார் கூறிய பதில் பின்வருமாறு. (நான் ஒரு மனிதன், உங்களின் “தீன்” மார்க்கம் தொடர்பாக நான் ஏதாவது சொன்னால் அதை ஏற்றுச் செயல்படுங்கள். மறாக எனது தனிப்பட்ட, எனது அபிப்பிராயத்தைக் கொண்டு நான் ஏதாவது சொன்னால் நான் நிச்சயமாக மனிதன் ஆவேன்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீதின் மூலம், பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் திருவாயிலிருந்து வெளியாகும் பேச்சுக்கள் இரு தலைப்புக்களில் ஒன்றைக் கொண்டதாகவே இருக்கும். ஒன்று – “தீன்” மார்க்க விடயம். மற்றது அவர்களின் சொந்தக் கருத்து – அவர்களின் அபிப்பிராயம்.
மார்க்க விடயத்தில் அவர்கள் எது சொல்வதாயினும் அது இறை கட்டளையாகவே இருக்கும். மார்க்க விடயத்தில் இறை கட்டளையின்றி அவர்கள் வாய் திறப்பதில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ، إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
பெருமானார் தங்களின் விருப்பத்தின் படி ஒன்றும் பேசமாட்டார்கள். பேசினால் அது “வஹீ” இறை அறிவிப்பாகவே இருக்கும். (53 – 3,4)
அதாவது “தீன்” மார்க்கம் தொடர்பான எந்த ஒரு விடயமாயினும் தங்களின் அபிப்பிராயப் படி ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள். உலக விவகாரங்களில் தங்களின் அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் கூறுவார்கள்.
பெருமானார் அவர்கள் அல்லாஹ்வில் – இறைவனில் “ஷுஹூத்” என்ற காட்சி நிலையில் இருக்கும் போது மட்டும் அவர்களின் திரு வாயால் வெளியான எல்லாமே “வஹீ” கட்டளையாகும். இந்நிலையல்லாத நேரத்தில் அவர்களின் திரு நாவால் வெளியான எல்லாமே அவர்கள் இறைவனின் “ஷுஹூத்” காட்சி நிலையிலிருந்து விடுபட்டு “கல்க்” என்ற படைப்புகளின் தொடர்புக்கு இறங்கிய பின் அவர்களின் பேச்சு வேறொரு வகையில் நோக்கப்பட வேண்டியதாகிவிடும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இறைவனில் “பனா” அழிந்து وهو مسبب الأسباب காரணங்களுக்கெல்லாம் காரணகர்த்தாவான அல்லாஹ்வின் பேரின்பத்தில் லயித்துப் போயிருந்த நேரம்தான் (நீங்கள் மரத்திற்கு ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அது பழம் தரும்) என்று சொன்னார்கள். “கல்கு” என்ற படைப்பு முழுமையாக அவர்களின் உணர்வை விட்டும் மறைந்த நிலையாகும். அது ஸபபுகள் – காரணங்களைக் கடந்த நிலையாகும்.
மேலே எழுதிக்காட்டிய ஹதீதில் يُؤَبِّرُوْنَ النَّخْلَ என்று ஒரு வசனம் வந்துள்ளது. ஈத்த மரத்திற்கு தோழர்கள் “தஃபீர்” செய்து கொண்டிருந்தார்கள். இதன் விபரம் பின்னால் வருகிறது.
يُؤَبِّرُوْنَ النَّخْلَ – مِنَ التَّأْبِيْرِ، وَهُوَ الْإِصْلَاحُ، وَالْمَعْنَى يُشَقِّقُوْنَ طَلْعَ الْإِنَاثِ وَيَذَرُوْنَ فِيْهِ طَلْعَ الذَّكَرِ، لِيَجِيْئَ بِثَمَرَةٍ جَيِّدَةٍ،
إِنَّ النَّخْلَةَ خُلِقَتْ مِنْ فَضْلَةِ طِيْنَةِ آدَمَ عَلَيْهِ السَّلَامُ عَلَى مَا وَرَدَ، فَلَا بُدَّ عَادَةً فِى صَلَاحِ نِتَاجِهَا مِنْ إِجْتِمَاعِ طَلْعِ الذَّكَرِ مَعَ طَلْعِ الأُنْثَى، كما أنَّه لا بُدَّ عَادَةً فِي خَلْقِ ابْنِ آدَمَ مِنِ اجْتِمَاعِ مَنِيِّ الذَّكَرِ وَالْأُنْثَى،
அறபு மக்கள் ஈத்த மரம் நன்றாகக் காய்ந்து அதிக பழம் தர வேண்டுமென்பதைக் கருத்திற் கொண்டு “பாழை கட்டுதல்” என்ற பெயரில் ஒரு வேலை செய்வார்கள். அதாவது ஈத்த மரத்தின் பாழையில் ஆண் பாழை என்றும், பெண் பாழை என்றும் இரண்டு வகையான பாழை உண்டு. பெண் பாழையைப் பிழந்து அதனுள் ஆண் பாழையை வைத்து விடுவார்கள். இவ்வாறு செய்தால் அதிக பழம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த நம்பிக்கை கீழே எழுதப்படுகின்ற வரலாறின் மூலம் ஏற்பட்டதாகும்.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான். அவர்களைப் படைத்த பின் அந்த மண்ணில் சிறிதளவு மிஞ்சியது. அதைக் கொண்டு பேரீத்தம் மரத்தைப் படைத்தான். ஆதம் நபீ அவர்களின் சந்ததிகள் பெருகுவதற்கு ஓர் ஆணின் “நுத்பா”வும், பெண்ணின் “நுத்பா”வும் கலப்பது காரணமாயிருந்தது போல் ஈத்த மரத்தின் பெண் பாழையும், ஆண் பாழையும் கலப்பதால் அதிக பழம் கிடைக்குமென்ற நம்பிக்கை அறபு மக்களிடம் இருந்தது. இந்த நமபிக்கையின் அடிப்படையிலேயே நபீ தோழர்கள் அந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
காரண உலகில் காரணம் பேணப்பட வேண்டும்.
“ஆலமுத் துன்யா” என்று சொல்லப்படுகின்ற இவ்வுலகம் “ஆலமுல் அஸ்பாப்” காரண உலகம் என்றும் அழைக்கப்படும். இவ்வுலகில் ஒருவர் ஒரு காரியத்தை அடைந்து கொள்வதாயின் அதற்கான காரணத்தை அவர் கையாள வேண்டும். இன்றேல் காரியம் நடக்காது.
உதாரணமாக ஒருவன் பணக்காரனாக வேண்டுமாயின் அவன் உழைக்க வேண்டும். பணக்காரனாதல் காரியம். அதற்காக உழைத்தல் காரணம். ஒருவனின் பசி தீர்வது காரியம். அதற்காக உண்பது காரணம். குழந்தை கிடைத்தல் காரியம். அதற்காக உடலுறவு கொள்வது காரணம். காரணம் எதுவோ அது அறபு மொழியில் سَبَبٌ என்றும், காரியம் எதுவோ அது مُسَبَّبٌ என்றும் சொல்லப்படும்.
வியாபாரிகள் தமது வியாபாரத்தில் அதிக இலாபம் பெறுவதற்கான வழிகள் எவை என்பதை அறிந்து அவ்வழிகளைக் கையாள்வதும், ஒருவன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் எவை என்பதை ஒரு டொக்டரிடம் கேட்டு அவ்வழிகளைக் கையாள்வதும் ஒரு போதும் தவறாகமாட்டாது. அதே போல் அது இறை நம்பிக்கைக்கு முரணாகவும் மாட்டாது. பசியைத் தீர்ப்பதற்கு சாப்பிடவே வேண்டும். தாக்கத்தைத் தீர்ப்பதற்கு குடிக்கவே வேண்டும்.
பசியுள்ளவன் எதையும் உட்கொள்ளாமல் பசி தீர வேண்டுமென்றும், தாகமுள்ளவன் எதையும் குடிக்காமல் தாகம் தீரவேண்டுமென்றும் இராப்பகலாக சொல்லிக் கொண்டிருந்தாலும் பசியும் தீராது. தாகமும் தீராது.
எனவே, “ஆலமுல் அஸ்பாப்” காரண உலகம் என்று சொல்லப்படுகின்ற இவ்வுலகில் ஒருவன் இருக்கும் வரை அவன் காரணத்தைக் கையாளாமல் காரியத்தை அடைய முடியாது. إذا فَاتَ السَّبَبُ فَاتَ الْمُسَبَّبُ காரணமின்றேல் காரியமில்லை.
நபீ தோழர்கள் பழம் அதிகமாக கிடைக்க வேண்டுமென்பதற்காக “தஃபீர்” செய்தது ஒரு காரணம்தான். காரணத்தைக் கையாளக் கூடாதென்பது மார்க்கமில்லை. நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “தஃபீர்” என்ற காரணத்தைக் கையாண்ட தோழர்களைத் தடுத்தது எந்த வகையில் என்பதை ஆய்வு செய்தால் உண்மை துலங்கும். பின்னால் வருவதைக் கவனிக்கவும்.
قوله صلى الله عليه وسلم إِنَّمَا أَنَا بَشَرٌ، أي فليس لي إطّلاع على المَغِيْبَاتِ، وإنّما ذلك شيئٌ قُلْتُهُ بِحَسب الظَّنِّ لِشُهُوْدِيْ إِذْ ذَاكَ إِلَى مُسَبِّبِ الْأَسْبَابِ،
நான் ஒரு மனிதன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் பணிவை வெளிப்படுத்தி விட்டு நான் அவ்வாறு சொன்னது நான் அந்நேரம் காரணங்களின் கர்த்தாவான அல்லாஹ்வின் “ஷுஹூத்” காட்சியிலிருந்ததினாலாகும் என்று கூறினார்கள்.
காரண உலகத்தில் ஒரு காரியத்தை அடைவதாயின் காரணத்தைக் கையாள வேண்டுமென்பது உண்மையாயினும் நபீமார், வலீமார் போன்ற அதியுயர் “மர்தபா” பதவியிலுள்ளவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு காரியத்தை அடைவதற்கு காரணத்தைக் கையாளத் தேவையில்லை. அவர்கள் காரண உலகைக் கடந்தவர்களாவர். காரணங்களின் கர்த்தாவான அல்லாஹ்வின் மடியில் பால் குடிக்கும் பச்சிளங்குழந்தைகளாவர்.
فليس لي إطّلاع على المَغِيْبَاتِ،
மறைவான விஷயங்களை என்னால் அறிய முடியாதென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் சொன்னது வஹ்ஹாபிகளுக்கு நன்றியுள்ள நாலு கால் பிராணிக்கு மும்பாய் சாலிமார் சாப்பாட்டுக் கடை புரியாணி கிடைத்தாற் போலிருக்குமென்று நினைக்கிறேன். அவர்கள் فليس لي إطلاع என்ற வசனத்தை சரியாக விளங்கினால் ஐயோ என்று தலை மேல் கை வைத்து கைசேதப்படுவார்கள். வசனத்தின் சரியான பொருள் என்னால் சுயமாக அறிய முடியாது என்பதாகும். அல்லாஹ் எனக்கு அறிவித்து தந்தால் நான் அறிவேன் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மறைவான செய்திகளை அறிந்திருந்தது இந்த வகையில்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நபீ பெருமானின் “வபாத்” மறைவுக்குப் பின் அவர்களின் மனைவியர்கள் தமது வீடுகளில் “இஃதிகாப்” இருந்தனர் என்று முதலாவது ஹதீது கூறுகிறது. இதில் விபரமுண்டு. கற்றறிந்த ஸுன்னீகளிடம் கற்றுக் கொள்ளலாம்.
ஹதீது இரண்டு.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நல்லவை செய்வதில் மனிதர்களில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். குறிப்பாக றமழான் மாதத்தில் மட்டும் ஏனைய மாதங்களை விடச் சிறந்த அமல்களைச் செய்பவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் றமழான் மாத ஒவ்வோர் இரவும் நபீ பெருமானைச் சந்திப்பார்கள். அப்போது பெருமானார் அவர்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பெருமானாரைச் சந்தித்தால் நல்லவை செய்வதில் புயல் காற்றை விட மிக வேகமாகப் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருப்பார்கள் என்று அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(ஆதாரம் – புகாரீ – முஸ்லிம்)
இந்த இரண்டாவது ஹதீதில் “இஃதிகாப்” என்பது தெளிவாகக் கூறப்படாவிட்டாலும் “கைர்” நல்லவை என்ற சொல் அனைத்து நன்மைகளையும், ஏனைய வணக்கங்களையும் உள்வாங்கிய சொல் என்பது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல.
ஹதீது மூன்று
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு வருடத்தில் ஒரு தரம் திருக்குர்ஆன் முழுவதும் எடுத்துக் காட்டப்படும். எனினும் அவர்கள் “வபாத்” மறைந்த வருடம் மட்டும் இரண்டு தரம் எடுத்துக் காட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் றமழான் மாதத்தில் பத்து நாட்கள் “இஃதிகாப்” இருப்பார்கள். எனினும் அவர்கள் மறைந்த வருடம் மட்டும் இருபது நாட்கள் “இஃதிகாப்” இருந்துள்ளார்கள்.
(ஆதாரம் – புகாரீ, அறிவிப்பு – அபூ ஹுறைறா)
மூன்றாவது ஹதீதின் மூலம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பல மாதங்களுக்கு முன்னேயே தங்கள் “வபாத்” மறைவை பற்றித் தெரிந்து கொண்டார்கள் என்பது சூசகமாக விளங்கப்படுகிறது. இந்த நபீ மொழியில் வஹ்ஹாபிகளுக்கு ஓர் அடியும், ஓர் இடியும் உள்ளன.
ஹதீது நான்கு.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மஸ்ஜிதுன் நபவீ” மதீனாப் பள்ளிவாயலில் “இஃதிகாப்” இருந்த நேரம் அங்கேயே இருந்த நிலையில் தங்களின் தலையை நீட்டித் தருவார்கள். நான் அதை வார்ந்து விடுவேன். அவர்கள் மனிதனின் “ஹாஜத்” தேவைக்காக மட்டுமே வீட்டில் நுழைவார்கள். மற்ற நேரமெல்லாம் பள்ளிவாயலிலேயே இருந்து விடுவார்கள் என்று ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் – புகாரீ, முஸ்லிம். அறிவிப்பு – ஆயிஷா நாயகி)
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தற்போது அடக்கம் பெற்றுள்ள வீடுதான் ஆயிஷா நாயகி அவர்களின் வீடாக இருந்தது. மதீனாப் பள்ளிவாயல் வீட்டுடன் ஒட்டியதாகவே இருந்தது. இதனால்தான் பள்ளிவாயலில் இருந்தவாறே தலையை மட்டும் வீட்டில் இருந்த மனைவி ஆயிஷா நாயகி அவர்களுக்கு நீட்டிக் கொடுக்க அவர்கள் அதை வார்ந்து விட்டுள்ளார்கள்.
பெருமானார் ஏன் இவ்வாறு செய்தார்கள்? தாங்களே தங்களின் தலையை வார்ந்திருக்கலாமே! என்று சிலருக்கு எண்ணத் தோணலாம். அல்லது பெருமானாரை தரக்குறைவாக எழுதியும், பேசியும் வருகின்ற வஹ்ஹாபிஸ வழிகேடர்கள் “இஃதிகாப்” என்ற வணக்கத்திலிருந்தும் கூட அவர்களுக்கு பெண்ணாசையும், சிற்றின்ப உணர்வும் போகவில்லையென்றும் கூறலாம். இவ் அட்டூழியக் காரர்கள் தெளிவு பெற்று உண்மை விசுவாசிகளாவதாயிருந்தால் இவர்கள் மீண்டும் திருக்கலிமாவை உணர்ந்தும், விளங்கியும் “ஈமான்” கொண்ட பின் காமிலான ஞான குரு ஒருவரின் காலடியில் அவருக்கு பணி செய்துகொண்டு கிடக்க வேண்டும். இன்றேல் இவர்களின் நெஞ்சில் “ஈமான்” ஒளிராது.
மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஒன்றை ஒரு மார்க்கவாதி செய்தால்தான் அது பற்றி நாம் ஆய்வு செய்யவும் வேண்டும், யோசிக்கவும் வேண்டும். ஆகுமான ஒன்றைச் செய்தால் அது பற்றி யோசிக்கத் தேவையில்லை.
ஒரு கணவனுக்கு அவனின் மனைவி தலை வார்ந்து விடுவதோ, அல்லது கணவன் மனைவிக்கு தலை வார்ந்து விடுவதோ மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஒன்றல்ல. இது விலக்கப்படாத ஒன்றாயிருந்தாலும் கூட இவ்வாறு பள்ளிவாயலில் இருந்த நிலையில் ஒரு சமூகத்தின் நபீ செய்வது பொருத்தமற்றதென்று வஹ்ஹாபிகள் குரங்குப்பிடியில் நிற்கவும் கூடும்.
இவர்களுக்கு பதில் கூறுவதாயின் இவர்கள் அபூ ஜஹ்ல் என்பவனின் வழித்தோன்றல்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தோழர்களிற் சிலர் அல்லாஹ்வின் திருத் தூதரே! யா றஸூலல்லாஹ்! உங்களின் உயர் குணத்தையும், நீங்கள் வெளியாக்கும் “முஃஜிஸாத்” அற்புதங்களையும் அபூ ஜஹ்ல் நேரில் கண்டும் கூட உங்களுக்கு அடி பணியாமலிருப்பதேன்? என்று கேட்டார்கள்.
رآني محمدَ بنَ عبدِ الله ، وما رآني نَبِيَّ الله
அபூ ஜஹ்ல் என்னை அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாகப் பார்க்கிறானேயன்றி என்னை அல்லாஹ்வின் நபீயாக பார்க்கவில்லை என்று பதில் கூறினார்கள். ஒரு குலத்தின் குணம் அக்குல வழிவந்தவர்களில் இல்லாமற் போகாது.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மனைவி ஆயிஷாவிடம் தலையைக் கொடுத்ததற்கும், அவர்கள் வார்ந்து விட்டதற்கும் காரணம் கூறுவதாயின் எத்தனையோ காரணங்கள் கூற முடியும். வாதத்துக்கே மருந்தும், மருத்துவமனையும் உண்டு. பிடிவாதத்திற்கு மருந்துமில்லை. மருந்துமில்லை. மருத்துவமனையுமில்லை. ஆயினும் ஒரேயோரு மருந்துதான் உண்டு. அது பற்றி பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களிடம் கேட்டால் சொல்லித்தருவார்கள்.
மேற்கண்ட நாலாவது ஹதீதில் وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ மனிதனுக்குரிய தேவைகளுக்கேயன்றி நபீயவர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள் என்று ஆயிஷா நாயகி கூறியதிலிருந்து பல விடயங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். மல, சலம் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் பள்ளிவாயலில் வசதியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹதீது ஐந்து
இரண்டாவது கலீபா ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகளாரிடம் நான் “ஜாஹிலிய்யா” காலத்தில் மக்கா பள்ளிவாயலில் ஓர் இரவு “இஃதிகாப்” இருப்பதாக நேர்ச்சை செய்திருந்தேன் என்று கூறினார்கள். நபீகளார் உங்கள் நேர்ச்சையை நிறை வேற்றுங்கள் என்று அவர்களைப் பணித்தார்கள்.
(ஆதாரம் – புகாரீ – முஸ்லிம், அறிவிப்பு – இப்னு உமர்)
கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், نذرت في الجاهليّة ஜாஹிலிய்யாவில் நான் நேர்ச்சை செய்திருந்தேன் என்று கூறியதிலிருந்து அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் இணைவதற்கு முன்னர் அவ்வாறு நேர்ச்சை செய்தார்கள் என்பது விளங்கப் படுகிறது. أي ما كان العرب قبل بعثته عليه السلام நபீ பெருமான் நபீயாக அனுப்பப்படுவதற்குமுன் வாழ்ந்த மக்கத்து மக்கள் “இஃதிகாப்” என்ற வணக்கம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். இதை ஒரு வணக்கமெனக் கருதிச் செய்யாது போனாலும் ஒரு வழக்கமெனக் கருதிச் செய்திருப்பதற்கும் சாத்தியமுண்டு.
قال الشيخ طيبي رحمه الله دلَّ الحديث على أنّ نذرَ الجاهليّة إذا كان مُوافِقا لِحُكْمِ الإسلام وجبَ الوَفاءُ به،
அஷ் ஷெய்கு தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். இஸ்லாம் தோன்று முன் ஜாஹிலிய்யா காலத்தின் நேர்ச்சை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்புடையதாயிருந்தால் அதை நிறை வேற்றுவது கடமை என்று கூறியுள்ளார்கள். இஸ்லாம் தோன்றி “இஃதிகாப்” என்ற வணக்கத்தை அது கூறியிருப்பதால் ஜாஹிலிய்யா காலத்து நேர்ச்சை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்புடையதாகவும் இருப்பதால் அதைச் செய்யலாமென்பது விளங்கப்படுகிறது. இதனால்தான் உமர் நாயகத்திற்கு اَوْفِ بِنَذْرِكَ உங்களின் நேர்ச்சையை நிறைவேற்றுங்கள் என்று நபீ மணி அவர்கள் கூறினார்கள்.
ஹதீது ஆறு
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “இஃதிகாப்” இருக்க நாடினால் “பஜ்ர்” – “ஸுப்ஹ்” தொழுத பின் “இஃதிகாப்” இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்று ஆயிஷா நாயகி கூறினார்கள்.
(ஆதாரம் – அபூ தாஊத் – இப்னு மாஜா, அறிவிப்பு – ஆயிஷா சித்தீகா)
ஒருவர் தொடர்ந்து பல நாட்கள் “இஃதிகாப்” இருக்க விரும்பினால் எந்த நாளிலும் அதைத் தொடங்கலாம். இன்ன நாளில்தான் தொடங்க வேண்டுமென்று ஒரு விதி கிடையாது. ஆயினும் எந்த நேரத்தில் தொடங்குவது நல்லது? என்ற கேள்விக்கு “ஸுப்ஹ்” தொழுத பின் தொடங்குவது நபீ வழியென்று பதில் கூறலாம்.
ஹதீது ஏழு
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “இஃதிகாப்” இருக்கும் வேளையிலேயே நோயாளிகளைப் பார்க்கச் செல்வார்கள். தங்களின் வழமையான நடையாக நடந்து கொண்டே சுகம் விசாரிப்பார்கள். தாமதிக்கமாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் கூறினார்கள்.
فَيَمُرُّ كَمَا هُوَ ஹதீதில் வந்துள்ள இவ்வசனத்தை அறபுக் கல்லூரி மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக சிறிய விளக்கமொன்று எழுதுகிறேன்.
الكاف صفةٌ لمصدرٍ محذوف، وما موصولةٌ، ولفظُ هُوَ مبتدأٌ، والخبرُ محذوفٌ، والجملةُ صفةُ ”ما”، أي يَمُرُّ مُرورا مثلَ الهيئة التي هو عليها، فلا يميل إلى جوانب ولا يَقِفُ، فلا يُعرّجُ أي لا يمكث، التعريح الإقامة، والميلُ عن الطريق إلى جَانب،
“இஃதிகாப்” வணக்கம் நேரம் குறிக்கப்பட்டதா?
பள்ளிவாயலில் எவ்வளவு நேரம் தங்கியிருந்தால் “இஃதிகாப்” வணக்கம் உண்டாகும் என்ற கேள்விக்கு எவ்வளவு நேரமும் இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு لحظة நொடி நேரமாவது இருக்க வேண்டும்.
“இஃதிகாப்” இருத்தல் என்று சொல்வதால் நிற்காமலும், நடக்காமலும், சாய்ந்திருக்காமலும் தரையிலோ கதிரையிலோ இருக்கத்தான் வேண்டுமென்பது கருத்தல்ல. ஒருவர் “இஃதிகாப்” உடைய “நிய்யத்” எண்ணத்தோடு பள்ளிவாயல் எல்லையில் இருந்தாலும், நடந்தாலும், வேலை செய்தாலும் “இஃதிகாப்” வணக்கம் நிறைவேறும். ஓதிக் கொண்டிருக்க வேண்டும், தொழுது கொண்டிருக்க வேண்டுமென்பது நிபந்தனையல்ல.
“இஃதிகாப்” இருப்பதற்கென்று பள்ளிக்கு போய் இருக்கவும் முடியும். ஐங்காலம் தொழச் செல்லும் ஒருவன் பள்ளிக்குள் சென்றதும் குறித்த “நிய்யத்”தை வைத்துக் கொண்டாலும் போதும். அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் வரை அவருக்கு நன்மை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும்.
உதாரணமாக ஒருவன் தனது போனை அல்லது திறப்பை மறந்து வைத்து விட்டுச் சென்று நினைவு வந்ததும் அதை எடுப்பதற்காக பள்ளியில் நுழைந்து “இஃதிகாப்” நிய்யத் வைத்துக் கொண்டானாயின் அவன் வெளியேறும் வரை அவனுக்கு நன்மை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும்.
قال النبي صلى الله عليه وسلّم مَنِ اعْتَكَفَ فُوَاقَ نَاقَةٍ فَكَأَنَّمَا اَعْتَقَ رَقَبَةً،
ஒரு மனிதன் ஒட்டகத்தில் பால் கறக்கும் நேரம் “இஃதிகாப்” இருப்பானாயின் அவன் ஓர் அடிமையை உரிமையிட்டவன் போலாவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
فُوَاقَ نَاقَةْ என்றால் ஒட்டகத்தில் பால் கறக்கும் நேரம் என்று பொருள் வரும். ஓர் ஒட்டகத்தில் பால் கறப்பதற்கு சுமார் 30 நிமிடமாவது தேவைப்படும். இதன் படி 30 நிமிடமாவது “இஃதிகாப்” இருக்க வேண்டுமென்று விளங்குகிறது.
ஒன்றின் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்கு மிகவும் குறைந்த நேரத்தைக் கூறியே எடுத்துக் காட்ட வேண்டும். உதாரணமாக ஒரு பெரிய மனிதனின் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்காக அவரிடம் நாயகமே! எனது வீட்டுக்கு ஒரு நிமிடம் வந்து போங்கள் என்று சொல்வது போன்று. அரை மணி நேரம் வந்து போங்கள் என்று சொல்வதில்லை. இவ்வாறு சொல்வது கூட அவரின் சிறப்பை எடுத்துக்காட்டாது.
மேற்கண்ட ஹதீதில் فُوَاقَ نَاقَةٍ ஒட்டகத்தில் பால் கறக்கும் நேரம் என்று சொல்லப்பட்டிருப்பது நீண்ட நேரத்தைக் காட்டுகிறது. அதாவது சுமார் 30 நிமிடத்தைக் குறிக்கிறது. இது இஃதிகாபின் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாகும். எனவே فُوَاقَ نَاقَةٍ என்ற சொல்லுக்கு ஒட்டகத்தில் பால் கறக்கும் நேரம் என்று பொருள் கொள்ளாமல் ஒட்டகத்தின் பால் மடியை பிடித்து ஒரு தரம் இழுத்து விடும் நேரமென்று பொருள் கொள்ள வேண்டும். இதற்கு இரண்டு நொடிதான் தேவைப்படும். இவ்வாறு பொருள் கொள்வதே இஃதிகாபின் சிறப்பை எடுத்துக்காட்டும்.
அறபு அகராதியில் இதற்கு கூறப்பட்டுள்ள கருத்து நான் இப்போது எழுதிய கருத்தையே காட்டுகிறது.
اَلنَّاقَةَ حَلَبَهَا فُوَاقًا – وَهُوَ أَنْ تُحْلَبَ ثُمَّ تُتْرَكَ سُوَيْعَةً يَرْضَعُهَا الْفَصِيْلُ لِتَدُرَّ ثُمَّ تُحْلَبَ،
ஒட்டகத்தில் பால் கறத்தல். பிறகு சற்று நேரம் கறக்காமல் விட்டு அதன் குட்டியை சிறிது நேரம் குடிக்க வைத்து பின்னர் பால் கறத்தல். இவ்வாறு செய்தால் பால் அதிகமாக சுரந்து வரும். கறப்பதற்கு இலகுவாகவும் இருக்கும். இவ்வாறு செய்வதற்கு சுமார் ஐந்து நிமிடம் போதும். எனவே ஒருவர் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது “இஃதிகாப்” இருக்க வேண்டுமென்று விளங்குகிறது.
ஆயினும் “பிக்ஹ்” சட்ட நூல்களில் ஒரு لَحْضَةْ நொடி நேரம் இருந்தாலும் போதும். இஃதிகாப் உடைய நன்மை கிடைத்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
“ஸுன்னத்” ஆன வணக்கம் நேர்ச்சை செய்யப்பட்டால்…
“ஸுன்னத்” என்பது எப்போதும் “ஸுன்னத்”துதான். 40 “ஸுன்னத்” சேர்ந்தால் அது “பர்ழ்” ஆகிவிடுமென்பதும், 40 “மக்றூஹ்” சேர்ந்தால் அது “ஹறாம்” ஆகி விடுமென்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு எந்த ஓர் ஆதாரத்தையும் நான் காணவில்லை.
ஆயினும் “ஸுன்னத்” ஆன ஒரு வணக்கம் நேர்ச்சை செய்யப்பட்டால் அது நேர்ச்சை செய்தவன் மீது “பர்ழ்” கடைமையாகி விடும். அதை அவன் செய்யவே வேண்டும். தவறினால் அவனுக்கு தண்டனை உண்டு.
உதாரணமாக أيّام البيض “ஐயாமுல் பீழ்” வெள்ளை இரவுகள் என்று அழைக்கப்படுகின்ற, ஒவ்வொரு மாதத்தின் 13,14,15ம் இரவுகளில் நோன்பு நோற்பது “ஸுன்னத்”ஆகும்.
ஒருவன் இந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்பது என்மீது கடமை என்று நேர்ச்சை செய்து கொண்டானாயின் அது அவன் மீது கடமையாகிவிடும். செய்யத் தவறினால் தண்டனையுண்டு.
இவ்வாறுதான் பள்ளிவாயலில் “இஃதிகாப்” இருப்பதுமாகும். “இஃதிகாப்” என்பது “ஸுன்னத்” ஆன ஒரு வணக்கம். இவ்வணக்கம் பள்ளிவாயலில் மட்டுமே நிறைவேறும்.
نَوَيْتُ الْإِعْتِكَافَ للهِ مَا دُمْتُ فِى هَذَا الْمَسْجِدِ،
“இப்பள்ளியில் நான் இருக்கும் வரை “இஃதிகாப்” இருப்பதை “நிய்யத்” வைத்து விட்டேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தால், இவ்வாறு நினைத்துக் கொண்டு பள்ளிவாயலில் இருக்கும் வரை அவனுக்கு நன்மை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாறு நினைக்காமல் அங்கு எவ்வளவு நேரமிருந்தாலும் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. குறித்த “நிய்யத்” எண்ணத்தோடு பள்ளிவாயலில் தங்கியிருப்பவன் தொழுது கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்க வேண்டுமென்பது நிபந்தனையல்ல. இதற்கு “வுழு” என்ற சுத்தமும் அவசியமில்லை. “வுழு” உடன் இருப்பது மிக விஷேடமாகும். ஓதிக் கொண்டும், தொழுது கொண்டுமிருப்பது நல்ல காரியமே!
இது “ஸுன்னத்” ஆன வணக்கமேயன்றி “பர்ழ்” கடமையான வணக்கமல்ல. ஆயினும் نَوَيْتُ الْإِعْتِكَافَ என்று “நிய்யத்” வைக்காமல் نَوَيْتُ என்ற சொல்லுக்கு பதிலாக نَذَرْتُ நான் நேர்ச்சை செய்து விட்டேன் என்று “நிய்யத்” வைத்தால் அதிக நன்மை கிடைக்கும். உதாரணமாக ஒருவர் 30 நிமிடம் “இஃதிகாப்” இருப்பதால் அவருக்கு ஆயிரம் நன்மை கிடைக்கிறதென்று வைத்துக் கொண்டால் ஒருவர் அதே 30 நிமிடம் نذرت நான் நேர்ச்சை செய்து விட்டேன் என்று “நிய்யத்” வைத்து இஃதிகாப் இருந்தால் மூவாயிரம் நன்மை நிச்சயமாக அவருக்கு கிடைக்கும். இரண்டெழுத்து வித்தியாசத்தால் ஆயிரம் மூவாயிரமாக மாறிவிடுகிறது.
அன்புப் பொது மக்களே!
நீங்கள் எப்போது பள்ளிவாயலுக்குள் சென்றாலும் “இஃதிகாப்” வணக்கத்திற்கு வழமையாக நீங்கள் வைக்கின்ற “நிய்யத்”தில் نَوَيْتُ என்ற சொல்லை نَذَرْتُ நான் நேர்ச்சை செய்து விட்டேன் என்று மாற்றினால் போதும். அதிக நன்மை உங்கள் பெயரில் பதிவாகி விடும்.
“இஃதிகாப்” இருப்பவரின் கவனத்திற்கு!
புனித றமழான் பிந்தின பத்து நாட்களிலோ, அல்லது வேறு நாட்களிலோ “இஃதிகாப்” இருக்க விரும்பும் ஒருவர் தான் செய்யவுள்ள அந்த அமலை பலரிடம் கூறி பகிரங்கப் படுத்தாமல் இரகசியமாகச் செய்ய வேண்டும். பகிரங்கப் படுத்துவதால் ஏற்படுகின்ற நன்மையை விட பாவமே அதிகம்.
“இஃதிகாப்” இருப்பவர் ஐந்து நேரம் தொழுவதுடன் அதன் முன், பின் ஸுன்னத் தொழுகைகளையும், ழுஹா, அவ்வாபீன், வித்ரு, நோன்பு மாதமாயின் தறாவீஹ் முதலானவற்றையும் தொழவேண்டும்.
இவை தவிர குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், ஸலவாத் – ஸலாம் சொல்லுதல், அவ்றாதுகள் ஓதுதல் போன்றவற்றையும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
விஷேடமாக தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சொற்ப நேரமாவது தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்பவர் எவராயினும் அவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞான வழி நடக்கின்ற ஒரு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றவராக இருத்தல் வேண்டும். எவரிடமும் “பைஅத்” செய்து கொள்ளாதவர் தியானம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
اللهم صَلِّ عَلَى طَلْعَةِ الذَّاتِ الْمُطَلْسَمْ، وَالْغَيْثِ الْمُطَمْطَمْ، وَالْكَمَالِ الْمُكَتَّمْ، لَاهُوْتِ الْجَمَالْ، وَنَاسُوْتِ الْوِصَالْ، وَطَلْعَةِ الْحَقِّ، هُوِيَّةِ إِنْسَانِ الْأَزَلْ، فِى نَشْرِ مَنْ لَمْ يَزَلْ، مَنْ أَقَمْتَ بِهِ نَوَاسِيْتَ الْفَرْقِ، إِلَى طَرِيْقِ الْحَقِّ، فَصَلِّ بِهِ وَمِنْهُ وَعَلَيْهِ وَسَلِّمْ تَسْلِيْمًا،
“இஃதிகாப்” வணக்கம் இஸ்லாம் மார்க்கத்துக்கே சொந்தம்.
“இஃதிகாப்” என்ற வணக்கம் இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமுள்ள ஓர் அம்சமாகும். இஸ்லாம் அல்லாத எந்த ஒரு மார்க்கத்திலும் இப்படியொரு வணக்கம் மார்க்கமாக்கப்படவில்லை.
“மஸ்ஜித்” என்ற சொல் “ஸஜத” என்ற சொல்லடியிலுள்ளது. “ஸஜத” என்றால் தலை சாய்த்தான், وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ مُتَعَبِّدًا – اِنْحَنَى خَاضِعًا பணிவுள்ளவனாக குனிந்தான், வணங்கும் நோக்கத்தோடு நெற்றியை தரையில் வைத்தான் என்ற அர்த்தங்களைக் கொண்ட சொல்லாகும். இதன் படி “மஸ்ஜித்” என்ற சொல்லுக்கு நெற்றியை தரையில் வைத்து இறைவனை வணங்குமிடம் என்று பொருள் வரும்.
“இஃதிகாப்” என்ற இந்த வணக்கம் இறையில்லத்தில் சும்மா இருப்பது மட்டும்தான். வேறு வணக்கம் செய்து கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
ஏனைய மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் சும்மா இருப்பது மட்டும் ஒரு வணக்கமென்று சொல்லப்படவில்லை.
مَسْجِدْ – “மஸ்ஜித்” என்ற சொல் சொல்லிணக்கண விதியின் படி مَسْجَدْ என்று “ஜீம்” என்ற எழுத்து “பத்ஹ்” செய்யப்பட்டதாகவே வர வேண்டும். ஆயினும் குறித்த விதிக்கு மாறாக “ஜீம்” என்ற எழுத்து “கஸ்ர்” செய்யப்பட்டதாக வந்துள்ளது. ஏன் இவ்வாறு வந்தது? என்பதற்கு எவர் என்ன காரணம் சொன்னாலும் ஸூபீ மகான்கள் சொல்கின்ற காரணத்திற்கு நிகராகாது.
ஏனெனில் كَسْرْ என்றால் உடைத்தல் என்று பொருள். இது أَنَا عِنْدَ الْمُنْكَسِرَةِ قُلُوْبُهُمْ “எவரின் உள்ளங்கள் உடைந்து கிடக்கின்றனவோ அங்கேதான் நான் இருக்கிறேன்” என்ற ஹதீதுக் குத்ஸியை நினைவூட்டுகிறது. இக்காரணத்தினாலும், “கஸ்ர்” என்ற குறியீடு எப்போதும் எழுத்தின் கீழ் பக்கம் வருமேயன்றி மேல்பக்கம் வரமாட்டாது. என்ற காரணத்தினாலுமே “ஜீம்” என்ற எழுத்து “கஸ்ர்” என்ற குறியீடுடன் வந்துள்ளது. “கீழ்” என்பது எப்போதும் பணிவையே காட்டும்.
பள்ளிவாயல்களின் இமாம்கள், கதீப்மார்கள் அனைவருக்கும்.
பள்ளிவாயல்களின் இமாம்களே! கதீப் மார்களே! வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” பிரசங்கம் நிகழ்த்துகின்ற பிரசங்கிகளே!
நீங்கள் வெள்ளிக்கிழமை பள்ளிவாயல் மின்பரில் நின்று பிரசங்கம் தொடங்கியதும் “அல்லாஹ்வின் இல்லத்தில் “இஃதிகாப்” நிய்யத்தோடு அமர்ந்திருப்பவர்களே” என்று சமுகம் தந்துள்ளவர்களை விழிக்கின்றீர்கள்.
நீங்கள் இவ்வாறு விழிப்பது நல்ல விடயமேயாகும். ஏனெனில் “இஃதிகாப்” “நிய்யத்” வைப்பதற்கு மறந்தவர்களுக்கு உங்களின் நினைவூட்டல் பெரிய உதவியாகிவிடும். من دلّ على خير فهو كفاعله ஒரு நன்மையை அறிவித்தவன் அதைச் செய்தவன் போன்றாவான் என்ற அருள் மொழியின் படி உங்களின் நினைவூட்டலைச் செவியேற்றுச் செயல்பட்டவர்களுக்கு கிடைக்கின்ற நன்மை போன்றது உங்களுக்கும் நிச்சயமாக கிடைக்கும். சிறிய முதலீட்டின் மூலம் பெரிய இலாபம் பெற்றுக்கொள்கிறீர்கள்.
நீங்கள் இதில் சிறிய மாற்ற மொன்று செய்தீர்களாயின் இன்னும் பலமடங்கு அதிக தன்மையைப் பெறுவீர்கள்.
நான் சொல்லப்போகின்ற விடயம் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் அறிந்த விடயம்தான். ஆயினும் அது உங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றே நினைக்கிறேன்.
அதாவது ஒரு “ஸுன்னத்” ஆன அமல் நேர்ச்சை செய்வதன் மூலம் நேர்ச்சை செய்தவன் மீது “பர்ழ்” கடமையாகிவிடும். அதோடு அந்த அமல் “பர்ழ்” உடைய அந்தஸ்த்தையும் பெறும்.
இந்த விதிப் படி “இஃதிகாப்” என்ற “ஸுன்னத்” ஆன அமலை – வணக்கத்தை ஒருவன் நேர்ச்சை செய்தானாயின் அது அவன் மீது கடமையாவதுடன் அவனுக்கு அதிக நன்மையும் கிடைக்கும். “ஸுன்னத்” ஆன வணக்கத்திற்கு நன்மை குறைவு “பர்ழ்” ஆன வணக்கத்திற்கு நன்மை அதிகம்.
இதற்காக செய்ய வேண்டிய வேலை மிகச் சிறிய வேலைதான். இரண்டு எழுத்தை வேறு இரண்டு எழுத்தாக மாற்றுவது மட்டுமே!
வழமையாக “இஃதிகாப்” இருப்பவர்கள் نَوَيْتُ الْإِعْتِكَافِ للهِ مَا دُمْتُ فِيْ هَذَا الْمَسْجِدِ “நான் இப்பள்ளிவாயலில் இருக்கும் வரை “இஃதிகாப்” இருப்பதை “நிய்யத்”தை வைத்து விட்டேன்” என்று சொல்வார்கள். மனதில் நினைப்பார்கள்.
இவ்வாறு “நிய்யத்” வைத்து 30 நிமிடங்கள் “இஃதிகாப்” இருக்கும் ஒருவருக்கு 1000 ஆயிரம் நன்மை கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் نَوَيْتُ என்ற சொல்லில் உள்ள “வாவை”யும் , ”யே”யையும் “தால்” ஆகவும், “றே” ஆகவும் மாற்றி نَذَرْتُ என்று சொன்னால் – நாடினால் அதே நேரம் இருப்பவருக்கு 3000 மூவாயிரம் நன்மை நிச்சயமாக கிடைக்கும். சிறிய வேலையென்றாலும் பெரிய நன்மையே கிடைக்கிறது. இதுவே சட்ட நுணுக்கம் எனப்பகிறது.
எனவே, வெள்ளிக் கிழமை “ஜும்ஆ” பிரசங்கம் செய்கின்ற மௌலவீமார் மேற்கண்ட விபரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி, “நிய்யத்” வைக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தால் சொன்னவர்களும், செய்தவர்களும் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
إنّما الأعمال بالنّيات
அமல்கள் யாவும் “நிய்யத்” எண்ணத்தைக் கொண்டே நிறைவேறுகின்றன. அல்லது பூரணமடைகின்றன.
மேற்கண்ட இந்த ஹதீதுக்கு இமாம் ஷாபிஈ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் إِنَّمَا تَصِحُّ الْأَعْمَالُ வணக்கங்கள்- செயல்கள் நிறைவேறுவது “நிய்யத்” எண்ணத்தைக் கொண்டு என்றும், இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் إِنَّمَا تَكْمُلُ الْأَعْمَالُ வணக்கங்கள் பூரணமடைவது எண்ணத்தைக் கொண்டு என்றும் விளக்கம் கூறுவர். இருவரின் வழியும் சரியான வழியே! “கர்னீ” காக்கா மார்களுக்கு மத்ஹபும் இல்லை. நிய்யத்தும் இல்லை. லைஸன் இல்லாத வண்டிகள். (முற்றும்)